திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் நவம்பர் 26 அன்று நடைபெற்ற சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டங்கள் வீர வணக்க நிகழ்வுகளின் தொகுப்பு.

சென்னை : திராவிடர் இயக்கத்தின் மிக முக்கிய போராட்டமான ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தோழர்கள் கொளுத்தி இந்திய ஒன்றியத்தை திரும்பி பார்க்க வைத்தப் போராட்டம் ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ ஆகும்.

இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில், பதாகைகள் சட்ட எரிப்பு போராளிகளை நினைவுகூரும் வகையிலும், வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட் டிருந்தது. 26.11.2022 அன்று காலை 8 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு சட்ட எரிப்பு நாள் குறித்து உரையாற்றினார். முன்னதாக, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி ‘ஜாதி ஒழிப்பு உறுதிமொழி’ வாசிக்க கழகத் தோழர்கள் உறுதியெடுத்தனர்.kolathoor mani at chennai dvk meetingஜலகண்டாபுரம் : 26.11.2022 மாலை 6.00 மணியளவில் ஜலகண்டாபுரம் பேருந்து நிறுத்தம் எதிரில் திராவிடர் விடுதலைக்கழகம் நடத்திய நவம்பர் 26 சட்ட எரிப்புப் போராளிகளுக்கு வீரவணக்க பொதுக் கூட்டத்தில் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் ஜாதி ஒழிப்புப் பாடல்களோடு துவங்கியது. இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து பொதுக் கூட்டம் தொடங்கியது.

நங்கவள்ளி நகர செயலாளர் சு.பிரபாகரன் வரவேற்புரை நிகழ்த்த நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பொ. கிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், தலைமைக்குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதனைத் தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ம. கிருஷ்ணன், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளர் கோனூர் வைரமணி, மனிதநேய மக்கள் கட்சியினுடைய மாவட்டத் தலைவர் முஹம்மது ரயிஷ் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர்.

நிறைவாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்தினார். அவர் தமது உரையில், “பெரியாருக்கு அரசியல் நிர்ணய சபையை நிர்ணயிக்கும் போதே எதிர்ப்பு இருந்தது என்றும், நோக்க தீர்மானத்தை அன்று முன் மொழிந்தவர் அன்றைய பிரதமர் நேரு என்றும், ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ளது என்றும், 2014க்கு பிறகு இந்தியாவில் மதச்சார்பின்மை கேள்விக் குறியாகி விட்டது என்றும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஜாதி என்பது தேசத்திற்கு எதிரானது என்று கூறியதையும் தமது உரையில் சுட்டி காட்டினார்.

மேலும் நவம்பர் 26 - 1957 அன்று நடைபெற்ற ஜாதியை பாதுகாக்கும் அரசியல் பிரிவுகளை தீயிட்டு கொழுத்தி சிறை சென்ற, சிறைக்கு உள்ளேயும், சிறையில் இருந்து வெளியேயும் வந்து தன் இன்னுயிரை நீத்த தோழர்களைப் பற்றியும் விரிவாக தமது உரையில் கூறினார். கூட்டம் இரவு 10 மணிக்கு நங்கவள்ளி அ.செ.சந்திரசேகரன் நன்றியுரையுடன் முடிவடைந்தது. தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக் கூட்டத்தை விளக்கி நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகளை தோழர்கள் ஒட்டியிருந்தனர். பொது கூட்டத்தின் சிறப்புகள்:

1)           கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் 75 வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தின் சார்பில் 100 ஐந்தாண்டு புரட்சி பெரியார் முழக்க சந்தா தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்பட் டிருந்தது. அதன் முதல் தவணையாக 50 புரட்சி பெரியார் முழக்கத்திற்கான 5 ஆண்டு சந்தா தொகை ரூ.75000/- கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது.

2)           எடப்பாடி பகுதியை சேர்ந்த தோழர் செல்வகுமார் மற்றும் சுவாதிபிரியா ஆகியோரது பெண் குழந்தைக்கு கழக தலைவர் அவர்கள் கனல்விழி என்ற பெயரை சூட்டினார்.

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சாதியை பாதுகாக்கும் சட்டங்களை எரித்து சிறை சென்று உயிர் ஈகம் செய்த சாதி ஒழிப்பு போராளிகளுக்கு நவம்பர் 26 அன்று மாலை 6 மணியளவில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித திருவேங்கடம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் ராஜமாணிக்கம், மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் வேலுச்சாமி, அறநெறி மக்கள் கட்சி பொறுப்பாளர் ஆயர் த ஜேம்ஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொறுப்பாளர் ஒட்டங்காடு மூர்த்தி, தமிழ் வழி கல்வி இயக்க பொறுப்பாளர் மெய்ச் சுடர் நா.வெங்கடேசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

