பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (2)

ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு - பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு. 1957 நவம்பர் 26இல் அரசியல் சட்டத்தில் ஜாதி இழிவு ஒழிப்புக்குத் தடையாக உள்ள உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2), 368 பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை தஞ்சையில் திராவிடர் கழக சிறப்பு மாநாட்டை 3.11.1957 அன்று கூட்டி பெரியார் அறிவித்தார்.

சரியாக 24 நாட்கள் இடைவெளியில் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார். பெரியார் தஞ்சை மாநாட்டுச் சிறப்பை தனது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“எனது 40 ஆண்டுகால வாழ்க்கையில் எத்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன்; சுயமரியாதை இயக்க கால முதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. அதுதான் ‘ரிக்கார்டு’. மாநாடு ஜமீன்தாரர்கள் 60-65 பேர் வந்திருந்தார்கள். எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந்தார்கள். நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் அரை பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும். இதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தாலும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்தது இல்லை” - என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசுகையில்,

“திராவிடர் கழகத் தனி மாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு, முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்பு மாநாடுதான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச் சார்பு சூழல் அப்படித்தான் உள்ளது. இந்த மாநாட்டின் பலன், வெற்றி அதுவாகத்தான் இருக்கும். கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக் கூடியது அல்ல. முன்பெல்லாம் சாதாரணம். ஆனால் இப்போது அது லேசில் கிடைப்பதாக இல்லை” - என்று பெரியார் குறிப்பிடுகிறார்.

“இராமன் எரிப்பு, பிள்ளையார் உடைப்புப் போராட்டங்களில் கடும் அடக்கு முறைகள் இல்லாமல் போய்விட்டது” என்று அதே உரையில் வருத்தப்படுகிறார்.

“ஜாதி இழிவு இன்னும் தொடர்வதை எப்படித் தட்டிக் கேட்காமல் இருக்க முடியும்?” என்று பெரியார் மாபெரும் கூட்டத்தை நோக்கி கேள்வி எழுப்பினார்.

“ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமை இல்லை என்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை; குத்தியதில்லை. ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை. கலவரமில்லாமல், நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி, அதன்படி நடப்பவன். வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால், சும்மா இருந்தால் நான் மடையன் தானே?

ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று, ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி, ஒரு நூறு பார்ப்பனர்களையாவது அதில் தூக்கிப் போட்டால் ஒழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்? (கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று இலட்சக்கணக் கானவர் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத் தானே வர வேண்டும்? அட பைத்தியக்காரா! நான் (மட்டும்) தானா சொல்கிறேன்? (நாங்கள் செய்வோம் என்று முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அதைத் தவிர வேறு வழி இல்லை என்றால் என்ன செய்வது? நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான். வெட்டுகிறேன் என்றான் என்றால், குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்று தானே எண்ண வேண்டியுள்ளது?” என்று பெரியார் கேட்டார்.

வன்முறை ஒரு துளியாவது நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த பெரியார், ‘தமிழின இழிவை’ இனியும் சகிக்க முடியாது என்பதை எதிரிகளுக்கு எச்சரிக்கவே அச்சுறுத்தும் ஆயுதத்தைப் பெரியார் பயன்படுத்தினார். தன்னை எவ்வளவு வருத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு வருத்திக் கொண்டு எதிரிகளை எச்சரித்து மிரட்டி இன விடுதலையை இழிவு ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதே பெரியாரின் தனித்துவமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது.

அரசியல் சட்டப் பிரிவுகளை ஒழிக்கும் போராட்டத்தை நோக்கி பெரியாரை நிர்ப்பந்தித்த நிகழ்வு மிகவும் முக்கியமானது. பெரியார் தலித் மக்களுக்காக என்ன செய்தார் என்ற ஒரு கேள்வி சில முகாம்களிலிருந்து அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகிறது. வரலாறு தெரியாமலோ அல்லது தெரிந்தும் பெரியாரை கொச்சைப் படுத்தும் நோக்கத்திலோ பேசுகிறவர்கள், பெரியாரின் சட்ட எரிப்புக் கிளர்ச்சிக்கு அவரை உந்தியதே முதுகுளத்தூரில் இமானுவேல் படுகொலையும் அதையொட்டி தேவர் ஜாதியினர் நடத்திய ஜாதிக் கலவரமும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் தஞ்சை மாநாட்டிலேயே இதை சுட்டிக் காட்டுகிறார்:

“முதுகுளத்தூரில் நூறு பேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினார்களே! என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு பேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்து விடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா?” என்று பெரியார் முதுகுளத்தூரில் ஜாதி வன்முறையை சுட்டிக் காட்டுகிறார்.

