தேசத்தின் குரல்

இதை எழுதப் போகிற நேரம் ஒரு காணொலி கண்டேன்: இந்தியாவில் ஏதோ ஒரு நகரம். அகன்ற சாலையில் ஒருசில ஊர்திகளே ஓடிக் கொண்டிருக்கின்றன, ஓரமாய்ச் சிலர் நடந்து போய்க் கொண்டிருக்கின்றனர், புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொள்கிறேன். இளைஞர் ஒருவர் சாலையைக் கடந்து இந்தப் பக்கம் வருகிறார். 30 வயதிருக்கலாம். அழுக்கடைந்த உடைகள். வறுமைத் தோற்றம். அவர் கடந்த பின் ஒரு பெரிய சுமையுந்து வருகிறது. அது போகட்டும் என்பது போல் ஒதுங்கினாலும் ஒட்டியே நிற்கிறார், வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள விரும்புவார் போல! நிறுத்தி ஏற்றிக் கொண்டால் நன்றாக இருக்குமே! அவர் நிறுத்த முற்படவும் இல்லை, அது நிற்கவும் இல்லை.

people suffers covid19 600அப்போது கொஞ்சம்கூட எதிர்பாராத விதமாக அவர் வண்டிக்கு அடியில் முன் சக்கரங்களுக்கும் பின் சக்கரங்களுக்கும் இடையில் குனிந்து நுழைகிறார். பாய்ந்தார் என்று சொல்வதற்கில்லை. வண்டி சற்றே மெதுவாகத்தான் செல்கிறது, அவரும் ஏதோ வீட்டுக்குள் நுழைவது போலத்தான் நுழைகிறார். ஐயகோ, பின் சக்கரங்கள் அவர் உடலில் ஏறி இறங்கித் தொடர்ந்து உருண்டு செல்கின்றன. தற்கொலை! கொடிய தற்கொலை! அவர் புலம்பெயர் தொழிலாளியாகவோ அன்றாடக் கூலியாகவோ இருக்கலாம். இனி வாழ வழியே இல்லை என்ற மனநிலைக்கு அந்த இளைஞரைத் தள்ளியது எது? யார்? இன்றைக்கு இவ்வளவு எளிய வினாவை யாராலும் கேட்க முடியாது. அனைவர்க்கும் விடை தெரியும்!

இது ஒற்றை நிகழ்வன்று. நூற்றில் ஒன்றோ ஆயிரத்தில் ஒன்றோதான் இப்படிப் படத்தில் சிக்குகின்றன. செய்தியாகக் கூட வெளியே வராத துயரக் கதைகள் எத்தனை?

கண்ணில் பட்ட ஒருசிலவற்றை மட்டும் கவனப்படுத்துகிறேன்.

குசராத் எல்லையில் ஓரிடம் இரவில் ஒரு சுமையுந்து வருகிறது. வண்டி நிறையப் புலம்பெயர் தொழிலாளர்கள். இராஜஸ்தானிலிருந்து குசராத்தில் சொந்த ஊர் திரும்பும் ஏழைகள். அவர்களை இழுத்துக் கீழே தள்ளி குசராத் காவலர்கள் தடியால் அடிப்பதும் புரட்டி எடுப்பதும் என்ன பாவம் செய்தோம் நாங்கள் என்று அந்த மனிதர்கள் (மனிதர்கள்தான்!) அரற்றி அழுவதும்! பாகிஸ்தானிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் ஆப்கானித்தானத்திலிருந்தும் ஒடுக்கப்பட்ட இந்துகளுக்குப் புகலிடம் கொடுக்கக் குடியுரிமைத் திருத்தச் சட்டமியற்றிய மோதிக்கும் அமித்ஷாவுக்கும் தங்களுடைய குசராத்துக்குத் திரும்பிச் செல்லும் “இந்துக்கள்” இப்படிப் புரட்டிப் புரட்டி அடிக்கப்படுவது தெரியுமா?

நரேந்திர மோதி குசராத் மாடல் என்றாரே, குசராத்தில் மருத்துவமனைகள் எப்படி இருக்கின்றன என்பதை அம்மாநில உயர்நீதிமன்றமே வெளிப்படுத்தியுள்ளது. மருத்துமனைகளா அவை? பாதாள சிறைச்சாலைகளைப் போலவும் மூழ்கும் டைட்டானிக் கப்பல் போலவும் அவை இருப்பதாக நீதியர் இருவர் இடித்துரைத்துள்ளனர். கொரோனாவுகுத்தான் கும்மாளம்!

மகாராட்டிரத் தலைநகர் மும்பையில் புற்று உள்ளிட்ட கடும் நோய்களால் பீடிக்கப்பட்ட சிலர் ஒரு சாலை மேம்பாலத்துக்குக் கீழே தங்க வைக்கப்பட்டிருப்பதை ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியது. அவர்களுக்கு உணவு தண்ணீர் இல்லை என்பதோடு கழிப்பறையும் கிடையாது என்பதுதான் ஆகப் பெரும் கொடுமை!