“பழக்க வழக்கம் என்ற பெயரில் சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் அமைப்பின் சட்ட பிரிவுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி சாதிய பாகு பாட்டை வளர்த்தெடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகளை எரித்து சிறை சென்று உயிர் தியாகம் செய்த வீர தியாகிகளை நெஞ்சில் நிறுத்த வேண்டும். சமூக நீதிக்கு முரணாக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசு உடனடியாக சாதியை வளர்த்தெடுக்கும் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும். சமூக நீதிக்கு குழி பறிக்கும் உயர்சாதி ஏழைகளுக்கான 10ரூ இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தியாவின் பெரும்பான்மை ஓபிசி மக்களின் உரிமைகளை பறிக்கும் உயர் சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும். அதிக மக்கள் தொகை கொண்ட ஓபிசி பிரிவுக்கு குறைந்த சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிற நிலையில் மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட எட்டு லட்சம் வரை வருமானம் ஈட்டும் உயர் சாதி ஏழைகளுக்கு(?) அதிக சதவிகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்குவது எப்படி நியாயமாகும்? சமூக நீதிக்காக தொடர்ந்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஓபிசி பிரிவு மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் கையொப்பமிட்ட மேனாள் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கோவேந்தன் அவர்களின் மண்ணிலிருந்து மீண்டும் சமூக நீதிக்கான குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்” என்று கூட்டத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது.

நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், அறநெறி மக்கள் கட்சி, தமிழ் வழிக் கல்வி இயக்கம் போன்ற அமைப்பு களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நகரின் மையப் பகுதியில் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கருத்தாளர்களின் உரையினை கடைவீதியில் பெரும்பாலானோர் நின்று கேட்டுச் சென்றனர்.

தொடக்கத்தில் பகுத்தறிவு பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் அவர்களின் பகுத்தறிவு பாடல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் இரண்டு நாட்களுக்கு முன் மறைந்த பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளரும் சிந்தனையாளருமான ஆசிரியர் அய்யா சி. வேலு அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப் பட்டது.

முன்னதாக திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் மருத உதயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் அ.கோவிந்தன் நன்றி கூறினார்.

மதுரை : மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 3ஆவது ஆண்டாக, ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் யானைக்கல் பிரசிடன்சி அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி தலைமை தாங்கினார். மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி வரவேற்பு கூறினார்.

பெரியாரும் தமிழ் நாடு விடுதலையும் என்கிற தலைப்பில் மாவட்ட கழகக் காப்பாளர் தளபதி உரையாற்றினார். ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள் போராட்ட வரலாறு குறித்து மார்க்சியப் பெரியாரிய பொது வுடைமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வாலாசா வல்லவன் சிறப்புரை யாற்றினார்.

பெரியார் எதற்காக அரசியல் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். அந்தப் போராட் டத்தில் பெரியார் தொண்டர்கள் செய்த அளப்பரிய தியாகங்கள் பற்றியும் பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் கொசைப்படுத்த முயற்சிக்கும் போலி தமிழ் தேசியவாதிகளையும் அம்பலப்படுத்தி பேசினார்.

முன்னதாக பேராசிரியர் க.நெடுஞ்செழியன் படத்தை தபெதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ப் பித்தன் திறந்து வைத்து நினைவு உரையாற்றினார். மொழிப் போர் தியாகி. ப.ஜெயப்பிரகாசம் படத்தை வாலாசா வல்லவன் திறந்து வைத்தார்.

நமக்கான அடையாளம் திராவிட மாடல் பரப்புரை யின் போது அறிமுகமான பானு ரேகா மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் கழகத்தில் இணைந்து கொண்டார். புலிப்பட்டி பொறுப்பாளர் கருப்பையா நன்றியுரையாற்றினார்.

தமிழ் தமிழர் இயக்கம் பரிதி, விடுதலை சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள், தபெதிக, மே 17. இயக்கத் தோழர்களும் கழக மாநகர் தலைவர் திலீபன் செந்தில், காளி, மருது பாண்டி உள்ளிட்ட கழகத் தோழர்களும் , கழக ஆதரவு வழக்கறிஞர்களும் மேலும் கருத்தரங்க சுவரொட்டிகள் மூலமாக பல புதிய இளைஞர்களும் பங்கேற்றனர்.

திருப்பூர் : திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 1957 ஆண்டு நடந்த ஜாதியை காப்பாற்றும் அரசியல் சட்டப் பிரிவுகள் எரிப்பு போராட்ட நாள் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் ஜாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு ஆகியவை, நவம்பர் 26 காலை 10:30 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது.

நிகழ்ச்சிக்கு திவிக பொருளாளர் துரைசாமி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முகில் ராசு முன்னிலை வகித்தார்.

