கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவிலுள்ள சில அறிவியலாளர்கள் இழிவுபடுத்தப்பட்டனர். அவர்களில் முன்னோடி நெல் ஆராய்ச்சியாளர் ரிச்சாரியா அவர்களும் ஒருவர். கட்டாக் நகரில் அமைந்துள்ள நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து வெட்கக்கேடான வகையில் வெளியேற்றப்பட்டவர்; இந்திய துணைக்கண்டத்திலேயே முதன்முறையாக பூச்சி மற்றும் நோய்கள் தாக்காத நெல்வகைகள் சிலவற்றை கண்டறிந்தவர்; எதிர்பாராத விதமாக இவரது சாதனைகள் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் ஆதரவோடு தொடங்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் அமைந்துள்ள பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்களை உறுத்தின; இந்த பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினர் இந்திய அரசில் செல்வாக்கு செலுத்தி ரிச்சாரியாவின் ஆராய்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டனர்; இதைத்தொடர்ந்து முனைவர் ரிச்சாரியா பல்வேறு அநீதிகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பன்னாட்டு கவிழ்ப்பு அறிவுரைகளால் பாதிக்கப் பட்ட ரிச்சாரியா தனது ஆராய்ச்சிகள் குறித்தும், தான் சந்தித்த தடைகள் குறித்தும் அவற்றை தான் எதிர்கொண்டு செயலாற்றிய விதம் குறித்தும் இதழாளர் கிளாடி ஆல்வாரிஸ் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இந்த உரையாடல் “இல்லஸ்டிரேடட் வீக்லி ஆப் இந்தியா” என்ற வார இதழில் 23-03-1986இல் வெளியானது. சரியாக 23 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இன்றைய அறிவியல்-அரசியல் சூழலில் மிகவும் பொருந்தக்கூடிய பல கருத்துகள் இவரது நேர்காணலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் உழவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் இந்த நேர்காணல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இனி நேர்காணல்...

கிளாடி ஆல்வாரிஸ்: ஐம்பதுகளின் இறுதியில் நெற்பயிரின்மீது தங்களுக்கு ஏற்பட்ட ஆர்வம் குறித்து ஆரம்பத்தில் கூறுங்களேன்?

ரிச்சாரியா: என் வாழ்நாள் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து இயன்றவரை நெல்மணிகளை சேகரித்து அவற்றின் மரபு வேறுபாட்டை ஆராய்வதை வழக்கமான பணியாகக் கொண்டிருந்தேன். நெல் எனது சிறப்பு ஆராய்ச்சி என்பதால் என்னைக் காண வருபவர்களை சில நெல் மாதிரிகளோடு வந்து காணும்படி கூறுவேன். இவ்வாறுதான் 1959ம் ஆண்டுவரை பிகாரிலும் அதைத்தொடர்ந்து கட்டாக் நகருக்கு பணிக்கு வந்தபோதும் இந்த கொள்கையைக் கடைபிடித்தேன். தைவானில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு அல்லது மூன்று குட்டை வகைகளைக்கொண்டு காணப்பட்ட 67 நெல்வகைகளில் எனது ஆராய்ச்சியை கட்டாக் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கினேன்.

இந்த குட்டை வகைகள் வளர்ந்த நிலையில் சாயும் தன்மை அற்றவையாகவும் அதிக அளவு சத்துகளைத் தாங்கி வளரும் வல்லமை கொண்டவையாகவும் இருந்தன. எனவே அதிக நெல் விளைச்சல் பெறலாம் என்ற இலக்கில் முதன்மை தந்து ஆராய்ச்சி மேற்கொண்டோம். இந்த இரண்டு அல்லது மூன்று குட்டை வகைகளில் டெய்ச்சுங் நேட்டிவ் என்ற வகையை அடையாளம் கண்டோம். முதன்முதலாக நாங்கள்தான் இவ் வகையைப் பெருக்கி அவற்றிலிருந்து பொருத்தமான வகைகளை தேர்வு செய்யலாம் என முடிவு செய்தோம். இவற்றை ஆராய்ந்து தேர்வு செய்ததில் ஒரேயரு வகை மட்டுமே பூச்சி மற்றும் நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும் காணப்பட்டது.

