மோடி அமைக்கத் துடிக்கும் இந்து ராஜ்யத்தின் தூதுவராக தமிழக ஆளுநர் ஆர்.எஸ். ரவி, சனாதனப் பெருமையைப் பேசுவதோடு, இந்தியா இந்துக்களின் நாடு என்று அரசியல் சட்டத்தின் மாண்புகளைக் குலைத்து வருகிறார். ஆளுநர் பேச்சு அறிவியலுக்கும் அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. அவரது பேச்சுக்கு மறுப்பு:

ரிஷிகளும் முனிவர்களும் உருவாக்கியதே நமது தேசம் என்கிறார் ஆளுநர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வருகைக்கு முன்பு இந்தியா என்ற தேசமே உருவாகவில்லை. மன்னர்கள்தான் பேரரசுகளாக சிற்றரசுகளாக ஆட்சி செய்து வந்தனர். கிழக்கிந்திய கம்பெனியும் அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் காலனி ஆட்சியும் உருவாக்கியது ‘இந்தியா’. சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்களை விரட்டி இந்தியாவுடன் சேர்த்தார்கள். சுதந்திரத்துக்கு முன்பு பாகிஸ்தான் பிரிந்து சென்றது. சுதந்திர இந்தியா தனக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொண்டது. அந்த சட்டப்படி பதவிக்கு வந்தவரே ஆளுநர்.

ரிஷிகளும், முனிவர்களும் எந்த தேசத்தை உருவாக்கினார்கள்? அவர்கள் உருவாக்கியதாகப் புராணங்களில் எழுதப்பட்டுள்ள கற்பனைகளை வரலாறுகளாக திரிக்கலாமா? இப்போது ஆளுநர், ரிஷிகள், முனிவர்கள் - என்ற வேதகால பாரதத்துக்கு இந்தியா திரும்ப விரும்புகிறாரா?

governor ravi 253எது சனாதன தர்மம்? ஆளுநர் விளக்குவாரா?

சனாதன தர்மத்தின் ஒளியால் உருவானது இந்தியா என்கிறார் ஆளுநர்.

‘சனாதன தர்மம்’ என்றால் என்ன என்று ஆளுநர் விளக்குவாரா? சனாதன தர்மம் என்ற பெயருக்குள் பதுங்கி நிற்பது ‘வேத தர்மம்’ என்பதே உண்மை. அப்படி வெளிப்படையாப் பேசினால் பெரும் பான்மையான பார்ப்பனரல்லாத மக்கள் அதைப் புறக்கணிப்பார்கள் என்பதால் ‘சனாதன தர்மம்’ என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள். அது ‘வேத தர்மம்’ தான் என்பதற்கான சான்றுகளை நாம் வைக்கிறோம்.

மனுஸ்மிருதி முதல் பகுதியில் 22 மற்றும் 23 ஸ்லோகங்களில் சனாதன தர்மம் பற்றி குறிப்பிடுகிறது. இதற்கு குல்லுக பட்டர் - இவ்வாறு விளக்கம் தருகிறார்:

“சனாதனம் என்ற சொல், ‘எக்காலத்திலும் எப்போதும் இருந்து வருவது’ என்று பொருள். எப்போதும் இருந்து வருவது வேதம் தான். மனிதச் செயலுக்கு அப்பாற்பட்டது ‘வேதம்’ என்று மனுதர்மம் கூறுகிறது. அந்த வேதங்கள் பரமாத்மா வுடன் கலந்து போன பிரம்மாவின் நினைவில் பாதுகாக்கப்பட்டவை. அந்த வேதங்களைத்தான் கல்ப காலத் தொடக்கத்தில் பிரம்மா அக்னி, வாயு, சூரியன் ஆகியவற்றின் மூலமாக வெளிப்படுத்தினார். வேதத்தை ஆதாரமாகக் கொண்ட இந்த கருத்து பற்றி எவரும் கேள்வியே கேட்கக் கூடாது. ரிக் வேதம் - அக்னியிடமிருந்தும், யஜுர் வேதம் - வாயுவிட மிருந்தும், சாம தேவதம் - சூரியனிடமிருந்தும் ‘வெளிப்பட்டன’. எப்போதும் இருந்தே வரும் வேத தர்மம், தான் சனாதன தர்மம்.”

