கருக் கலைப்பை திருமணத்திலிருந்து துண்டித்து அது பெண்ணின் தனித்துவ உரிமை என்ற புரட்சிகரமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியிருக்கிறது. திருமணமான பெண் மட்டுமே கருவை சுமக்க வேண்டும்; இல்லையேல் அவர் ‘கற்பு’ என்ற புனிதத்தை இழந்து விடுவார்; சமூகத்தின் பார்வையில் ஒழுக்கமற்றவர்களாக புறக்கணிக்கப்படுவார்கள் என்ற பார்ப்பனிய மனு சாஸ்திர பழமைவாதங்களுக்கு மரண அடி தரும் தீர்ப்பு இது.
டெல்லியைச் சார்ந்த 25 வயது அய்ஸ்வர்யா, திருமணமின்றி தனக்கு மனமொத்தவரிடம் கொண்ட தொடர்பால் உருவான கருவை 23 வாரங்கள் கழித்து கலைக்க விரும்பினார். டெல்லி உயர்நீதிமன்றம் திருமணமாகாதவருக்கு கருக்கலைப்பு உரிமை இல்லை என்று சட்டத்தைக் காட்டி கோரிக்கையை நிராகரித்தது. உச்சநீதி மன்றம் போனார். கருக்கலைப்பு விதிமுறையில் பெண்ணின் உரிமையைப் பறிக்கும் இந்தத் தடையை அகற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. நியாயத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “விருப்பமில்லாத கருவைச் சட்டத்தின் பேரால் சுமக்கச் சொல்லி வலியுறுத்துவது அந்தப் பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்” என்று கூறிய நீதிமன்றம், “மனைவி மீது கணவன், அவர் சம்மதமின்றி நிகழ்த்தும் பாலியல் உறவு, பாலியல் வல்லுறவுதான். அதன் விளைவாக உருவாகிற கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும். இதில் பெண்ணின் ஒப்புதல் மட்டுமே போதுமானது. தன் மீது நிகழ்ந்தது பாலியல் வல்லுறவுதான் என்று நிரூபிக்கத் தேவையில்லை” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியபோது பெரியார் அதை பெண் விடுதலைப் பார்வையில் தான் அணுகினார். அளவான குழந்தைகளைக் கொண்ட குடும்பம் தான் பொருளியல் வாழ்க்கைக்கு உதவும் என்று அரசும் பல குடும்பக் கட்டுப்பாடு நிபுணர் களும் முன் வைத்த கருத்திலிருந்து பெரியார் மாறுபட்டார். குழந்தை பெறும் தொல்லையி லிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும்; அதுவே பெண்ணடிமைக்கு முக்கிய பங்காற்றுகிறது என்றார்.
பெரியார் இவ்வாறு கூறுகிறார்: “இன்னமும் பெண்களுக்கு, தாங்கள் ஆண்களைப்போல தங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கை அமைப்பின் தன்மையே தங்களை ஆண் மக்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத் திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக் கிறார்கள். எப்படி எனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம். ஆனால், ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது என்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக்கிறார். அப்படி அவர்கள் கருதுவதற்கான காரணம், பெண்களுக்கு பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால்” என்று கூறுகிறார். பெரியாரின் இந்தக் கருத்தைத் தான் இப்போது உச்சநீதிமன்றம் வழி மொழிந்திருக்கிறது.
பொதுவெளியில் இந்த சிந்தனைகளைப் பேசினால் உடனே ‘இந்து மதத்தைத்’ புண்படுத்து கிறார்கள் என்று வீதிக்கு வந்து கலவரம் செய்யக் காத்திருக்கிறது ஒரு பழைமைவாதக் கூட்டம். இதற்கான கருத்தியலுக்கு மதம் - பண்பாடு என்ற அடையாளத்தைப் போர்த்தி விடுகிறது பார்ப்பனியம். இன்னமும் ‘சுயம் சேவக்குகளாக’ ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்கள் சேர்க்கப்படாமல் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புகள் நூறு சதவீதம் ஆண்களை மட்டுமே கொண்டதுதான்.
ஆண்களோடு பெண்கள் சமமாக முடியாது என்பதே இந்துக் கலாச்சாரம் என்று கூறுகிறவர்களுக்கு ஆண்களோடு சேர்ந்து திருமண வாழ்க்கையில் பயணிப்பவர்கள் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும் என்ற சட்டம் பெண்களின் கண்ணியத்துக்கு எதிரானது என்று சரியான பதிலடி தந்திருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் இந்துக்களை அவமதிக்கிறது என்று கூப்பாடு போடுவோர் வாய்மூடிக் கிடக்கிறார்கள்.
அதே நேரத்தில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் பெண்ணிய சிந்தனை வெற்றி பெருமிதத்தோடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
- விடுதலை இராசேந்திரன்