சென்னையில் 1909 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி மெட்ராஸ் நான் பிராமின்ஸ் அசோஸியேசன்’ (The Madras Non-Bhramins Association) - எனும் அமைப்பை, ‘நான் பிராமின் கூட்டத்தாரென்றால் யாவர்?’ – என்ற தலைப்பில் பின்வருமாறு, பண்டிதமணி அயோத்திதாசர் விமர்சனம் செய்துள்ளார்.

“தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பார்கள் கீழ்ச் சாதி, மேல் சாதி என்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். சாதி பேதம் வைத்துள்ளவர்கள் யாவரும் பிராமணக் கூட்டத்தவர்களையே சேர்ந்தவர்களாவர். சைவம், வைணவம், வேதாந்தம் என்னும் சமயங்களை பிராமணர்கள் ஏற்படுத்தினர். அச்சமயங்களை எவரெவர் தழுவி நிற்கின்றனரோ, அவர்களும் பிராமணச் சிந்தனையுடையவர்களேயாவர். சாதி ஆசாரங்களையுந் தழுவிக்கொண்டே, ‘நான் பிராமின்ஸ்’ என்று சங்கம் கூடியிருக்கின்றனரா ? அல்லது சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாயிருக்குமாயின் அவர்களுடன் சேர்ந்துழைப்பதற்கு அனந்தம் (அனேகம்) பேர் காத்திருக்கின்றார்கள். பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும், சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு ‘நான் பிராமின்ஸ்’ (Non-Bhramins) எனக் கூறுவது வீணேயாகும்”.

ayothidasar 340“உள் சீர்திருத்தமென்றும், ராஜ்ய சீர்திருத்தமென்றும் இருவகை உண்டு. அவற்றுள் சாதி, சமய, சம்பந்தமானவைகள் யாவும் உட்சீர்திருத்தங்கள் என்றும், மற்றவை ராஜாங்க சீர்திருத்தங்கள் என்றும் கூறி யாங்கள் ராஜாங்க சம்பந்தத்தில் நான் பிராமின்ஸ் என வெளிவந்தோர் என்பாராயின் இந்துக்கள், முகமதியர், பௌத்தர், கிறிஸ்தவர்களெனும் பிரிவினைகளுக்கு மத சம்பந்தங்களே காரணமாயிருப்பது கொண்டு இந்துக்கள் என வெளிவந்துள்ளோர் ராஜ்ய காரியங்களிலும் நான் பிராமின்ஸ் எனப் பிடித்துக் கொள்வதற்கு ஆதாரமில்லை”.

“ஆதலின் இவற்றைக் கண்ணுறும் அன்பர்கள் ஒவ்வொருவரும் தற்காலம் தோன்றியிருக்கும் நான் பிராமின்ஸ் என்போர் யாவர் என்றும், அவர்கள் கூட்டத்தின் கருத்துக்கள் யாது என்றும் தெரிவிக்கும்படி கூறுகிறோம்”.

பார்ப்பனீயத்தை அரசியல், சமூக பண்பாட்டுக் களங்களில் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழித்திட ஆர்த்தெழுந்த அயோத்திதாசரின் மேற்கண்ட போர்க்குரல் அனைவரையும் சிந்திக்க வைக்கக்கூடியதாகும்.

அயோத்திதாசர், சென்னை தேனாம்பேட்டையில் 1845 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள் கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய இயற்பெயர் காத்தவராயன் ஆகும். இளமையில் தமிழ் மூதறிஞர் வி.அயோத்திதாச கவிராஜ பண்டிதரிடம் கற்ற கல்வி அவரைப் பேரறிஞராகவும், சிந்தனையாளராகவும், தருக்கநெறி வல்லுநராகவும் விளங்க வைத்தது. ஆசிரியரின் நினைவாகத் தன் பெயரை அயோத்திதாசர் என வரித்துக் கொண்டார்.

எல்லீஸ் துரை என்ற ஆங்கிலேய ஆட்சியாளர், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்குக் காரணமாக இருந்தவர் அயோத்திதாசரின் தந்தை கந்தசாமி ஆவார். அவர்தான் எல்லீஸ் துரையிடம் திருக்குறளை அறிமுகப்படுத்தி, விளங்கவைத்து, ஈடுபாடு கொள்ளச் செய்தவர். அதன் விளைவாக எல்லீஸ் துரையால் திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. திருவள்ளுவரின் உருவம் பொறித்த நாணயமும் வெளியிடப்பட்டது.

பிரபந்தங்களையும், திருமுறைகளையும், நபியின் வழிமுறைகளையும், சமண, பௌத்த நூல்களையும், தமிழ் இலக்கியங்களையும் கற்று புலமை உடையவராக விளங்கினார்.

விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய்கள், இந்திரா தேச சரித்திரம் (இந்திய தேச சரித்திரம்), புத்த மார்க்க வினா-விடை, பூர்வத்தமிழொளி (அ) ஆதி வேதம், திருவள்ளுவர் வரலாறு, விசேச சங்கைத் தெளிவு, விவேக விளக்கம், தென்னிந்திரர் தேசப் புத்தகம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். மேலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி ஞானம் போன்ற நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

சென்னை இராயப்பேட்டையில் இருந்து 19.06.1907 ஆம் நாள் முதல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற வார இதழைப் பண்டிதமணி அயோத்திதாசர் வெளியிட்டார். ‘ஒரு பைசா தமிழன்’ என்று சற்று வித்தியாசமாகப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், பத்திரிக்கை ஒரு கோடிப் பொன் மதிப்பிற்குரியது என்பதை முதல் இதழிலேயே குறிப்பிட்டுள்ளார்.

இந்த இதழ் ஓராண்டிற்குப் பிறகு ‘ஒரு பைசா’ என்பது எடுக்கப்பெற்று வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘தமிழன்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இயல்பாகவே அயோத்திதாசரிடம் இருந்த தமிழ் உணர்வு ‘தமிழன்’ என்று இதழுக்குப் பெயர் வைக்கத் தூண்டியது.

தமிழனின் உள்ளடக்கத்திலும், தமிழ் நடையிலும் அயோத்திதாசரின் ‘பண்டிதத்தனம்’ முக்கிய ஆளுமையாக அமைந்திருந்தது.

‘நன்மெய்க் கடைப்பிடி’ எனும் மகுட வாக்கியம் அமைய, ‘தமிழன்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயர் பொறிக்கப்பட்டு வெளி வந்தது.

தமிழன் இதழில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் போன்றவைகளிலும், தொழில், கல்வி, விவசாயம், காவல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்பதை முன் வைத்தார்.

               பௌத்தக் கருத்துக்களைத் ‘தமிழன்’ இதழ் மூலம் பரப்பினார். பௌத்த மதத்தை அழிக்க ஆரிய வேதங்களும், சாத்திரங்களும், புராணங்களும் செய்த சூழ்ச்சிகளையும், பிராமணர்களின் ஆதிக்கங்களை எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் தீவிரமாக எழுதினார். மேலும், பகுத்தறிவுக் கருத்துக்களையும் இதழ் தோறும் எழுதிவந்தார்.

               சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலரின் சொற்பொழிவுகளைத் தமிழன் இதழில் கட்டுரைகளாக வெளியிட்டார் அயோத்திதாசர்.

               தமிழன் இதழில் சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், அரசியல், சாதி, மதம் ஆகியன குறித்து துணிந்து தனது கருத்துக்களை எழுதினார். தனது எழுத்தின் மூலம் மக்களைச் சிந்திக்கத் தூண்டினார்.

               தமிழன் இதழ் இலங்கை, பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

               தமிழ் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியது அயோத்திதாசனாரின் ‘தமிழன்’ இதழாகும்.

               தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர்கள் அனைவரும் தமிழன் இதழை ஆதரிக்க வேண்டுமெனக் கோரினார் அயோத்திதாசர்.

               மேலும், ‘இத்தமிழ் வழங்குந் தென்னிந்தியாவிலோ சாதி நாற்றமென்னும் கசு மாலத்தால் (அருவருப்பு) தங்கள் சாதியார் மட்டிலும் வாசிக்கலாம். ஏனைய சாதியோர் வாசிக்கப்படாதென்றும் பொறாமையும், பொச்சரிப்பும் வாய்ந்தவர்களாதலின் பொது நலங்கருதி பத்திரிக்கைகளை வாசிக்கப் பிரியமில்லாமல் விட்டு விடுகிறார்கள்’- எனத் தமிழ் இதழியல் வளர்ச்சியில் சாதியுணர்ச்சியின் காரணமாக ஏற்படும் சீரழிவைப் பற்றித் தமது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

               தமிழன் வார இதழ் 15.04.1914 வரையில் அயோத்திதாசர் பொறுப்பில் வெளிவந்தது. அவர் மறைவிற்குப் பிறகு அவரது புதல்வர் பட்டாபிராமனால் 17.06.1914 முதல் 26.08.1915 வரை வெளியிடப்பட்டது. பிறகு 07.07.1926 முதல் 27.06.1934 வரை கோலார் தங்கவயல் பண்டிதமணி ஜி. அப்பாதுரையாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

               படித்தவர்களுக்கும், பாமர ஏழை மக்களுக்கும் பயன் தரத்தக்க வகையில் அயோத்திதாசர் எழுதினார்.