மும்பை தொடர்வண்டி நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்! தொடர் வண்டிதான் வரவே இல்லை. மாநில அரசும் நடுவண் அரசும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக் கொள்கின்றன. மராட்டியத்திலிருந்து வரிசையாகத் தொடர்வண்டிகளில் கொரோனாவை ஏற்றியனுப்புவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றஞ்சாட்டுகிறார்.

நான்கு திசையிலும் புல்லட் ரயில் விடுவதாக முழங்கிய மோதி எங்கே? மிகவும் காலந்தாழ்ந்து இந்திய அரசு விட்டுள்ள ரயில்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் தொகைக்குக் கிஞ்சிற்றும் போதுமானவை அல்ல. அவர்களிடம் கட்டணம் வாங்கவும் முதலில் முயன்றனர். தொடர் வண்டி நிலையங்களில் பேருக்கு வந்திறங்கும் சோற்றுப் பொட்டலங்களுக்கு நடக்கும் அடிதடியில் கண்ணியம் காயப்படுகிறது. ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் போகின்ற வண்டியில் தொங்கிக் கொண்டு போகிற அவலம்! உணவு கிடையாது! தண்ணீர் கிடையாது, மலசலம் கழிக்க முடியாது. சாவுதான் ஒரே வழி என்ற எண்ணம் வராமல் என்ன செய்யும்?

சென்னையிலிருந்து நடந்தோ சைக்கிள் மிதித்தோ தொலைதூர மாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் தங்களை செண்ட்ரல் பக்கமே போக விடாமல் காவல்துறை துரத்தியடித்தாகச் சொல்கின்றார்கள். அவர்களை வைத்து வேலை வாங்கியவர்கள் உதவவில்லை என்பது மட்டுமல்ல, தர வேண்டிய நிலுவைச் சம்பளத்தையும் தர மறுத்து விட்டார்களாம்! கட்டி முடிந்து கொண்டு கட்டையில் போக! 

கொரோனா நெருக்கடி தொடங்கி மூன்று திங்கள் ஆகப் போகிறது. நாளுக்கு நாள் குழப்பமும் கொடுந்துயரும்தான் பெருகி வருகின்றன. சரி, கொரோனா தொற்றாவது குறைந்துள்ளதா? என்றால் அதுவும் இல்லை. நோய்காண் ஆய்வுக்கருவி கொள்முதல் செய்வதில் ஊழல்! மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள்   தொற்று எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கையில் சீனத்தை விஞ்சியாயிற்று. கொரோனாவின் பரவல் குறையாத போதே முடக்கத்தைத் தளர்த்தவும் நீக்கவும் அவசரம் காட்டுவது அரசின் தீய உள்நோக்கத்தை காட்டுவது போல் உள்ளது. செத்தவன் சாகட்டும் இருப்பவன் உழைப்பைக் குறைந்த கூலிக்குச் சுரண்ட வேண்டும் என்ற அவசரத்தில் மாந்தநேயம் துளியும் இல்லை.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மாநிலத்துக்குள்ளும் மாநிலம் விட்டு மாநிலமும் புலம்பெயர் தொழிலாளர்கள் இயங்குவதைக் கணக்கெடுத்தது. 2016-17 பொருளியல் ஆய்வறிக்கையிலேயே புலம்பெயர் தொழிலாளர் முறை பெருகி வருவது பற்றிய குறிப்பு உள்ளது. இந்திய உழைப்பாளர்களில் குறைந்தது 10 விழுக்காடு புலம்பெயர் தொழிலாளர்கள் என்கிறது ஒரு மதிப்பீடு, இதில் பாதியளவே என்றாலும் கூட, ஊரடங்குக்குப் பின் அத்தனைப் பேர் தங்குவது எங்கே? வயிற்றைக் கழுவுவது எப்படி? என்ற எண்ணமே இல்லாமல், 130 கோடி மக்கள்தொகை கொண்ட துணைக்கண்டத்தை இழுத்து மூடுவதற்கு 4 மணி நேரமே அவகாசம் கொடுத்து திடீரென்று ஊரடங்கு, முடக்கம் என்று அறிவித்த மோதிதான் இந்தச் சாவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். இவை அரசு செய்த கொலைகள்! மோசமான படுகொலைகள்!

