நாட்டின் கனிம வளங்களை சுரண்டி கொழுக்கும் வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒன்றிய மோடி ஆட்சி முறைகேடாக சலுகைகளை வழங்கி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் முழு ஆதரவோடு நாட்டை பார்ப்பனியமாக்குவதே ஒன்றிய ஆட்சியின் இலட்சியமாக இருக்கிறது.

உச்சநீதிமன்றம் வேதாந்த குழுமத்துக்காக கோவாவில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி குறுக்கு வழியில் சட்டத்தை மீறி உதவிடும் முயற்சிகளை வன்மையாகக் கண்டித்துள்ளது.

2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிலக்கரி தோண்டி எடுக்கும் சுரங்க ஒப்புதலை இரத்து செய்தது. பா.ஜ.க. ஆட்சி இந்த ஒப்பந்தங்களை வழங்கி இருக்கிறது. கோவாவின் சுற்றுச் சூழலுக்கு பேராபத்தை உருவாக்கக்கூடிய திட்டம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 102 பக்க தீர்ப்பில் கூறியிருந்தனர்.

ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் நடந்த முறைகேடுகளையும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது. இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி லோக்கூர் 2018 டிசம்பர் 30 தேதியிலும், நீதிபதி குப்தா, 2020 மே 6ஆம் தேதியிலும் ஓய்வு பெற்றனர். இவர்கள் பதவி ஓய்வுக்காகக் காத்திருந்து, அதற்குப் பிறகு கோவா பா.ஜ.க. ஆட்சி 2020இல் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்களை தாக்கள் செய்தது. இந்த முறைகேட்டை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி. ஒய். சந்திர சரத், எம்.ஆர். ஷா ஆகியோரடங்கிய அமர்வு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து கோவா ஆட்சியை கடுமையாகக் கண்டித்துள்ளது.

இதேபோல் நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதிமன்றம் மூவர் அமர்வில் இரு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அனில் தவே என்ற பார்ப்பன நீதிபதி மட்டும் நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதினார். எதிராக தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகள் ஓய்வுக்காகக் காத்திருந்து பிறகு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய அனில் தவே நீதிபதி அமர்வுக்கு மூன்று ஆண்டு கழித்து மறுசீராய்வு மனுவை ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி மருத்துவக் கவுன்சில் வழியாக மனுதாக்கல் செய்து தீர்ப்புக்கு தடை வாங்கி இப்போது நீட் தேர்வை நடத்தி வருகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It