23.12.2018 அன்று திருச்சியில் நடைபெற்ற பெரியார் கருஞ்சட்டைப் பேரணி மாநாடு குறித்து பொது மக்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள், பெரியார் இயக்கத்தினரிடையே மிகுந்த பேரெழுச்சியும், மகிழ்ச்சி யும் ஒரு புதிய செயல் வேகமும் ஏற்பட்டிருக்கிறது.

உணர்வாளர்களிடம் பேசிய போது பெரியார் பெருந்தொண்டர், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் வணிகம் நடத்தி வரும் கம்பரசம் பேட்டையைச் சேர்ந்த பெரியவர் இருளாண்டி கூறிய கருத்து:

“நான் சிறுவயதிலிருந்தே பெரியார் கொள்கைகளைப் பின்பற்று பவனாகவே இருந்தேன். எனது 18ஆவது வயதில் 1957இல் பெரியார் கூட்டிய தஞ்சை மாநாட் டிற்குப் பிறகு இப்பொழுதுதான் இவ்வளவு பெரும் கருஞ்சட்டைத் தோழர்களைப் பார்க்க முடிந்தது. உணர்ச்சி பெருக்கில் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.

எங்களுக்குப் பிறகு இந்த பெரியார் இயக்கத்தை வழி நடத்த, மக்களிடையே கொண்டு செல்ல யார் இருக்கிறார்கள் என்று நினைத்த வேளையில் பல ஆயிரக்கணக்கில் குறிப்பாக இளைஞர்களும் இளம் பெண்களும் பேரணியில் ஆட்டம் பாட்டம் முழக்கத்துடன் வந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. என்னைப் போன்ற வயதானவர்கள் ஒரு சிலரை மட்டுமே காண முடிந்தது.

பெரியார் பெயரில் இயக்கம் நடத்தி வந்த பல தலைவர்களும், பெரியாரை ஏற்றுக் கொண்ட இயக்கங்களின் தலைவர்களும் ஒரே மேடையில் ஒரே குரலாகப் பேசி யதும், இனி தமிழ்நாட்டுக்கான ஒரே தலைவர் பெரியார் தான் என்று பேசியதும் என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாகும். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்”என்று கூறினார்.

திருச்சியில் வழக்குரைஞராக உள்ள கங்கைச் செல்வன், ம.தி.மு.க. விலிருந்து, அ.இ.அ.தி.மு.க. சென்ற போதும் தொடர்ந்து பெரியார் கொள்கை பற்றாளராகவே உள்ளார். அவர் பேரணி பற்றி தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண் டார்.

“மிகச் சிறப்பான ஏற்பாடுகளை சரியான நேரத்தில் பெரியார் இயக்கங்களும், பெரியார் உணர்வாளர்களும் ஒன்று சேர்ந்து இனி இந்த மண்ணில் பெரியாரை விட்டால் தமிழ்நாட்டிற்கு (எங்களுக்கு) வேறு தலைவர் இல்லை என்பதை மிக அழுத்தமாக இந்த மாநாட்டின் மூலம் சொல்லி யிருக்கிறீர்கள். தமிழ்நாடு எங்கள் நாடு, இங்கு ஏதடா இந்து நாடு போன்ற முழக்கங்கள் காவிகளை உண்மையிலேயே கதற வைத்து விட்டது” என்று கூறியதோடு, தனது முகநூல் பக்கங்களில் தொடர்ந்து இது குறித்து பதிவிட்டு வருவதையும் எடுத்துக் காட்டினார்.

- திருச்சியிலிருந்து மு.மனோகரன் (கழக மாவட்டச் செயலாளர்)

Pin It