திருமண உறவுக்கு வெளியேயான பாலுறவு குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு கலாச்சாரக் காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீர்ப்பு ஆகா ஓகோ என்று மெச்சத்தகுந்த தீர்ப்பு இல்லை என்றாலும், மதம் சார்ந்தும், சாதி சார்ந்தும் கட்டமைக்கப்பட்டுள்ள ஆணாதிக்க குடும்ப உறவில் ஓர் உடைசலை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்தவனின் மனைவியுடன் கள்ளத்தனமாக பாலியல் உறவில் ஈடுபவதை இந்தத் தீர்ப்பு பகிரங்கமாக ஆதரிக்கின்றது, இதனால் நாட்டில் கலாச்சாரச் சீரழிவு ஏற்படும் என மதவாதிகளும், சாதியவாதிகளும் கூக்குரல் இட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சில முற்போக்குவாதிகளும் இந்தத் தீர்ப்பை ஆதரிப்பதா, இல்லை எதிர்ப்பதா என தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இந்தக் குடும்ப அமைப்பு முறையையும், திருமண முறையையும் நாம் புரிந்து கொள்ள முற்படும்போதுதான் இந்தத் தீர்ப்பு எந்த மாதிரியான சமூக விளைவை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அடிப்படையில் எதற்காக ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து வாழ வேண்டும்? எதற்காக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்? எதற்காக அந்தக் குழந்தைகளை மெனக்கெட்டு வளர்க்க வேண்டும்? போன்ற கேள்விகளைக் கேட்டால் அனைத்து கேள்விகளுக்கும் அடிப்படையான பதிலாக அமைவது சொத்துடமைதான். தனிச்சொத்தைப் பாதுகாக்கவே இந்த ஏற்பாட்டை சமூகம் செய்துள்ளது. முதலாளித்துவ சமூக அமைப்பில்தான் இந்தக் குடும்ப உறவுகள் இருந்தன என்றில்லை, எப்போது தனிச்சொத்து இந்தச் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டதோ, எப்போது அது சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தப்பட்டதோ அப்போதில் இருந்தே இந்தக் குடும்ப அமைப்பு உருவாகி வேர்கொண்டுவிட்டது.
இந்தக் குடும்ப அமைப்பிற்குக் கட்டாயமாக பெண் தேவைப்படுகின்றாள். எதற்காக என்றால் இந்தத் தனிச்சொத்தை உருவாக்கும் பொறுப்பையும், அதைக் கட்டிக்காக்கும் பொறுப்பையும் தன்னுடைய ஆஸ்தான உரிமையாக எடுத்துக் கொண்ட ஆணுக்கு அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள அவனது ரத்த வழியில் குழந்தைகளை பெற்றுக் கொடுக்கவும், அவனையும் அவனது குழந்தைகளையும் பராமரிக்கவும் கட்டாயமாக அவள் தேவைப்படுகின்றாள். அதைத் தாண்டி அவளுக்கு இந்தச் சமூகத்தில் வேறு பணிகளும் கிடையாது, வேறு உரிமைகளும் கிடையாது. அவள் ஓர் ஆணுக்கு விலை கொடுத்து விற்கப்படுகின்றாள். அந்தப் பெண்ணை சாகும்வரை தனக்கு அடிமையாக வைத்துக் கொள்ள அந்த ஆணுக்கு திருமணத்தின் மூலம் உரிமை அளிக்கப்படுகின்றது. அடிப்படையில் பார்த்தால் இந்தத் திருமண முறையே ஒரு விபச்சாரத்தனம் நிறைந்ததாகும். அதில் பெண் ஒரு பண்டமாக ஓர் ஆணுக்கு கையளிக்கப்படுகின்றாள். தான் திருமணம் செய்து கொள்ளும் ஆணின் விருப்பம் என்னவோ அதுதான் இனி அவளின் விருப்பமும். அவளுக்கென்று தனிப்பட்ட ஆசைகளோ விருப்பங்களோ எதுவும் இருக்கக்கூடாது. உரிமைகளைப் பற்றிய பேச்சே கிடையாது.
இங்குதான் திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கான அடிப்படையே இருக்கின்றது. தன்னை உரிமையாக்கிக் கொண்ட ஆண் ஒரு குடிகாரனாகவோ, இல்லை ஆண்மை இல்லாதவனாகவோ, தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யத் திராணியற்ற கையாலாகாத பேர்வழியாகவோ இருக்கும்போதும் அல்லது தான் நினைத்த வாழ்க்கையை சிறிதுகூட தனக்குக் கொடுக்கத் துப்பற்றவனாக இருக்கும்போதும், அந்தப் பெண் தனக்குப் பிடித்தவனுடன் வாழ முற்படுகின்றாள். இந்தச் சமூகம்தான் அவளை கள்ளத்தனமாக வாழ நிர்பந்திக்கின்றது. அதனால்தான் அவள் தனது ஆசைகளையும் விருப்பங்களையும் சட்டப் பூர்வமற்ற வழிகளில் நிறைவேற்றிக்கொள்ள முற்படுகின்றாள்.