               சமூகக் கொடுமைகளை வேரோடு சாய்த்திடத் துடிக்கும் ஆவேசம், வர்ணாசிரமக் கொள்கைகளையும், அதைப் பாதுகாக்கும் சாத்திரங்களையும், சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் அம்பலப்படுத்திச் சாடும் தன்மை, சாதிக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் பிராமணீயத்தின் ஆதிக்கத்தைத் தகர்க்கும் வேகம், அரசியலில் மட்டுமன்று பண்பாட்டு – சமூக – கலாச்சாரத்தளங்களிலும் பிராமணீயத்தை வீழ்த்தும் வேகம் ஆகியவற்றுடன் சமூகத்தின் தீமைகளைச் சுட்டெரிக்கும் தீப்பொறிகளாக அவரின் சொற்கள் வெளிப்படும். இப்படித்தான் அயோத்திதாசரின் எழுத்துக்கள் சமூகத்தில் எழுச்சியை ஏற்படுத்தின.

               அயோத்திதாசர் ஆதிதிராவிடரை ஓரணியில் திரட்டவும், அவர்களது கோரிக்கைகளுக்காகப் போராடவும், 1890 ஆம் ஆண்டு ‘திராவிட மகாஜன சபை’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் முதல் மாநாட்டை 01.12.1891 ஆம், நாள் நீலகிரியில் நடத்தினார். அந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி உரிமை உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி, இந்திய தேசிய காங்கிரசுக்கு அனுப்பி வைத்தார். அக்கோரிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி எவ்விதப் பதிலும் அளிக்கவில்லை என்பது வேதனையளிக்கும் செய்தியாகும்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவித பயனுமில்லை என்பதை மக்களிடம் பரப்பினார். மேலும், இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை எண்ணிப் பார்க்காதவர்கள், அந்நிய நாட்டில் வாழும் இந்தியர்களைப் பற்றி அக்கறை கொள்வது மிகவும் வேடிக்கையானதென விமர்சனம் செய்தார்.

அயோத்திதாசர் பௌத்த மதத்தைத் தழுவினார். சென்னை இராயப்பேட்டையில் ‘தென்னிந்திய சாக்கிய சங்கம்’ என்ற பௌத்த சமயப் பிரச்சார அமைப்பை 1902ஆம் ஆண்டு நிறுவினார். அயோத்திதாசர் தாழ்த்தப்பட்ட மக்களின் மதம் பௌத்தமே என்பதை வலியுறுத்தினார். இச்சங்கத்தில் சிந்தனைச் சிற்பி. ம. சிங்காரவேலர், பேராசிரியர் பி.லட்சுமி நரசு ஆகியோர் பௌத்த மதக்கருத்துக்களைப் பிரச்சாரம் செய்தனர். இதன் காரணமாக அயோத்திதாசர் ‘இந்திய பௌத்த மதத்தின் முதல் மறுமலர்ச்சியாளர்’ என்று போற்றப்படுகிறார்.

கிராமங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்களுக்கு நிலம் வழங்க வேண்டும் என அயோத்திதாசர் கடிதங்கள் மூலமும், நேரிலும், பிரிட்டீஷாரிடம் கோரிக்கை வைத்தார்.

அயோத்திதாசரின் கோரிக்கையினைப் பிரிட்டீஷார் ஏற்றனர். அதன்படி, பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நிலமற்ற ஏழை-தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு ஒதுக்கீடு செய்தனர். அப்படி வழங்கப்பட்ட நிலங்கள், ‘பஞ்சமி நிலம்’ என அழைக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.

‘பஞ்சமி நிலம்’ என்பது நிலமற்ற, கூலி, விவசாய ஆதிதிராவிட மக்கள் சொந்தமாக மற்றவர்களைப் போலவே பயிர் செய்து உரிமையுடன் வாழவேண்டும் என்ற அடிப்படையில் பிரிட்டீஷாரிடம் வாதாடிப் பெறப்பட்டது. அந்த நிலங்கள் தாம் இன்று பஞ்சமி நிலங்கள் என்று அழைக்கப்படுகிறன. ஆதி திராவிட மக்களுக்கு நிலம் கிடைப்பதற்கு முதல் குரல் எழுப்பிய அயோத்திதாசரைப் ‘பஞ்சமி நிலங்களின் தந்தை’ என அழைக்கலாம். ஆனால், காலப்போக்கில் ஆதிக்கச் சாதியினர், அரசியல் வாதிகள், நிலச்சுவான்தார்கள் ஆகியோர், மருட்டியும், அச்சுறுத்தியும் ஆதிதிராவிட மக்களிடமிருந்து பஞ்சமி நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். அந்த நிலங்களை மீட்டு, நிலமற்ற கூலி ஆதி திராவிட மக்களுக்குக் கிடைத்திட தலித், இடது சாரி கட்சிகள் போராட வேண்டும். அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கல்வி, மனிதனைச் சுயமாகச் சிந்திக்க வைப்பதோடு, தன்மானத்தையும் கற்றுக் கொடுப்பதாகும் என்பதை வலியுறுத்தி அயோத்திதாசர் ஆதிதிராவிடர்களின் கல்வி வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டார்.

