தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 69 சதவிகித இட ஒதுக்கீட்டை துவக்கத்திலே எதிர்க்கத் துவங்கினர் இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள்.
உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் கடந்த 16-11-1992ல் வழங்கிய தீர்ப்பில், ஒரு மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்தை விஞ்சக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகின்ற 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு - இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்கள், சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்தது. அதன்படி தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வழிவகை செய்யும் விதத்தில் சட்டமுன் வரைவு ஒன்றை தயாரித்து அதனை கடந்த 31-12-1993ம் ஆண்டு சட்டப் பேரவையிலும் ஏக மனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கியது.
பின்னர் இச்சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 31பி-யின் கீழ் பாதுகாப்பு பெரும் பொருட்டு 1994ம் ஆண்டு அரசியலமைப்பின் 76வது திருத்தச் சட்டத்தின்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது விவர அட்டவணையில் இணைத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது.
இதனைக் கண்டு பொறுக்காத முற்பட்ட வகுப்பினர் எனப்படும் ஆதிக்கச் சக்திகள் மேற்குறிப்பிட்ட தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தன. இச்சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரின. அத்தோடு, வளமான பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவை மனுவில் குறிப்பிட்டிருந்தன.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது மற்றும் வளமான பிரிவினரை இட ஒதுக்கீட்டிலிருந்து நீக்குவது ஆகிய இரண்டு பொருள்கள் தொடர்பாக தமிழக அரசு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று 12-07-2011க்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த 13-07-2010 மற்றும் 3-11-2010 ஆகிய தேதிகளில் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இட ஒதுக்கீடு செய்ய முயற்சிக்கும்போது, இது தொடர்பாக அவ்வரசு பிறப்பிக்கும் ஆணையானது எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களின் அடிப்படையில் - அம்மாநிலத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பரிந்துரையின் பேரில் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனையடுத்து, எண்ணிக்கை அடிப்படையிலான விபரங்கள் அனைத்தும் தமிழக அரசால் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டது. அத்தோடு, ஆணையம் கோரிய பல்வேறு விபரங்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவுகளையும் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு.
இட ஒதுக்கீட்டின் அளவையும், வளமான (கிரிமிலேயர்) பிரிவினரை நீக்கம் செய்வது குறித்த எண்ணிக்கை அடிப்படையிலான விவரங்களையும் ஆய்வு செய்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தனது அறிக்கையை கடந்த 8-07-2011 ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கியது.
இவ்வறிக்கையில், 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக அரசின் சட்டம் எவ்விதக் குறைபாடும் இன்றி உள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிகிதமும், ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18 சதவிகிதமும், பழங்குடியினருக்கு 1 சதவிகிதமும் என்று தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிற இட ஒதுக்கீட்டின் அளவு மேற்கண்ட வகுப்பினருடைய மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது முற்றிலும் சரியானதே என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கூறியுள்ளதோடு, தமிழக இட ஒதுக்கீட்டிலிருந்து வளமான பிரிவினரை நீக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலைலயில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 11-07-2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆணையத்தின் அறிக்கை விரிவாக விவாதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் - பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் அளிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வது என்றும் அதனடிப்படையில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிப்பது என்றும், இதிலிருந்து வளமான பிரிவினரை நீக்க வேண்டியதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை 11-07-2007 அன்றே வெளியிட்டது தமிழக அரசு.
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முறையான தரவுகளைக் கொடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உறுதி செய்துள்ளது பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதே சமயம், பிற்படுத்தப்பட்ட பிரிவுக்குள் வரும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவிகித தனி இட ஒதுக்கீட்டின் பலன்கள் அரசு அதிகாரிகளின் முறையற்றபோக்கால் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் உள்ளது. இதனை சரிப்படுத்த வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்கியுள்ளது.
முதல்வரும் இது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்ததோடு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் இதனை முக்கியத்துவத்தோடு பேசியிருந்ததை தற்போது நினைவூட்ட வேண்டியுள்ளது. எனவே, இட ஒதுக்கீட்டின் குளறுபடிகளை உடனே சரி செய்ய முதல்வர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவையும் முதல்வர் உயர்த்தித் தர வேண்டும் என்றும் முதல்வரிடம் தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர். செய்வாரா முதல்வர்?