1955களில் அமெரிக்காவில் இது நடந்தது. மாண்ட்கோமரி நகரப் பேருந்துகளில் - வெள்ளையர்கள் ஏறி விட்டால், இருக்கையில் அமர்ந்துள்ள கறுப்பர்கள் அவர்களுக்கு எழுந்து இடம் தரவேண்டும். அதே போல், ஒரு வெள்ளையர் பேருந்தில் ஏறியவுடன், இரு கறுப்பர்கள் எழுந்துவிட்டனர். மூன்றாவதாக அமர்ந்திருந்த ஒரு கறுப்பர் பெண் எழ மறுத்தார்.

“நீ எழ மறுத்தால், போலீசைக் கூப்பிடுவேன்” என்றார், ஓட்டுநர். “தாராளமாக செய்யுங்கள்” என்றார் அந்தப் பெண். போலீஸ் வந்தது. அந்தப் பெண்ணைக் கைது செய்தது. உரிமைக்குக் குரல் கொடுத்த அந்தப் பெண்ணின் பெயர் ரோசாபார்க்ஸ் அப்போது அவருக்கு வயது 42. தொண்டை வறண்ட நிலையில் சிறைக்குப் போன அந்தப் பெண், தண்ணீர் கேட்டபோது, உடனடியாக தண்ணீர் கிடைக்கவில்லை. காரணம், சிறையில் உள்ள நீருற்றை வெள்ளையர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்!

ரோசா பார்க்ஸ் துவக்கிய அந்தப் போராட்டம், அமெரிக்காவில் தென்பகுதி முழுதும் பரவியது. கறுப்பர்கள் பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்தைத் துவக்கினர். அந்தக் காலகட்டத்தில்தான், 26 வயதே நிரம்பிய மார்ட்டின் லூதர், இந்த உரிமைக் கிளர்ச்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் பிறகு தான் கறுப்பர் உரிமைச் சட்டங்கள் வந்தன.

ரோசா பார்க்ஸ் பற்ற வைத்த தீ கறுப்பர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலனி நாடுகள் முழுதும் பரவியது. அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆப்பிரிக்க நாடுகள் - மைனாரிட்டி வெள்ளையரின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றன. நிறவெறிக்கு எதிராகவும், பெண்ணுரிமைக்காகவும் தொடர்ந்து போராடிய ரோசா பார்க்ஸ், அமெரிக்காவின் மிகப் பெரும் விருதான சுதந்திரப் பதக்கத்தைப் பெற்றாலும் இறுதிவரை ஏழ்மையில் வாழ்ந்தவர். அவரது வீட்டு வாடகையைக்கூட உள்ளூர் ‘சர்ச்’ தான் கொடுத்து வந்தது. கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி தனது 92 வது வயதில் அவர் முடிவெய்தினார். அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்திய டெட்ராய்ட் மேயர் இவ்வாறு கூறினார் - “அவர் அமர்ந்திருந்ததால், நிமிர்ந்து நின்றார்”.

பேருந்துகளில் பயணம் செய்யும் உரிமையை அவர் கறுப்பர்களுக்கு பெற்றுத் தந்தாலும், அவரது சந்ததியினர் இப்போது பேருந்துகளில் டிக்கட் வாங்கும் நிலைக்கே போராட வேண்டியிருக்கிறது என்று எழுதியிருக்கிறது ‘கார்டியன்’ நாளேடு. வீராங்கனைக்கு, ஒடுக்கப்பட்ட மக்களின் வீரவணக்கத்தை உரித்தாக்குவோம்!

கழகத் தலைவர் மீது அவதூறு : வருத்தம் தெரிவித்தது இந்து முன்னணி

2003 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி புதுவையில் ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ - ‘தமிழர் தன்மான மீட்பு’ மாநாட்டை நடத்தியது. அப்போது, புதுவை இந்து முன்னணி மாநாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கைகளை விடுத்தது. புதுவை மாநில அ.தி.மு.கவும் இதே கோரிக்கையை வைத்தது. ‘இந்து முன்னணி’ புதுவை அமைப்பாளரான வே. செல்வம் என்பவர், கழகத்தின் மீதும், கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மீதும் அவதூறுகளை அள்ளி வீசினார். இதை எதிர்த்து, கழகத் தலைவர் மேட்டூர் நீதிமன்றத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் மீது வழக்கு தொடர்ந்தார். மேட்டூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பாளராக இருந்த வே.செல்வம், கடந்த அக். 28 ஆம் தேதி புதுவை ‘தினத்தந்தி’யில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ‘பொது அறிவிப்பு’ எனும் தலைப்பில் வெளி வந்துள்ள அந்த விளம்பரத்தில் வெளிவந்துள்ளதை அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

பொது அறிவிப்பு

2003 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் நாள் புதுவையில் திரு.கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தன்மான மீட்பு மாநாடு என்ற பெயரில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது நான் புதுவை மாநில இந்து முன்னணி தலைவராக பொறுப்பு வகித்தேன். நான் வகித்து வந்த பொறுப்பின் அடிப்படையின் காரணமாக மாநாட்டுக்கு எதிராக செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இதன் காரணமாக இந்து முன்னணி சார்பில் மாநாட்டை தடை செய்ய வேண்டுமென வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி என் பெயரில் வெளிவர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

