தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி, வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ காட்சி வலம் வந்தது. ஒரு மூன்று மூன்றரை வயதுடைய சிறு பையன், ஏதோ கேட்டு அடம்பிடித்து அழும் வீடியோ அது. குழந்தை அடம்பிடித்து அழும் வீடியோவில் என்ன இருக்கிறது என இத்தனைபேர் இதனை பகிர்கிறார்கள் என்ற கேள்வியுடன், சத்தத்தைக் கூடுதலாக வைத்து உற்றுக் கேட்டபோது, வியப்பாக இருந்தது. ‘கலைஞர் தாத்தா வேணும்’ என்று கேட்டபடியே அந்தச் சின்னப் பையன் அழுகிறான். அருகில் இருந்து அவனுடைய பாட்டியோ, அம்மாவோ சமாதானப்படுத்துகின்றனர். இருந்தும் ‘கலைஞர் தாத்தா வேணும்’ என்று கேட்பதன் ஊடாக, அந்தச் சின்னப்பையனின் அழுகை கூடுகிறதே தவிர குறையவில்லை!

‘அம்மா, தாத்தாவுக்கு உடல்நிலை மோசமா இருக்குன்னு சொல்றாங்களே, எனக்கு மனசே சரியில்லமா...என்னால இங்க இருக்க முடியல..நா கௌம்பி வர்றேன்’ - கோவையில் இயற்பியல் முதுகலை படிக்கும் என் மகள் இலக்கியா கைபேசியில் அழுதபோதும், இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்னைக்கு வந்து சேர்ந்தபோதும், பேச்சற்றுத் திகைத்துப் போனேன்.

karunanidhi 3451960களில் அவர் மேடைகளில் சிங்கமென முழங்குவதைக் கேட்டவர்கள், முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், சட்டமன்றத்தை அவரே வழிநடத்திய பாங்கினைக் கண்டவர்கள், போராட்டக் களமா, பேரிடர் காலமா எதுவானாலும், பொங்கும் இன உணர்வுடனும், ஊற்றெடுக்கும் அன்புடனும் செயல்படும் தீரத்தைப் பார்த்தவர்கள், அவருடைய உழைப்பையும், உயர்வையும், பட்ட விழுப்புண்களையும் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள், உடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அவர் மீது பற்றுக் கொள்வதோ, அவர் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பதோ இயல்பானது, புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், மூன்று வயது குழந்தையில் இருந்து முதுகலை படிக்கும் கல்லூரி மாணவி வரை கவர்ந்திழுக்க அவரால் எப்படி முடிந்தது?

பொதுவாகவே திராவிட இயக்கத்திற்கு ஒரு கூடுதல் சிறப்பு உண்டு. திராவிட இயக்கம் தனித்த உறுப்பினர்களை மட்டுமல்லாது, குடும்பம் குடும்பமாக உறுப்பினர்களைக் கொண்டது. இயக்கத்தின் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் குடும்பம் குடும்பமாகச் சென்று பங்கேற்பது வழக்கம். மாநாட்டுப் பந்தல்களோடும், கூட்ட அரங்குகளோடும் நின்று விடாமல், உறவு முறை சொல்லி அழைத்து உறவு கொண்டாடும் அளவுக்கு, திராவிட இயக்கக் குடும்பங்களுக்கு இடையேயான தொடர்பு தலைமுறை தலைமுறையாக நீடித்து இருக்கும். தந்தை பெரியார், - பெரியார் தாத்தாவானதும், நாகம்மையாரும், மணியம்மையாரும் அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையாரானதும், இப்போது, தலைவர் கலைஞர், - கலைஞர் தாத்தாவானதும் திராவிட இயக்க வாழ்வியலின் நீட்சியே ஆகும். தங்களுக்காகப் பாடுபட்டவர்களை, பேசியவர்களை சொந்தங் கொண்டாடும் சமூக உரிமை இது.

ஆட்சி அதிகாரத்திற்கு வருபவர்களின் பார்வை பெரும்பாலும், நேராக இருக்கும் அல்லது மேல் நோக்கியதாக இருக்கும். தலைவர் கலைஞரின் ஆட்சி அதிகாரப் பார்வை, சமூகத்தின் விளிம்புகள் வரை கூர்மையுடன் நோக்கக்கூடியது. அடித்தட்டு மக்களையும் அன்னையின் அன்புடன் அரவணைத்துக் காக்கக்கூடியது. அந்த அக்கறையும், அதனால் அவர் தீட்டிச் செயல்படுத்திய திட்டங்களும் கருவிலிருக்கும் குழந்தை முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ளடக்கிச் செல்லும். எந்தத் திட்டமானாலும் எதிர்வரும் தலைமுறைகளையும் கவனத்தில் கொண்டதாக இருக்கும்.

