பூவிழியன் எழுதிய 'கே.பி.எஸ்.மணி: ஒரு போராளியின் வரலாறு' என்ற நூல், “இந்தத் தொழிலெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்கள் செய்யக்கூடாதுன்னா, அப்புறம் யார் தான் செய்யறது? எனப் பெரியார் கேட்டார். அதற்குப் பதில் சொல்ல விரும்பாத கே.பி.எஸ்.மணி அன்றைய தினத்தில் இருந்து பெரியாரின் உறவையும் அவரது கொள்கைகளையும் விட்டு விலகினார்" என தானே விலகிக் கொண்டதாக கூறுகிறது.

ஆனால் ‘தலித்’ ஏட்டில் வெளியான நேர்காணலில் இளையபெருமாள் “தன்னை எதிர்த்துப் பேசியது பிடிக்காமல் அவரைப் பெரியார் கட்சியை விட்டு நீக்கி விட்டார்” என்கிறது.

கே.பி.எஸ்.மணியின் வாழ்க்கை வரலாற்று நூல் கூறுவது போல திராவிடர் கழகத்தை விட்டு, ஏன், பெரியாரது கொள்கைகளையும் விட்டுவிட்டு, தானே விலகினார் என்பது உண்மையா? ‘தலித்’ ஏட்டுக்கான நேர்காணலில் இளையபெருமாள் கூறியிருப்பதைப் போல எதிர்த்துப் பேசியது பிடிக்காமல் பெரியார் விலக்கி விட்டார் என்பது உண்மையா? அல்லது இரண்டுமே பொய்யா?

1946 நவம்பரில் பெரியார் உரையாற்றி முடித்தவுடன் பறைகளை எரிக்கும் நோக்கத்தில் தோழர்கள் 100 பேர் திடீரென வர, ஏற்பட்ட பரபரப்பை பெரியார் அமைதியாய் இருக்கும்படி வேண்டி, அமைதி ஏற்பட்டவுடன் பறைகள் எரிக்கப்பட்டன.

1946 டிசம்பரில் ‘குடிஅரசு’ ஏட்டில் பறைகளை எரித்து எதிர்ப்பினை வெளிப்படுத்த ஊக்குவிக்குமாறும், திராவிடர் கழகத் தோழர்கள் அந்நிகழ்விற்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தருமாறும் வேண்டி அறிக்கை வெளியிட்ட அதே பெரியார் 1948 இல் உங்கள் சாதி பறை அடிக்காவிட்டால் யார் அடிப்பார்கள் என்று வினவியதாக ‘இளையபெருமாள், கே.பி.எஸ்.மணி’ ஆகியோரின் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

புதிய வரலாறு படைப்போம்! புதிய வரலாறு படைப்போம்! என்கிறார்களே, இவ்வாறான ‘புதிய, புதிய’ வரலாறுகள் எழுதுவதுதான் புதிய வரலாறு படைப்பதோ!ravikumar 600ரவிக்குமாரின் அடுத்த பொய் :

அடுத்து, ரவிக்குமார் எழுதிய “எல். இளையபெருமாள் வாழ்வும் பணியும்” என்ற நூலில் “கீழ்வெண்மணி படுகொலை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை.

“அந்த கொலையிலே (கீழ்வெண்மணி) குற்றவாளிகளை (கோபாலகிருஷ்ணன் நாயுடு உள்ளிட்ட 23 பேர்) தமிழக அரசு விடுதலை செய்தது வேதனையான செய்தி. ஆனால் எமர்ஜென்சி வந்தபோதும், நான் 1980ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவராக வந்த போதும் அந்த வழக்கை மீண்டும் தொடரச் செய்து குற்றவாளிகள் சிலருக்குத் தண்டனை வாங்கித் தந்தோம்" என்கிறது கட்டுரை

கீழத் தஞ்சையில் (இன்றைய நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) உள்ள கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் சட்டவிரோதக் கும்பலின் வன்முறை அச்சத்தால் ராமையா என்பவர் குடிசையில் ஒளிந்திருந்த 44 பேர் (பெண்கள், முதியவர்கள் உட்பட) குடிசைக்குள் கருகி உயிரிழந்தனர். (25.12.1968) அன்று இரவு பத்து மணி அளவில் குடிசைக்கு பண்ணையார்கள் தரப்பினால் தீ வைக்கப்பட்டது. எதிர்ப்பட்ட ஆண் தொழிலாளர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

சிலருக்கு அரிவாள் வெட்டும், சுளுக்கி மற்றும் தடியினால் பலத்த காயங்களும் ஏற்பட்டன. குண்டடிபட்ட முனியன் (முதல் சாட்சி) தனது புகாரில் தாக்க வந்த கூட்டத்தில் கோபால கிருஷ்ணன் நாயுடுவும் இருந்ததைக் குறிப்பிட்டு கூறியிருக்கிறார். இந்த கலவரத்தில் வெளியூரில் இருந்து அறுவடைக்காக கூட்டி வரப்பட்ட கூலித் தொழிலாளி பக்கிரிசாமியும் கொல்லப்பட்டார்.

