உலகின் இஸ்லாமிய நாடுகளோடு இந்திய உறவுகளை கடுமையாகப் பாதிக்கக் கூடிய வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய பா.ஜ.க.வின் அதிகாரபூர்வ பேச்சாளர் இருவர் மீதும் ஒன்றிய ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஏதோ அவர்கள் கட்சியோடு தொடர்பே இல்லாத சிறு குழு என்பது போல் நாடகமாடுகிறது. இந்தியா முழுதும் கொதித்து எழுந்து போராடும் இஸ்லாமியர்கள் மீது கடும் அடக்குமுறைகள், தடியடிகள், துப்பாக்கி சூடுகளை நடத்துவதோடு, உ.பி. பா.ஜ.க. ஆட்சி ஜனநாயக வழியில் போராடியவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளுகிறது. ஜார்கண்டில் அப்பாவியான 16 வயது முஸ்லீம் இளைஞனைப் பிடித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சம் பதை பதைக்கிறது.
மதங்களை விமர்சிக்கவே கூடாதா என்று பகுத்தறிவு அறிவியல் வெளிச்சத்தில் கேள்வி கேட்டால் விமர்சிக்கும் உரிமை உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. அதே நேரத்தில் இஸ்லாமிய வெறுப்புணர்வோடு ‘இந்துத்துவா’ அரசியல் பார்வையில் பகைமையை உருவாக்கும் மதவிமர்சனம் - பகுத்தறிவுக் கண்ணோட்டமாகாது; பாசிசக் கண்ணோட்டமாகும். இந்து மதத்தை எவரும் விமர்சிக்கவே கூடாது. ஆனால் பிற மதங்களை அவர்கள் போற்றும் தூதுவர்களை வணங்கும் இறைவனை மட்டும் விமர்சிப்போம் என்ற சார்பு நிலை மதவெறிக்குக் களம் அமைப்பதே தவிர மதம் கடந்த மானுடப் பார்வையல்ல.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் அண்மைக் காலமாக ஏதோ தமிழக ஆட்சியைப் பிடிக்க அவர்கள் நெருங்கி விட்டதாகக் கற்பனை செய்து கொண்டு நடத்தி வரும் அடாவடி அரசியல் எல்லை மீறிக் கொண்டிருக்கிறது. எச். ராஜா என்ற மனுவாதி காவி உடை மீது கை வைத்தால் ஒரு தி.மு.க.காரன் கூட நடமாட முடியாது என்று வீண் சவால் விடுகிறார்.
தருமபுரம் ஆதீனம் மற்றொரு ‘எச். ராஜா’ ஆக மாறி, தி.மு.க. எதிர்ப்பு அரசியலை மேடைப் பேச்சாளர் போல பேசத் தொடங்கி யிருக்கிறார். வரவு செலவுக் கணக்கு கேட்கச் சென்ற அறநிலையத் துறை அதிகாரிகளை, சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சதர்கள், ‘சாவி இல்லை’ என்று கூறி திமிரோடு திருப்பிஅனுப்புகிறார்கள். அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, துறையை இவ்வளவு அவமானப்படுத்திய பிறகும் தீட்சதர்களிடம் மன்றாடிக் கொண் டிருக்கிறாரே தவிர, துணிவுடன் தட்டிக் கேட்க முன் வரவில்லை. இத்தனைக்கும் முதல் நாள் அமைச்சர் சட்டையில்லாமல் தீட்சதர்களைச் சந்தித்து அவர்களிடம் கணக்குகளைக் காட்டுமாறு பணிவுடன் மன்றாடுகிறார். தில்லைக் கோயில் சம்பிரதாயப்படி ‘சட்டை நீக்கம்’ சம்பிரதாயமல்ல என்றாலும், அமைச்சர் சட்டை இல்லாமலே போய் தனது தீவிர பக்தி விசுவாசத்தைக் காட்டினாலும் தீட்சதர்கள் மதிக்கத் தயாராக இல்லை.
அறநிலையத் துறை அமைச்சர் ஒரு தனி மனிதரல்ல; ஒரு திராவிட இயக்கத்தின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்.
கோயிலுக்கு பக்தர்கள் தானமாக வழங்கும் பசு மாடுகளை கோயில் நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடு இல்லை. மாறாக ‘பசு மடம்’ (கோ சாலை) ஒன்றை உருவாக்கி, அனைத்து பராமரிக்க முடியாத பசு மாடுகளையும் ஒரே இடத்தில் வைத்து அரசு செலவில் ‘பசுப் பாதுகாப்பு’ ஏற்பாடுகளை செய்வோம் என்று அறநிலையத் துறை செயல்படுவது பார்ப்பனர்களை திருப்திப்படுத்து வதற்காகவா என்ற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது.
அமைச்சர் மனோ தங்கராஜ் - கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர் வடம் பிடித்து ஒரு அமைச்சர் என்ற முறையில் துவக்கி வைக்கப் போகிறார்; பா.ஜ.க.வினர் அமைச்சர் இந்துவாக மாறி விபூதி குங்குமம் வைத்துக் கொண்டு தேர் இழுக்க வரவேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள்.
ஒரு அமைச்சரை வைத்து மக்களின் மத ஒற்றுமையைக் குலைக்கும் போராட்டத்தை நடத்துகிறார்கள். கோயிலுக்குள் எரியும் மின்சார விளக்குகள் கிறிஸ்தவர் கண்டுபிடிப்பு தான். அதற்காக மின்சாரமே கோயிலுக்குள் வேண்டாம் என்று கூறுவார்களா?
தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆற்காடு வீராசாமி, இறைவனடி சேர்ந்து விட்டதாக அண்ணாமலை பொறுப்பின்றி பேசி, பிறகு வருத்தம் தெரிவிக்கிறார்.
கச்சச் தீவு பிரச்சினையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்தால், பிறகு மோடியிடம் அழைத்துச் சென்று தானே கச்சத் தீவை மீட்டுத் தருவதாக திமிர் பேச்சுப் பேசுகிறார்.
இத்தனைக்கும் அறநிலையத் துறை பெயரில் மோசடி செய்தவர்கள், போதைப் பொருள்கள் விற்றவர்கள், பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் என்று சமூக விரோதிகள் பட்டியலில் ஒவ்வொரு நாளும் பா.ஜ.க.வினர் பெயர்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது அதற்கான துணிவு அவர்களிடம் கிடையாது என்பதுபோல பா.ஜ.க.வினரிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு மென்மையானப் போக்கைக் கைவிட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மதவெறிக்கு பலியாகி விடக் கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் இதைக் கூறுகிறோம்.
- விடுதலை இராசேந்திரன்