இது ஒரு இந்தியாவின் வெளியுறவு தொடர்பான விரிவான ஆய்வோ அல்லது அவதானமோ அல்ல. சமீபகாலமாக ஈழத்தமிழர் தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களும் அவற்றை எந்த வகையிலும் கருத்தில் எடுக்காத அல்லது ஒரு சிறுபொருட்டாகவே மதிக்காத இந்திய மத்திய அரசின் அணுகுமுறையையும் கருத்தில் கொண்டு நோக்கும் ஒரு சிறு அவதானமே இந்த கட்டுரை.

ஓவ்வொரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் அந்த நாட்டின் சொந்த நலன்கள் சார்ந்ததாகவே அமைந்திருக்கும். இதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. முன்னர் உலக அரசியல் ஒழுங்கு, முகாம்களாக பிரிந்திருந்தபோது அதாவது, சோசலிச முகாம் முதலாளித்துவ முகாம் என்ற வேறுபாடுகளுக்கு ஏற்பவும் வெளியுறவுக் கொள்கைள் வகுக்கப்பட்டதுண்டு. அவ்வாறு வகுக்கப்பட்டபோதும் அங்கும் குறிப்பிட்ட வல்லரசு நலன்களுக்கு ஏற்பவே வெளியுறவுக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. எனவே வெளியுறவுக் கொள்கை என்பது எப்போதுமே குறிப்பிட்ட நாட்டின் நீண்டகால நலன்களை கருத்தில் கொண்டே வகுக்கப்படும் என்பதும் அது தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களையே முதன்மை நலன்களாகக் கொள்ளும் என்பதுமே யதார்த்தம். இந்த உண்மை அடிக்கோடிடும் இன்னொரு மறைபொருள் செய்தி என்னவென்றால் எப்போதுமே ஒரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் தனது நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு முதன்மையளிக்கும் வகையிலேயே கொள்கை வகுப்புக்களை மேற்கொள்வர் என்பதாகும்.

rajapakse_pranabஉதாரணமாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பை எடுத்துக் கொள்வோமானால் அது மிகவும் துலாம்பரமாகவே அமெரிக்க மக்களின் மனங்களை பிரபலிப்பதாக இருப்பதை நாம் கானலாம். அவ்வாறு இல்லாவிட்டால் இன்று அமெரிக்காவால் இவ்வாறு ஒரு சர்வதேச பொலிஸ்காரனாக தொழிற்பட்டிருக்க முடியாமல் போயிருக்கும். குறிப்பாக ஒவ்வொரு அமெரிக்கரும் இந்த உலகத்தில் அமெரிக்கா ஒரு முதன்மையான நாடாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். இந்த குடிமனப்பாண்மையை அடிப்படையாகக் கொண்டுதான் அமெரிக்காவால் தொடர்ந்தும் தனது வல்லாதிக்க மனோபாவதத்தை பேணிப்பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வெளியுறவுக் கொள்கையொன்றை தொடர முடிகின்றது. குறிப்பிட்ட மக்களின் ஆதரவில்லாமல் ஒரு அரசு நீண்டகாலத்திற்கு தனது கொள்கைளை முன்னெடுக்க முடியாது.


இந்த பின்புலத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையை அவதானித்தால் இரண்டு மிகவும் அடிப்படையான கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கின்றது. ஒன்று இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பில் தமிழகத்தின் வகிபாகம் என்ன? இரண்டு, ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது அந்த நாட்டு மக்களின் நலன்களை முதன்மையாகக் கொள்கின்றது என்ற கொள்கை வகுப்பு விதியின் கீழ் பார்த்தால் இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பானது தமிழக மக்களின் நலன்களை கருத்தில் எடுக்கிறதா அல்லது அவர்களை தனது மக்களாக கருதுகின்றதா? நான் இந்த இரண்டு கேள்விகளை கேட்பதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் ஒருமித்த கருத்துடன் மத்திய அரசிற்கு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். குறிப்பாக ஈழத் தமிழ் மக்களை பாதுகாக்கும் நோக்கில் உடனடியாக போர்நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சிறிலங்கா அரசுக்கு எந்தவகையிலும் ஆயுத மற்றும் இராணுவநிலை உதவிகளை வழங்கக் கூடாது போன்ற முதன்மை கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

