ஜெய் பீம் படம் குறித்து டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹரிஷ் எஸ். வாங்கடே இந்து ஆங்கில நாளேட்டில் (நவம்பர் 11,2021) விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஜெய் பீம் என்ற முழக்கம் தலித் மக்களுக்கானது மட்டுமல்ல அனைத்து விளிம்பு நிலை மக்களுக்குமான உரிமை முழக்கம் என்றும், அதைத்தான் ஜெய்பீம் படமும் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கதாநாயகனாக வரும் சந்துரு ஒரு மார்க்சிஸ்டாக சித்தரிக்கப்பட்டாலும், வர்க்கப் போராட்டம், மக்களை அணிதிரட்டல் என்ற மார்க்சிய அணுகுமுறைகளிலிருந்து விலகி ஜாதிய ஒடுக்குமுறை, அதற்கு துணைபோகும் காவல்துறையின் வன்முறைகளை தான் படமாக்கியுள்ளனர். சொல்லப் போனால் பூலே, பெரியார், அம்பேத்கர் பேசிய ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்களை, ஒரு மார்க்சிஸ்ட் வழக்கறிஞர் சட்டப் போராட்டம் வழியாக நடத்துகிறார்.

இடதுசாரிகள் வர்க்கப் பார்வையோடு ஜாதி எதிர்ப்பையும், தமிழ்நாடு, ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்களில் இணைத்து செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள். அத்தகைய கதாநாயகர்தான் சந்துரு. என்று கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார்.

விளிம்பு நிலையில் தள்ளப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தினருடைய படமாக இதைப் பார்க்க வேண்டும் என்பதே கட்டுரையாளரின் கருத்து. மாறாக அப்படிப்பார்க்காமல், தங்கள் ஜாதியை எதிர்க்கும் படமாக சிலர் எதிர்ப்பது எதைக் காட்டுகிறது ? நடிகர் சூர்யாவிற்கு பாமக இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி கடுமையாக கண்டித்து கடிதம் எழுதியிருக்கிறார்.

இராஜாக்கண்ணுவை அடித்து சித்திரவதை செய்கிற ஆய்வாளர் வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் நாட்காட்டி, மற்றும் அந்த ஆய்வாளரின் பெயர் குருமூர்த்தி. இந்தப் பெயர், வன்னியர் சங்கத் தலைவராக இருந்த குருவை மறைமுகமாக உணர்த்துகிறது என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. எதிர்ப்பு வந்தவுடன் படக்குழுவினர் அதை நீக்கிவிட்டனர். உண்மையில் சித்திரவதை செய்த காவல் ஆய்வாளரின் பெயர் ஆரோக்கியசாமி என்ற கிறிஸ்துவர். இதை ஏன் மறைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தில், வழக்கறிஞர் சந்துரு பாதிக்கப்பட்ட இராஜாகண்ணு என்ற பெயர்கள் தான் உண்மையான பெயர்கள். மற்றப் பாத்திரங்கள் திரைக்கதைக்காக உருவாக்கப்பட்டவை. ஒரு வரலாற்று நிகழ்வை மையமாக கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கி அதற்கான திரைக்கதையையும், கதாபாத்திரங்களையும் திரைப்பட மொழியில் இப்படம் பேசுகிறது. இது ஆவணப்படம் அல்ல. இத்தகைய எதிர்ப்புகள் வந்த பிறகு தான் இந்த ஜாதி அடையாளங்களே மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது. சொல்லப்போனால் இராஜாக்கண்ணுவிற்கு நீதி கிடைப்பதற்காக 13 ஆண்டுகாலம் களப்போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் கோவிந்தன் பிறவியில் ஒரு வன்னியர் தான்.

வன்னியர் சமூகத்தில் பிறந்தாலும் ஜாதி எதிர்ப்புக் கருத்துக்களை ஏற்று பெரியார் இயக்கங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்களிலும் களப்பணியாற்றக் கூடிய ஏராளமான வன்னியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இத்தகைய படங்களை வரவேற்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.

ஒவ்வொரு ஜாதிக்குழுவிலும் ஜாதியைக் கடந்தவர்கள், ஜாதி எதிர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். ஜாதி வெறி கொண்டவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய ஜாதி வெறியர்கள் போக்கு மாற்றப்பட வேண்டும் என்று ஒரு திரைப்படம் வந்தால் அது ஒட்டு மொத்தமாக எங்கள் ஜாதிக்கு எதிரான திரைப்படம் என்று கொதித்து எழுந்து கண்டிப்பவர்கள் சமூகநீதியாளர்களா? அல்லது புரையோடியிருக்கும் ஜாதியத்தை வெளியே தாங்கி நிற்பவர்களா?

எந்த முறைகேடுகளை செய்தாலும், “பிராமணன்” ஆகப் பிறந்த ஒருவன், இறக்கும் வரை ‘பிரம்மா’வின் நெற்றியில் பிறந்த உயர்குலத்தவன் தான் என்று மனுதர்மம் கூறுகிறது. எங்கள் ஜாதியைச் சார்ந்த எவர் குற்றம் செய்தாலும், அவர்கள் அக்னியில் பிறந்த க்ஷத்திரியர்களே. அவர்களை தனிப்பட்ட முறையில் குறை கூறினால், அது எங்கள் ஜாதிய சமூகத்துக்கே இழுக்கு என்றால், இவர்களும் மனுவாதிகள் தானே!

சமூகத்தில் தங்களை விட ஒடுக்குமுறைக்கு உள்ளாகி நிற்கும் இருளர் சமூகத்தின் அவலங்களை சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தை உண்மையான சமூக நீதியாளர்கள் முதலில் வரவேற்று பாராட்டுவார்கள். அதற்குப் பிறகு அதுபற்றிய குறைகளையும் கூற அவர்களுக்கு உரிமையுண்டு.

தலித் மக்களையும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனையும் இழிவுபடுத்தும் ‘திரவுபதி’ போன்ற படங்கள் வந்தபோது இவர்கள் தான் கொண்டாடினார்கள். தொல். திருமாவளவன் பெருந்தன்மையுடன் கடந்து போனதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

“அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பிய ஒரு படத்தை ‘பெயர் அரசியலுக்குள்’ சுருக்க வேண்டாம்” என்ற சூரியாவின் கருத்தைத் தான் நாமும் வலியுறுத்துகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It