1952ஆவது ஆண்டு, திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பினைத் தந்தை பெரியார் தோற்றுவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற் சங்கங்கள், அறிஞர் அண்ணாவின் காலம்வரைத் தனித்தனியாக இயங்கி வந்தன. 1970 மே 1அன்று கலைஞர் அவர்கள் தொழிலாளர் முன்னேற்ற சங்கப்பேரவையைத் தொடக்கி வைத்தார். தொ.மு.ச. என்று சுருக்கமாய் வழங்கப்படும் அப்பேரவை இன்று ஆல்போல் வளர்ந்து, இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் பரவி, 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு விளங்குகின்றது. இந்தியா முழுமைக்குமான மத்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பிலும் அங்கம் வகித்து வருகின்றது.

52ஆம் ஆண்டுதான் சங்கத்தைப் பெரியார் தொடங்கினார் எனினும், 46ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் திராவிடர் கழகத்திற்குப் பெரும்பங்கு இருந்தது. குறிப்பாக, திருச்சிக்கு அருகில் உள்ள பொன்மலையில் நடைபெற்ற போராட் டம் திராவிடர் கழகத் தோழர்களினாலேயே முதன்மை பெற்றது.

1926இல் நாகையில் நடைபெற்ற தொழிலாளர் மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் தொழிலாளர் மாநாடு என்று தன் உரையில் அவர் குறிப்பிடுகின்றார். தொழிற்சங்கங்களில் எனக்குப் பெரிய நம்பிக்கை இல்லை என்றும் அன்று பேசியிருக்கிறார். அதற்கான காரணங்களையும் அவர் தெளிவாக எடுத்துவைக்கிறார். இங்கே தொழிலாளிகள் என்பவர்கள் கூலிகளாகவே இருக்கின்றனர், தொழிலின் பயன்பாட்டிலோ, லாபத்திலோ அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதால்தான் தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்கிறார்.

கூலி உயர்வுக்காக மட்டுமே நடத்தப்படும் போராட்டங்களில் பெரியார் நம்பிக்கை அற்று இருந்திருக்கிறார். அதுபோலவே தொழிற்சங்கங்களுக்கு வெளியார் தலைமை ஏற்பதையும் அவர் ஏற்கவில்லை. அது குறித்து ஒரு கதையையும் தன் பேச்சில் அவர் எடுத்துவைக்கிறார். ஒரு குளத்தில் இருந்த தவளைகள் எல்லாம் கடவுளிடம் போய் தங்களுக்கு  ஒரு தலைவர் வேண்டும் என்று கேட்டனவாம். அவர் ஒரு மரக்கட்டையைத் தலைவராக அனுப்பி வைத்தாராம். சில நாட்களுக்குப் பிறகு, தவளைகள் எல்லாம் மீண்டும் திரும்பி வந்து, நீங்கள் கொடுத்த தலைவர் ஒன்றுமே செய்யாமல் பேசாமல் இருக்கிறார், ஏதாவது காரியம் செய்யும் தலைவர் எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனவாம். உடனே அவர் மரக்கட்டையை எடுத்துக்கொண்டு, ஒரு பாம்பைக் கொடுத்தாராம். அந்தப் பாம்பு ஒரு நாளைக்குப் பத்துத் தவளைகள் என்று விழுங்கிவிட்டதாம். இப்போது கடவுளிடம் தவளைகள் மீண்டும் முறையிட்டன. எங்களுக்கு இனிமேல் ஒரு தலைவரும் வேண்டாம். எங்களுக்குள் ஒருவரை நாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுகிறோம் என்று கூறிவிட்டனவாம். இந்த வேடிக்கையான கதையை எடுத்துரைத்த பெரியார், நீங்களும் உங்களிடமிருந்தே ஒரு தலைவரை உருவாக்க வேண்டும், வெளியில் எவரையும் தேட வேண்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கங்களின் மீதும், தொழிலாளர்களின் மீதுமட பெரியாருக்கு இன்னொரு வருத்தமும் இருந்தது. வெறும் கூலி உயர்வுக்காகப் போராடி, நாலணாவோ, எட்டணாவோ கூலி உயர்வைப் பெறும் தொழிலாளர்கள், பழனிக்கோ, திருப்பதிக்கோ போய் மொட்டை அடித்து விட்டு வருகிறார்கள். எல்லாம் கடவுளால்தான் கிடைத்தது என்ற மூடநம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள். கூலியை உயர்த்திக் கொடுத்த முதலாளியோ, அந்தச் செலவைப் பண்டங்களின் மீது ஏற்றி சரிசெய்து விடுகிறார். ஆக மொத்தம், தொழிலாளிகளையும் ஒரு பகுதியினராகக் கொண்ட மக்கள் சமுதாயமே அதனால் பாதிக்கப்படுகிறது. முதலாளிக்கு அதனால் ஒரு பாதிப்பும் இல்லை. எனவே, முதலீட்டிலும் நிர்வாகத்திலும் தொழிலாளர்களுக்குப் பங்கு வழங்கப்படுவதும், அதற்கான போராட்டமுமே சரியானது என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது.

இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டே, 52இல் அவர் விவசாயத் தொழிற்சங்கத்தைத் தொடங்குகிறார். திராவிடர்கள் எல்லோருமே விவசாயிகளாகவும், தொழிலாளர்களாகவும்தான் இருக்கின்றனர் என்று கூறும் பெரியார், தான் தொடங்கிய தொழிற்சங்கம் கூட்டுப் பொறுப்பிற்காகவே போராடும் அமைப்பாகத் திகழும் என்கிறார். விஞ்ஞான வளர்ச்சிகளை வரவேற்கும் தன்மை உடைய அமைப்பாகவும் நாம் இருக்க வேண்டும் என்கிறார். தகுதி திறமை என்பதெல்லாம் பிறவியில் வருவதில்லை, பயிற்சியில்தான் வருகிறது. ஆதலால் அவற்றை எல்லோரும் வளர்த்துக் கொள்ள முடியும் என்பதும் பெரியாரின் கருத்து.

