இந்திய நீதித்துறைக்கு இது இருண்ட காலம். குஜராத் கலவரத்தில் இருந்து தொடங்கி கொலை வெறியாட்டம் நடத்திய காவி பயங்கரவாதிகள் அனைவருக்கும், மோடி பதவியேற்றதில் இருந்து, விடுதலை அளிக்கும் பணி வெகு விரைவாக நீதிமன்றத்தின் துணையுடன் நடந்து வருகின்றது.

முன்னதாக குஜராத் கலவரத்தில் மோடிக்கு உள்ள தொடர்பு பற்றிய உண்மைகளை மோடி அரசில் வருவாய்த் துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பண்டியா ‘ மக்கள் நீதி மன்றம்’ என்ற அமைப்பு நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டதால் அவர் சோராபுதீன் என்ற ரவுடி மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த உண்மை வெளியே கசியவே  சோராபுதீனை போலி மோதல் மூலம் கொல்ல வன்சாரா என்ற அதிகாரியை நியமித்தார். வன்சாரா சோராபுதீனையும் அவனது அடியாளாக இருந்த துளசி ராம் பிரஜாபதியையும் போலி மோதலில் கொன்றது மட்டும் அல்லாமல் சோராபுதீனின் மனைவி கவுசர் பீ யையும் விச ஊசி போட்டுக் கொன்றார். இவ்வளவு கொலைகளும் நரேந்திர மோடி என்ற ஒற்றை நபரை குஜராத் கலவர வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காகவே செய்யப்பட்டன. வன்சாரா என்ற காவல்துறை அதிகாரி சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் மட்டும் அல்லாமல் இஷ்ரத் ஜகான், ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை, அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நான்கு பேர்களை லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் மோடியை கொல்வதற்காக குஜராத்துக்கு வந்ததாகவும் பொய்யான குற்றம் சாட்டி போலி என்கவுன்டர் செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளியாவார்.

வன்சாரா சிறையில் இருந்த போது குஜராத் அரசுக்கு 10 பக்க ராஜினாமா கடிதத்தை அனுப்பி இருந்தார் அந்தக் கடிதத்தில் வன்சாரா, தான் நடத்திய அனைத்து போலி என்கவுன்ட்டர் கொலைகளும் மோடிக்காக நடத்தப்பட்டது என்பதையும் மோடி எப்படி காவல்துறையைத் தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.அது மட்டும் அல்லாமல் ‘குஜராத் தலைநகர் காந்திநகரில் செயல்பட்டுவரும் மோடியின் அரசை சபர்மதி மத்திய சிறைக்கு மாற்றவேண்டும்’ என்று வன்சாரா வெளிப் படையாக கோரிக்கை வைத்தார். ஆனால் மோடியின் கூலிப்படையான சிபிஐ திட்டமிட்டு வன்சாராவை விடுவிக்கும் நோக்கத்தோடே செயல்பட்டது. இதனால் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வன்சாராவை கடந்த ஆண்டு விடுவித்தது.

மேலும் போலி என்கவுன்டர் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா 2014 ஆம் ஆண்டு அவர் மீதான அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். குஜராத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்பதால் இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.

மும்பை சி.பி.ஐ நீதிமன்றத்தில் முதலில் இந்த வழக்கை விசாரித்து வந்த ஜே.டி. உத்பத், அமித்ஷா வழக்கில் ஆஜராகாமல் ஏமாற்றுவதை தொடர்ச்சியாக கண்டித்ததால் காரணம் ஏதுமின்றியே 2014 ஜூன் 26 ஆம் தேதி பூனா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அடுத்து இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட நீதிபதி லோயா அவர்களும் அமித்ஷா மும்பையிலேயே இருந்துகொண்டு வழக்கில் ஆஜராகாமல் ஏமாற்றுவதைக் கண்டித்தார். அமித்ஷாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கக்கோரி அவர் கடுமையாக நிர்பந்திக்கப்பட்டார்.

