பா.ஜ.க.வில் உறுப்பினராகி முடிந்து விட்டதா? உடனடியாக அதிரடியாக எதையாவது செய்து காட்டியாக வேண்டும்! அப்போதுதான் ஒழுங்காகவே செய்கிறார்கள் என்று கட்சித் தலைமை நம்பும். மத நம்பிக்கைகள்கூட ஒரு பக்கம் கிடக்கட்டும்; அந்த நம்பிக்கை யாருக்கு வேணும்? கட்சியின் நம்பிக்கைதான் முக்கியம். சில நேரங்களில் இந்த ‘அதிரடிகள்’ குழிபறித்து விடுவதும் உண்டு.

‘சாரணர் தேர்தல் புகழ்’ - எச். ராஜாவைப் பாருங்கள்! அவர் பெரியாரை, திராவிட இயக்கத்தினரை, வைரமுத்துவை, கனிமொழியை - இன்னும் பெயர் நினைவுக்கு வரவில்லை; அத்தனை பேரையும் அதிரடியாக ‘மனு சாஸ்திர’ நடையில் (அதாவது எழுத்தில் எழுத முடியாத வகையில்) தாக்கினார். வாயைத் திறந்தாலே ‘ஆன்டி இந்தியன்’ என்பார். இப்போது - அதிரடியாகக் காணாமல் போய் விட்டார். ஏற்கனவே இருந்த பதவியும் பறி போனது!

அதேபோல குஷ்புவும் அதிரடியில் இறங்கினார். ‘திருமாவளவனைக் கைது செய்’ என்று சிதம்பரம்  நோக்கி சுமார் 12,000 தொண்டர்களுடன் (அதாவது ஒரு தொண்டர் ஆயிரம் பேருக்கு சமம்) கிழக்கு கடற்கரை வழியாக காரில் ‘யாத்திரைப் பயணம்’ புறப்பட்டார்.

சிதம்பரம் போய்ச் சேர  வேண்டியவரை புறப்பட்ட 30 நிமிடங்களிலே காவல்துறை தடுத்து, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஓர் ஓய்வு விடுதியில் தங்க வைத்து, பிறகு மாலை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. குஷ்பு எப்போது எந்நேரத்தில் புறப்படுகிறார் என்பதோ, காவல்துறை, எந்த இடத்தில் அதிரடியாக தடுக்கும் என்பதோ, எங்கே தங்க வைக்க ஏற்கனவே ஏற்பாடுகள் அதிரடியாக செய்து முடித்தது என்பதோ ‘அதிரடி’யாக களமிறங்கிய குஷ்புக்கும் தெரியாது; காவல்துறைக்கும் தெரியாது என்று நம்புவோமாக!

‘நான் மனு சாஸ்திரத்தை மதவாத அரசியலை ஆதரிக்கும் பெரியாரிஸ்ட்’ என்று அதிரடியாக அறிவிக்கிறார் குஷ்பு! அடுத்தகட்டமாக ‘நான் பா.ஜ.க.வை, மோடியை எதிர்க்கும் தீவிர பா.ஜ.க. உறுப்பினர்’ என்ற அதிரடி அறிவிப்பை எப்போது நாட்டுக்குக் கூறப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது.

அடுத்த கட்டமாக பா.ஜ.க.வின் தலைவர் முருகன், பாதயாத்திரைக்கு அதிரடியாக தயாராகி வருகிறாராம். அதற்கு ‘வேல் யாத்திரை’ என்று பெயர். தமிழ்க் கடவுள் முருகனின் சின்னத்தோடு ‘வேல் வேல்; முருகன் வேல்; ஒழிக ஒழிக தி.மு.க. ஒழிக!” என்ற  பக்திப் பரவச முழக்கங்களோடு நடக்கப் போகிறது இந்த யாத்திரை!

யாத்திரை துவங்கும் இடம் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி! பா.ஜ.க.வின் தலைவர் என்ற அதிகாரத்துடன் முருகன் கர்ப்பகிரகத்துக்குள் அதிரடியாக நுழைந்து, ‘தமிழில் உன்னை வழிபட்டு தமிழ்நாட்டைக் காப்பாற்றப் புறப்படுகிறேன் முருகா’ என்று வேண்டு வாரா, என்று கேட்கிறார் தமிழ்க் கடவுளை நேசிக்கும் தமிழனான ஒரு முருக பக்தர். இது பா.ஜ.க.. முருகனுக்கும் திருத்தணி முருகனுக்கும் இடையிலான ஒரு பிரச்சினை.

ஆனால், ஒன்று மட்டும் நமக்குத் தெரியும். இந்த வேல் யாத்திரையில் ஒவ்வொருவர் கையிலும் முருகன் வேல் இருக்கும். யாத்திரை வாசிகள் தாமரைப் படம் போட்ட துண்டுடன் பக்தி கோலத்துடன் காட்சியளிப்பார்கள்.  மக்களிடம் பக்திப் பரவசத்தை உருவாக்க நீண்ட ஆன்மிக சொற் பொழிவுகளை நிகழ்த்தக் கூடும். சொற்பொழிவுகள் எப்படி இருக்கும்?

“தமிழக பா.ஜக. பலமடைந்து வருகிறது முருகா; அடுத்தடுத்து இன்னும் பல நடிகர்கள் இணையப் போகிறார்கள் முருகா; இனி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கனவுகூட காண முடியாது முருகா. தி.மு.க. கூட்டணி உடையப் போகிறது முருகா; காங்கிரஸ் கட்சி, மிரண்டு போய் நிற்கிறது முருகா; கருப்பர் கூட்டத்தைச் சார்ந்த தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேர் வழிகள்தான் தி.மு.க. கூட்டணியையே பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் முருகா; தி.மு.க.வோ சமூக நீதி, இடஒதுக்கீடு, மக்கள் பிரச்சினை என்றெல்லாம் பக்தியே இல்லாத அற்பப் பிரச்சினைகளைப் பேசி அரசியல் நடத்துகிறது முருகா; நாங்கள் மட்டுமே தி.மு.க.வையும் கூட்டணியையும் தோற்கடிக்க பக்தி உலா வருகிறோம் முருகா.” அரோகரா, முருகனுக்கு அரோகரா, தி.மு.க. ஒழிய வரந் தருவாய் முருகா என்ற முழக்கத்துடன் ஆன்மிக ‘உபந்நியாசத்தை’ நிறைவு செய்வார்கள்.

யார் யாரோ ‘அதிரடி’களை அக்கட்சியில் நிகழ்த்தும் போது கட்சித் தலைவருக்கு மட்டும் அந்த உரிமை இல்லாமல் போய்விடுமா?

போடு; கந்தனுக்கு வேல்! வேல்! பா.ஜ.கவுக்கு வேல்! வேல்! அரோகரா! 

- கோடங்குடி மாரிமுத்து

Pin It