ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் ஒவ்வொரு நாளும் திடீர் திடீர் மாற்றங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைக் கைப்பற்றுதலையே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் கட்சிகளில் அதன் ஒற்றை சர்வாதிகாரத் தலைமையில் வெற்றிடம் உருவாகிடும்போது கட்சி சிதறுண்டுதான் போகும். அணி சேர்க்கைகளுக்கு ஆதார சுருதியாக அதிகார மய்யங்களைக் கைப்பற்றுதலே இருக்குமே தவிர, கொள்கைப் பிரச்சினைகளுக்கு வாய்ப்பே இல்லை.

அ.இ.அ.தி.மு.க. கட்சியே தமிழக பா.ஜ.க. தான். தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மத அடையாளம் தந்து, கட்சி நிகழ்வுகளையே மதச் சடங்குகளாக மாற்றிய கட்சி அது. பகுத்தறிவு சிந்தனைக்கோ, பகுத்தறிவாளர்களுக்கோ, அக்கட்சியில் துளியும் இடமில்லை. கட்சி அமைப்பும், ஜாதிய கட்டமைப்புக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. இந்த நிலையில் பிளவுபட்டு நிற்கும் அணிகளில் எந்த அணி கொள்கைக்கானது என்ற ‘தேடல்களில்’ இறங்குவது, ‘இருட்டறைக்குள் கருப்புப் பூனையை’த் தேடும் கதையாகவே இருக்கும்.

பெரியார் வாழ்ந்த காலத்தின் அரசியல் களமும், பொது வாழ்க்கை நேர்மையும் முற்றிலும் வேறானது. தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உவப்பான அரசியல் கட்சியை தேர்வு செய்யவும், பார்ப்பனரல்லாத தமிழர் சமூக நலன் என்ற பார்வையில் ‘ஆதரவு-எதிர்ப்பு’களை வெளிப்படுத்தும் சமூக-அரசியல் சூழல் அப்போது இருந்தது.

பெரியார் அப்படி எடுத்த ‘ஆதரவு-எதிர்ப்பு’ அணுகுமுறைகளைக்கூட தனது ‘இலட்சிய ஆளுமையின்’ கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆற்றலும் துணிவும் பெரியாருக்கு இருந்தது; வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

இப்போது தேர்தல் அரசியல் கட்சிகள் நிலை என்ன? மக்களிடமிருந்து அன்னியப்பட்டு வருகின்றன. வேறு வழியின்றி தேர்தலில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், பெரியார் இயக்கம் உள்ளிட்ட சமுதாய மாற்றத்துக்கான முற்போக்கு இயக்கங்களின் செயல்திட்டங்களும் போராட்டங்களும் பரப்புரைகளும் மக்கள் மன்றத்தை மய்யமாகக் கொண்டு சூழல வேண்டுமே தவிர, ஏதேனும் ஓர் அரசியல் கட்சியின் ஆதரவை நோக்கியே ஓடிக் கொண்டிருப்பது அல்ல; அவ்வப்போது எழும் பிரச்சினைகளில் மட்டும் கட்சிகளின் ஆதரவு, எதிர்ப்பு நிலைகளை எடுக்கலாம்.

தமிழக ‘இந்துத்துவா’ கட்சியான அ.இ.அ.தி.மு.க. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு அதிகாரத்துக்கு வரக் கூடாது என்ற கண்ணோட்டத்தில்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம் முடிவெடுத்து மக்கள் மன்றத்தில் வைத்தது.

இப்போதும் கழகத்துக்கு அதே பார்வைதான். திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றாலும், திராவிட இயக்கத்தின் ‘மிச்ச சொச்ச’ அடையாளங்களோடு இருக்கும் கட்சி அதுதான் என்று தேர்தல் நிலைப்பாட்டில் நாம் எடுத்த முடிவு அப்படியே தொடருகிறது.

ஆனாலும், அண்மையில் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடவடிக்கைகளில் தி.மு.க.வின் அணுகுமுறைகள் அக்கட்சிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை என்பதே நமது கருத்து. சட்டமன்ற மாண்புகள் சீர்குலைக்கப்பட்டன. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா பேச்சையும் சுட்டிக்காட்ட வேண்டும். “தி.மு.க.வுடன் நட்பு பாராட்டவே கூடாது; அவர்களைப் பார்த்து சிரிக்கக்கூட கூடாது; தி.மு.க. நமக்கு எதிர்க்கட்சி மட்டுமல்ல எதிரி கட்சி” என்று சசிகலா கூற்றும், அரசியல் அநாகரீகத்தின் உச்சம்.

தமிழ்நாட்டின் ‘அசாதரண’ அரசியல் சூழலை பார்ப்பனர்களும், பா.ஜ.க.வும், தங்கள் அதிகார மய்யங்களின் வழியாக தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு நாம் மக்கள் மன்றத்துக்குத்தான் போக வேண்டும். ‘பார்ப்பனிய - மதவாத - ஜாதி எதிர்ப்பு’ முற்போக்கு இயக்கங்கள் அணி திரண்டு, பார்ப்பனிய மதவாத அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். இளைய சமுதாயம் விழிப்படைந்து வருகிறது என்பதை ‘மெரினா’ போராட்டங்களே உணர்த்தி நிற்கின்றன.

மக்கள் கருத்துருவாக்கம் ஆட்சி அதிகாரங்களைப் பணிய வைக்கும் நிலையை நோக்கி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

அந்தத் திசையில் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து பயணிக்கும்; பயணிப்போம்; கட்சி அரசியலைக் கடந்த இயக்கங்களின் ஓர்மையை உருவாக்குவோம்!

Pin It