காமராசரின் 120 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட உத்தரவிட்டுள்ளது. கல்விக் கண் திறந்த கல்வி வள்ளல் காமராசர். கடவுள் வாழ்த்துகளை கைவிட்டுவிட்டு, 'காமராசர் வாழ்த்துப் பாடலை பாட வேண்டும்' என்று சொன்னத் தலைவர் பெரியார். அவருக்கு மிகப் பொருத்தமாக இந்த நாளில் தமிழ்நாடு அரசு ஒரு திட்டத்தை துவக்கியிருக்கிறது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராமப்புற வளர்ச்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கி இருக்கிறது.

  • இந்தியை எதிர்த்தார் காமராசர். மத்திய அரசு, மாநில அரசு வேலைத் தேர்வுகளில் இந்தி கட்டாயமான ஒரு பாடமாக இருக்கக் கூடாது என்று 1955இல் நேருவை சந்தித்து ஆலோசித்து விட்டு அவர் அறிவித்தார். அதற்கு காரணம், பெரியார் இந்தியை எதிர்த்து தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தது தான்.
  • 1966இல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 10 நாள் பயிற்சி முகாமை நடத்தியபோது இந்திரா காந்தி அம்மையார் ஆங்கிலத்திலே பேசினார். வடநாட்டு இந்திக் காரர்கள் இந்தியிலே பேச வேண்டும் என்று இந்திரா காந்தியைப் பார்த்து கூச்சலிட்டார்கள். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த குமரி ஆனந்தன் தமிழில் பேச, கேரளாவைச் சேர்ந்த ஏ.கே.அந்தோணி மலையாளத்தில் பேச, கன்னடத்தைச் சேர்ந்த குண்டுராவ் கன்னடத்தில் பேச, இந்தி வெறியர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர். இந்த செய்தியை அறிந்த காமராசர் தங்களுடைய தாய் மொழியில் பேசிய தலைவர்களை அழைத்து ‘நீங்கள் செய்தது தான் சரியான பாடம்’ என்று அவர்களை பாராட்டினார்.
  • 1953 ஆம் ஆண்டு மறைந்த திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த குத்தூசி குருசாமி அவர்கள் திராவிடர் கழகத்தின் சார்பில் ஜாதி ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினார். அந்த மாநாடு, காந்தியின் மகனுக்கும், இராஜாஜியின் மகளுக்கும் நடைபெற்ற திருமணத்தை பாராட்டுவதாகவும் ஜாதி ஒழிப்பிற்காகவும் நடத்தப்பட்ட மாநாடு அது. அந்த மாநாட்டிற்கு குத்தூசி குருசாமி இராஜாஜியை அழைத்தார். இராஜாஜி வருவதற்கு மறுத்து விட்டார். அதன்பிறகு, மாநாடு நடப்பதற்கு நான்கு நாட்களுக்குப் முன்பு காமராசரை மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று அழைத்தபோது ஆர்வத்துடன் அவர் அந்த மாநாட்டில் பங்கேற்று ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உறுதியுடன் அங்கே பதிவு செய்தார்.
  • மாநிலங்களின் உரிமையில் அவருக்கு எவ்வளவு அக்கறை இருந்தது என்பதை முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் நாகநாதன் ‘இந்திய கூட்டாட்சியியல்’ என்ற புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். 1975 இல் அவர் காமராசரை சந்தித்த போது, ‘தென் மாநிலங்கள் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு நிதி, மின்சாரம் போன்றவற்றை பங்கிடுவதில் தங்களுக்குள் ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது’ என்று உறுதியாக தெரிவித்ததை அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார்.
  • இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை, ஜாதி எதிர்ப்பு, கல்வி வளர்ச்சி என்று திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாக நின்ற காமராசர் திராவிட மாடலின் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார். சொல்லப் போனால் ‘திராவிடர் இயக்கத்தின் செல்லப்பிள்ளை காமராசர்’.

            காமராசர் வாழ்க!