கிளாடி ஆல்வாரிஸ்: பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம், நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பை களவாடியது எப்படி? உங்களைப் போன்ற உண்மையான நெல் வல்லுநர்கள் பலர் இருக்கும்போது, பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக பொறுப்பேற்கும்வரை நெற்பயிரையே பார்த்திராத ராபர்ட் சாண்ட்லர் அப்பதவிக்கு அமர்த்தப்பட்டது எப்படி?

ரிச்சாரியா: கட்டாக்கில் உள்ள நிறுவனம் முனைவர் சாண்ட்லருக்கு தெரியும். பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டபொழுது அவர் கட்டாக் வந்தார். வெள்ளை மனம் கொண்ட நான் அவருக்கு நிறுவனத்தை சுற்றிக்காட்டினேன். ஒரு இடத்தில் நாங்கள் நின்று கொண்டு சில நெற்பயிர்களைக் காட்டி “இவ்வகை உலகிலேயே அதிக விளைச்சலாக ஒரு ஏக்கருக்கு 9,000 பவுண்ட் தருவதோடு வழக்கமாகத் தாக்கும் பூச்சிகளின் பாதிப்பின்றி உள்ளதாகவும் கூறினேன்”. அவ்வகை டெய்ச்சுங் நேட்டிங் 1. இந்த இடத்தில் அப்பயிருக்கு நான் அளித்திருந்த தேர்வு எண்ணை மட்டும் கூறிவிட்டு அதன் தாயகத்தை கூறாமல் விட்டிருக்க வேண்டும். அதைக் கூறியதால் தவறு செய்து விட்டேன். “நீங்கள் இதை சாதித்து விட்டால் விந்தை மனிதர் என்று பாராட்டப்படுவீர்கள்” என்றார் சாண்ட்லர். அதற்கு பதில் அளித்த நான் “ஏற்கனவே நாங்கள் கண்டறிந்து விட்டோம்; அதை உறுதி செய்யப்போகிறோம்” எனக் கூறியதை சாண்ட்லர் குறித்துக் கொண்டார்.

முனைவர் சாண்ட்லர் புதுடில்லிக்கு திரும்பியதும் தொடர்புடைய இந்திய அரசு அலுவலர்களிடமும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்திடமும் டி.என்.1 மற்றும் ஐ.ஆர்.8 ஆகிய இரு உயர் விளைச்சல் நெல் வகைகளை அறிமுகம் செய்தால் இந்திய நெல் விளைச்சலில் மறுமலர்ச்சி ஏற்படும் எனவும் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.

அப்போது நான் தில்லியில் உள்ள வேளாண்மை மாளிகையில் நெல் குழுக் கூட்டத்துக்கு தலைமை ஏற்றிருந்தேன். நண்பகல் உணவு இடைவேளையின்போது தன்னை வந்து சந்திக்கும்படி பி.பி.பால் (அன்றைய இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக பொது இயக்குனர் - மொழிபெயர்ப்பாளர்) கூறினார். இக்குழுவின் உறுப்பினராக இல்லாதபோதும் ராக்பெல்லர் அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் கம்மிங்சும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இச்சிறப்பு கூட்டத்தில் முனைவர் கம்மிங்சை பங்கேற்க அனுமதிக்கும்படி முனைவர் பால் என்னை கேட்டுக் கொண்டார். நான், பால் அவர்களை சந்திக்க சென்றபோது பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த முனைவர் சாண்ட்லர் நமக்கு அளிக்கவிருக்கும் டி.என்.1 நெல்லை ஏற்றுக்கொண்டு அறிமுகப்படுத்துமாறு கூறினார்.

 நான் அவரிடம், “முனைவர் பால்! நீங்கள் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள். டி.என்.1 வகை பூச்சி மற்றும் நோய்களைக் கொண்டது. பூச்சி மற்றும் நோய்களுக்கு இலக்காவதோடு நச்சுயிரிகள் சிலவற்றின் தாக்குதலுக்கும் ஆளாகும் தன்மை கொண்டது. நான் தேர்வு செய்திருக்கும் வகை இதிலிருந்து வேறுபட்டது. அவர் அளிக்கும் டி.என்.1 வகையை மொத்தமாக விதைக்கும்போது நச்சுயிர்களின் தாக்குதல் கொண்ட பயிர்தான் கிடைக்கும்” எனக் கூறினேன். “வானூர்தி மூலம் அன்பளிப்பாக அவர்கள் அனுப்பினால் உங்களால் எப்படி தடுக்கமுடியும்” என்று முனைவர் பால் என்னிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த நான் “இதில் எனக்கு தொடர்பில்லை! நான் அங்கிருந்து இறக்குமதி செய்ய பரிந்துரைக்க மாட்டேன்” எனக்கூறிவிட்டேன்.

