பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து மத, இறை மறுப்பாளராக இருந்தார் என்பதற்காக இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் வெறிகொண்ட அவரது இஸ்லாமிய நண்பர்களே பாரூக்கை படுகொலை செய்து காவல்துறையிடம் சரணடைந் துள்ளார்கள். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய கலை இலக்கியவாதிகள் இந்த படுகொலையை கண்டித்துள்ளனர். ‘தமிழ்இந்து’ நாளேடு, தமிழகத்தில் உருவாகி வரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்று தலையங்கம் தீட்டியது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு இலக்கிய வாதிகளின் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி,  இந்திய தவ்ஹீத், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையை பேசியதற்காக 31 வயது இளைஞர் ஒருவரை இழந்து நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் பாரூக்கை இழந்த நிலையிலும் இஸ்லாமியர் களுடனான உறவு எப்போதும் நீடிக்கும் என்றும், பார்ப்பன - ஜாதிய - இந்துத்துவா கொள்கைகளே திராவிடர் விடுதலைக் கழகத்தின் முதன்மையான எதிரிகள் என்றும், திராவிடர் விடுதலைக் கழகம் தெளிவாக அறிவித்தது. இந்த நிலையில் ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’  (டி.என்.டி.ஜே) என்ற அமைப்பு பெரியாரையும் பெரியார் இயக்கங்களை யும் கடுமையான வார்த்தைகளால் வசை மொழிகளை அந்த இயக்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் எம்.எஸ். சையது இப்ராகிம் என்பவர் (மாநில தணிக்கைக் குழு தலைவர்) ‘தலைமை ஜூமுஆ, மண்ணடி’ அலுவலகத்திலிருந்து காணொளியாக அந்த அமைப்பு பரப்பி வருகிறது. அதில் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் பயங்கரவாதிகளைப் போலவே கருப்புச் சட்டைப் பெரியார் இயக்கத்தினரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளே என்ற கருத்தில் பேசி இருந்தார். அதே கருத்தை அந்த அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ‘உணர்வு’ ஏடும், ‘காவிச் சட்டையும் - கருப்புச் சட்டையும் ஒன்றே’ என்று பெரியார் இயக்கத்தின்மீது ‘வசை’ மொழிகளை அள்ளி வீசியுள்ளது. அந்த பெட்டிச் செய்தியை அப்படியே கீழே தந்துள்ளோம்.

“நாத்திகர் ஃபாரூக் என்பவரது படுகொலையின் மூலம் ஒரு உண்மையை அல்லாஹ் இந்த உலகத்திற்கு பளிச்சிட வைத்துள்ளான்.

இஸ்லாத்தை அழிக்கத் துடிப்பவர்கள் காவி பயங்கரவாதிகள் மட்டும் தான் என்றும், இவர்களை எதிர்க்கும் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருப்பவர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் நெருக்கமானவர்கள் என்றும் சிலர் தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தனர்.

ஆனால் அது தவறு.

காவி பயங்கரவாதிகள் எப்படி இஸ்லாத்தை அழிக்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றார்களோ அது போலவே இந்த கருப்புச் சட்டை பயங்கரவாதிகளும் இஸ்லாத்தை அழிக்க சமயம் பார்த்துக் காத்துக் கொண்டுதான் உள்ளார்கள் என்பது பாரூக் என்பவரது படுகொலையின் வாயிலாக வெளியுல கிற்கு வெட்ட வெளிச்சமாக்கப்பட்டுள்ளது.

கடவுள் மறுப்புக் கொள்கையில் இருக்கும் கருப்புச் சட்டை மூடர்கள் இந்த விஷயத்தில் இஸ்லாத்தை எந்த அளவிற்கு இழிவாக விமர்சித்தார்கள் என்பதையும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக எந்த அளவிற்கு மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு இறங்கி சித்தரித்து அவதூறு பரப்பினார்கள் என்பதும் இந்த நிகழ்வின் வாயிலாக உள்ளங்கை நெல்லிக்கனியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு தெரிய வந்துள்ளது.

காவிச் சட்டையும், கருப்புச் சட்டையும் ஒன்றுதான்; நிறம் தான் வேறு.

இதன் மூலம் இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் விஷயத்தில் காவி பயங்கரவாதிகளும், கருப்புச் சட்டை மூடர்களும் சமமானவர்களே என்பதை அப்பாவி முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் அறிய வைத்து விட்டான்; அதற்காக படைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

காவி பயங்கரவாதிகளிடம் கவனமாக இருப்பது போல, கருப்புச் சட்டை மூடர்களிடமும் கவனமாக இருப்போம்”

- என்று எழுதியிருக்கிறது ‘உணர்வு’ ஏடு. இந்த ‘வசை மொழி’களுக்கு நாம் எதிர்வினையாற்ற விரும்பவில்லை.

Pin It