நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத்தொடரில், புதிய பாராளுமன்ற வளாகத்தில், டிசம்பர் 13 அன்று இரண்டு இளைஞர்கள், திடுப்பெனப் பார்வையாளர் மாடத்திலிருந்து பாராளுமன்ற மக்களவைக்குள் குதித்தார்கள். வண்ணப் புகையை வீசிவிட்டு ஓடினார்கள். புகையும், எரிச்சலும், அச்சமும் சூழ, உறுப்பினர்கள் திகைக்க, சிலர் அவர்களை மடக்கிப் பிடித்துக் காவலர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அவர்கள் மைசூரு பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையின் பேரில் பார்வையாளர் அனுமதிச் சீட்டு பெற்று உள்ளே வந்தவர்கள் என உடனடியாகக் கண்டுபிடித்து விட்டார்கள்.

இப்போது என்ன செய்யவேண்டும்? யார் அவர்கள்? ஏன் அந்த உறுப்பினர் அனுமதி சீட்டு கொடுக்க பரிந்துரை செய்தார்? அல்லது ஒரு நாட்டின் உச்ச சனநாயக அமைப்பான பாராளுமன்றத்திற்கே பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்றால் பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டுமா, இல்லையா? அதைத்தான் பாராளுமன்றத்தில் சொல்லச் சொன்னார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள். பதில் வரவே இல்லை. அதனால் பதாகைகள் ஏந்தி அவையின் கவனத்தை ஈர்த்தார்கள்.modi and amit shah 429இந்தக் காரணங்களால், 14 அன்று 13 மக்களவை உறுப்பினர்கள், 1 மாநிலங்களவை உறுப்பினர் – (திரிணாமூல் காங்கிரஸின் டெரிக் ஓ ப்ரைன்), 18 அன்று 33 மக்களவை உறுப்பினர்கள், 45 மாநிலங்களவை உறுப்பினர்கள், 19 அன்று 49 மக்களவை உறுப்பினர்கள், 20 அன்று 2 மக்களவை உறுப்பினர்கள் என ஆக மொத்தம், 97 மக்களவை உறுப்பினர்கள் - 46 மாநிலங்களவை உறுப்பினர்கள் என 143 பேரை பணி நீக்கம் செய்திருக்கிறார்கள், ஓம்பிர்லாவும், ஜகதீப் தன்கரும் முறையே மக்களவையிலும் மாநிலங்களவையிலும்! அதுவும் தவணை முறையில்! இதில் கனிமொழி, சுப்ரியாசுலே, சு.வெங்கடேசன், திருமாவளவன், ஃபரூக்

அப்துல்லா என எல்லா துடிப்பான பேச்சாளர்களும் அடக்கம். ஏற்கனவே மஹூவா மொய்த்ராவின் குரலை அடக்கி விட்டார்கள்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஜான் பிரிட்டாஸ், ஏ.ஏ.ரஹீம் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள், உரிமைக் குழு அறிக்கை அளிக்கும் வரை 3 மாதங்களுக்கு உள்ளே வரக்கூடாது என கடுமையான தண்டனை வேறு!

இந்த அடாவடி செயல்களை விட மோடியும், அமித்ஷாவும் மக்களவையில் விளக்கம் தருவது கடினமான வேலை போலும்?!

மோடியும், அமித்ஷாவும் சிக்கல்களுக்கு புறமுதுகிட்டு ஓடுவது புதிதா என்ன?

எட்டு மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் தான். இன்னும் இந்திய நாட்டின் பிரதமருக்கு அந்த மாநிலத்தில் போய் கால் வைக்க நேரமில்லை. மீண்டும் சூரசந்த்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. பெண்கள் அம்மணப்படுத்தப்பட்டு ஊர்வலம் இழுத்து வரப்பட்ட காணொளிக் காட்சிகள் மொத்த இந்தியப் பெண்களையும் அவமானப்படுத்தியது. பாராளு மன்றத்தில் அது தொடர்பாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைக் கூட மோடியும், உள்துறை அமைச்சரும் எதிர்கொள்ளவில்லை.

இதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் போராடினார்களே? அப்போது மட்டும் மோடி வந்து பார்த்து விட்டாரா என்ன?

ஆயிரக்கணக்கில் தலித் வன்கொடுமைகள் அரங்கேறுகின்றன. இசுலாமியர்கள் அச்சத்தில் வைக்கப்படுகிறார்கள். கேள்வி கேட்டவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். விலைக்கு வாங்கப் படுகிறார்கள்.

எந்த சிக்கலுக்காவது இதுவரை ஊடகங்களைச் சந்தித்து பதில் சொல்லி இருக்கிறாரா? நடுநிலை ஊடகங்கள் வாங்கப்பட்டுவிட்ட போதும், அவருக்கு அச்சம் தீர்ந்தபாடில்லை.

நிறைய சிக்கல் இருந்தால் மோடி வெளிநாடு சென்றுவிடுவார். விருந்துகளில் கலந்து கொண்டு தன் இறுக்கத்தைத் தளர்த்திக் கொள்வார்.

இந்த நிலையில் தான் ஒரு பெரும் கட்டிடத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட நாடாளுமன்றம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகளால் விவாதிக்கப் பட வேண்டிய பல மசோதாக்கள் சட்டமாக்கப் பட உள்ளன. விவாதங்களே கசக்கும் சர்வாதிகாரர்களுக்கு இந்தச் சூழல் தானே வேண்டும்? மனித உரிமைகளுக்கு உலைவைக்கும், பாசிச, மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்வார்கள்.

மிக முக்கியமான சட்டங்களான குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872, இந்தியத் தண்டனைச் சட்டம் 1860 ஆகியவற்றுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த சூழலில், மனித உரிமைகளுக்காக குரலெழுப்பக் கூடிய ஃபரூக் அப்துல்லா, டெரக் ஓ ப்ரைன், சு.வெங்கடேசன், சுப்ரியாசுலே, கனிமொழி, திருமாவளவன் என அனைவரையும் வெளியேற்றியதன் பின்னணியை நாம் கவனத்தில் வைக்கவேண்டும்.

மோடியும், அமித்ஷாவும் புறமுதுகிட்டு ஓடுவதே எதிர்ப்பற்ற ஒரு புறச்சூழலை உருவாக்கவே! ஆனாலும் அகச் சூழல் அவர்களைத் துரத்தும். அது அவர்களை உள்ளிருந்து பலவீனப்படுத்தும். மௌனமாக இருக்கும் மக்கள், மௌனித்து விடமாட்டார்கள். 2024இல் தக்க பதிலளிப்பார்கள்!

சாரதாதேவி

Pin It