மதுரை திருமங்கலம் அருகே டி. குன்னத்தூர் என்ற ஒரு கிராமம். இங்கே 12 ஏக்கர் நிலத்தில் புதிய இந்து கோயில் ஒன்று ‘எழுந்துள்ளது’; அதாவது கட்டப்பட்டிருக்கிறது.
கோயிலை ‘எழுப்பியவர்’ உதயகுமார் என்ற அமைச்சர். சேர, சோழ, பாண்டியர்கள் தான் கோயில் கட்ட வேண்டுமா, என்ற மரபை உடைத்திருக்கிறார். அந்த காலத்து மன்னர்களுக்கு நாங்கள் குறைவானவர்கள் அல்ல; அவர்களைப் போலவே மக்களைச் சுரண்டிய பணம், காசுகள் எங்களிடமும் இருக்கிறது என்று காட்டியிருக்கிறார். சபாஷ், சரியான வீரம்!
கோயிலுக்குள் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட தெய்வங்கள், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா! இந்த தெய்வங்களுக்கு உலகிலேயே எங்கும் இல்லாத ஒரு ‘மகிமை’ உண்டு.
மக்கள் நேரிலேயே பார்த்த கடவுளும் பழகிய கடவுளும் குடியிருக்கும் கோயில் இது ஒன்று தான்! இது ஒன்று மட்டுமே தான் என்பது நிச்சயம் என்கிறார், ஒரு பெரியாரிஸ்ட்.
இன்னும் ஏராளமான சிறப்புகளும் உண்டு. கோயில் ‘பிரதிஷ்டை’ செய்யப்பட்ட ‘தெய்வச் சிலை’களுக்கு வேத பண்டிதர்கள் மந்திரங்களை ஓதினால்தான் அது கடவுளாகும்.
பிறகு கோபுரத்தில் அதே வேத புரோகிதர்கள் ‘கும்பாபிஷேகம்’ நடத்தி, தீட்டுக் கழித்து, சடங்குகள் நடத்தி முடித்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்! அதுவும் கர்ப்பக் கிரகத்துக்கு வெளியே வரை தான்! இந்த கோயில் திறப்புக்கு புரோகிதர்களின் கும்பாபிஷேகம், சடங்குகள் இல்லை.
இதற்கு ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.சும் ‘ரிமோட்’ கண்ட்ரோலை அழுத்தி கோயிலைத் திறந்து விட்டார்கள். மந்திர சக்தி தேவை இல்லை. ‘ரிமோட்’ இயங்க ‘பேட்டரி’ ‘சக்தி’ இருந்தாலே போதும்!
“அய்யோ! அய்யோ! பிரதிஷ்டை செய்யப்படாத சிலைகளை தெய்வங்கள் என்கிறார்களே! மானுடர் களாக பூமியில் வாழ்ந்தவர்களை கடவுளாக்கு கிறார்களே! இவையெல்லாம் கோயில் சாஸ்திரத்துக்கு விரோத மாயிற்றே; எந்த ஆகமத்திலும் இப்படி ஒரு கோயில் பற்றிக் கூறவே இல்லையே” என்று வேத பண்டிதர்கள் - சங்கராச் சாரிகள் - ‘ஆச்சார சீலர்கள்’ ஒரு ‘முணுமுணுப்பைக்’ கூட காட்டவில்லை! ‘கப்சிப்’! காட்டாதது மட்டுமல்ல; எங்களுக்கு வரவேண்டியது வந்தால் போதும் என்று ‘யாகம்’ நடத்த வந்து விட்டார்கள். ‘வேத பண்டித சிகாமணிகள்’ யாக சாலையில் வேத மந்திரங்கள் ஓத ‘பழனியும் - பன்னீரும்’ பவ்வியமாக அதில் கலந்து கொண்டார்களாம்.
‘கோ’ மாதா பூஜை நடத்த 120 ‘பிராமணர்’களுக்கு பசு தானம் செய்திருக்கிறார், முதலமைச்சர் பழனிச்சாமி! ‘பாவம்’ தொலைய வேண்டுமே! பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு விடைபெற்றுக் கொண்டது வேத குலம்.
மற்றபடி ‘அர்ச்சனை’களை, ‘பழனியும்-பன்னீரும்’ சமஸ்கிருதம் கலக்காத தூய தமிழிலேயே ஓதி முடித்திருக்கிறார்கள். ‘அர்ச்சனை’ கடவுள்களுக்கு அல்ல; தி.மு.க.வுக்கும் ஸ்டாலினுக்கும் எதிராகத்தான்!
“ஸ்டாலின் வெற்றி பெறவே முடியாது; அ.தி.மு.க. தொண்டன் தடுத்து நிறுத்துவான்; 10 ஆண்டுகளாக காய்ந்த மாடுபோல் தி.மு.க. உள்ளது” என்றெல்லாம் ‘நாமவாளி’ அர்ச்சனையை தேர்தல் பயபக்தியோடு செந்தமிழிலே ஓதி கோயிலுக்குள் ‘அரசியல்’ நடத்தியிருக்கிறார்கள்.
அது மட்டுமா? ‘கடவுள்’ எது என்பதற்கு விளக்கமே தந்து விட்டார்கள்.
“நாட்டு மக்களுக்கு நற்பணி புரிந்து, மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் தான் உண்மையான தெய்வங்கள்” என்று பழனிச்சாமி பேசியிருக்கிறார்.
‘தெய்வ சக்தி மட்டும் போதாது; மக்கள் சக்தியும் வேண்டும்; இதுதான் அ.இ.அ.தி.மு.க. தெய்வீகக் கொள்கை’ என்று பன்னீர் செல்வம் தெளிவான ‘ஆன்மிக’ விளக்கத்தைக் கூறிவிட்டார். இதன் மூலம் எதைச் சொல்ல வருகிறார்கள்?
“கோயிலுக்குள் இருக்கும் ‘இந்து’த் ‘தெய்வங்கள்’ நாட்டு மக்களுக்கு நற்பணிகள் செய்யாத போது எப்படி தெய்வமாக முடியும்? என்கிறார் முதலமைச்சர். மக்கள் சக்தி அவைகளுக்கு கிடையாது; கடவுள் சக்தி இருந்தால் மட்டும் கடவுளாகிட முடியாது என்கிறார் துணை முதலமைச்சர்.
நாட்டை ஆளும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பழுத்த ‘இந்து’க்களாக இருந்து கொண்டே இந்துக் கடவுள்களை இப்படி அவமதிக் கிறார்களே!” என்று ஆன்மிகங்களோ, உண்மை ஆஸ்திகர் களோ கொதித்ததாகத் தெரியவில்லை; பரவாயில்லை!
பக்திக்குள்ளும் ‘அரசியலுக்காக’ பக்தி உடைப்பு நடக்கிறது. பார்ப்பன ‘தினமலர்’ ஏடு மட்டும் கடுமையாகக் கண்டித்து புலம்பித் தீர்த்துள்ளது.
பெரியார் அங்கேயும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார் என்கிறார் ஒரு கருப்புச் சட்டைக்காரர், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு!
கோயில்கள், மனிதர்களுக்கு மட்டும் தான்; கடவுள் சிலைகளுக்கு அல்ல என்பதுகூட பகுத்தறிவு தானே?
- கோடங்குடி மாரிமுத்து