கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சிங்னாபூர் எனும் ஊரில் சனி பகவான் கோயிலின் கர்ப்பகிரகத்தில் நுழையும் உரிமையைப் பெண்கள் போராடி பெற்றுள்ளனர். இது மகத்தான வெற்றி. கோயில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதை மறுத்து ‘பூமாதா பெண்கள் படை’ என்ற போராட்ட அமைப்பை பெண்கள் உருவாக்கினார்கள். துருப்தி தேசாய் என்பவர் தலைமையில் 3 மாத காலமாக பெண்கள் போராடினார்கள். பம்பாய் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நுழைவு பெண் களின் அடிப்படை உரிமை என்றும், ஆண் களுக்கு உள்ள அத்தனை உரிமையும் பெண் களுக்கும் உண்டு என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகம், கர்ப்ப கிரகத்துக்குள் இனி ஆண்களுக்கும் அனுமதி இல்லை என்று அறிவித்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நோக்கத்தையே திசை திருப்பிய இந்த முடிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என்று அஞ்சிய கோயில் நிர்வாகம், பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு, பெண்களை ‘கருவறை’க்குள் நுழைய அனுமதித்தது.

பெண்கள் போராட்டக் குழுவின் தலைவர் தேசாய், வருவதற்கு முன்பே அந்த அமைப்பிலிருந்து விலகி தனியாகப் போராடிய பிரியா ஜக்தப், புஷ்பா கேவங்கர் என்ற இரண்டு பெண்கள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைந்து ‘சனி பகவான்’ தலையில் எண்ணெய் ஊற்றி வழிபாடு நடத்தினர். தடுப்புப் பலகைகளை ஏறி குதித்து 250 ஆண் பக்தர்களும் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்தனர். மகாராஷ்டிராவில் இந்த புரட்சி நடந்த நாள் புத்தாண்டு நாள். ‘குடிபத்வா’ என்று இதற்குப் பெயர். இதேபோல் நாசிக்கில் திரிம்பகேசுவர் மற்றும் மகாலட்சுமி கோயில்களிலும் கோலாப்பூரிலுள்ள கோயிலிலும் பெண்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்தக் கோயில்களின் நிர்வாகங்களும் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வைச் சார்ந்த ஃபெட்நாவிஸ் என்ற பார்ப்பனர் முதல்வராக இருக்கிறார். அவர் இந்த முடிவை வரவேற்றுள்ளதோடு வழிபாட்டில் பாகுபாடு கூடாது என்று கூறியுள்ளார். முதல்வரின் துணைவியார் அம்ருதா, “இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் கொண் டது. ஆண்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு என்ற செய்தியை உரத்துச் சொல்லியிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த 400 ஆண்டு காலமாக ‘சனி பகவான்’ கோயில் கர்ப்ப கிரகத்துக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. பம்பாயில் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் நுழையும் உரிமையில் ஜாதி பாகுபாடு கிடையாது. ஆண்-பெண் பாகுபாடு இருந்ததும் இப்போது தகர்க்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டுக் கோயில்களின் கர்ப்பகிரகங்களில் ‘பிராமணர்’ மட்டுமே நுழைய முடியும் என்ற நிலை நீடித்து வருகிறது. ‘சூத்திரர்கள்’ நுழைய முடியாது; இது மிகப் பெரும் இழிவாகும். ‘பிராமண’ மேலாண்மையும், ‘சூத்திர’ இழிவும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் திருநள்ளாறு என்ற ஊரில் ‘சனி பகவான்’ கோயில் இருக்கிறது. இந்தியா முழுவதுமிருந்தும் அமைச்சர்கள், முதல்வர்கள் கூட இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். ஆனால், கர்ப்பகிரகத்துக்கு வெளியே தான் அவர்கள் நிற்க முடியும். ‘பிராமண’ அர்ச்சகர்கள் மட்டுமே கர்ப்பகிரகத்துக்குள் வழிபாடு செய்ய முடியும். மராட்டிய ‘சனி பகவான்’ ஜாதி-இனப் பாகுபாடு இன்றி கர்ப்பகிரகத்துக்குள் அனுமதிக்கும்போது ‘திருநள்ளாறு சனிபகவான்’ மட்டும் ‘பிராமணர்கள்’ மட்டுமே தன்னிடம் நெருங்கி பூஜை செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறானா என்று தன்மானமுள்ள பக்தர்கள் கேட்க வேண்டும். ‘ஆகமம்’, ‘பழக்க வழக்கம்’ என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு, தமிழ்நாட்டின் கோயில் ‘கருவறை’க்குள் ‘சூத்திரன்’ என்ற இழிவு தொடர்ந்து வருகிறது. மகாராஷ்டிராவைப் போல் இனி தமிழ்நாட்டு கோயில்களிலும் ‘கர்ப்பகிரகத்துக்குள்’ வெகு மக்கள் நுழையும் காலம் விரைவில் வந்துதான் தீரும்!