வரலாறு முக்கியமென வடிவேலு சொன்னதை அவர் பாணியிலேயே ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது. தோல்வியில் கலங்காதவர்கள் என்பதை வரலாற்றில் பதிய வைப்பது மிகச் சுலபம் எனினும், அக்காலங்களில் என்ன செய்தார்கள் என வருங்காலத் தலைமுறை கேட்டால் என்ன சொல்வது..? ஆட்சியில் இருந்தபோதும், ஆட்சியை இழந்த போதும் நாங்கள் வேறு வேறாக பேசுவதுமில்லை, வழக்கத்தை மாற்றி செயல்படவுமில்லை என வலுவாகவே பதிக்கத் துவங்கிவிட்டனர் வரலாற்றில்..
பாராட்டு விழாக்கள், பட்டமளிப்பு விழாக்கள், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், நன்றி அறிவிப்புக் கூட்டங்கள், கவிதை மன்றங்கள் என புகழ் பாடுவதையே தொழிலாக அன்று ஆட்சிப்பணியாக செய்தார்கள், இன்று கட்சிப்பணியாக செய்கிறார்கள். தேர்தல் தோல்வியால் கலங்கவில்லை கலைஞர் என வரலாறு இனி நிச்சயம் பாராட்டும். சமச்சீர் கல்வியை சந்தியில் நிறுத்தியவர் என இன்றைய தலைமுறைக்கு தெரியும், எனினும் நாளை சமச்சீர் கல்வி அமலுக்கு வந்தபின், இது யார் கொண்டு வந்தது என வருங்காலத் தலைமுறை கேட்டால் நம் வெற்றிவிழாக்களே பதில் சொல்லவேண்டும் என களத்தில் இறங்கிவிட்டார்கள். கலைஞரின் சமச்சீர் கல்வி வெற்றி விழாக்கள் என தமிழகமெங்கும் நடத்த முடிவெடுத்ததில் அவர்களின் அடக்க குணமும் தென்படுகிறது. நியாயமாக, உலக வரலாற்றிலேயே முதன் முறையாக சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியவர் என்பதால் உலகமெங்கும் பாராட்டு விழாவை நடத்தி, உலக நாடுகளிடையே இது குறித்து ஒரு பகுத்தறிவை ஏற்படுத்த முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் முதல் இந்நாள் எம்.எல்.ஏ வரை பெருந்தலைகள் எல்லாம் உள்ளே இருப்பதால் உலகமெங்கும் வெற்றித்திருவிழாவை நடத்தாமல் உள்ளூர் அளவில் நடத்துவது உள்ளபடியே உவகை அளிக்கிறது உடன்பிறப்புகளுக்கு.
காலில் விழுந்து வணங்குவது, கையெடுத்து கும்பிடுவது இரண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. எனவே, அவருக்கும் இவைகளெல்லாம் ஒவ்வாததுதான். கலைஞர் அல்லவா, அதனால் கவிதை எழுதுவது, பட்டிமன்றத்தில் பேசுவது, பட்டப்பெயர்(!) வைத்து பணிந்து அழைப்பது ஆகிய இவையே கட்சிப்பணியாக கழகத்தின் ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்டது. ஆட்சியில் இல்லை என்பதற்காக அடங்கிவிட முடியுமா என்ன.
குடும்பம் வேறு கட்சி வேறு அல்ல என்பதையும் கழக வரலாற்றில் நிச்சயம் பதியத்தான் வேண்டும். முதலில், அவர் கட்சிக்கு வந்தார், பின்பு குடும்பம் வந்தது, இறுதியில், குடும்பத்திற்குள் கட்சி வந்தது, வரலாறு தொடர்கிறது. குடும்பம் முதலில் சிறைக்கு சென்றது, பின்பு கட்சியே சிறைக்குள் சென்றது, இறுதியில் கட்சியும், குடும்பமும் கலந்தே நின்றது சிறைக்குள்.. வருங்காலத் தலைமுறை கவிதையாய் வாசிக்கப்போகும் வரிகளை வரலாறாக படைத்துவிட்டதும் கழகத்தின் பெரும் சாதனைதான். உலகத்திலேயே ஜனநாயக அரசில் ஒரு குடும்பத்தில் அதிகமான அமைச்சர்கள் கொண்ட குடும்பம் என்ற சாதனையை படைத்த குடும்பம், இன்று ஒரு குடும்பத்தில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு அதிகமானோர் சிறையில் உள்ள குடும்பம் என்ற புதிய சாதனையையும் படைத்தது வரலாற்றில் வைரவரிகளாக எழுதப்பட வேண்டியதாகும்.
1960களின் வரலாற்றை மீண்டும் தமிழக கல்விநிலையங்களில் எழுத முயற்சித்த கதை இங்கு மிக முக்கியமானதாகும். பள்ளி மாணவர்கள் வேலை நிறுத்தம் என அறிவித்தது சாதனையெனில், 50 வயது கட்சிக்காரரையும், 40 வயது மாணவரணி தலைவரையும் களத்தில் இறக்கியது சந்தேகமில்லாமல் வரலாறே தான். இங்கு எழுத வேண்டிய சாதனைகள் பல. இருப்பினும் இடமில்லாமல் விட்டுவிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில ஆண்டுகள் கழித்து தமிழகத்தின் வரலாறு, தமிழ் இலக்கியம், சமூக அறிவியல்,கணிதம், ஆங்கிலம் என அனைத்து புத்தகங்களிலும் இச்சாதனைகள் இடம் பெறும், எனவே நீங்கள் முழுமையாக படிக்காததை, உங்கள் தலைமுறை படிக்கும் என வேதனையோடு கூறிக்கொள்கிறேன். மெட்ரிக் பாடத்திட்டத்திலும் வரும் என்பதால் யாரும் தப்பிக்க முடியாதென கூறிக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.