யுனானி மருத்துவம், அதன் பெயரின் மூலம் கிரீஸ் நாட்டில் இருந்து தோன்றியது என தெரிகிறது. அரபு மொழியில் யுனான் என்ற சொல்லுக்கு கிரீஸ் என்று அர்த்தம். அச்சொல்லே பிறகு யுனானி என்று வழங்கலாயிற்று.

கிரேக்க தத்துவஞானியும் மருத்துவருமான ஹிப்போகிரேட்ஸ் (அரபு மொழியில் புக்ராத்) கி.மு. 460-377, ஆதாரமற்ற மாயையான மருத்துவ முறையை மாற்றி புதிய அறிவியற்பூர்வமான முறையைக் கொண்டு வந்தார். யுனானி மருத்துவத்தின் ஆதாரப்பூர்வ முறையானது ஹிப்போகிரேட்ஸின் தத்துவமே ஆகும்.

ஹிப்போகிரேட்ஸுக்கு பிறகு எண்ணற்ற பண்டிதர்கள் யுனானி மருத்துவத்தை கவனிக்கத்தக்க சிறப்படையச் செய்தனர். அவர்களில் காளென் (அரபு மொழியில் ஜாலினெஸ் கி.பி. 131-210) என்பவர் நல்ல அடித்தளம் அமைக்க உதவினார். ராசஸ் (அரபு மொழியில் அல்ரசி) கி.பி. 850-925, அவிசென்னா (அரபு மொழியில் இப்பன் - சினா கி.பி. 980-1037) போன்ற அரபு மற்றும் பெர்சிய மருத்துவர்கள் யுனானி மருத்துவம் சிறப்பாக வளர உதவினார்கள்.

காளென் யுனானி முறை மருத்துவத்தை எகிப்து நாட்டில் அறிமுகம் செய்து வைத்தியம் பார்த்து வந்தார். எகிப்து நாட்டின் அரசவை மருத்துவராக பதவி வகித்தார். எகிப்து நாட்டு அரசரின் ஆதரவில் இருந்தபொழுது ஏறக்குறைய அனைத்து வியாதிகளுக்கும் நுற்றுக்கணக்கான புதிய மருந்துகளை கண்டுபிடித்தார்.

ஒரே காலத்தில் எகிப்து, சிரியா, பெர்சியா, இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பாரம்பரிய மருத்துவமாக யுனானி மருத்துவம் இருந்துள்ளது. எனவேதான் கிரேக்க அரபு மருத்துவம், அயனியன் மருத்துவம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் கிழக்கத்திய மருத்துவம் என பல பெயர்களை யுனானி மருத்துவம் பெற்றது.

நன்கு வேரூன்ருவதற்கு முன்பே யுனானி மருத்துவம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டில்லி சுல்தான்கள், கில்ஜிக்கள், துக்ளக்கள் மற்றும் முகலாய மன்னர்கள் பண்டிதர்களுக்கு ஆதரவு அளித்தனர். சிலரை அரசு ஊழியர்களாகவும், அரசவை மருத்துவர்களாகவும் நியமித்தனர். இம்முறை வெகுவிரைவில் நல்ல ஆதரவு பெற்று நாடு முழுவதும் பரவியது.

13 மற்றும் 17ம் நூற்றாண்டின்போது யுனானி மருத்துவம், இந்தியாவில் மிகவும் செழிப்பானது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் யுனானி மருத்துவம் அரசர்களின் ஆதரவை இழந்தது. ஆனால் மக்களின் நம்பிக்கையால் பழக்கத்தில் இருந்து வந்தது. பிரபல மருத்துவரும், யுனானி பண்டிதருமான ஹக்கீம் அஜ்மல் கான் (1868-1927) இம் முறை இந்தியாவிற்கு வர பெரிதும் காரணமாக இருந்தார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் யுனானி மருத்துவம் இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு இம்முறையை இந்தியாவில் மேலும் செழிப்புறச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Pin It