ஆல்வாரிஸ்: உங்கள் ஆராய்ச்சி பணிகளில் சாண்ட்லர் எவ்வாறு அடிக்கடி குறுக்கிட்டார்?

ரிச்சாரியா: வேறொரு சூழலில் நோய் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் 311 நெல்வகைகளின் மாதிரி விதைகளை எனது பார்வைக்கு கொண்டுவராமல் எனது பணியாளர்களிடம் கொடுத்தார். அப்பொழுது கட்டாக்கில் நெல் குறித்த கருத்தரங்கை நடத்திக் கொண்டிருந்தோம். பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து பல அறிவியலாளர்கள் கருத்தரங்கிற்கு வந்திருந்தனர். எனது பணியாளர்களிடம் வழங்கிய 311 நெல் வகைகளின் மாதிரிகளை இரு பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியை கட்டாக்கில் உள்ள நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் மற்றொரு பகுதியை ஐதராபாத்தில் உள்ள ஒருங்கிணைந்த நெல் ஆராய்ச்சி நடுவத்துக்கும் அளிக்கும்படி கட்டளையிட்ட சாண்ட்லர் அன்றே புறப்பட்டு சென்றார். வானூர்தி நிலையத்தில் அவரை வழியனுப்பினேன். அவர் சென்றதும் நான் எனது மகிழுந்துக்கு வந்து அமர்ந்தபொழுது எனது பணியாளர் என்னிடம் சாண்ட்லர் தனக்கு அளித்த நெல் விதை மாதிரிகளை இரண்டாக பிரித்து ஒரு பகுதியை அதை வானூர்தியில் செல்லும் ஐதராபாத் நடுவத்தின் பொறுப்பாளரான முனைவர் பிரீமேனிடம் கொடுக்கும்படி கூறியதாகத் தெரிவித்தார். இவ்வாறு நச்சுயிர் தாக்குதலுக்கு இலக்காகும் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவன நெல் மாதிரிகள் எனது பார்வையில் படாமலேயே கொண்டு வரப்பட்டதை அறிந்து கொண்டேன்.