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான மோகித்ஷா மூலம் 100 கோடி ரூபாய் பேரமும் பேசப்பட்டது. ஆனால் வழக்கில் நேர்மையாக நடந்து கொண்டதால் அமித்ஷாவின் விருப்பப்படி 2014 டிசம்பர் ஒன்றாம் தேதி நாக்பூரில் மர்மமான முறையில் உயிரிழந்தார். லோயாவுக்கு அடுத்து இந்த வழக்கில் ஆஜரான எம்.வி. கோசாவி பொறுப்பேற்ற பதினைந்தே நாளில் அமித்ஷாவை விடுவித்து அவரை உத்தமர் ஆக்கினார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த பத்திரிக்கை யாளர் லோனே என்பவர் நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் 10 வது அமர்வுக்கு மூத்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் எம்.எம். சந்திரகௌடரிடம் ஒதுக்கப்பட்டது. திட்டமிட்டே வழக்கை முடித்துக்கட்டுவதற்காக இந்த வழக்கு 10 வது அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் ஒதுக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்தான் மிக முக்கியமான வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கின்றது; அவை மற்ற மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு ஒதுக்கப்படுவதில்லை; வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகின்றது; அவர் தனக்கு விருப்பமான அமர்வுக்கே வழக்குகளை ஒதுக்குகின்றார் என்று உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகிய நான்கு நீதிபதிகளும் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். இறுதியாக நீதிபதி லோயா இயற்கையாகவே மரணமடைந்தார் என உச்சநீதிமன்றம் அருள்வாய் மலர்ந்தது.

 அதே போல குஜராத் மாநிலம் நரோடா பாட்டியாவில் இந்துமத வெறியர்களால் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மாயா கோட்னானிக்கு விசாரணை நீதிமன்றம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து. ஆனால் சென்ற மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து மாயா கோட்னானியை விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த வழக்குகள் மட்டும் அல்லாமல் காவி பயங்கரவாதிகள் தொடர்புடைய குண்டு வெடிப்பு வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இதே போக்கையே கடைபிடித்தன. மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து ஆசிமானந்தா உட்பட 5 பேரை விடுவித்து ஹைதராபாத்தில் உள்ள நாம்பல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் சென்ற மாதம் உத்திரவிட்டது. நிச்சயம் இந்த வழக்கில் இருந்து ஆசிமானந்தா விடுவிக்கப் படுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்தது தான். ஒருவேளை நீதிபதி நேர்மையாக நடந்து ஆசிமானந்தாவுக்கு தண்டனை வழங்கி இருந்தால் நிச்சயம் அவர் மர்மமான முறையில் உயிரிழக்க நேர்ந்திருக்கும். காவிபயங்கரவாதிகள் சம்மந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் ஒவ்வொரு நீதிபதியும் நீதியை காப்பாற்ற போராடு கின்றார்களோ இல்லையோ தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடவேண்டி இருக்கின்றது.

ஆசிமானந்தாவை மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவித்த என்ஐஏ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரவீந்திரா ரெட்டி தீர்ப்பு கொடுத்த சில மணி நேரங்களில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத் துள்ளார். அதுவும் தன்னுடைய ராஜினாமா வுக்கும் தான் கொடுத்த தீர்ப்புக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதில் இருந்தே இந்தத் தீர்ப்பு மிரட்டி வாங்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதை நாம் உணர்ந்து கொள்ளலாம். மனசாட்சிக்கு விரோதமாக ஒரு பயங்கரவாதியை விடுவித்த தன்னுடைய இழி நிலையை எண்ணி மேற்படி நீதிபதி அவர்கள் குற்ற உணர்வின் காரணமாகவே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார்.

நீதிபதிகளை காவி பயங்கரவாதிகள் நேரடியாக மிரட்டி தங்களுக்குச் சாதகமாக தீர்ப்புகளை வாங்குவது மட்டுமின்றி தன்னுடைய ‘ஏவல்’படையாக உள்ள சிபிஐ, என்.ஐ.ஏ போன்றவற்றின் மூலமும் மிரட்டி நீதியை வாங்குகின்றார்கள். மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவ அதிகாரி கர்னல் புரோகித்துக்கு எதிராக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோகினி சாலியன் தன்னிடம் இந்த வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு தேசிய புலனாய்வு சிறப்பு விசாரணை (NIA) அதிகாரி வேண்டுகோள் வைத்தாக குற்றம்சாட்டினார். இதனால் இந்த வழக்கில் இருந்து அவர் நீக்கப்பட்டார். ஆனால் புரோகித்துக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.

