2014இல் ஆட்சிக்கு வந்த பாஜக இந்த எட்டு ஆண்டுகளாக உயர் கல்வியில் செய்த அட்டூழியங்கள் ஏராளம். டெல்லி பொருளாதாரக் கல்லூரி பேராசிரியர் நந்தினி சுந்தரும், டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் கவுஹர் ஃபஸ்லியும் இணைந்து, ஜூன் 2020 வரை நடந்த அதிகார அத்துமீறல்களை, ஆய்வறிக்கையாக வெளி யிட்டனர் . தற்போது அந்த ஆய்வறிக்கையோடு புது தகவல் களை சேர்த்து, செப்டம்பர் 2022 வரை நடந்த சீர்கேடுகளையும் உள்ளடக்கியதாக விரிவாக்கப்பட்டுள்ளது. வேறு நால்வர் இப்பணியை செய்துள்ளனர். 6 பகுதிகளாக இந்த கொடுங்கோன்மைகள் பிரித்து விளக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்கு பார்க்கலாம்.

1.         பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் தலையீடு: சிந்தனை யாளர் காஞ்சா அய்லையா எழுதிய ‘நான் ஏன் இந்து அல்ல?’, அருந்ததி ராய் எழுதிய ‘தோழர்களுடன் ஒரு பயணம்’, நாவலாசிரியர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’, எழுத்தாளர் பாமா சூசைராஜ் எழுதிய ‘சங்கதி’, சுகிர்த ராணி எழுதிய ‘கைம்மாறு’, ‘என் உடல்’, ராமானுஜன் எழுதிய ‘300 இராமாயணங்கள்’ உள்ளிட்ட 17 புத்தகங்கள் பாடத் திட்டங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நீக்கங்கள் சுமூகமாக நடைபெற்றதில்லை. மிரட்டல்களின் மூலமாகவும், வன்முறை சம்பவங்களின் மூலமாகவும் தான் நீக்கங்கள் நிகழ்ந்துள்ளன. மன்னர் சிவாஜியைப் பற்றி எழுதப்பட்ட ஒரு நூலை, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கக் கோரி, பந்தர்க்கர் கல்லூரியின் நூலகமே சூறையாடப்பட்டுள்ளது. இத்தகைய காரியங்களைச் செய்வதற்காகவே, மாணவ குண்டர்களான ஏபிவிபியினர் (அகில இந்திய வித்யாதி பரிஷத்) ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கின்றனர்.

2.         கல்லூரிகளில் பேராசிரியர்கள் நடத்தும் கருத்தரங்கங்களுக்கு அனுமதி மறுப்பு: மக்களாட்சி தத்துவம், மனித உரிமைகள், காஷ்மீர் பிரச்சனை - அரசியலமைப்பு சார்ந்த எந்த ஒரு முற்போக்கான கருத்தரங்கங்களும், கல்லூரி வளாகத்துக்குள் நடந்துவிடாதபடி, ஆர்எஸ்எஸ் மாணவர்கள் தொடர்ச்சியாக வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனவரி 2016ல் “The Wire” ஆங்கில செய்தி இணையதளத்தின் உரிமையாளர் சித்தார்த் வரதராஜன், அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியை, ஏபிவிபி தீவிரவாதிகள் அச்சுறுத்தி நடக்க விடாமல் நிரந்தரமாக நிறுத்தினர். இந்த ஆண்டு (2022) மே மாதத்தில், ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக் கழகத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியையே தடுத்து நிறுத்தும் அளவிற்கு வெறியாட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். கும்பல்கள் ஈடுபட்டனர். இதுபோல 73 கல்லூரி நிகழ்ச்சிகளை இந்த எட்டு ஆண்டுகளில் கலவரங்களின் மூலம் தடுத்துள்ளனர். இது எந்த “ஜனநாயக” நாட்டிலும் நடக்காத அநியாயம்.

3.         பேராசிரியர்கள் கைது: பேராசிரியர்கள் சாய் பாபா, மகேஷ் சந்திரகுரு (ராமனை அம்பலப் படுத்தியதற்காக), ஜீத்ரா ஹன்ஸ்டா (மாட்டுக்கறி விழாவை ஆதரித்து ஃபேஸ்புக்கில் எழுதி யதற்காக), நந்தினி சுந்தர், பாப்ரி, சவுரதீப் சென்குப்தா (சனாதன தர்மத்தை எதிர்த்து வகுப்பில் பேசியதற்காக, ஏபிவிபி மாணவர்களின் குற்றச்சாட்டின் பெயரில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர்), ஷில்பா சிங் (தாலியை விமர்சித்து பேஸ்புக்கில் எழுதியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது), ஜிதேந்திர குமார் (கடவுள்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை எடுத்துக் காட்டியதற்காக), ரதன் லால் (சிவலிங்கத்தை விமரிசித்து பேசியதற்காக), பீமா கோரிகன் பொய் வழக்கில் சோமா சென், சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே ஆகியோர் சிறையில் அடைக்கப் பட்டனர். இவ்வாறாக 12 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