இந்த நாட்டில் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கி அனைத்து இயக்கங்களும், முதன்மையாக வலியுறுத்தியது, நம் மக்களுக்கான கல்வியைத்தான். கறுப்பின தலைவர்களுள் ஒருவரான ஃபிரெட்ரிக் டக்ளஸ் கூறியதைப் போல, “கல்வி மட்டுமே ஒரு மனிதனை சுதந்திர மனிதனாக்கும்”. அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைக் கல்வியில் மேம்படுத்த திராவிட இயக்கம் போராடியது. இடஒதுக்கீடு என்னும் சமூக நீதியை பெற்றுத்தந்தது. திராவிட முன்னேற்றக்கழகம் அதைக் காப்பாற்றும் அரசியல் அரணாகியது. இடஒதுக்கீடுக்கு ஆபத்து நேரும் போதெல்லாம், தலைவர் கலைஞரின் எழுதுகோல் வாளாகியது. முரசொலி போர் முரசம் கொட்டியது. தங்களுடைய கல்வி உரிமையைக் காத்தவர் கலைஞர் என்பதால், தமிழ்ப்பிள்ளைகளுக்கு அவர் கலைஞர் தாத்தாவானார்!

‘நீட் தேர்வு’ - அரியலூர் அனிதா உள்ளிட்ட பல பிள்ளைகளின் உயிரையும், கனவையும் காவு வாங்கிய மோசடித் தேர்வு. திறமையுள்ள, இலட்சியக் கனவுள்ள நம் பிள்ளைகளின் வாழ்வு இப்படியெல்லாம் சிதைந்து போகக் கூடாது என்று எண்ணியதால்தான், 2007இல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் கலைஞர். எத்தனை ஆயிரம் கிராமப்புறப் பிள்ளைகள், பொறியாளர்களாக, மருத்துவர்களாக உருவாகி வெளியே வந்தார்கள். அந்தப் பிள்ளைகள் தங்கள் நன்றியைச் செலுத்த, கலைஞர் தாத்தாவின் நினைவிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்!

இந்தித் திணிப்பை 14 வயது முதல் எதிர்த்துப் போராடியவர் கலைஞர். அண்ணாவின் இருமொழிக்கொள்கையை உறுதியுடன் காத்ததால், உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் தேர்ந்து, மென்பொருள் துறைகளில் கோலோச்சும் நிலையை தமிழ்நாடு எய்தியது. அவர் உருவாக்கித் தந்த ‘டைடல் பார்க்’கில், குளிரூட்டப்பட்ட கட்டிடங்களில் அமர்ந்து கணினியைத் தட்டிக்கொண்டிருக்கும் பிள்ளைகளில், வரலாறு அறிந்தவர்களுக்கு அவர் கலைஞர் தாத்தாவானார்!

திருப்பத்தூர் பகுதியிலிருந்து வந்த மூன்றாம் வகுப்பு மாணவி, கலைஞரின் நினைவிடத்தில் உருக்கமாகக் கவிதை பாடினார்.அதைப்போல, பள்ளிக் குழந்தைகளும், கல்லூரி மாணவர்களும் சாரை சாரையாக வந்து, கலைஞரின் திட்டங்களை அழகாக எடுத்துச் சொல்லி மரியாதை செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. கலைஞரின் முழு பரிமாணத்தையும் அந்தப் பிள்ளைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும், ஒரு நாள் கறிசோறு சாப்பிட, ஆண்டு முழுவதும் தீபாவளிச் சீட்டு கட்ட வேண்டிய நிலையில் உள்ள அந்தப் பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கிறது, வாரத்தில் ஆறு முட்டைகளும், வாழைப்பழமும் சத்துணவில் கிடைப்பதற்குக் கலைஞர் தாத்தாதான் காரணம் என்று!.

அருகாமைப் பள்ளிகள் என்னும் இலக்கை இன்னும் நாம் எட்டிவிடவில்லை. எட்டிய பகுதிகளிலும், மூன்று வேளை சோறுபோட்டு, பள்ளி & கல்லூரிகளுக்கு அனுப்பவோ, பிள்ளைகள் கவனம் சிதறாமல் படிப்பதற்கான சூழலை வீட்டில் உருவாக்கித் தரவோ ஒடுக்கப்பட்ட ஏழை எளிய பெற்றோரால் இயலவில்லை. போராடிப் பெற்ற கல்வி, ஏழ்மையால் கிட்டாமல் போகலாமா, போகத்தான் விடுவேனா என்று, ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் தனித்தனியே அரசு மாணவர் விடுதிகளை ஏற்படுத்தித் தந்தார் கலைஞர். அந்த விடுதிகளில் தங்கிப் படித்த கலைஞரின் பேரப்பிள்ளைகள் எத்தனையோ பேர், இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர்!