பெரியார் சட்ட எரிப்புப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகுதான் அடுத்த சில நாட்களிலேயே அரசியல் சட்டம் கொளுத்துவதும், காந்தி படம் போன்ற தேசத் தலைவர்களின் படத்தைக் கொளுத்துவதும் தேசிய அவமதிப்பு என்றும் அப்படிச் செய்கிறவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை என்றும், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வருகிறது. அப்போது ‘விடுதலை’ - இந்த சட்டத்தை எதிர்த்து என்ன எழுதியது? என்பதையும் பார்க்க வேண்டும்.

“முதுகுளத்தூர் கலவரத்தில் நூற்றுக்கணக்கான ஆதி திராவிடர்கள் உயிர்கள் பலியாயின. அவைகளைப் பற்றி ஒரு சொட்டுக் கண்ணீர்கூட சிந்தாத ஆரிய ஏடுகள் அனைத்தும், இன்று ஆரிய உயிருக்கு ஆபத்துக் கூட ஏற்படாத நிலைக்காக இந்த நாட்டையே கிடுகிடுக்க வைத்துவிட்டன. உயிர்களிலே எவ்வளவு வேற்றுமை பார்த்தீர்களா? ஆதித் திராவிடர்கள் எத்தனை ஆயிரம் போனாலும் சரி; அக்கிரகாரத்தின் உடம்பில் ஒரு துரும்பு விழக்கூட இடமிருக்கக் கூடாது. இதுதான் இன்று ஆரிய ஆதிக்கத்தின் விளைவு. அன்று நடைமுறையிலிருந்த மனுதர்மம் இன்றும் இதோ சர்வாதிகரம் செலுத்திக் கொண்டிருக்கிறது” என்று முதுகுளத்தூர் பிரச்சினையை முன் வைத்தே ‘விடுதலை’ ஏடு (5.11.1957) எழுதியது.

சட்டத்தை எரித்தால் 3 ஆண்டு சிறை என்ற சட்டம் வந்தவுடன், பெரியார் ‘விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கை தான் மிகவும் முக்கியமானது. இந்த அறிக்கைதான் பல்லாயிரக்கணக்கில் சட்டத்தை எரித்து சிறைக்குச் செல்ல தோழர்களின் உறுதிப்பாட்டைத் தூண்டிய அறிக்கை என்றும் கூறலாம்.

“நான்

மூன்று ஆண்டுகளோ,

பத்து ஆண்டுகளோ,

நாடு கடத்தலுக்கோ,

தூக்குக்கோ,

மற்றும் பிரிட்டிஷ்காரன், காங்கிரஸ் கிளர்ச்சியின் மீது கையாண்ட எந்தவிதமான கொடிய தீவிரமான அடக்குமுறைகளை நம் மீதும், கழகத்தின் மீதும், பிரயோகித்தாலும்கூட அவைகளுக்குப் பயப்பட்டு என் இலட்சியத்தையோ திட்டத்தையோ மாற்றிக் கொள்ளப் போவது இல்லை.

கழத் தோழர்களே! தீவிர இலட்சியவாதிகளே!

நீங்கள் மூன்று ஆண்டு தண்டனைக்கு பயந்து விட வேண்டிய தில்லை; பயந்து விட மாட்டீர்கள்.

சட்டத்தைப் பார்த்து பயந்து விட்டதாகப் பேர் வாங்காதீர்கள்.

ஆகவே, இஷ்டப்பட்டவர்கள் தஞ்சை மாநாட்டுத் தீர்மானத் துக்குப் பெயர் கொடுங்கள்.

- ஈ.வெ.ரா. (‘விடுதலை’ 11.11.1957)

அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்து கைது செய்யப்பட்ட தோழர்கள் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலம் என்ன? ஒவ்வொரு தோழரும் தர வேண்டிய வாக்குமூலத்தை பெரியார் - ‘விடுதலை’யில் வெளியிட்டார்.

“நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.”

இதைத்தான் ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழரும் நீதிமன்றத்தில் கூறி சிறை சென்றனர். ஒருவர்கூட பிணை கேட்கவில்லை. எவ்வளவோ அழுத்தங்கள் தந்தும் குடும்பத்து உறுப்பினர்கள் மரணித்த நிலையிலும் சிறையிலிருந்து வெளியே வர விரும்பவில்லை.

ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் பெரியார் தொண்டர்களின் தியாகத் தழும்புகள் ஏராளம் உண்டு. அந்த வரலாற்றுக்குள் போகாமல் அடக்குமுறையை பெரியார் எதிர்கொண்ட முறை பற்றி மட்டுமே நான் பேசுகிறேன்.

அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு வந்தபோது காமராசர் தான் முதல்வர். காமராசர் ஆட்சியை பார்ப்பனியத்துக்கு எதிரான பச்சைத் தமிழர் ஆட்சி என்று பெரியார் தீவிரமாக ஆதரித்துக் கொண்டிருந்த நேரம். பெரியார் இந்த அடக்குமுறைகளுக்காக தனது எதிர்ப்பை காமராசரை நோக்கியோ அவரது ஆட்சியை நோக்கியோ திருப்பிவிட விரும்பவில்லை. அது கூடாது என்பதில் பெரியார் உறுதி காட்டினார். முதன்மையான எதிரியான பார்ப்பனர்கள் நோக்கியே பெரியார் போராட்டத்தை திசை திருப்பாமல் நகர்த்தினார்.

பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறையை பெரியாரில்வாதிகளான நாம் பாடமாகக் கற்க வேண்டும். முதன்மையான எதிரியை நோக்கி நடத்தும் களப் போராட்டத்தில் ஒரு பிரச்சினையை எந்தப் பார்வையில் அணுக வேண்டும் என்பதற்கு பெரியார் வெளிச்சம் காட்டுகிறார்.

அது குறித்து பெரியார் என்ன எழுதினார்?

“அரசமைப்புச் சட்டம் முதலியன கொளுத்துவது பற்றி சென்னை அரசாங்கம் செய்திருக்கும் புதிய சட்டம் விஷயமாய் பொது மக்கள் சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. மற்றும் என் மீது கடுந்தண்டனைக்கு ஏற்ற வழக்கு தொடுத்திருப்பது பற்றியும் பொது மக்கள் கவலைப்பட வேண்டிய தில்லை.

இவைகள் எல்லாம் பார்ப்பனர்களால் எய்யப்படும் அம்புகளே தவிர, சென்னை அரசாங்க மந்திரிகளாகிய அம்புகளுக்குச் சிறிதும் சம்பந்தப்படாதவைகளேயாகும். அன்றியும் பார்ப்பனர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதற்கும், வடநாட்டான் ஆதிக்க ஆட்சியிலிருந்து (இந்திய யூனியனிலிருந்து) பிரிந்து முழு சுதந்திரத் தமிழ்நாடு ஆட்சி பெற்றாக வேண்டும் என்பதற்கும் இவை (பார்ப்பனர் நடத்தைகளும் அவர்களுக்கு வடநாட்டான் ஆதரவுகளும்) சரியான காரணங்களாகும். அதற்காகத் துரிதமாகவும், தீவிரமாகவும் கிளர்ச்சி செய்யவும், இது வலிமை மிக்க தூண்டுதலாகும். சென்னை அரசாங்க மந்திரிகள் நம் மக்களின் கல்வி சம்பந்தமாக எடுத்துக் கொண்டிருக்கிற முயற்சிகள் நாம் பாராட்டத்தக்கதும், நன்றி செலுத்தத் தக்கவையும் ஆகும். இம்முயற்சி பார்ப்பனர்களுக்குப் பெரும் கேடானதால் இந்த பார்ப்பனர்கள் என் மீது கொண்டுள்ள ஆத்திரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும்விட, இன்றைய மந்திரி சபை மீது கொண்டுள்ள ஆத்திரமும், பழி வாங்கும் எண்ணமுந்தான் பேயாட்டமாக ஆடி இப்படிப்பட்ட தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஆதலால், பொது மக்கள் இச்சம்பவங்களுக்காக இன்றைய மந்திரி சபையிடமோ, குறிப்பாக திரு.காமராசரிடமோ எவ்விதமான அதிருப்தியும் காட்டவோ கொள்ளவோ வேண்டியதில்லை. (‘விடுதலை’ 16.11.1957) - என்று எழுதினார்.

அடக்குமுறைகளை தனது போராட்டத்துக்கான உந்து சக்தியாக்கிக் கொண்டு ஆர்வத்தோடு அவற்றை வரவேற்றார் பெரியார். வரலாற்றில் பார்ப்பன எதிர்ப்புக் களத்தில் பெரியார் முன்னேறிச் செல்ல முயன்றதற்கு பெரியாரின் இந்த நுட்பமான அணுகுமுறைகளே மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.

(தொடரும்)

(22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.)

Pin It