மார்ச் 24 முதல் மே 17 வரை இந்தியாவில் 134 புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் அடிபட்டு இறந்துள்ளார்கள். இதில் மே 6 முதல் 17 வரை உயிரிழந்தவர்கள் மட்டும் 96 பேர். நாற்பத்தைந்து நாள் காத்திருந்து சோற்றுக்கு அலைந்து தண்ணீருக்குத் தவித்து தங்கவும் இடமின்றி ஏதாவது அரசு செய்யும் என்று பொறுத்துப் பார்த்து விட்டுத் தெருவில் இறங்கியவர்கள் பலர் என்று புரிகிறது. மே 16ஆம் நாள் உத்தர பிரதேச மாநிலம் ஔரியாவில் சாலை விபத்தில் 23 தொழிலாளர்கள் இறந்தார்கள். ஔரங்காபாத் ரயில் விபத்தில் 16 உயிர்கள் பறிபோயின. ”ரயில் பாதையில் உறங்கலாமா?’ என்ற அறிவார்ந்த வினாவைக் கேட்டன உச்சநீதிமன்றத்தில் உட்கார்ந்திருக்கும் மோதி-அமித்ஷா கௌபீனங்கள்!

ஒரு கேள்வி கேட்டுப் பார்ப்போம்: இவர்கள் ஏன் சொந்த தேசம் திரும்ப வேண்டும்? அங்கே பிழைக்க வழியில்லாமல்தானே புலம்பெயர்ந்தார்கள்? செத்தாலும் சொந்த ஊர் சென்று சாவோம் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க வேண்டும். சாகப் போகின்றார்களா? அல்லது சாவின் விளிம்புக்குத் தங்களைத் தள்ளிய இந்தக் கேடுகெட்ட அமைப்பைச் சாகடிக்கப் போகின்றார்களா?

கொரோனா நெருக்கடியை விடவும் ஊரடங்கு முடக்கத்தால் ஏற்படும் சமூக நெருக்கடிதான் கடுமையாக இருக்கப் போகிறது என்று பலரும் எச்சரித்தனர், மோதி அரசு எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இருபது இலட்சம் கோடி ஒதுக்குவதாகத் தலைமையமைச்சர் அறிவித்த போதும் அதைக் கொண்டு நிறைவேற்றப் போகும் திட்டங்களை நான்கு பகுதிகளாக நாள் தோறும் நிதியமைச்சர் நிர்மலா அறிவித்த போதும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏதாவது உதவி கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். எதுவுமில்லை. கையில் காசு கொடுக்கக் கூடாதாம்! கடனாம்! வேலைவாய்ப்பைத் தோற்றுவிக்கும் கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தலாம்! செத்த பின் அடக்கம் செய்வதற்கா வங்கிக் கடன்?

கொரோனா நெருக்கடியைச் சாக்கிட்டு ஒட்டுறவு முதலியம் (crony capitalism) வளர்கிறது என்பதுதான் உண்மை. இதற்கு உரமிடுவதுதான் 20 இலட்சம் கோடி அறிவிப்பு! கொரோனாவோடு முனைமுகத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் யாரைப் பற்றியும் அரசுக்குக் கவலை இல்லை. கொரோனா பெயரால் அலைக்கழிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கும் உதவியில்லை. திக்கித் திணறும் மாநில அரசுகளுக்கும் உதவியில்லை.

பி.எம்.கேர்ஸ் எவ்வளவு நன்கொடை பெற்றது, அதில் எதற்கு எவ்வளவு செலவிட்டது என்பது அறிவிக்கப்படவே இல்லை. எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் நாள்தோறும் ஊடகங்களை சந்திக்கிறார். வினாக்களுக்கு விடையளிக்கிறார். பிரித்தானியத் தலைமையமைச்சர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நின்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விடையளிக்கிறார். அரசின் தவறுகளை ஒப்புக் கொள்கிறார், இந்தியத் தலைமையமைச்சரோ ஊடகங்களையும் சந்திக்க மாட்டார், நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமலே புதிய திட்டங்களையும் அறிவிப்பார், கொரோனாவே வந்தாலும் தும்ம மாட்டார் என்றால் குடியாட்சியப் பெருமை பேசிக் கொண்டிருக்காதீர்கள், அது என்ன? உலகின் ஆகப் பெரும் சனநாயகம்!  

புலம்பெயர் தொழிலாளர்கள் யார்? ஏழைப் பாட்டாளிகள் மட்டுமல்ல, கணிச அளவுக்குக் குமுகத்தின் அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த பழங்குடிகள், தலித்துகள், பிற்பட்ட வகுப்பினர். அன்றாடங்காய்ச்சிகள். இவர்களுக்கு இந்த நாட்டில் என்ன வருங்காலம்? அமைப்புசார் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளே பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சேம உழைப்புப் பட்டாளத்தின் கூட்டம் பெருகும். மொத்தத்தில் புதுத் தாராளிய முதலியமும் ஒட்டுறவு முதலியமும் தோற்றுவித்துள்ள புதிய அடிமைக் கூட்டம் பொங்கிப் பெருகும், அடிமைகள் உழைப்பார்கள், கலகமும் செய்வார்கள்.

Pin It