பேராசிரியர் ஜெயராமன் எழுதிய தமிழ்த் தேசத்தின் எதிர் யார்? “தமிழ் இந்து : இந்துத்துவா இந்தியாவுக்கு இணக்கமான முன்னெடுப்பு” என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 28,2023 அன்றூ மேடவாக்கம் பவலரேறு தமிழ்க்களத்தில் நிகழ்ந்தது. நூலை கழகத் தலைவர் வெளியிட்டார், தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் பொழிலன் தலைமையில் நடைபெற்றது. நூலை வெளியிட்டு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை :

நான் ஒரு பெரியார் இயக்கத்தவன் என்ற அடிப்படையில் பெரியாரின் மேற்கோள் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான் என்ற அடிப்படையில் தான் இந்த இரண்டு நூல்களையும் நான் பார்க்கிறேன். இந்த கருத்தை மறுக்கும் இருவருக்கு மறுப்பாகத்தான் இந்த இரண்டு நூல்கள் இருக்கும் என்று கருதுகிறேன்.

முதலில் தமிழ் தேசியம் என்ற சிந்தனையையே மாற்றி, ஒரு மாநிலத்தின் முதல்வராவது தான் தமிழ்தேசியம் என்பதான ஒரு சிந்தனைப் போக்கை உருவாக்கிவிட்டார்கள். அய்யா மணியரசன் புதியதாக ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக ‘தமிழ் இந்து’ என்ற ஒரு அடையாளத்தை நமக்களித்துள்ளார். இதில் என்ன ஆபத்துக்கள் இருக்கின்றன என்பதை பலரும் விளக்கி இருக்கிறார்கள்.kolathoor mani at book releaseதமிழ்தேசியவாதி கையில் ஒரு திறன்பேசியும், 36 கெட்ட வார்த்தைகளும் தெரிந்தால் அவர் தமிழ் தேசியவாதி என்கிறார் பேராசிரியர் ஜெயராமன். 1940 களில் இருந்து பெரியார் சுயநிர்ணய உரிமை குறித்து பேசுகிறார். இஸ்லாமியர்கள் தனிநாடு கேட்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, மதத்தின் பெயரால் கொச்சைப்படுத்தாதீர், அவர்கள் தங்களுக்குள் உள்ள சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்காக கேட்கிறார்கள். அதேபோலத்தான் எங்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு, எங்களுக்கும் தனிநாடு வேண்டும் என்று 1940ல் பெரியார் சொல்கிறார்.

1940ம் ஆண்டிலேயே ‘சுயநிர்ணயம் கேட்பது ஆக்கிரமிப்பா?’ என்று தலையங்கம் எழுதினார். சாவர்க்கர் தனது 60ம் ஆண்டு விழாவில் பேசியதற்கு பதில் எழுதுகிறார். இந்தியா எப்போதும் இந்தியாவாகத்தான் இருந்ததா? 1938ல் பர்மா, இலங்கை ஆகியவை பிரிந்து விட்டது, இந்தியன் என்றால் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்தியனா? பர்மாவை சேர்ந்த இந்தியனா? நீ பிரிந்து போன இந்தியாவில் ஒருவன் என்று தானே சொல்லிக் கொள்ள முடியும் என்றெல்லாம் விவாதிக்கிறார்.

அரசியல்ரீதியாக திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கிற தென்னிந்திய நலச் சங்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், ஜஸ்டிஸ் ஏட்டில் ஒரு தலையங்கம் எழுதுகிறார். எங்களுடைய நான்கு சகோதர இனங்கள் மொழியின் அடிப்படையில் நாடுகளாக அமைத்து ஒரு கூட்டாட்சியாக வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது என்று 1917, நவம்பரில் ஜஸ்டிஸ் ஏட்டில் தலையங்கமாக எழுதுகிறார்.

நீங்கள் திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காவிட்டால் வேறு என்ன பெயர் வைத்திருப்பீர்கள் என்று பெரியாரிடம் கேட்ட போது, சூத்திரர் கழகம் என்று வைத்திருப்பேன் என்று பதிலளித்தார். நான் திராவிடர் என்று சொல்வது சூத்திரர்களுக்கான சொல், உரிமை மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட இனத்தவரின் கூட்டம் இது. எனக்கு வேறொரு சொல் கிடைக்கவில்லை, அதனால் இந்த சொல்லை வைத்துக் கொண்டேன் என்றும் ஒருமுறை சொல்லியிருக்கிறார். இதில் சூத்திரர்களை தவிர ஒரு துரும்பு கூட உள்ளே நுழையக்கூடாது என்று கூறிவிட்டு சொன்னார், அப்படி எதாவது பெயர் இருந்தால் சொல்லுங்கள் எனது அறியாமைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எங்கள் அமைப்புக்கு அந்த பெயரை வைக்க தயாராக இருக்கிறேன் என்றார். ஆனால் நம்முடைய இன எதிரியான அல்லது கலாச்சார எதிரியான ஆரியர்கள், ஆரியத் தத்துவங்கள் உள்ளே வந்துவிடக்கூடாது, அதற்கு ஒரு சொல்லை சொல்லுங்கள் என்றுதான் பெரியார் சொன்னார்.

