கீற்றில் தேட...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கழகத் தோழர்களை சிறைப்படுத்தியுள்ள தமிழக அரசைக் கண்டித்து 19.3.07 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய கருத்தாழம் மிக்க உரையின் சென்ற இதழ் தொடர்ச்சி:

1980க்கு முன்பு ஒரு கலைஞர் இருந்தார், கொஞ்சம் கொள்கையுடன் இருந்தார். இப்போது அதையும் முற்றும், முழுவதுமாகவே விட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

நீங்கள் கேட்கலாம், ‘தேர்தல் காலத்தில் கலைஞரை ஆதரித்தீர்களே’ என்று! ஜன நாயகத்தில் தேர்தலில் நிற்பவர்களில் யார் சிறந்தவர்கள் என்றுதான் வாக்களிக்க முடியும். அந்த வகையில் இன்றும்கூட ‘கலைஞரா - ஜெயலலிதாவா’ என்றால், கலைஞர் பக்கம் தான் நிற்போம். அதில் ஒன்றும் வேறுபாடு இல்லை. ஆனால் நீங்கள் கலைஞராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பித்தான் இந்தக் கோரிக்கைகளை வைக்கிறோம்.

பார்ப்பானுக்குக்கூடத் தெரிகிறது! சுஜாதாகூட ‘அயோத்தியா மண்டபம்’ என்ற ஒரு கதை எழுதினான். அதில் ஒரு பார்ப்பான் மகன் பிற்படுத்தப்பட்டப் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக் கொள்ளாமல், உருட்டுக் கட்டை அடி விழுந்த பிறகுதான் நானும் உன் கூட வருகிறேன் என்று கூறுகிறான். உருட்டுக் கட்டையில் அடித்தால்தான் பார்ப்பனர்கள் சாதி மறுப்புத் திருமணத்தைக்கூட ஏற்றுக் கொள்வார்கள் என்று சுஜாதாவுக்குப் புரிந்திருக்கிறது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தியதைக் கண்டித்து 16.3.2007 நடந்த போராட்டத்தில் நாங்கள் எழுப்பிய முழக்கத்தில் “ஜெயா போட்டது பொடா! கலைஞர் போட்டது என்.எஸ்.ஏ.! கொடியில், பெயரில் சிறு மாற்றம். கொள்கையில் இருவரும் ஒரே மட்டம்!” என்று முழக்கம் எழுப்பினோம்.

‘இருவருக்கும் வேறுபாடு இல்லையே’ என்ற ஆதங்கத்தில் நாங்கள் எழுப்பிய குரல் உங்கள் காதுகளுக்கும் போக வேண்டும் - இல்லை என்றால் உளவுத் துறை வழியாகக் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் இவற்றைப் பதிவு செய்கிறோம்.

காவல்துறையில் குளறுபடிகள்

தமிழக காவல்துறைத் தலைவர் ஈரோடு நிகழ்ச்சிக்குப் பிறகுதான் அறிக்கை விடுகிறார். அவர் சொல்லும்போதே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்களைக் கைது செய்யவுள்ளோம் என்று பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுக்கிறார். எப்படி சொல்ல முடிகிறது?

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒருவரைக் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரைக்க வேண்டும். அதை ஏற்றுக் கொண்டு மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பிக்க வேண்டும். அது தற்காலிகமானதே. 12 நாட்களுக்குத்தான் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம். சட்டத் துறைக்கு சென்று சட்டத்துறை ஏற்றுக் கொண்டால்தான் 12 நாட்களுக்கு மேல் வழக்கு நீடிக்கும். சட்டத்துறை பார்த்திருக்கும் அல்லவா? இந்த வழக்கு உங்களிடமும் வந்திருக்கு மல்லவா? “பூணூலை அறுத்தது குற்றம்” என்று எழுதியிருப்பதை நீங்களும் பார்த்துவிட்டு, ‘ஆமாம், ஆமாம்!’ என்று கூறி விட்டீர்களா?

