1925ஆம் ஆண்டு ஒரு விஜயதசமி அன்று தான் ஆர்.எஸ்.எஸ். நாக்பூரில் துவக்கப்பட்டது. எனவே விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய விழாக்களை நடத்துவது வழக்கம்.

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி பேரணியை தொலைக் காட்சிகள் வெளியிட்டன. அதில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

‘ஆர்.எஸ்.எஸ் தொடங்கிய காலத்திலிருந்து முதன் முறையாக பேரணியை பார்வையிடுகிற பார்வையாளர்களில் ஒரு பெண் இப்போது தான் அழைக்கப்பட்டு இருக்கிறார்’ என்ற செய்தியை தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆர்.எஸ்.எஸ். விஜயதசமி விழாவில் பங்கெடுப்பதற்கு பார்வையாளராகவே ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது 1925க்குப் பிறகு இதுவே முதல் முறை.

ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்கள் யாரும் உறுப்பினராக முடியாது என்ற தடை அப்படியே இப்போதும் நீடிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணி அணி வகுப்பையும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பினார்கள். அதில் ‘சுவயம் சேவக்காக’ ஒரு பெண் கூட வரவில்லை. ஆனால், இங்கே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பெண்களுக்காக ஆர்.எஸ்.எஸ் தனி அமைப்பை நடத்திக் கொண்டிருக்கிறது என்று அதற்கு ஒரு சப்பைக் கட்டுக் கட்டுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். உண்மையில் ‘ராஷ்ட்ர சேவிகா சமிதி’ என்ற தனி பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அது குடும்ப ரீதியாக செயல்படும் அமைப்பு ஆகும். ஒரு பெண் என்பவர் ஒரு நல்ல மனைவியாகவும், மகளாகவும், தாயாகவும் குடும்பத்துக்குள் செயல்பட வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பது தான் ஆர்.எஸ்.எஸ் இன் தொடக்கக்காலக் கொள்கையாக இருந்தது. அயோத்தி பிரச்சனையில் பெண்களை ஈடுபடுத்த முயன்ற ஆர்.எஸ்.எஸ். பெண்களுக்காக தனியாக 5000 ஷாகாக்களை நடத்தியது.

“இந்துப் பெண்களே வீரத்தையும், நல்லொழுக்கத்தையும் விதைக்கப் போர்க் குரல் எழுப்புங்கள்” என்ற முழக்கத்தோடு அயோத்திப் பிரச்சனையில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

கர சேவை செய்ய வந்தவர்களுக்கு உணவு தயாரிக்க பெண்களை குடும்பத்தோடு ஈடுபடுத்தினார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்.சில் பெண்களுக்கு உள்ள நிலை.

இப்படி சமூகத்தில் சரிபகுதியாக இருந்த இந்து பெண்களைப் புறக்கணித்து அவர்களைப் புண்படுத்துகிற கூட்டம் தான் இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள், இந்துக்களைப் புண்படுத்துகிறார்கள் என்று கூக்குரல் போட்டு வருவதை நாம் கவனிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நாக்பூரில் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் அவர் பேசுகையில், வர்ணம், ஜாதி அமைப்புகளை தூக்கி எறிய வேண்டும் என்று அவர் பேசியிருக்கிறார். கடந்த காலத்தில் இந்த அமைப்புகள் பாகுபாடுகள் இல்லாமல் தான் இருந்தன. இப்போது அதைப் பற்றி கேள்விகள் எழுந்துவிட்டன. எனவே, அவற்றை மறந்து விடுவோம். அது கடந்த காலமாகவே இருந்துவிட்டு போகட்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உளப்பூர்வமான கருத்தாக இருந்தால் உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒரு அறிவிப்பு தான். வர்ணத்தையும், ஜாதி அமைப்பையும் தூக்கி எறிய வேண்டும் என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு இப்போது நாம் விடுக்கும் வேண்டுகோள் சமூக அமைப்பு சமூக பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகள் புனித நூல்கள் என்று போற்றப்படுகிற வேதம், புராணம், இதிகாசங்கள் இவைகளில் இடம் பெற்றிருக்கின்ற வர்ணா சிரமத்தை, ஜாதி அமைப்பை நியாயப்படுத்துகிற கருத்துக்கள் அனைத்தும் காலத்துக்குப் பொருத்தமற்றவை; அவற்றைப் புறந்தள்ள வேண்டும், என்ற ஒரு கருத்தையும் மோகன் பகவத் அறிவித்து விட்டால் நாட்டில் ஒரு பெரிய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலை உருவாகி விடும். அதை மோகன் பகவத் செய்வாரா?

பெரியாரும், அம்பேத்கரும் காலம் முழுதும் எதிர்த்த ஜாதி - வர்ணக் கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நாங்களும் எதிர்க் கிறோம் என்று பேச வேண்டிய நிலைக்கு இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தள்ளப்பட்டிருக்கிறது. இது பெரியார் அம்பேத்கருக்குக் கிடைத்த மகத்தான ஒரு வெற்றி என்று நிச்சயமாக நாம் சொல்ல முடியும்.

இனியும் ஆகமங்கள் என்ற பெயரிலும் வழிபாடு என்ற பெயரிலும் சடங்குகள் என்ற பெயரிலும் வர்ணாசிரம தர்மத்தையும் ஜாதி அமைப்பையும் கட்டி அழுது கொண்டிருக்கின்ற பார்ப்பனீயர்கள் வர்ணாசிரமவாதிகள், சனாதனவாதிகள் மோகன் பகவத்தின் இந்த கருத்துக்கு பிறகு தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It