வேற்று நாட்டவரின் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு சாண்ட்லர் அளித்த நெல் விதை மாதிரிகளை பகிர்ந்து அளித்தமைக்காக எனது பணியாளரை நான் கடிந்து கொண்டேன். இருந்த போதிலும் இவ்வகை விதைகளுக்கு தடையின்மை சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளனவா? எனக் கேட்டேன். ஏனெனில் தடையின்மைச் சான்றிதழ் பெறப்படாத விதை மாதிரிகளை இறக்குமதி செய்ய முடியாது. அவ்வாறு சான்றிதழ் ஏதும் இல்லை என்று எனது பணியாளர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நான் சாண்ட்லரிடம் பின்வருமாறு நேரடியாகக் கேட்டேன்: “பல நெல் விதை மாதிரிகளை எனது பணியாளரிடம் நீங்கள் கொடுத்துள்ளதாகவும் அவற்றில் பாதியை முனைவர் பிரீமேனிடம் அளிக்கும்படி கூறியிருப்பதையும் நான் தெரிந்து கொண்டேன். முதலில் உங்களிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் தேவைப்படுகிறது”. அதற்கு பதில் கூறிய சாண்ட்லர், “நான் உங்கள் நாட்டில் நச்சுயிர்களை அறிமுகப்படுத்தப்போகிறேன் என்ற பொருளில் கூறுகிறீர்களா” என்றார். அதற்கு நான் “நச்சுயிர் (வைரஸ்) குறித்து நான் வினா எதுவும் எழுப்பவில்லை: நீங்கள்தான் அவ்வாறு சொல்கிறீர்கள். நான் தடையின்மைச் சான்றிதழை மட்டுமே கேட்கிறேன்: ஏனெனில் விதிமுறைகளின்படி தடையின்மைச் சான்றிதழ் இன்றி வெளிநாட்டு வகை விதைகளை அனுமதிக்க முடியாது” என்று கூறினேன். அவரிடம் சான்றிதழ் இல்லாததால் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதிலிருந்து எனது பணியாளர்களில் ஒருவர் அல்லது இருவர் கையூட்டு பெற்றுக்கொண்டு கட்டாக் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவன நிகழ்வுகளை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு தெரிவித்து வந்தது தெளிவாகி விட்டது. உலக நெல் ஆராய்ச்சியில் முன்னணி இடம் பெறுவதற்காக எங்கள் நிறுவனத்தின் பணிகளை இப்படி களவாடினார்கள் எனத் தெரிகிறது. சாண்ட்லர் நேரடியாக தில்லி சென்று நடுவண் வேளாண்மை அமைச்சராக இருந்த சி. சுப்ரமணியத்திடம், நான் (ரிச்சாரியா) இயக்குநராக இருக்கும்வரை கட்டாக் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவன பணியாளர்கள், தம்மோடு (சாண்ட்லரோடு) ஒத்துழைக்க மாட்டார்கள் என தெரிவித்ததை பிறகு தெரிந்து கொண்டேன். இதைத்தொடர்ந்து முனைவர் ரிச்சாரியாவை பணி ஓய்வில் செல்லச் சொல்லுங்கள் என சி. சுப்ரமணியம் ஆணையிட்டார். ஆனால் அப்போதைய அமைச்சரவை செயலாளரும் முந்தைய வேளாண்மை செயலாளராகவும் இருந்த சிவராமன், “இந்த முடிவை (ரிச்சாரியாவின் பணி ஓய்வு) மேற்கொள்ள வேண்டாம்” எனவும் “முனைவர் ரிச்சாரியா பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை தற்போதைய நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்: அவரை பணி ஓய்வில் செல்லும்படி நாம் கூறக்கூடாது: இன்னும் சிறிது காலத்தில் நாம் தொடங்கவிருக்கும் நெல் மேம்பாட்டு குழுமத்தின் இயக்குநராக அவரை மாற்றுவதே சரியான வழிமுறையாக இருக்கும்” எனவும் கூறினார்.

சி.சுப்ரமணியத்தை சந்திக்கும்படி சிவராமன் என்னை அறிவுறுத்தினார். அமைச்சரின் உதவியாளரிடம் அடுத்தநாள் காலை 6.30 - 7.00 மணிக்குள் அவரது இல்லத்தில் அவரை சந்திப்பதற்கான அனுமதியை தொலைபேசி வாயிலாக பெற்றுக்கொண்டேன். அடுத்தநாள் காலை அங்கு சென்றேன். எங்கும் அமைதி நிலவியது. ஒருவர் மட்டுமே வீட்டை தூய்மை செய்து கொண்டிருந்தார். அவரிடம் நான் அமைச்சரை சந்திக்க அனுமதி பெற்றிருப்பதை தெரிவித்தவுடன் அமைச்சரிடம் சென்று கூறினார். நான் அழைக்கப்பட்டதும் சி.சுப்ரமணியம் பின்வருமாறு கூறினார்: “ஆரம்பத்தில் டெய்ச்சுங் நல்ல வகை என்றீர்கள்: இப்போது எதிர்க்கிறீர்கள்”. அதற்கு நான், “நாங்கள் தேர்வு செய்த வகையை மட்டுமே நான் தெரிவித்தேன். நீங்கள் மொத்தமாக இறக்குமதி செய்து அறிமுகப்படுத்தினால் நாட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும். இங்குள்ள அனைத்து உள்ளூர் நெல்வகைகளும் நச்சுயிரி நோய்கள், இதர நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகும். நான் தேர்வு செய்துள்ள வகை வேறு” என பதில் அளித்தேன். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: “எனக்கு இதெல்லாம் தெரியாது. இப்போது ராக்பெல்லர் அளிக்கும் நெல்வகையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்”. அதற்கு நான் “இதை மறுக்கிறேன்: பிற்காலத்தில் எந்த இயக்குநர் இந்த நெல்வகையை அறிமுகப்படுத்த பரிந்துரைத்தார் என்ற குற்றச்சாற்றை நான் ஏற்க விரும்பவில்லை” என பதில் அளித்தேன்.