எந்தவிதப் பொருளாதார பலமும் இன்றி பெண்ணை வைத்திருக்கும் இந்தச் சமூகம் தான் அவளின் நடத்தைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். சாதிய கெளரவமும், மத கெளரவமும், அவளை ஒரு சுமையாக அழுத்திக் கொண்டிருக்கும் குழந்தைகளும் அவளைக் கள்ளத்தனமாக தனக்குப் பிடித்த இன்னொரு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ள நிர்பந்திக்கின்றது. ஒருவேளை இது அம்பலமாகும்போது முதலில் பாதிப்படைவது பெண்கள்தான். 497 சட்டப்பிரிவின் படி திருமணத்திற்கு வெளியே அடுத்தவன் மனைவியுடன் உறவு வைத்துக்கொள்ளும் ஆண்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, இல்லை அபராதமோ வழங்கப்பட்டு வந்தாலும், இது போன்ற பிரச்சினைகள் காவல்நிலையத்திற்குப் போவது ஆணாதிக்க சமூக அமைப்பில் மிக மிகக் குறைவே. தன்னுடைய மனைவி அடுத்தவனுடன் உறவு வைத்திருந்தாள் என்று எந்த ஆணும் நிச்சயமாக காவல்நிலையம்வரை சென்று புகார் கொடுக்கத் துணிய மாட்டான். காரணம் அது சமூகத்தில் தன்னைப் பற்றிய பிம்பத்தை உடைத்துவிடும் என்ற பயம்தான் காரணம்.
“இவன் ஒழுங்காக இருந்திருந்தால் அவள் ஏன் அடுத்தவனைப் பார்க்கப் போகின்றாள்” என்ற வசையை பெரும்பாலும் தவிர்க்கவே அனைத்து ஆண்களும் விரும்புவார்கள். அதனால் அவனிடம் உள்ள கடைசி வழி ஒன்று தன்னைவிட்டு அடுத்தவனுடன் தவறான உறவு கொள்ளும் பெண்ணைக் கொன்று விடுவது அல்லது வீட்டைவிட்டு துரத்தி விடுவது. இரண்டில் ஒன்றுதான் நிச்சயமாக நடக்கும். இதைத்தாண்டி சட்டப்படி தன் மனைவியுடன் உறவில் ஈடுபட்டவனுக்கு தண்டனை வாங்கித் தர போராடுவது எல்லாம் அரிதாகவே நிகழும்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பின் படி இனி ஆண்களைத் தண்டிக்க முடியாது என்பது முற்போக்காக இருந்தாலும் இந்தச் சமூக அமைப்பு மாற்றி அமைக்கப்படாத வரையில் இந்தத் தீர்ப்பால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியாது. “கணவன் என்பவர் பெண்களின் எஜமானர் அல்ல” என்று தீர்ப்பு சொல்லியிருந்தாலும் நடைமுறையில் பெண்கள் ஆண்களின் சொத்தாகவே, ஒரு பண்டமாகவே இருக்கின்றார்கள். நடைமுறையில் சொத்து என்பது ஆண்களின் உரிமையாக இருக்கும் வரையிலும், திருமணம் என்பது விபச்சாரத் தனமாக இருக்கும் வரையிலும், இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இதற்கெல்லாம் தீர்வு என்பது தனிச்சொத்தை ஒழித்தல் என்பதில்தான் இருக்கின்றது. மார்க்சிய மூலவர்கள் இதைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் என்பதைப் பார்த்தால் இந்தப் பிரச்சினையில் நமக்கு தெளிவான ஓரு தீர்வு கிடைக்கும்.
