‘இந்து மதம்’ என்பதாக ஒரு மதமே இல்லை என்றார் இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர்; தமிழ்நாட்டில் சைவம் - வைணவர்கட்கும் கடும் பகை. வைணவத்திலேயே வடகலைக்கும் தென் கலைக்கும் நடந்த மோதல்களை சொல்லவே வேண்டாம். மதுரையில் 8000 சமணர்களை கழுவேற்றித் துடிக்க துடிக்க கொலை செய்தது சைவம்.

மறைந்த ‘கரிசல் மண்’ எழுத்தாளர் கி. ராஜநாராயணன், வைணவக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தனது ‘கரிசல் காட்டுக் கடுதாசி நூலில்’ கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

“சிவனுடைய பெயரை யாரும் எங்கள் வீட்டில் மறந்தும் உச்சரிக்க மாட்டோம். அசந்து மறந்து சொல்லி விட்டால் சாட்டை அடி விழும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் பெயர்கள்கூட சிவப் பெயர் கிடையாது. இதில் எங்கள் அப்பா ரொம்ப ஜாக்கிரதை! நாங்கள் மணிகட்டி வைணவர்களின் பரம்பரை! மணிகட்டி வைணவர்களின் ரண்டு காதுகளிலும் சிறிய வெள்ளி மணிகள் கட்டித் தொங்கவிட்டிருக்கும். எங்காவது எவனாவது சிவனுடைய பெயரை அசந்து மறந்து சொல்லித் தொலைத்து விட்டால் உடனே வேகமாகத் தலையைக் குலுக்குவோம். இந்த மணிகள் ஒலித்து, சிவ நாமத்தைக் காதினுள் நுழைய விடாமல் விரட்டி அடித்து விடும்!”

நடந்த ஒரு சம்பவம் ஒன்றையும் அந்த நூலில் ‘கி.ரா.’ விவரித்துள்ளார்:

“ஒரு சத்திரத்தில் மூணு சிவப் பண்டாரங்கள் வந்து தங்கியிருந்தார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை; அதில் ரண்டு பண்டாரங்களுக்குள் பலத்த ‘அடிதடி’ நடந்தேறி விட்டது. மூணாவது பண்டாரம் இதைப் பார்த்துப் பலத்த கூக்குரலிட்டார். சத்திரத்தின் கார்பாரி ஓடி வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டு போய் ஊர் நாட்டாண்மை நாயக்கரிடம் நிறுத்தினார். கிராமத்தின் நாட்டாண்மையும் விவகாரியுமான அவர் ஒரு மணி கட்டி வைணவர் என்பது அவர் காதுகளில் தொங்கும் மணிகளே சொன்னது.

சத்திரத்து அதிகாரியான கார்பாரி அந்தப் பண்டாரங்களைக் கொண்டு வந்து அவர் முன் நிறுத்தியதோடு விலகிக் கொண்டார். நடந்ததைப் பார்த்தவர் மூணாவது பண்டாரம் தான். அவர் தான் கண்கண்ட சாட்சி. என்ன நடந்தது என்று ‘விவரித்தார்’ அவர்!

அந்த மூணாவது சிவப் பண்டாரம் மூச்சுக் காற்றை வெளியே விடும் போதும் சிவ; மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போதும் சிவ! அப்படி ஒரு சிவயோக சிவப் பண்டாரம் அல்லது பண்டார சிவம்! அவர் தன்னுடைய சாட்சியத்தை ஆரம்பித்தார்.

முதல் பண்டாரத்தைச் சுட்டிக் காட்டி, “இச் சிவம் அச்சிவத்தை சிவ.” அதாவது, இவர் - இந்தப் பண்டாரம் - அந்தப் பண்டாரத்தை ஓர் அடி வைத்தார் முதலில்.

பதிலுக்கு அவர் என்ன செய்தாராம்! “அச் சிவம் இச்சிவத்தை சிவ சிவ...” - ரண்டாகப் பதிலுக்குத் திருப்பித் தந்தார். மேலும் என்ன நடந்தது?

“இச் சிவம் அச்சிவத்தை சிவ சிவ சிவ...” அவ்வளவு தான்; அதுக்குப் பிறகு நடந்ததை இப்படி வேகமாக விவரித்து முடித்தார். “இச்சிவம் அச் சிவம் அச் சிவம் இச் சிவம் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ....”

பாவம், மணிகட்டி வைணவர் பாடு திண்டாட்டமாகப் போய் விட்டது! தலையை எப்படிக் குலுக்கியிருப்பார் என்று சொல்லத் தேவையில்லை.”

அப்போது தொடங்கிய சைவ - வைணவப் போர் இப்போது ‘திருவிழாக்கள்’ வரை எதிரொலிக்கிறது.

Pin It