4.         ஆசிரியர்கள் / மாணவர்கள் மீதான தாக்குதல்கள்: 2015 ஆகஸ்ட் மாதத்தில் பேராசிரியர் கல்புர்கி ஹிந்துத்துவ பயங்கரவாதி களால் சுட்டுக் கொல்லப் பட்டார்; லக்னோ பல்கலைக்கழக பேராசிரியர் ராஜேஷ் குமார் தாக்கப்பட்டார். வாஜ்பாய்க்கு எதிராக பேஸ்புக்கில் பதிவு எழுதியதால் பேராசிரியர் சஞ்சய் குமார் தாக்கப்பட்டார். பேராசிரியர் தினேஷ் குப்தாவை, ஏபிவிபி மாணவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். பேராசிரியர் கிரீன் பக்சி முகத்தில் கரி பூசப்பட்டு, மாணவர்களால் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 2019இல் ஃபெரோஸ் கான் என்கிற இஸ்லாமிய பேராசிரியரின் சமஸ்கிருத வகுப்புகளை சங்கி மாணவர்கள் கூண்டோடு புறக்கணித்தனர். ஃபெரோஸ்கானுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பேராசிரியர் சாந்தி லால் சல்வி, ஜாதி ரீதியான வசைச் சொற்களுக்கு ஆளானார்.

            செப்டம்பர் 2014இல் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவி, ஆண்கள் விடுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு, ஆர்எஸ்எஸ் மாணவர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். நாட்டை உலுக்கிய ரோகித் வெமுலாவின் தற்கொலைக் கும் காவிகளே காரணமாக இருந்தனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில், ராமநவமியன்று அசைவ உணவு சமைக்கப்பட்டதை எதிர்த்து, சனாதன மாண வர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதில் 6 பேர் காய மடைந்தனர். 8 ஆண்டு பாஜக ஆட்சியில், ஆசிரியர்கள் மீது 12 முறையும், மாணவர்கள் மீது 37 முறையும் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. பதிவாகாத வன்முறைகள் இதை விட பலமடங்கு கூடுதலாக இருக்கும்.

5.         பணி நீக்கங்களும் இடைநீக்கங்களும்: வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா, பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISC) அறிவியல் இருக்கையில் (Science chair) அமர வைக்கப்பட்டதை எதிர்த்து, காவிகள் தீவிரமாக போராடினர்; அதற்கு அடுத்த மூன்று மாதத்திற்குள் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் அவருக்கு கிடைக்கவிருந்த பேராசிரியர் பொறுப்பையும் அவரே நிராகரிப்பதற்கு பாஜகவின் அராஜகப் போக்கே காரணமாக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், லவ்லி ப்ரொஃபஷனல் பல்கலைக்கழகப் பேராசிரியர் குர்சங் ப்ரீத் கவுர், ராமனையும் ராவணனையும் பற்றி ஆன்லைன் வகுப்பில் பேசியதற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

            கேரள மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆன்லைன் வகுப்பில் கில்பர்ட் செபாஸ்டின் என்கிற பேராசிரியர், சங் பரிவார் அமைப்புகளை “பாசிச அமைப்புகள்” என்று கூறியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த இடை நீக்கத்திற்கு எழுந்த எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் மீண்டும் பணியமர்த்தப் பட்டார். சென்னை ஐஐடியில் காரணம் ஏதும் கூறப்படாமல், “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்” (APSC) தடை செய்யப்பட்டு, பின் எதிர்ப்புகளை கண்டு அஞ்சி, தடை விலக்கப் பட்டது. அதேபோல் கராக்பூர் ஐஐடியிலும் “அம்பேத்கர் பகத் படிப்பு வட்டம்” தடை செய்யப்பட்டு, பின் எதிர்ப்புகளால் பின்வாங்கப்பட்டது. இது போல் 13 நீக்கங்களும், 20 இடை நீக்கங்களும் நடைபெற்றுள்ளன.

6.         வெளிநாட்டு கல்வியாளர்களுக்கு, விசா நிராகரிப்பு: நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பின் காரணமாக, யோகா கற்றுக் கொடுக்கும் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் Patricia Sauthoff என்ற வெளிநாட்டவர் நீக்கப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பரில், 50க்கும் மேற்பட்ட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் ஆதரவோடு நடைபெற்ற “Dismantling Global Hindutva (உலகளாவிய இந்துத்துவ தகர்ப்பு)” கருத்தரங்கத்தில், இந்தியாவிலிருந்து கலந்து கொண்ட கல்வியாளர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப் பட்டனர். பாகிஸ்தானில் பட்டப்படிப்பை முடித்த இந்திய குடிமக்கள் யாருக்கும், இந்திய நாட்டில் வேலை வாய்ப்பையோ மேற்படிப்பையோ மேற் கொள்ளத் தகுதி கிடையாது என்ற பொது அறிவிப்பு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 20 முறைக்கும் மேல், வெளிநாட்டுக் கல்வியாளர்கள் இந்தியாவுக்குள் நுழையவிடாமல், முற்போக்கு உரையாற்றுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளனர். எனவே, மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இந்த நாடு இருப்பதை, அனைவருக்கும் அறியச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.”

ம.கி. எட்வின் பிரபாகரன்

Pin It