ஆனால் இந்திய மத்திய அரசோ யுத்தத்தை முன்னரைக் காட்டிலும் தீவிரமாக ஆதரித்திருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்கா சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த 25 வருடங்களில் இப்போதுதான் சிறப்பானதொரு களநிலைமை ஏற்பட்டிருப்பதாக புகழ்ந்துரைத்து, சிறிலங்கா படைநடவடிக்கைகளையும் பாராட்டியிருக்கிறார். மன்மோகன் சிங், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரது பெரும்பாலான பொறுப்புக்களை வகிப்பவராகவும் குறிப்பாக ஆளும் இந்திய அரசின் முன்மைக் குரலாகவும் பிரணாப் முகர்ஜி அந்த நேரத்தில் இருந்தார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா இதுவரை வழங்கிய உதவிகளுக்கும் மேலதிகமாக தமிழக தலைவர்களின் கோரிக்கைகளுக்குப் பின்னர்தான் சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளை பலமடங்காக அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் யுத்த ஆதரவும், இராணுவ உதவிகளும் அதிகரிக்க அதிகரிக்க வன்னியில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இப்பொழுது நான் மேலே எழுப்பிய கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்கு கிடைத்திருக்கும். இந்திய வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய தகுதி இந்திய தமிழர்களுக்கு இல்லையென்றே இந்திய மத்திய அரசு கணிக்கின்றது. அதன் விழைவுதான் தமிழகத்தின் பல்வேறு அழுத்தங்களை மீறியும் இந்தியா தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் பக்கமாகவே செயலாற்றிவருகின்றது. இந்திய மத்திய அரசின் தமிழர் நிலைப்பாட்டை நுட்பமாக கற்றுக் கொண்டே சிறிலங்காவின் ஆட்சியாளர்களும் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

இந்த இடத்தில் பிறிதொரு கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய தகுதியை தமிழகத்தால் பெற முடியுமா? அதற்கான ஆற்றலும் ஒருமைப்பாடும் தமிழகத்தில் இருக்கின்றதா? அவ்வாறு இருக்கிறதாயின் அது என்ன? இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் எதனையும் இந்திய மத்திய அரசு கருத்தில் எடுக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டுதான் இந்த கேள்விக்கான விடையை நாம் தேட வேண்டும். குறிப்பாக இரண்டுபேர் இந்தியாவின் ஈழத் தமிழர் விரோத நிலையை எதிர்த்து தீக்குளித்து இறந்திருக்கும் நிலையிலும் இந்தியா பெரியளவில் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை என்பதையும் தமிழகம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கும் சிறிலங்காவின் கொள்கை வகுப்பிற்கும் இடையில் நெருங்கிய இணக்கப்பாடுண்டு, இரண்டிலுமே தமிழர்களின் செல்வாக்கில்லை.

ஈழத் தமிழர் போராட்டத்தை கையாள வேண்டுமென்ற இந்தியாவின் தீவிர ஆர்வத்தை நன்கு விளங்கி வைத்திருக்கும் சிங்கள ஆளும் வர்க்கம் எப்போதுமே அதனை நுட்பமாக மேற்கொள்ளும் தந்திரோபாயங்களையும் மிகுந்த ராஜதந்திரத்துடன் கையாண்டு வந்திருக்கிறது. இந்தியாவுடன் வரலாற்று ரீதியான பகைமைகளைக் கொண்டிருக்கும் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுடன் நெருங்கிய உறவுகளை பேணவிழைவதன் மூலம் இந்தியாவை தொடர்ந்தும் மிகுந்த நுட்பத்துடன் தனது பேரினவாத நலன்களுக்கு பயன்படுத்திக் கொண்டுவருகின்றது. இது இந்திய கொள்கை வகுப்பாளர்களும் அறியாத ஒன்றல்ல. ஆனால் சிங்களத்தின் அந்த நுட்பத்தையே சிறிலங்காவை தனது பிடிக்குள் வைத்துக் கொள்ளுவதற்கான எதிர்தந்திரோபாயமாக இந்திய ஆளும் வர்க்கம் பயன்படுத்தி வருகின்றது.

ஆனால் இந்த இரண்டு ராஜதந்திரங்களினதும் பலிக்கடாக்களாக இருப்பது ஈழத் தமிழர்கள்தான். இந்திய மத்திய அரசின் எதிர் தந்திரோபாய பொறிக்கிடக்கில் ஈழத் தமிழர்கள் அகப்பட்டு அழிந்து போவதை தடுக்கக் கூடிய ஆற்றல் தமிழக மக்களுக்கு மட்டும்தான் உண்டு என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை. தற்போதைய சூழலில் தமிழகம்தான் ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே பின்தள பலமாகும். இதனை கவனத்தில் கொண்டுதான் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் ஆதரவு நடவடிக்கைளையும் அந்த நடவடிக்கைள் தொடர்பில் இந்தியா கடைப்பிடித்து வரும் அசட்டையீனத்தையும் நோக்க வேண்டும்.

- யதீந்திரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It