1957இல் நடந்த இந்த சட்ட பிரிவுகள் எரிப்பு போராட்டம் குறித்து தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சந்தோஷ், விடுதலைச் சிறுத்தை கட்சியின் து.பொ. செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர் பேரவையின் மத்திய மாவட்ட செயலாளர் தீர. தமிழ்மாறன் தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, திவிக இணைய தளப் பொறுப்பாளர் பரிமள ராஜன் ஆகியோர் உரை யாற்றினர். மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கொள்கை முழக்கங்களை எழுப்பினார். திவிகவைச் சேர்ந்த வீரலட்சுமி ஜாதி ஒழிப்பு உறுதி ஏற்பை செய்வித்தார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் மற்றும் கழக மாநகர மாவட்ட பொறுப்பாளர்கள் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் திவிகவின் நிர்வாகிகள் தோழர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் ஆதித் தமிழர் பேரவையின் தோழர்கள் என திரளானோர் கலந்து கொண்டார்கள்.

கோவை : நவம்பர் 26,1957 ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவுகளை கொளுத்தி வீரமரணம் அடைந்த ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு கோவை மாநகர அமைப்பாளர் கிருட்டிணன் தலைமையில் காந்திபுரம் பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. சூலூர் தமிழ்செல்வி உறுதிமொழி வாசிக்க, கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் பா. இராமசந்திரன், வெங்கட், புரட்சித் தமிழன், குட்டையூர் கந்தசாமி மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் சட்ட எரிப்புப் போராட்டம் குறித்து உரையாற்றினார்கள்.

நன்செய் பதிப்பகம் தொகுத்த ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ நூலை மாவட்ட கழகத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் வெளியிட ஜெகதீசன் அதைப் பெற்றுக் கொண்டார். இறுதியாக சிவராசு நன்றி கூறினார். கலந்துகொண்ட தோழர்கள் அனைவருக்கும் பெரியார் தொண்டர் ஜெகதீசன் தேநீர் வழங்கி சிறப்பித்தார்.

வீரவணக்க நிகழ்வு முடிந்த பிறகு, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு சட்ட எரிப்பு போராளிகளின் தியாக வரலாற்றை விளக்கும் துண்டறிக்கைகள் வழங்கினர்.

கலந்து கொண்ட தோழர்கள்: மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், சூலூர் பன்னீர்செல்வம், சூலூர் தமிழ் செல்வி, நிர்மல் குமார், கிருஷ்ணன், வெங்கட், மாதவன், புரட்சித் தமிழன், சிவராசு, இயல், இராஜாமணி, பொன்மணி, துளசி, சைனி, ஜெகதீஷ், குட்டையூர் கந்தசாமி, அமிலா, சதீஷ் (போத்தனூர்), காந்தி, முத்தமிழ், நிலா, தமிழினி, சுருதி, தமிழேந்தி.

கோபி : ஈரோடு வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நவம்பர் 26 - 1957இல் தந்தை பெரியாரின் தலைமையில் சாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்ட பிரிவை எரித்து சிறை சென்று, சிறையிலேயே உயிர் நீத்த சாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு கோபி பெரியார் சிலை முன்பு, 26.11.2022 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

கழகத் தோழர் ராம், அய்யா சிலைக்கு மாலை அணிவித்த பின் வீரவணக்க முழக்கத்துடன் சாதி ஒழிப்பு உறுதிமொழி தோழர்கள் அனைவரும் எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் கழகத்தின் வெளீயிட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் : சேலம் மாநகரத்தின் சார்பாக 26.11.2022 அன்று காலை 7 மணிக்கு தாதகாப்பட்டி உழவர் சந்தையில் அமைந்திருக்கும் பெரியார் கருத்து பலகை முன்பு தோழர்கள் ஒன்று கூடி ஜாதி மறுப்பு உறுதிமொழி ஏற்று ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு நாள் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து தாதகாப்பட்டி பேருந்து நிறுத்தம், பிரபாத் பேருந்து நிறுத்தம் மற்றும் பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை ஆகிய பகுதிகளில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களிடையே துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. சிறப்பாக அமையப் பெற்ற இந்த நிகழ்வில் தோழர்கள் பொதுமக்கள் இடையே சிறப்பாக உரையாடினர். 2000 துண்டறிக்கைகள் மக்களைச் சென்றடைந்தது.

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர கழகம் சார்பில் ஆனைமலை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு, கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில், நவம்பர் 26 அன்று காலை 9 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டது. ஆனைமலை வினோதினி சட்ட எரிப்பு நாள் உறுதிமொழி வாசிக்க தோழர்கள் உறுதிமொழி எடுத்தனர். அடுத்ததாக ஆனமலை முக்கோணத்தில், அரிதாசு தலைமையில் படம் திறந்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் ஆனைமலை வினோதினி, மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, அரிதாசு, ஆனந்த், நடராஜ், கணேஷ், சபரிகிரி, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Pin It