ராஜகோபாலாச்சாரியின் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து - கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் திறந்து - மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி - கல்வியை இலவசமாக்கி - தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக் கண் திறந்த பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாளை ‘கல்வி வளர்ச்சி’ நாளாக தமிழக முதல்வர் கலைஞர் அறிவித்திருப்பதை - தமிழர்கள் பாராட்டி வரவேற்பார்கள்!

காமராசர் காலத்திலே அவர் உருவாக்கிய கல்விப் புரட்சிக்கு எதிராக - ‘தகுதி திறமை’ கூப்பாடுகள் கேட்கவே செய்தன. அதற்கு காமராசர் சரியான பதிலடி கொடுத்தார்.

“எந்தத் தாழ்த்தப்பட்ட டாக்டர் ஊசி போட்டு நோயாளி செத்துப் போனான்? எந்தத் தாழ்த்தப்பட்ட என்ஜினியர் பாலம் கட்டி பாலம் உடைந்தது? சொல்! தகுதி திறமை பற்றி என்னிடம் பேசாதே; எனக்கு உன் தகுதியும் தெரியும்; உனக்கு சொல்லிக் கொடுத்தானே அவன் தகுதியும் தெரியும்.”

இது தான் காமராசர் தந்த சாட்டையடி பதில்!

பெரியார் - காமராசரை தன் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டாடினார். தனது புகழை எல்லாம் காமராசருக்கு காணிக்கையாக்கி மகிழ்ந்தார். குழந்தைகளுக்கு எல்லாம் காமராசர் என்று பெயர் சூட்டினார். பெரியார் - காமராசரைப் பற்றி எவ்வளவு துல்லியமாக மதிப்பீடு செய்திருந்தார் என்பதற்கு, இதோ ஒரு உதாரணம்

“காமராசருக்கு ஆதரவு தருவது பற்றி நான் வெட்கப்படவில்லை. அவரும் என்னைப் போலவே ஒரு துறவி ஆவார். எனக்காவது மனைவி உண்டு. அவருக்கு அதுவும் இல்லை. இப்படிப்பட்ட துணிச்சலுக்கு மனைவி, மக்கள், சொந்த வாழ்வு இல்லாமை அவசியமாகும். இப்படிப்பட்டவர்கள் ஏதாவது தவறு செய்தாலும் செய்யலாம். ஆனாலும் தவறு தான் செய்யலாமே ஒழிய புரட்டு, மோசம், சுயநலப்பற்று, வேஷம் செய்ய அவசியமுடையவர்களாக மாட்டார்கள். இயற்கையை முன்னிட்டு நான் இப்படிப் பேசுகிறேன்” என்றார் பெரியார். எவ்வளவு சரியான மதிப்பீடு!

கல்விக் கண் திறந்த - அந்தப் பச்சைத் தமிழனுக்கு - தமிழக அரசு செய்துள்ள இந்த சிறப்பு - தமிழினத்தின் நன்றி வெளிப்பாடு ஆகும்!

சரசுவதிக்கு சட்டைத் தைத்த தையல்காரர் யார்?

நாங்கள் சொல்வது இதுதான். கடவுள் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது காட்டுமிராண்டி காலத்தில்தான் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த காட்டுமிராண்டி காலத்தில் இந்த ஆகமங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டா? அது போலவே காட்டுமிராண்டி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கடவுள் இப்போது இருப்பது போலவா இருந்திருக்கும்?

சரசுவதி என்ற கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கின்றன. அந்த நான்கு கைகளுக்கும் சரியான அளவில் ஜாக்கெட் தைத்துப் போட்டிருக்கிறார்கள். எந்த ஆகமத்தில் நான்கு கைகளுக்கும் பட்டுத் துணியால் ஜாக்கெட் தைத்துப் போடலாம் என்று எழுதப்பட்டிருக்கிறது.

கடவுள் உருவாக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டி காலத்தில் பட்டு இருந்ததா? பருத்தி இருந்ததா? இல்லை, ஜாக்கெட் தைப்பதற்குத்தான் தையற்காரர் இருந்தாரா? (பலத்த கைதட்டல்)

ஓவியர்கள் வந்ததற்குப் பிறகு தான் கடவுளுக்கே உருவம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் முருகன் படம் எல்லாம் நடிகர் சிவக்குமார் மாதிரியே இருக்கும். சரசுவதி, லட்சுமி போன்ற கடவுள்களின் உருவம் நடிகை ஸ்ரீதேவி மாதிரியே இருக்கும். ஓவியர்கள் தாங்கள் பார்த்த பிரபலமானவர்களின் முகத்தை அப்படியே கடவுள்களின் முகங்களாக வரைந்து கொடுத்தார்கள், அவ்வளவுதான். கடவுள் கிருஷ்ணரே நடிகர் என்.டி.ராமாராவ் தான். கிருஷ்ணனின் முகம் நினைவுக்கு வரவேண்டுமென்றால் என்.டி.ராமாராவ் முகம் தானே நினைவுக்கு வரும்?

ஆகமத்தில் இப்படியெல்லாம் உருவம் இருந்ததா? ஆகமத்தை மீறி இருக்கின்ற இதை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

கோவை இராமகிருட்டிணன் உரையிலிருந்து

15 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் நீதி கேட்கிறார்

‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்’ என்ற நூல் தூக்குத் தண்டனையிலிருக்கும் அ.ஞா. பேரறிவாளன் எழுதியதாகும். தனக்கு தரப்பட்ட தண்டனை அநீதியானது என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தே அடுக்கடுக்காக அகச் சான்றுகளை எடுத்துக்காட்டி எழுதியுள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் - 7 ஆண்டுகள் விசாரணைக் கைதியாகவும்,8 ஆண்டுகள் தூக்குத் தண்டனைக் கைதியாகவும் அவர் சிறைக் கொட்டடி யில் கழித்து வருகிறார். கடந்த ஜூன் 24 ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டில் மரண தண்டனையை ரத்து செய்து, அந்நாட்டின் அதிபர் அரோயோ அறிவித்ததை, இந்நூலுக்கு எழுதிய அணிந்துரையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எடுத்துக் காட்டியுள்ளார். தோழர் தியாகு முன்னுரை வழங்கியிருக்கிறார்.

‘நீதிபதிகளின் தீர்ப்புகள் சில நேரங்களில் தவறாகவே அமைந்துவிட வாய்ப்புகளும் உண்டு. அதனால் நீதிக் கொலைகளும் நிகழ்ந்து விடும் வாய்ப்பு நிறைய உள்ளது. பேரறிவாளனின் இம் முறையீட்டு மடலை படிக்கும் எவருக்கும் இந்த அய்யம் ஏற்பட உறுதியான வாய்ப்பு உண்டு’ என்று தோழர் கொளத்தூர் மணி அணிந்துரையில் சுட்டிக்காட்டியிருப்பது இந்நூலின் வலுவான உள்ளடக்கத்தைப் பற்றிய சரியான படப்பிடிப்பு; தமிழின உணர்வாளர்கள் மக்களிடையே பரப்பிட வேண்டிய நூல்.

வெளியீடு: மோ. ஸ்டாலின் நினைவு நூலகம், தஞ்சாவூர்-14.
பக்.48; விலை. ரூ.109

Pin It