காவி பயங்கரவாதிகள் மீது தேசிய புலனாய்வு சிறப்பு விசாரணை (NIA) நீதி மன்றங்களில் நடந்த அனைத்து வழக்குகளிலும் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டிருக் கின்றார்கள் என்பதுதான் கடந்தகால வரலாறாக உள்ளது. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர்,17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக ஆசிமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் இருந்தும் ஆசிமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. மூன்று பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இன்னும் வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று பேரை பத்துவருடங்களாக என்.ஐ.ஏ தேடிக் கொண்டே இருக்கின்றது. இதுதான் என்.ஐ.ஏ நீதிமன்றங்களின் நிலை. ஆசிமானந்தாவுக்கு மட்டும் அல்லாமல் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் வழக்கிலும் என்.ஐ.ஏ இதே போலத்தான் நடந்துகொண்டது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்துவந்த தேசிய புலனாய்வு விசாரணை அமைப்பு (என்.ஐ.ஏ) தனது இறுதி அறிக்கையை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் உட்பட ஆறுபேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திரும்பப் பெற்றது. பிரக்யா சிங் தாக்கூர் மீதான குற்றச்சாட்டை என்.ஐ.ஏ கைவிட்டது முதல் முறையல்ல ஏற்கெனவே இது நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவன் 2007 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டான். இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பிரக்யா சிங் தாக்கூர் பின்னர் இந்த வழக்கில் இருந்து என்.ஐ.ஏ வால் விடுவிக்கப்பட்டார். சுனில் ஜோசியும் காவிபயங்கரவாதிகள் நடத்திய பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளி யாவான். இவன் பிரக்யா சிங் தாக்கூரிடம் தவறாக நடக்க முயன்றதால்தான் கொல்லப் பட்டதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது

மேலும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு சம்மந்தமாக குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது மகாராஷ்டிரா, திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை நாசிக் நீதிமன்றம் ரத்து செய்தது. இதற்கு நாசிக் நீதிமன்றம் சொன்ன காரணம், மகாராஷ்டிரா குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்றால் அந்த நபர் ஏற்கெனவே இரு முக்கிய குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும். ஆனால் பிரக்யா சிங் தாக்கூர் மீது அப்படி எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாததால் அவரை மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என நாசிக் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மட்டுமே பிரக்யா சிங் தாக்கூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் அதற்குமுன் 2006 ஆம் ஆண்டு மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் ஏறக்குறைய 37 பேர் கொல்லப்பட்டனர். முதலில் இந்தக் குண்டுவெடிப்பு தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தால் நடத்தப்பட்டது என கூறி அப்பாவி முஸ்லீம்கள் 9 பேர் கைது செய்யப் பட்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஆசிமானந்தா கைது செய்யப்பட்ட போதுதான் காவிபயங்கரவாதிகள் எவ்வளவு அபாயகர மானவர்கள் என வெளி உலகத்திற்குத் தெரியவந்தது. ஆசிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் 2006 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு மட்டும் அல்லாமல் 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பு போன்றவையும் காவிக்கூட்டத்தால் திட்டமிட்டே நடத்தப்பட்டதை ஒப்புக் கொண்டான்.

இதற்குப் பின்தான் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் ஜாமினில் விடுவிக்கப் பட்டனர். இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த ராவின் முன்னாள் தலைவர் பி. ராமன், “2006 ஆம் ஆண்டு முதல் நடந்த அனைத்துத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணைகளிலும் மதவாதமும், அரசியலும் புகுந்து விசாரணையை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. தவறான குற்றச்சாட்டின் பேரில்தான் பலரும் கைது செய்யப்பட் டுள்ளார்கள். அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி முறையான உருப்படியான ஆதாரம் எதையும் விசாரணை அமைப்புகள் வைத்திருக்கவில்லை. மாறாக இந்தக் கைதுகளை அரசியல் மயமாக்கி அதன் மூலம் லாபம் அடையும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன” என உண்மையைப் போட்டு உடைத்தார்.