ஈரோடு மாவட்டத் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏன் பாய்ந்தது என்று மாவட்ட ஆட்சியர் போட்ட அறிவிப்பு, “தடுப்புக் காவல் ஆணை” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. அதில், தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ‘இவர்களது கீழ்க்கண்ட கேடான நடவடிக்கைகள் ஏற்கனவே கண்காணிப்புக்கு வந்தது,

1) 17.3.2000 அன்று விசுவ இந்து பரிசத் மாநாட்டை எதிர்த்து ஈரோடு நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது;

2) 26.5.06 அன்று டெல்லியில் வேலை நிறுத்தம் செய்து வரும் உயர்சாதி பார்ப்பன மாணவர்களைக் கண்டித்து ஈரோடு தலைமை தபால் நிலையம் முன்பு இராம. இளங்கோவன் மற்றும் 38 பேர் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தியது;

3) 22.11.06 அன்று ஈரோட்டில், ஈரோடு காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட ஈரோடு நகராட்சி அலுவலகம் முன்பு இராம. இளங்கோவன் மற்றும் 32பேர் இடஒதுக்கீடு தொடர்பாக வீரப்ப மொய்லி கொடுத்த அறிக்கையை எரிக்க முயன்றது;

4) பூணூல் அறுத்தது.

கலைஞர் அவர்களே நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். மாவட்ட ஆட்சியர் போட்டால் விட்டு விடலாம். சட்டத் துறைக்கு வருகிறது. சட்ட அமைச்சர் பார்க்கிறார். வி.எச்.பி. மாநாட்டை எதிர்த்தது தேச விரோதம்! இடஒதுக்கீட்டைப் பறிக்கும் பார்ப்பன மாணவர்களைக் கண்டிப்பது தேச விரோதம்! 50 சதவீதத்திற்கும் அதிக மாக உள்ள பிற்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை படிப்படியாகத்தான் அமல்படுத்த வேண்டுமென்ற வீரப்பமொய்லியின் அறிக்கையை எரிக்க முயன்றது தேச விரோதம்! - என்று கலைஞர் ஆட்சி ஏற்றுக் கொண்டுவிட்டது என்பது தானே பொருள்?

சட்டத்துறைக்கு வந்து நீங்கள் உறுதிப்படுத்தியதால் தானே இன்னும் எங்களது தோழர்கள் சிறைக்குள் இருக்கிறார்கள்? வழக்கமாக திரைப்படத்தில் தான் 100 நாள் கொண்டாடுவார்கள். இப்போது, சிறையில் இருப்போருக்கு 100 நாள் கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது ஏன் வந்தது. சட்டத்துறை மாவட்ட ஆட்சியர் சொன்னதை ஏற்றுக் கொண்டது.

பின்னர் வழக்கு அறிவுரைக் கழகத்திற்குச் சென்றது. அங்கு மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை உறுதிசெய்தார்கள். அதற்காக நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது வேண்டுமென்றே ஆறு வாரகால அவகாசம் வேண்டுமென்று ஏன் கேட்கிறீர்கள்?

ஏனென்றால் பெரியார் சிலையை உடைத்த இந்து மக்கள் கட்சியினர் மீது இன்னம் வழக்குப் பதியவில்லை. நீங்கள் சமத்துவப் பெரியார் அல்லவா? அவனுக்கு முன்பு அறிக்கையைக் கொடுத்தால் நாங்கள் உடனே வெளியில் வந்து விடுவோம். அதனால் தள்ளிப் போடுகிறீர்கள். அறிவுரைக் கழகம் பரிசிலித்த செய்தியை நீதிமன்றம் முன்பு எடுத்துச் சொல்வதற்கு உங்களுக்கு ஆறுவாரம் அவகாசம் தேவையா? சங்கர ராமன் கொலை வழக்கில் சங்கராச் சாரியை பிணையில் விடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை கூட நீதிமன்றம் கூடிப் பேசுகிறது. நம் தோழர்களுக்கு மேலும் ஆறு வாரம் தேவைப்படுகிறது என்று சொன்னால் உங்கள் எண்ணத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

“பிணையில் விடப்பட்டால் அவர்கள் தொடர்ந்து பொது அமைதி மற்றும் தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படுவார்கள் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள், அவரது சட்டவிரோத செயல்முறைகளை முழுமையாகக் கட்டுப் படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களிலிருந்து அவரை தடை செய்ய முடியாது என நான் கருதுவதால், மேற்படியாரை பொது அமைதி மற்றும் தேசப் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செயவதாக” - கூறுகிறார்