“ஆண், பெண் ஆகியோருக்கிடையே ஏற்படும் உறவானது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றும், அதில் சமுதாயம் தலையிடக்கூடாது என்றும் அது மாற்றிவிடும். தனியுடமையை அகற்றி விடுவதன் மூலமும் குழந்தைகளுக்குச் சமூக கல்வி அளிப்பதன் மூலமும் இவற்றின் விளைவாக குழந்தைகள் தங்களது பெற்றோரைச் சார்ந்து நிற்பது, மனைவி தனது கணவனைச் சார்ந்து நிற்பது ஆகிய தனியுடைமையின் விளைவாகத் தோன்றிய இருவகையான திருமண அடிப்படைகளை அகற்றி விடுகின்றது” (கம்யூனிசத்தின் கோட்பாடுகள்:எங்கெல்ஸ்)
“தற்காலக் குடும்பத்துக்கு, பூர்ஷ்வாக் குடும்பத்துக்கு அடிப்படையாக இருப்பது எது? மூலதனம்தான், தனியாரின் இலாபம்தான். முழுவளர்ச்சியடைந்த வடிவத்தில் இந்தக் குடும்பம் பூர்ஷ்வாக்களுக்கு மட்டுமே இருக்கின்றது. ஆனால் இந்த நிலையை, பாட்டாளிகளின் வலுக்கட்டாயமான குடும்பமற்ற நிலையும், பொது விபச்சாரமும் முழுமைப்படுத்துகின்றன. பூர்ஷ்வாக் குடும்பத்தை முழுமைப்படுத்துவது மறைந்து போகும் போது, கூடவே பூர்ஷ்வாக் குடும்பமும் இயல்பாகவே மறைந்துவிடும்; மூலதனம் மறையும்போது இரண்டும் மறைந்து விடும்”.
“பூர்ஷ்வா தனது மனைவியை வெறும் உற்பத்திக் கருவியாகவே பார்க்கின்றார். உற்பத்திக் கருவிகள் எல்லோர்க்கும் பொதுவானவையாகப் பயன்படுத்தப்படப் போவதாக கேள்விப்படும் அவர், இதே போல எல்லோருக்கும் பொதுவாகிவிடும் கதிதான் பெண்களுக்கும் ஏற்படப் போகிறதென்று இயல்பாகவே முடிவு செய்து கொள்கின்றார். பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாக இருக்கும் நிலையை வழக்கற்றதாகச் செய்வதுதான் பிரச்சினை என்பதை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை”
நமது பூர்ஷ்வாக்கள், சட்டப்பூர்வமான விபச்சாரத்தை நாடுவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பாட்டாளிகளின் மனைவியர், பெண் மக்கள் ஆகியோரை வைத்துக் கொள்வதுடன் நிற்காமல், தமக்குள் ஒருவர் மனைவியை இன்னொருவர் வசப்படுத்தி அனுபவிப்பதில் பேரின்பம் காண்கின்றார்கள். பூர்ஷ்வாத் திருமணம் என்பது உண்மையில் மனைவியரைப் பொதுவாக அனுபவிக்கும் ஒரு முறைதான். போலித்தனமாக மூடி மறைக்கப்பட்டுள்ள முறையில் பெண்களைப் பொதுவாக அனுபவிக்கும் முறைக்குப் பதிலாக கம்யூனிஸ்டுகள் சட்டப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அதைச் செய்ய விரும்புகிறார்கள் என்றுதான் அவர்கள் மீது அதிகபட்சக் குற்றம் சாட்டலாம். மேலும், இன்றைய பொருளுற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படும்போது, இந்த உறவுகளிலிருந்து எழும் பெண்களைப் பொதுவாக அனுபவிக்கும் முறையும், அதாவது சட்டப்பூர்வமான, சட்டப்பூர்வமற்ற விபச்சாரமும் மறையும் என்பது சொல்லாமலே விளங்கும்”. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: மார்க்ஸ்)
எனவே தனிச்சொத்துரிமை ஒழிக்கப்படும்வரை பெண்களை ஒரு பாலியல் பண்டமாகவும், ஆணின் சொத்தாகவும் பார்க்கப்படும் சமூகத்தின் பார்வை என்பது மாறாது. இந்தத் தீர்ப்பு ஓரளவிற்கு முற்போக்கானதாக இருந்தாலும் இந்தத் தீர்ப்பை அமுல்படுத்தும் அமைப்புகள் எந்த அளவிற்கு முற்போக்காக இருக்கின்றது என்பது முக்கியமானதாகும். குறைந்தபட்சமாக பெண்களை விலை பேசி விற்கும் இந்த விபச்சார திருமண முறை ஒழிக்கப்பட்டால் கூட பெண்களுக்கு ஓரளவு விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சாதிய சிந்தனையிலும், மதவாத சிந்தனையிலும் ஊறிப்போன இந்த சமூகம் அதைச் செய்யுமா என்பது கேள்விக்குறிதான். பெண்களின் விடுதலைக்காக பல முற்போக்கான கட்டங்களை இந்தச் சமூகம் கடக்க வேண்டி இருக்கின்றது. அவர்களுக்கு எது எல்லாம் சுமையாக, விலங்காக இருக்கின்றதோ அவை எல்லாம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அப்படிப்பட்ட பெரும்பணியில் ஒரு சிறு ஆறுதலை மட்டுமே இந்தத் தீர்ப்பு கொடுத்திருக்கின்றது.
- செ.கார்கி