கர்னல் ஆல்காட் என்பவரின் துணையோடு ஆதி திராவிட மக்களுக்காகப் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கி வைத்தார். நான்காவது படிவம் வரையில் (அந்தக் காலத்தில் நான்காவது ஃபாரம்) இலவசமாக கல்வி அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையைப் பிரிட்டீஷ் அரசிடம் முன்வைத்தார் அயோத்திதாசர்.

ஆதிதிராவிடர் யாருக்கும் அடிமையில்லை; அடிமைத் தொழில் ஒழிக்கப்படவேண்டும்; சுடுகாட்டுக்குப் பாதை வேண்டும்; குடிநீர் வேண்டும்; பெண்கள் கல்வி பெற வேண்டும்; கோயிலில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும்; இவை போன்ற முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார் அயோத்திதாசர்.

‘விபூதி ஆராய்ச்சி’ என்ற நூலில் அயோத்திதாசர், “சிலர் சர்வ சோகங்களும், சாம்பலில் தீருமென்பார்கள், குருவை சுட்டச் சாம்பல், பிணங்கள் வெந்த சுடுகாட்டுச் சாம்பல், எரு முட்டைச் சாம்பல், ஜபமாலைகள் வெந்த சாம்பல் என்னும் விபூதிகளில் பெரிய அற்புதங்களிருப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்ற நெற்றியில் பூசி வருகிறீர்கள்! இது நியாயமா? பகுத்தறியுங்கள்!... பொய்யான தேவதைகளை மெய்யென நம்பி சாம்பலைக் குழைத்து முகத்தில் தடவிக் கொண்டு மத அடையாளங்களைக் காட்டுவது பைத்தியமல்லவா?”

இவ்வாறு பகுத்தறிவுக் கொள்கைகளைத் துணிச்சலுடன் அக்காலத்திலேயே பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகுத்தறிவு விதையை முதலாவதாக தமிழகத்தில் விதைத்த பெருமை அயோத்திதாசருக்கே உரியதாகும்.

 வேதங்களும், புராணங்களும் கட்டுக்கதைகள் என்பதையும், புளுகு மூட்டைகள் என்பதையும் மக்களிடையே எடுத்துரைத்தார். பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளையும், ஏமாற்றங்களையும், மக்களுக்குத் தோலுரித்துக் காட்டினார். தந்தை பெரியார் பிறப்பதற்கு முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பியவர் அயோத்திதாசர்.

               சமுதாயம், சமயம், அரசியல் என்று எதுவானாலும் அவை மக்களின் வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்பதைத் தனது நோக்கமாகக் கொண்டிருந்தார்.

‘சுயராஜ்யத்திற்காகப் போராடும் இந்துக்கள், தங்களது மனுதர்ம சாஸ்திரத்தை விட்டுவிடத் தயாராக இல்லை. எனவே, மனுதர்ம சாஸ்திரத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆட்சி செய்ய விரும்புவதால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை’ – என்று அறிவித்தார்.

தமிழகத்தில் ஆதி திராவிடர் இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பௌத்த சமய இயக்கம் - ஆகிய அனைத்திற்கும் ஆற்றல் மிக்க முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசரே.

அயோத்திதாசர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் காலமானார். அயோத்திதாசரின் மறைவையொட்டி, தமிழ்த் தென்றல் திரு.வி.க. ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியான்’ என்ற இரங்கற்பாவை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   அயோத்திதாசரின் சிந்தனையும், கருத்துக்களும், இலட்சியங்களும் நிறைவேற பாடுபட வேண்டியது நமது வரலாற்றுக் கடமையாகும்.

தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு அயோத்திதாசரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையத்திற்குத் தமிழக அரசு அயோத்திதாசர் பெயரைச் சூட்டிட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாகும்.

- பி.தயாளன்

Pin It