வைதீக வேத மரபை எதிர்த்து வள்ளலார் உருவாக்கியது தான் வடலூர் சத்திய ஞான சபை. சத்திய ஞான சபையிலும் சிவன் சிலையை வைத்து அதை வைதீகத் தலமாக மாற்றுவதற்கான சதிச் செயலில் பார்ப்பனர்கள் ஈடுபட்டார்கள். குறிப்பாக சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்ற ஒரு வேத பண்டிதர், அங்கு சிவலிங்கம் போன்ற சிலைகளை வைத்து வழிபட துவங்கியபோது, 2006ஆம் ஆண்டு அதை எதிர்த்து, தொண்டர் குலப் பெருமான். என்ற ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிக்குமாறு அறநிலையத் துறையை விசாரிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அப்போது அறநிலையத்துறை கொடுத்த விளக்கம் மிகவும் முக்கியமானது.

1882 ஆம் ஆண்டு வகுத்த வழிபாட்டு விதிகளின் படி, உருவ வழிபாடு வள்ளலார் சத்திய ஞான சபையில் கூடாது. ஒளி மட்டுமே ஏற்றப்பட வேண்டும். ‘அருட்பெரும் ஜோதி, தனிப் பெரும் கருணை’ என்ற தாரக மந்திரத்தை மட்டுமே ஒலிக்க வேண்டும். வேதம், இதிகாசம், புராணம், சைவம், வைணவம், வேதாந்தம், சித்தாந்தம், போன்ற மதம் சார்ந்த நடவடிக்கைகளில் இலட்சியம் வைக்க வேண்டாம் என்பதுதான் வள்ளலாரின் கருத்து. சத்தியஞான சபை வள்ளலாரால் உருவாக்கப்பட்டது. எனவே மேற்குறிப்பிட்ட எவற்றுக்கும் அங்கே இடமில்லை என்று அறநிலையத்துறை திட்டவட்டமாக அறிவித்தது. இதை எதிர்த்து சிவாச்சாரியார் உயர்நீதிமன்றம் சென்றார். 2010 ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்துரு இந்த வழக்கை விசாரித்து, 'வள்ளலார் உருவாக்கிய சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது என்று மிகச் சிறப்பான தீர்ப்பை வழங்கினார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் அதாவது 2010 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தான் 2022ஆம் ஆண்டு தீர்ப்பு வந்திருக்கிறது. உருவ வழிபாடு கூடாது என்று. வைதிகத்தை எதிர்த்து இந்து மதத்தில் பல இயக்கங்கள் உருவாகின. பல்வேறு கலகக் குரல்கள் எழுந்தன. அவை அனைத்தையும் வைதீக பார்ப்பனிய மதம், சனாதன தர்மம், வைதீக தர்மம், இந்து தர்மம் என்ற பெயரில் விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறது. அதே போலதான் வள்ளலார் வடலூர் சபையையும் விழுங்கி ஏப்பம் விட முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்காது என்று இப்போது 2022ஆம் ஆண்டில் வழக்கின் வழியாக உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வடலூர் வள்ளலார் சபை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமல் போயிருந்தால் அதை மீண்டும் வைதீகத்தின் கோவிலாக மாற்றி பார்ப்பனியத்தின் சடங்கிற்கு நிச்சயமாக உள்ளாக்கியிருப்பார்கள்.

கோவில்களை அறநிலையத்துறைப் பிடியின் கீழ் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதற்கு முக்கிய காரணம், கோவில்களில் இன்றைக்கு நடத்தப்படுகிற சீர்திருத்தங்களை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வைதீக பார்ப்பனியப் பிடிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பின் வழியாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It