ஈரோட்டுத் தோழர்களாவது நான்கு முறை குற்றம் செய்தவர்களாகக் கூறப்பட்டவர்கள். ஆனால், பெரம்பலூர் தோழர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? தோழர்களால் மிரட்டப்பட்டதாகக் கூறப்பட்டவர் கொடுத்த புகாரில்,

“என்னை இரு நபர்கள் வழி மறித்து கீழே இறங்கச் சொல்லி, நீ என்னடா பெரிய அய்யர்? பார்ப்பான் என்றால் பெரிய உயர்ந்த சாதியா? நீங்கள் என்னடா விவசாய வேலை செய்துதான் சாப்பிடுகிறீர்களா? உங்களை வெட்டிக் காலி செய்தால்தான் எங்கள் தலைவர் பெரியாரின் கொள்கைகள் நாட்டுக்குத் தெரியும் - என்று சொல்லி என் கழுத்தில் இருந்த ருத்ராட்சக் கொட்டை மற்றும் பூணூல் இவற்றை அறுத்துக் கீழே போட்டு காலால் மிதித்தார்கள்” - இதுதான் அவர்கள் கொடுத்த புகார்! அவர்கள் செய்தது இதுதான். இதை அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகிறார்.

“இவர்கள் ரமேஷ் ‘அய்யரை’ ஜாதிப் பெயர் சொல்லித் திட்டினார்கள்” என்கிறார். அவரது பெயரே அய்யர் தான். மேலும் பூணூலை அறுத்தார்களாம்.” - இவைகள் எல்லாம் மக்கள் மத்தியில் பாதுகாப்பு இன்மையையும், பயங்கரவாதத்தையும் தோற்றுவித்துவிட்டது(!). அதனால் பெரம்பலூரில் மட்டுமல்ல, புணூல் அறுத்ததால் ஒட்டு மொத்த தமிழ்நாடு முழுவதும் பீதியும், குழப்பமும் உண்டாகிவிட்டது - என்கிறார் மாவட்ட ஆட்சியர் தனது தடுப்புக் காவல் ஆணையில்.

பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரே, சாதி சொல்லித் திட்டி, பூணூலை அறுத்து, ருத்ராட்சக் கொட்டையை காலில் போட்டு மிதித்தது என்பது தான். இதற்கே தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்படுகிறது என்றால், இதை ஒரு சட்ட அமைச்சகமும், அரசும் ஏற்றுக் கொள்கிறது என்றால், அந்தக் கேடுகெட்ட அரசு குறித்து நாம் என்ன நினைக்க முடியும்?

நீங்கள் யாருக்காக ஆள்கிறீர்கள்? பெரியார் பேரைச் சொல்ல வேண்டும். பெரியார் என்ற முத்திரை வேண்டும். ஆனால், அதற்கான வேலை நடக்கக் கூடாது. அதற்கு, வீரமணி பொருத்தமானவர் என்று உங்களுக்குத் தெரிகிறது, வைத்திருக்கிறீர்கள்! இவனிடம் வைத்துக் கொண்டால் பெரியார் பெயரைச் சொல்வதுடன், அதை நடைமுறைப்படுத்தக் கேட்பான். அவர் சிக்கல் இல்லாதவர். பெரியார் என்ற முத்திரை போதும். பெரியார் கொள்கையை வற்புறுத்தத் தேவையில்லை என்று நினைக்கிறவர்! அதனால் அருகில் அவரை வைத்திருக்கிறீர்கள்.

விடுதலைப் புலிகள் என்று சொன்னாலே ‘இந்து’ ஏட்டுக்குப் பிடிக்காது. எந்த வெளிநாட்டு சிவில் விருதுகளையும், நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ‘இந்து’ ராமுக்கு இலங்கை அரசு ‘சிறீலங்கா ரத்னா’ என்ற நாட்டின் மிக உயர்ந்த விருதைக் கொடுக்கிறது என்றால், என்னென்ன சேவைகளை அந்த நாட்டுக்கு அவர் செய்திருக்க வேண்டும்?