தவிரவும் எனக்கும் கொளத்தூர் மணி அவர்களுக்கும், அவர்கள் சார்ந்துந்துள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியோ, விரோதமோ கிடையாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர எனது பத்திரிகை செய்தியில் தடை செய்யப்பட்ட அமைப்பு, தீவிரவாதிகள் சதி, சுப இளவரசன், வீரப்பன் கூட்டாளிகள் என குறிப்பிட்டதன் மூலம் திரு.கொளத்தூர் மணி அவர்களையும் அல்லது அவர்களது இயக்கத்தினரையும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுத்தியமைக்கு நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்
வே.செல்வம்
முன்னாள் தலைவர்
நாள் : 28.10.2005 இந்து முன்னணி
இடம் : புதுச்சேரி புதுவை மாநிலம்

இராமாயணம் - மகாபாரதம் கற்பனையே

‘ஆனந்த விகடன்’ வார ஏட்டில் ‘கதாவிலாசம்’ என்ற தொடரை எழுதி வரும் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் (பார்ப்பனர்) ராமாயணம் வரலாறு அல்ல ; கற்பனை புராணம் என்ற கருத்தையே பிரதிபலித்துள்ளார். ‘எழுதாக் கதை’ என்ற தலைப்பில் அவர் இந்தவாரம் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து (13.11.05) ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.)

“ராமனின் ஆட்சிக் காலத்தில் ஒரு நாள்.. சிம்மாசனத்தில் ராமன் அமர்ந்திருந்தபோது, அவனுடைய மோதிரம் கழன்று கீழே விழுந்துவிடுகிறது. விழுந்த மோதிரம் பூமியைத் துளைத்துக் கொண்டு சென்று, மறைந்து விடுகிறது. ராமன் தன் காலடியில் அமர்ந்திருந்த அனுமனை அழைத்து, மோதிரத்தை எடுத்து வரும்படி சொல்கிறான். உடனே, அனுமனும் தன் உருவை மாற்றிக் கொண்டு, பூமியைத் துளைத்து உள்ளே செல்கிறார். பூமியின் உள்ளே போகப் போக நீண்டு கொண்டே இருக்கிறது. முடிவில், பாதாள ராஜனின் அரண்மனைக்கு வந்து சேர்கிறான். பாதாள ராஜன் அவரை வரவேற்க, ராமனின் மோதிரத்தைத் தேடி வந்ததை அனுமன் சொன்னதும், தனது சேவகனிடம் ஒரு தட்டை.க் கொண்டு வரச் சொல்கிறான் பாதாள ராஜன்.

அந்தத் தட்டில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் இருக்கின்றன. எல்லா மோதிரமும் ராமனுடையது போன்றே உள்ளது. இது என்ன குழப்பம் என்று அனுமன் திகைக்க, ‘இதில் எது ராமனுடைய மோதிரமோ அதை எடுத்துக் கொண்டு போ!’ என்று தட்டை அவர் முன் நீட்டுகிறான் பாதாள ராஜன். அனுமன், ‘தன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றதும், ‘இந்தத் தட்டில் உள்ள மோதிரங்கள் அளவு ராமர்கள் பூமியில் தோன்றியிருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் ஒரு ராமனின் அவதாரம் முடிவுக்கு வருகிறதோ, அப்போது அவரது மோதிரம் கழன்று கீழே விழுந்துவிடும். அதைச் சேகரித்து வைத்திருப்பது எனது வேலை’ என்கிறான் பாதாள ராஜன்.

கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவதாக மானுடவியல் அறிஞர் ஏ.கே. ராமானுஜம் மேற்கோள் காட்டும் இக்கதை ஒவ்வொரு ராமனுக்கும் ஒரு ராமாயணம் இருக்கிறது என்று தெரிவிக்கிறது. ராமாயணத்தில் இப்படி என்றால், மகாபாரதம் எத்தனை விதமானதாக இருக்கக் கூடும்? இந்தியாவில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை விதமான மகாபாரதம் இருக்க முடியும்! காரணம், ஒவ்வொரு மனிதனும் ஒரு விதத்தில் மகாபாரதக் கதையைப் புரிந்து வைத்திருக்கிறான். தனக்குத் தெரிந்த விதத்தில் அதை மற்றவர்களுக்குச் சொல்லி வருகிறான்.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் இந்திய மக்களின் ஆழ்ந்த நம்பிக்கைகள், அறக்கோட்பாடுகள், இயற்கையை எதிர்கொண்ட விதம் மற்றும் உள்ளார்ந்த பயம், சந்தோஷம், குடும்ப அமைப்பின் உருவாக்கம், இந்திய சமூகத்தின் வளர்ச்சி, நகரங்கள் உருவாதல் என்று பல்வேறு தளங்களை கதைகளின் வழியாக வெளிப்படுத்துகின்றன. ஒரு வகையில், இந்தியாவின் புராதன மன அமைப்பை இந்த இரண்டு புத்தகங்களிலும் காண முடிகிறது.

மகாபாரதம் குறித்த எனது நாவலான ‘உப பாண்டவம்’ எழுதுவதற்காக, மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள இடங்கள் யாவையும் நேரில் பார்த்து வருவதற்காக இரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்தேன். அந்த நாட்களில் எண்ணிக்கையற்ற மகாபாரதப் பிரதிகளையும் மாறுபட்ட கதைகளையும் கேட்டிருக்கிறேன்.

Pin It