சரி; ‘கல்ப காலம்’ என்பது என்ன? உலகம் தோற்று விக்கப்பட்ட ‘சிருஷ்டி’ காலத்திலிருந்து பிரபஞ்சம் அழியக் கூடிய பிரளய காலம் வரை கல்ப காலம் என்று இந்து காலண்டர் (பஞ்சாங்கம்) கூறுகிறது.

சரி; சனாதன தர்மமான வேத தர்மம் என்ன கூறுகிறது?

ரிக் வேதத்தில் ‘புருஷ சுக்தம்’ என்ற பிரிவு பிராமணன் - பிர்மாவின் நெற்றியிலும், சூத்திரன் - காலிலும் பிறந்தவன் என்று கூறுகிறது. சூத்திரன் - இழிவானவன் என்று 7 வகை அடிமைத்தனத்தை வரையறுக்கிறது மனு சாஸ்திரம். அதில் ஒன்று ‘பிராமணர்களின் வைப்பாட்டி மகன்’ என்பதாகும்.

ரிக் வேதம் கூறும் மற்றொரு சுலோகத்தை சுட்டிக் காட்டுகிறோம்:

“தெய்வாதீனம் ஜகத் சர்வம்

 மந்த்ரா தீனம்து தெய்வதம்

 தன் மந்திரம் பிரம்மணாதீனம்

 தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்”

                                    (சுலோகம் 62; பிரிவு 10)

இதன் பொருள் : உலகம் கடவுளுக்குக் கட்டுப் பட்டது; கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது; பிராமணர்களே நமது கடவுள்.

சுருக்கமாகக் கூறினால், சனாதன தர்மம் என்பது பிராமணர்களை கடவுளாக வணங்க வேண்டும் என்பது தான். அந்த தர்மத்தை ஒரு ஆளுநர் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைக்கு எதிராகப் புனிதமாகவும் ஒளிச்சுடராகவும் போற்றிப் பெருமைப்படுவது பச்சைப் பார்ப்பனியமல்லவா?

வடநாட்டில் இப்படிப் பேசினால் பொருள் புரியாமல் அதற்கு தலையாட்டுவோர் கிடைக்கலாம்; இது தமிழ்நாடு, பெரியார் மண்; வேத தர்மம் - சனதான தர்மத்தின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றி அலசி ஆராய்ந்து வைத்துள்ள மண். ஆளுநர் ‘பிராமண பஜனை’ பாட வேண்டாம்.

மறுப்பவர்கள் சனதான தான தர்மத்துக்கு வேறு விளக்கம் இருந்தால் சொல்லட்டும்; சொல்லத் தயாரா?

“சோமநாத் கோயில் சொத்துக்களை அழித்து கந்தகார் பெஷாவர் நகரங்களை கஜினி முகம்மது உருவாக்கினான். அந்த நகரங்கள் பிறகு அமெரிக்கா வால் தாக்கப்பட்டன. இதிலிருந்தே சனாதன தர்மத்தின் வலிமையை புரிந்து கொள்ளலாம்” என்கிறார் ஆளுநர் ரவி

அதாவது சனாதன தர்மத்தின் வேத சக்தியை அழிக்கவே முடியாது என்று கூற வருகிறாரா ஆளுநர் ரவி?

அமெரிக்காவால் தாக்கப்பட்ட பெஷாவர், இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. கந்தகார், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பிடியில் இருக்கிறது. வேத சக்தி நிறைந்த சனாதன தர்மம், அதை ஏன் இந்தியாவுக்குள் கொண்டு வரவில்லை?

சீனாவிடம் பறி கொடுத்திருக்கும் அருணாச்சல பிரதேச பகுதிகளை சனாதன சக்தி இந்தியாவிற்குள் தானே கொண்டு வந்து சேர்த்து விடுமா? ஆளுநர் பதில் சொல்வாரா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It