ஆனால் அதை முன்னெடுத்துச் செல்வதற்கான முன்னெடுப்புகள் போதிய வேகத்தில் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனாலும் அதை அடுத்த தலைமுறைக்கு கனலாக கையளிக்க வேண்டியதை கூட சிதைக்கும் போக்கு கொண்ட இருவர்களை பற்றியவை தான் இந்த நூல்கள்.

ஒருகாலத்தில் தமிழர்களுக்கு என்பது தமிழ்ப் பண்புள்ள மக்களின் உரிய பெயராக இருந்திருந்தாலும், இன்று மொழிப் பெயராகவே மாறிவிட்டதாலும், அந்த மொழிப் பேசும் ஆரிய பண்புள்ள மக்கள் யாவரும் தாமும் தமிழர் என்று உரிமை பாராட்ட முன்வந்து விடுகிறார்கள். அதோடு ஆரிய பண்பை நம்மீது சுமத்த இந்த சேர்க்கையை பயன்படுத்திவிடுகிறார்கள். எனவே அந்த திராவிடன் என்ற சொல்லை கையாண்டேன் என்று சொல்கிறார். இதுதான் திராவிடன் என்று பெயர் சூட்டியதற்காக பெரியார் தந்த விளக்கம்.

1926ல் அர்ச்சகர் உரிமை வேண்டும், கோயில் நுழைவு, பூஜை, பிரவேசம், தொழுகை உள்ளிட்டவைக்கு இந்துக்கள் என்று சொல்லப்படும் சகல சமூகத்தவருக்கும் உரிமை வேண்டும் என்று தீர்மானம் இயற்றுகிறார். இறுதிவரை அந்த கோரிக்கையில் உறுதியாக இருந்தார், இறுதி மாநாட்டில் அறிவித்த கோரிக்கையும் அதுதான். ஆரியர்கள் தாங்கள் இழந்துவிட்ட பெருமையை மீண்டும் பெறுவதற்காக நடத்தப்படுவது தான் விடுதலைப் போராட்டம்‌ என்பது பெரியாரின் கருத்து. ஆங்கிலேயர்கள் உள்ளே நுழைந்து மற்றவர்களை கேவலப்படுத்துகிற, அடிமைப்படுத்துகிற தத்துவங்களை எல்லாம் உடைத்தெறிந்து, பெண்களை அடிமையாக வைத்திருப்பதற்கு சாதகமாக இருக்கும் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அதற்கு மாற்றான சட்டங்களை கொண்டுவருகிற இந்த ஆங்கிலேயர்களை தொடர்ந்து விட்டால் நமது இந்து பண்பாடே அழிந்து விடும் என்பது தான் ஆரியர்களின் நோக்கம்.

1931ல் காந்தி - இர்வின் ஒப்பந்தம் போடப்படுகிறது. அப்போது லண்டனில் நடந்த ஒரு கூட்டத்தில் சர்ச்சில் பேசுகிறார். “எல்லா நாட்டிற்கும் சுதந்திரத்தை கொடுங்கள், ஆனால் இந்தியாவிற்கு மட்டும் சுதந்திரத்தை கொடுக்காதீர்கள் என்று சர்ச்சில் பேசினார். அப்படி அவர் பேசியதற்கு காரணம் “இந்த நாட்டின் விடுதலைக்காக போராடுகிற காந்தியின் திட்டம் ஆங்கிலேயர் என்ற இடத்தில் பிராமணர்களை உட்கார வைப்பது மட்டும் தான். அவர்கள் மீண்டும் வந்துவிட்டால் 60 மில்லியன் தாழ்த்தப்பட்ட மக்கள் அழிந்தே போய்விடுவார்கள்” என்று பேசினார். இந்திய தேசியத்திற்கு எதிராக பெரியார் பேசியதை இவர்கள் தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசியது போல் காட்டுகிறார்கள்.

அய்யா மணியரசன் எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார். ஒருமுறை ஒரு நிகழ்ச்சியில் பேசுகிற போது சொன்னேன். உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்று ஔவையார் சொல்கிறாரே, ஒன்று மேலாடையாக நான்கு முழம் அல்லது கீழே கட்டியிருப்பது நான்கு முழம் தானே என்று ஒரு இடத்தில் சொன்னேன். உடனே அய்யா மணியரசன், மதுரை கணக்காயர் மகன் நக்கீரனார் எழுதியிருக்கிறார். உண்பது நாழி உடுப்பது இரண்டு என்று தான் உள்ளது கொளத்தூர் மணி மாற்றிப் பேசுகிறார் என்று எழுதினார். நான் மீண்டும் அவருக்கும், அவரது இதழுக்கும், அவரது இணையதளத்திற்கும் எழுதினேன். நான் ஔவையார் பற்றி சொன்னேன், நீங்கள் நக்கீரனாரை பற்றி சொல்கிறீர்கள், நான் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என்றவுடன் அமைதியாகிவிட்டார். பிறகு மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் எழுதுகிறார். ஒருவர் தன்னுணர்வு கொண்டவராக இருந்தால் தவறு என்று சுட்டிக் காட்டினால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். –

(அடுத்த இதழில் நிறைவடையும்)

கொளத்தூர் மணி

Pin It