இரண்டு வருடங்கள் முன்பு வரை அந்த நாட்டில் விவாகரத்து சட்ட விரோதமானது. இன்று அதன் அதிபராக இருப்பவர் இரண்டு முறை விவாகரத்து செய்த பெண்மணி.

தீவிர கடவுள் நம்பிக்கையுடைய, பழமைவாத கத்தோலிக்க கிறித்தவர்கள் வாழும் நாடு அது. இன்று அதன் அதிபர் ஒரு நாத்திகர். நம்ப முடியாத இந்த சாதனைக்கு சொந்தக்காரர் 54 வயது மிஷேல். சிலி நாட்டின் புதிய அதிபர். மிஷேல் அதிபர் பதவிக்கு வந்ததைவிட, வந்து மறுநிமிடமே அவர் செய்திருப்பதுதான் மிகப் பெரிய சாதனை.

மிஷேலின் அமைச்சரவையில் மொத்தம் 20 அமைச்சர்கள். அதில் 10 பேர் பெண்கள். அது மட்டுமல்ல, சிலி நாட்டின் முக்கியமான மொத்தம் 300 பதவி களிலும் சரி பாதி பெண்களே நியமிக்கப்படுவார்ள் என்று அறிவித்திருக்கிறார், மிஷேல்.

அதிபர் பதவி ஏற்ற முதல் நாள் மிஷேல், மழலைகள் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடனும், ஆசிரியர்களுடனும் விவாதித்தார். அடுத்த நான்காண்டுகள் தான் அதிபராக இருக்கும் ஆட்சிக் காலத்தில், அரசு நிதி உதவியுடன் புதிதாக 800 மழலையர் பள்ளிகளை தொடங்கப் போவதாக அறிவித்தார். சிலியில் 60 வயதுக்கு மேற்பட்ட எல்லா முதியவர்களுக்கும் இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதிபர் என்ற இந்த சிகரத்தைத் தொட, மிஷேல் கடந்து வந்த பாதை, ரணங்கள் நிறைந்தது.

சிலியில் மக்கள் ஆதரவுடனான ஆலண்டே என்பவரின் ஆட்சி தான் நடந்து வந்தது. அதில், மிஷேலின் தந்தை ஆல்பர்ட்தான் விமானப்படை ஜெனரல். செப்டம்பர் 11, 1973 அன்று, ஆலண்டேயைக் கொலை செய்து, சிலியைக் கைப்பற்றிய பினோசெட் என்பவரின் ராணுவப் பிரிவு, உடனடியாக ஆல்பர்ட்டை சிறைபிடித்து கொடுமைப்படுத்தியது. இந்த சித்ரவதைக்கு தந்தையை பறிகொடுத்த மிஷேல், தானும் இரண்டாண்டுகள் சிறைக் கொடுமைக்கு ஆளானார்.

பழையதை மறந்த பரஸ்பர அன்பு. எல்லோருக்கும் எல்லாமும்... இவைதான் மிஷேலின் அரசியல் தத்துவம், மதத் தத்துவம். கடவுள் தத்துவம் எல்லாம்!

நன்றி: ‘அவள் விகடன்’, ஏப்ரல் 28, 2006
தகவல்: இருளொளி

Pin It