இங்கே வர்க்கம் மட்டுமில்லை, வருணமும் இருக்கிறது. காரல்மார்க்ஸ் இந்தியாவின் சாதிகளைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியிருக்கிறார் என்றாலும், அது குறித்து அவருக்கு முழுமையாகத் தெரிந்து இருக்க முடியாது என்னும் வாதத்தை முன்வைத்து, வருண சிந்தனையோடும் தொழிற்சங்கங்கள் கட்டப்பட வேண்டும் என்கிறார். எல்லாவற்றையும் விட, அமைப்பு சாரா தொழிலாளர்களைப் பற்றி அவர் சிந்தித்திருக்கிறார் என்பதுதான் மிகப் பெரிய வியப்பபான செய்தியாகும். அந்தத் தொடரை அவர் பயன்படுத்த வில்லையே தவிர, அந்தப் பொருளில்தான் அவர் பேசுகின்றார். தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பெற்றுவிடுகின்றனர், விலைவாசியும் கூடிவிடுகின்றது, அப்போது புல்லுக்கட்டுச் சுமக்கும், கீரை விற்கும் தொழிலாளர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்று கேட்கிறார்.

அது மட்டுமல்லாமல், மிக நுட்பமாக இன்னொரு செய்தியையும் அவர் வெளியிடுகின்றார். தனக்கு இன்னும் கொஞ்சம் தட்சிணை வேண்டுமென்றால், பச்சரிசி, தானியமெல்லாம் என்ன விலை விற்கிறது, கொஞ்சம் பாத்துக் குடுங்கோ என்கிறார் புரோகிதர். சாமி, கம்பு, கேழ்வரகெல்லாம் வெல கூடிப்போச்சி, கொஞ்சம் கூலியக் கூட்டிக்குடுங்க என்றுதான் புல்லுக்கட்டுச் சுமக்கும் பெண் கேட்கிறாள். புல் சுமக்கும் பெண்ணும் அரிசி உண்ணும் காலம் வரவேண்டாமா என்பது ஐயாவின் கவலையாக இருந்திருக்கிறது.

இவ்வளவு தூரம் தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்டு பேசிய பெரியாரைத்தான் இன்றும், பொதுவுடைமைக் கட்சித் தோழர்களில் சிலர் குறை கூறுகின்றனர். 1934ஆம் ஆண்டு, பொதுவுடைமைக் கருத்துகளைப் பரப்புவதைப் பெரியார் நிறுத்தி விட்டார் என்று சொல்லி வருந்துகின்றனர். மறைந்த சர்.ஏ.டி. பன்னீர்ச்செல்வம் அவர்களின் கருத்துப்படி, ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்னும் எண்ணத்தில்தான் பரப்புரையைச் சற்றுத் தள்ளி வைத்தாரே தவிர, முற்றுமாய்க் கைவிட்டு விடவில்லை. 35ஆம் ஆண்டு, ஏப்ரல் மாத இறுதியில், மே நாளை நம் தோழர்கள் மறக்காமல் நினைவுகூர வேண்டும் என்று சொன்னவர் அவர்தான்.

பிரஸ்ட் ‡ லிதோவோஸ்க் ஒப்பந்தத்தில் ஜெர்மனியோடு கையயாப்பமிட்ட லெனின், சோவியத்தோடு இணைந்திருந்த பால்டிக் பகுதி, உக்ரைன், பின்லாந்து போன்றவைகளை விட்டுக்கொடுக்க இசைந்தார். அப்போது அதற்குக் கட்சிக்குள்ளேயே சில எதிர்ப்புகள் எழுந்தன. அந்நேரத்தில் லெனின் ஓர் உவமையின் மூலம் தன் நிலையை விளக்கினார். ஒரு காரில் பயணம் செய்யும் போது, ஆயுதங்கள் ஏதுமற்று இருக்கும் நம்மை, கொலை வெறி ஆயுதங்களைக் கையில் வைத்திருக்கும் கொள்ளையர்கள் சுற்றி வளைத்துக் கொண்டால், அவர்களிடம் நம் காரையும், பொருள்களையும் விட்டுவிட்டுத் தப்பித்துச் செல்வது ஒருவிதமான சமரசம்தான். ஆனால் அந்த நேரத்தில் அதுதான் புத்திசாலித்தனம். இழந்தவற்றைப் பிறகு மீட்டுக் கொள்ள முடியும் என்கிறார் லெனின். வெள்ளையர்கள் சூழ்ந்து நின்று தாக்கிய நிலையில், சுயமரியாதை இயக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள பெரியார் செய்த தந்திரமே அது என்பதைப் பிறகு காலம் மெய்ப்பித்தது.

1973ஆம் ஆண்டு சேரன் போக்குவரத்துக் கழகத்தில், தொழிலாளர்களுக்கு முதலீட்டிலும், நிர்வாகத்திலும் பங்கு அளிப்பதென்று அரசு முடிவெடுத்தது. அதனை வெகுவாகப் பாராட்டிய தந்தை பெரியார், “ நமது மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசு எடுத்திருக்கிற துணிச்சலான இத்திட்டத்தைப் பற்றி அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். தி.மு.க. அரசாங்கம் சாதித்து வரும் பெரும் மெளனப் புரட்சிகளில் இது ஒரு சரித்திரச் சாதனை என்பேன்”  (விடுதலை 05.05.1973) என்று கூறியுள்ளார்.

Pin It