முதுகலைப் பட்டப்படிப்பு வரை கட்டணம் கிடையாது, முதல் தலைமுறையாகக் கல்லூரி வாசலை மிதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு, கட் ஆஃபில் 5 மதிப்பெண் கூடுதல், தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு படிப்பவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை தர முயற்சி எடுத்தது என பள்ளி, கல்லூரி பிள்ளைகளுக்கு நேரடியாகப் பயன்தரக் கூடிய திட்டங்கள் மட்டுமின்றி, அவர்களின் எதிர்காலத்திற்கும் சேர்த்து திட்டங்கள் தீட்டியவர் கலைஞர்.

போட்டி நிறைந்த இன்றைய உலகில், பாடத்திட்டத்தையும் தாண்டி, அறிவை விரிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை அரசு கொடுக்கும். உலக அறிவைத் தரக்கூடிய புத்தகங்களுக்கு எங்கு செல்வார்கள் என் பிள்ளைகள் என்று, அந்தத் தலைவர் சிந்தித்ததன் செயல்வடிவமே, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்!. எட்டு ரூபாய் எண் சுவடி (வாய்ப்பாடு) புத்தகம் முதல் ஏழைகளுக்கு எட்டாத ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரை அங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். அந்தப் பிள்ளைகள் சொந்தப் புத்தகங்களையும் கொண்டு வந்து படிக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்றால், அவருடைய உள்ளம், பள்ளத்தில் இருப்பவர்களைக் கைதூக்கிவிட எத்தனை நுணுக்கமாகத் துடித்திருக்கிறது பாருங்கள். உலகத் தரம் வாய்ந்த இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் பிள்ளைகள், கலைஞர் தாத்தாவை நினைக்காமல் இருக்க முடியுமா?

சந்தனக் கட்டையை எந்தப் பக்கம் தேய்த்தாலும் மணக்கும். தமிழ் நாட்டுப் பிள்ளைகளுடைய வாழ்வின் ஒவ்வொரு பக்கத்திலும், வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், தலைவர் கலைஞரின் உழைப்பும், திட்டமும் பதிந்து கிடக்கும். குடும்ப அட்டையில் பெயர் இல்லையே தவிர, ஒவ்வொரு குடும்பத்திலும் அவர்தான் மூத்த உறுப்பினர். உயிரினும் மேலான தங்கள் தலைவரை, குழந்தைகளுக்குத் தாத்தா என அறிமுகப்படுத்தி வளர்த்ததாலே, இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான பேரப்பிள்ளைகள், கலைஞர் தாத்தாவை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர்.

தமிழக மக்களின் உள்ளமறியா உன்மத்தர்கள் சிலர், அண்ணாவும், கலைஞரும் விதைக்கப்பட்டுள்ள மெரினா கடற்கரையை, திராவிடச் சுடுகாடு என்கின்றனர். பச்சிளம் குழந்தைகளை தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் கொண்டு வந்து போட்டு, “இதோ பார் என் செல்லமே! உலகமே போற்றும் உன்னதத் தலைவர் இங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் போல நீயும், உன் இனம், மொழி காக்கும் ஓய்வறியாப் போராளியாக வரவேண்டும் தங்கமே” என்று தாலாட்டாய்ச் சொல்லி எடுத்துச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியுமா? அந்தக் காட்சி எப்படி இருக்கிறது தெரியுமா? ஆரியத்திற்குக் கோடரியாகவும், திராவிட இனத்திற்குக் கோடரிக்காம்பாகவும் ஆகிப்போன மூடர்களே, சுடுகாடு இல்லையடா, ‘எங்கள் குழந்தைகளின் தொட்டிலடா’ இது என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.

இப்போதுள்ள தலைமுறைக்குத் திமுகவை பிடிக்கவில்லை. கலைஞரைப் பிடிக்கவில்லை என்றெல்லாம் சரடு விட்டுத் திரிபவர்களே, இந்தத் தலைமுறைக்கு மட்டுமன்று, தமிழர்களின் தலைமுறை தலைமுறைக்கும் கலைஞர்தான் காப்பு. தமிழ்நாட்டுக்கும், தமிழர்கள் வீட்டுக்கும் அவர்தான் தலைவர், திமுகதான் காவல் அரண். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், கலைஞரின் நினைவிடத்திற்கு வந்து, ஓர் ஒரமாக நின்று பாருங்கள். சீருடை அணிந்த சீரணியாளர்களாக வரும் அவருடைய பேரப்பிள்ளைகள், தங்கள் உள்ளம் கவர்ந்த கலைஞர் தாத்தாவுக்கு இருகரம் கூப்பி நன்றி நவிலும் கண்கொள்ளாக் காட்சியை. (அச்சப்படாதீர்கள், நீங்கள் வந்து போனதற்காக அங்கே தீட்டுக் கழிக்கப்படாது.)

“ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் இருந்து கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்று அவரேதான் சொன்னார். அந்தக் கணக்கையும் அவர்தான் தொடங்கி வைத்திருக்கிறார். கலைஞர் தாத்தாவுக்கு பேரப்பிள்ளைகளின் நினைவஞ்சலி தொடரட்டும்!

Pin It