44 பேர் மரணத்திற்காக கோபாலகிருஷ்ணன் நாயுடு மீதும் அவரது நெருங்கிய உறவினர்கள் மீதும் கொலைக்காக இ.பி.கோ 302இன் கீழும், ஆயுத சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. (முதல் தகவல் அறிக்கை எண்: 327/68)

கலவரத்தில் இறந்து போன பக்கிரிசாமி மரணத்தை கொலை வழக்குக்காக கீவளூர் காவல் நிலையம், முதல் தகவல் அறிக்கை 328/1968 ஆகப் பதிவு செய்தது. இந்த வழக்கிலும் கோபால், ராமையன் உட்பட 23 பேர் மீது வழக்கு.

இரு வழக்குகளுக்கும் ஆன தீர்ப்பினை மாவட்ட அமர்வு நீதிமன்றம் 30.11.1970 அன்று கூறியது. நீதிபதி சி.எம்.குப்பண்ணன், பக்கிரிசாமி கொலை வழக்கில் முதல் குற்றவாளி கோபாலுக்கு ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றவாளி ராமையனுக்கு 5 வருடமும், நான்கு பேருக்கு இரண்டு வருடமும் சிறை தண்டனை வழங்கினார். 8 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால் கீழ்வெண்மணி 44 பேர் எரித்த வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் மேலும் எட்டு பேர்களுக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சட்ட விரோதமாகக் கூடி சட்டத்துக்குப் புறம்பான காரியங்களை செய்ததற்காகவும், தீயிட்டு அழித்ததற்காகவும் அந்த தண்டனை அளிக்கப்பட்டது. கொலை முயற்சியில் ஈடுபட்டதற்காக அதில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டதே ஒழிய கொலைக் குற்றச்சாட்டில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முதல் வழக்கில் தண்டிக்கப்பட்டோரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கோபாலும், 5 வருட தண்டனை விதிக்கப்பட்ட ராமையனும் (Crl. A. no.23/1971) உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

கோபாலகிருஷ்ண நாயுடு தரப்பாரும் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு (Crl.A.No.1208/1970) செய்தனர்.

முதலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் கோபால், ராமையன் இருவருக்கும் 4.8.1972 அன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. அவர்களுக்காக இடதுசாரி வழக்கறிஞரான ஆர்.கே கர்க் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் 30.1.1986 அன்று முறையீட்டைத் தள்ளுபடி செய்தது.

கீழ்வெண்மணி கொலை வழக்கில் மேல்முறையீட்டை 1973இல் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் (வெங்கட்ராமன் ஐ.சி.எஸ் மற்றும் மகாராஜன்) கோபாலகிருஷ்ண நாயுடுவும் மற்ற குற்றவாளிகளும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தது. அதனை எதிர்த்து திமுக அரசு 1975 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. திமுக ஆட்சி 1976 ஜனவரி இறுதியில் கலைக்கப்பட்டது. மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போதே கோபாலகிருஷ்ண நாயுடு 14.12.1980 அன்று அவரது இரிஞ்சூர் கிராமத்திலேயே கொலை செய்யப்பட்டார். மேல்முறையீடு 31.10.1990 அன்றே விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு மேல்முறையீட்டு அதிகாரத்தின் கீழ் இவ்வழக்கில் தலையிட விரும்பவில்லை என்று கூறி முறையீட்டைத் தள்ளுபடி செய்து விட்டது. (தகவல்கள் : நீதிபதி சந்துரு அவர்கள், உரிமைத் தமிழ்த்தேசம் டிசம்பர் 2020 இதழில் “கீழ்வெண்மணி - குடை சாய்ந்த நீதி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை)

இளையபெருமாள் அவர்களோ உயர் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ததை “தமிழக அரசு விடுதலை செய்தது வேதனையான செய்தி” என்கிறார்.

உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து திமுக அரசு செய்த மேல்முறையீட்டை 15 ஆண்டுகள் கழித்து 1990இல் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் இளையபெருமாள் அவர்களோ எமர்ஜென்சி வந்தபோதும், 1980இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக வந்த போதும் அந்த வழக்கை மீண்டும் தொடரச் செய்து சிலருக்குத் தண்டனை பெற்றுத் தந்தோம்” என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்.

இதே இளையபெருமாள் அவர்கள்தான் பெரியார் மீது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை, அவ்வப்போது வெவ்வேறு வகையாக சொல்லியுள்ளார் என்பதையும் இணைத்துப் பார்த்தாலே அவரின் கூற்றுகளின் உண்மைத் தன்மையை உணர்ந்திட முடியும்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It