தென் மாநிலங்கள் பிரிவினையைப் பேசுகின்றன என்ற அபத்தமான வாதங்களை அமித் ஷா சமீபத்தில் வைத்திருந்தார். ஒன்றிய அரசே தனது பாரபட்சமான செயல்பாடுகளால் தென் மாநிலங்கள் வேறு, வடமாநிலங்கள் வேறு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு, பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என இப்போது வெற்றுக் கூச்சலிடலாமா என்று தென் மாநிலங்களில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.-யும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சசிதரூர் பார்ப்பனர்கள் மேடையிலேயே இந்த விவாதத்தை துணிச்சலோடு எழுப்பியிருக்கிறார்.

துக்ளக் இதழின் 54-வது ஆண்டு விழா சென்னையில் (15.01.2023) நடைபெற்றது. வழக்கமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்களே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள். ஆனால் இம்முறை சசிதரூர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவர் ஏன் துக்ளக் விழாவில் கலந்துகொள்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பார்ப்பனர்கள் குழுமியிருந்த அந்த அரங்கில் சசிதரூர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவை. “தற்போது நிதிப் பகிர்வு கொள்கையால் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. திட்டமிட்டு பொருள் உற்பத்தியை பெருக்கும் தென் மாநிலங்கள் ஈட்டுவதையெல்லாம் மக்கள் தொகையை மட்டுமே பெருக்கிக் கொண்டிருக்கும் வட மாநிலங்களுக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள். சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்தியிருக்கும் தென் மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு சுகாதாரத்திற்கான நிதியை குறைவாகவே கொடுக்கிறது. தென் மாநிலங்கள் கல்வியை மேம்படுத்தினால், ஒன்றிய அரசால் அதற்கான நிதியும் குறைக்கப்படுகிறது” என்று சசிதரூர் கூறியிருக்கிறார்.

கூட்டத்தில் இருந்த பார்ப்பனர்களும், பாஜக ஆதரவாளர்களும் கடுமையாகக் கூச்சலிட்டபோதும் தனது கருத்துக்களை துணிச்சலாகக் கூறியிருக்கிறார் சசிதரூர். “உங்களுடைய தமிழ்நாடு, என்னுடைய கேரளா போன்ற மாநிலங்கள் பாரபட்ச நிதிப் பகிர்வுக் கொள்கையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் 1 ரூபாய் வரி செலுத்தினால் 1.79 ரூபாயாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுக்கிறது. ஆனால் கர்நாடகத்திற்கு 47 பைசாவும், தமிழ்நாட்டிற்கு 29 பைசாவும் மட்டுமே திருப்பிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம்? கர்நாடக மாநில வளர்ச்சிக்கான செலவினங்களில் 72 விழுக்காடு மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் பீகார் மாநில வளர்ச்சிக்கான செலவினங்களில் 23 விழுக்காடு செலவினங்களை மட்டுமே மாநில அரசு நிதியில் செய்கிறது. மீதி 77 விழுக்காடு செலவினங்களுக்கு ஒன்றிய அரசு நிதியை வாரி வழங்குகிறது. உலகம் முழுவதும் கூட்டாட்சி தத்துவம் என்பது உழைத்து முன்னேறும் மாநிலங்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது என்பதுதான். ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சியில் மட்டும்தான் உழைத்து முன்னேறும் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. மக்கள் தொகையை மட்டுமே பெருக்கும் வட மாநிலங்களுக்கு தென் மாநில மக்களின் வரிப்பணம் வாரி வழங்கப்படுகிறது.” என்று ஆணித்தரமாக கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார் சசிதரூர்.

“மக்கள் தொகுதிகளை வரையறுத்த பிறகு, அனைத்து தென் மாநிலங்களையும் விட உத்தரப் பிரதேசத்தில் அதிக எம்.பி.க்கள் இருப்பார்கள். இந்தி பேசும் மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்காக அதிகரித்துவிட்டால் இந்தியைத் தேசிய மொழியாக்கும் சட்டத்தை இயற்றுவதை எது தடுக்கும்?” என்ற கேள்வியையும் சசிதரூர் எழுப்பியிருக்கிறார். மீண்டும் பாஜக ஆட்சி தொடருமானால் ஏற்படப்போகும் பேராபத்து என்ன என்பதற்கு இது ஒன்றே போதுமானது. இக்கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்போம்.

- பெ.மு. செய்தியாளர்

Pin It