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் மிக முக்கியமான நபர் அவர். முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் தான் கொண்டிருக்கும் கொலைவெறியை இவர் மூலமாகவே தீர்த்துக் கொண்டது. அதனால் தான் நீதித் துறையை மிரட்டி பணிய வைத்து அவரை விடுவித்திருக்கின்றது மோடி அரசு.

இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதை கேரவன் ஆங்கில இதழுக்கு அளித்த தன்னுடைய பேட்டியில் ஆசிமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து, “ நீங்கள் இதைச் செய்தால் நாங்கள் சற்று இளைப்பாறுவோம். எந்தத் தவறும் அதன் பின் நடக்காது. அது கிரிமினல் வழக்காக மாறாது. இதை நீங்கள் செய்தால் அதன்பின் “ஒரு குற்றத்திற்காகவே நாம் இந்தக் குற்றத்தைச் செய்தோம் என்று மக்கள் கூற மாட்டார்கள். இது நமது தத்துவத்தோடு இணைக்கப்பட்டது. இது இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. தயவு செய்து இதைச் செய்யுங்கள். உங்களுக்கு எங்கள் ஆசீர் வாதங்கள் உண்டு” என்று தன்னிடம் கூறியதாக ஆசிமானந்தா தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ்.இன் ஆசியுடன் நடத்தப்படும் கலவரங்களும் குண்டு வெடிப்புகளும் ஒரு நாளும் சட்டப்படி தண்டிக்க முடியாதவை என்பதைத்தான் ஆசிமானந்தவின் விடுதலை காட்டுகின்றது. எப்படி மோடி குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போலத்தான் தற்போது ஆசிமானந்தாவும் விடுவிக்கப் பட்டுள்ளார்.

இந்திய நீதிமன்றங்களைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ். கும்பலைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், மற்ற இஸ்லாமியர்களைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையுமே எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கும் ஒரு சட்ட புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்ட புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களைக் கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப் படுத்தப்பட்டுவிட்டது.

இந்திய நீதிமன்றங்கள் அனைத்தும் இந்து நீதிமன்றங்களாக மாறிவிட்டன. அவை சாமானிய இந்திய குடிமகனிடம் இருந்து நீதியை பறித்து அதை ஒரு விற்பனைச் சரக்காக மாற்றிவிட்டன. இப்போது நடப்பது அப்பட்டமான நீதித்துறை பாசிசம். அது தனக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் நாட்டு மக்களின் மீது வெளிப்படையாகவே போர் தொடுத்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. ஆனால் தீபக் மிஸ்ரா போன்ற ஒரு நல்ல அடிமையை விட்டால் திரும்ப கிடைக்க மாட்டார் என்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மறுத்துவிட்டார்.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதியே தன் மீதான வழக்கை விசாரிக்க வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார். அவர்கள் தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என மறுத்துவிட்டதால் காங்கிரஸ் அந்த மனுவை திரும்ப பெற்றுக் கொண்டது.

இனி நாம் யாரிடம் செல்ல முடியும்? காவல்துறை, சி.பி.ஐ, என்.ஐ.ஏ, நீதிமன்றங்கள் என அனைத்தும் காவி பயங்கரவாதத்தின் கொடும் நிழலில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. சட்ட ரீதியான வழமையான போராட்டங்களால் இந்த உறக்கத்தை நிச்சயம் கலைக்க முடியாது. இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கும் ஒவ்வொருவரும் வீதிக்கு வந்து அமைப்பாக திரண்டு இந்தப் பயங்கரவாத அரசுக்கு எதிராக போர்குணம் கொண்ட போராட்டத்தை நடத்தவில்லை என்றால் ஒட்டுமொத்த நாடும் பார்ப்பன பயங்கரவாதத்தின் பிடியில் வீழ்ந்து அழிந்து நாசமாய் போவதைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

Pin It