அவன் எழுதுகிறான், அந்த ஏடு எழுதுகிறது என்பதற்காக, சைக்கிள் ‘பால்ஸ்’ எடுத்துச் சென்றார்கள் என்பதற்கு - ‘புலிகள் ஆயுதம் கடத்தியதாக’ எழுதுகிறான் என்பதற்காக தேசப் பாதுகாப்புச் சட்டம் போடுகிறீர்கள். எவ்வளவு மோசமாக நமது அரசு தமிழர் குரலுக்கு அக்கரைக் காட்டாமல், பார்ப்பனர் குரலுக்கு செவி சாய்க்கிறது என்கிறபோது நமக்கு வேதனை இன்னும் அதிகமாகிறது. நம் தோழர்கள் உள்ளே இருப்பதற்காக மட்டும் இதைச் சொல்ல வில்லை. வீரப்பனைப் பார்த்தேயிராத ஒருவருக்கு உயர்நிதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்த சம்பவங்கள் எல்லாம் இங்கு நடைபெற்றிருக்கின்றன.

1991-ல் என்னை இதே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே வைத்திருந்தார்கள். அப்போது விடுதலைப் புலிகளுக்கு வண்டி ஏற்பாடு செய்து, பணம் மூன்று லட்சம் கொடுத்து, அவர்களை காரில் ஏற்றி சென்னைக்கு மருத்துவத்திற்கு அனுப்பியதாக குற்றச் சாட்டு. புலிகளே ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாகக் கூறினார்கள். அதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டம்! ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த வண்டியை காவல் துறை பிடித்த நாளில் நான் சேலம் மத்திய சிறையில் இருக்கிறேன். தி.மு.க. ஆட்சியைக் கலைத்த போது என்னை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்து அடைத்து விட்டார்கள். ஆனால், சிறையில் இருந்த நான், உதவியதாக வழக்கு போடப்பட்டு மூன்றரை மாதங்கள் சிறையில் இருந்தேன்.

இதுபோல பொய் வழக்கு என்பது காவல்துறை சாதாரணமாகப் போடும். ஆனால், அப்போது அறிவுரைக் கழகத்தின் நீதிபதியாக இருந்தவர் உண்மையிலேயே நீதிமானாக இருந்தததால், போட்ட வழக்கு தவறு என்று நீக்கி விட்டார்கள். வெளியில் வந்தோம். இல்லையென்றால், உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுத்தான் வெளியில் வந்திருக்க வேண்டும்.

இப்படி காவல்துறை வழக்குப் போடுவதும், ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதும், அதை அவர்கள் எப்படி வாங்குகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாதது அல்ல! அதை வைத்துக் கொண்டு பொய் வழக்குப் போடுவதும், அதை ஏற்றுக் கொண்டு அரசு நடவடிக்கைகள் எடுப்பதும் என்ன நியாயம்?

சட்டத் துறைக்குப் போன பின்பு, அறிவுரைக் கழகத்திற்குச் சென்ற பின்புகூட அரசுக்குத் தெரிந்திருக்காதா? என்ற ஆதங்கம் தான் எங்களைச் சொல்ல வைக்கிறது. அதனால் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கூறுவது என்னவென்றால்...

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நமக்குப் போட்டது மட்டுமல்ல, இந்து மக்கள் கட்சி, புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் - ஆகியோர் மீதும் போட்டதையும் கண்டிக்கிறோம்.

தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக சிந்தனை உள்ள யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத சட்டம். அதை தேவையற்றுப் பல்வேறு வகைகளில் பயன்படுத்து வதையும் கண்டிக்கிறோம்.

அதிலும், குறிப்பாக பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை சிறைப்படுத்தியுள்ளதையும் இதன் காரணமாகவே எதிர்க்கிறோம்.

மனித உரிமையை ஏற்றுக் கொண்டவர்கள், மனிதாபினமானத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் - தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்னும் ஆள் தூக்கிச் சட்டம், நமது நாட்டில் இருக்கக் கூடாது என்ற எதிர்ப்புக் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் - இவ்வாறு கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை நிகழ்த்தினார்.

தொகுப்பு : ‘கதிர்’