ஆல்வாரிஸ்: விதைகளை மொத்தமாக இறக்குமதி செய்வதில் உங்களுக்கு என்ன சிக்கல்?

ரிச்சாரியா: மொத்தமாக இறக்குமதி செய்யப் படும் விதைகள் பூச்சி மற்றும் நோய்கள் அற்றவையாக இருக்காது. நீங்கள் பெருமளவு விதைகளை இறக்குமதி செய்யலாம். ஆனால் அவற்றை வேதிப்பொருட்களுடனும் பூஞ்சாணக் கொல்லி களுடனும் நேர்த்தி செய்து வைத்திருத்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் பூச்சிகளின் முட்டைகள், நோய் உண்டாக்கும் பூஞ்சாண வித்துகள் மற்றும் உடலம் போன்றவை அழிக்கப்படும். இதை செய்ததாக அவர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு செய்தாலும் சுற்றுச்சூழலில் காணப்படும் இதர பயிர்களில் இருக்கும் பூச்சி மற்றும் பூஞ்சாண நோய்களுக்கு இப்பயிர்கள் எளிதில் இலக்காகும். இதனால் நெற்பயிர் பாழாகும். நமது பாரம்பரிய உள்ளூர் வகைகளுக்கும் நோய்கள் பரவும். இதுதான் அறிவியல் உண்மை. நெல் துங்ரோ நச்சுயிரி  அறிமுகம் மிகவும் ஆபத்தானது.

ஆல்வாரிஸ்: நோய்களுக்கு இலக்காக என்ன காரணம்?

ரிச்சாரியா: குறிப்பிட்ட பயிர்வகையின் இயல்புகளே காரணம். இப்பண்புகள் மரபணுவுடன் தொடர்பு உடையவை.

ஆல்வாரிஸ்: ஆகையால் குறிப்பிட்ட நச்சுயிரிக்கு எளிதில் இலக்காகும் எனத்தெரிந்த குறிப்பிட்ட வகையைக் கொண்டுவருவது இயலும்தானே?

ரிச்சாரியா: ஐ.ஆர்.8 மற்றும் டி.என்.1 ஆகிய வகைகளை அறிமுகப்படுத்தி இதைத்தான் செய்தனர். அவர்கள் வல்லுநர்கள் என்பதால் இது குறித்து நன்றாகத் தெரிந்தே செய்தார்கள்.

ஆல்வாரிஸ்: நீங்கள் வைத்திருந்த டெய்ச்சுங் வகை நெல்லுக்கும் பிறகு வந்த டெய்ச்சுங் வகை நெல்லுக்கும் என்ன வேறுபாடு?

ரிச்சாரியா: நான் தேர்வு செய்த வகை நச்சுயிரிகளுக்கும், நோய்களுக்கும், பூச்சிகளுக்கும் எதிர்ப்புத் தன்மை கொண்டது. மொத்தமான விதைத்தொகுப்பு (Bulk seed) பல்வேறு (Heterog­enous ) பண்புகளைக் கொண்டது. இத்தொகுப்பில் இருந்து நமது நோக்கத்திற்கு பொருந்தும் ஒரு செடியைத் தேர்வு செய்யலாம். இவ்வாறுதான் ஆயிரக்கணக்கான டெய்ச்சுங் செடிகளில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து அவற்றை பெருக்கம் செய்தேன். இவ்வாறு செய்யாமல் மொத்த விதைத் தொகுப்பை அப்படியே விதைத்தால் அவற்றின் அடுத்த தலைமுறை நல்லவற்றையும், அல்லவற்றையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.

ஆல்வாரிஸ்: அதாவது நாட்டின் “பசுமை புரட்சி”யோடு இதுவும் நுழைந்ததா?

ரிச்சாரியா: இதன் ஒரு பகுதியாக “பசுமை புரட்சி” என்ற போர்வையில் இவ்விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் மொத்த விதைத் தொகுப்பினை இறக்குமதி செய்து பயன்படுத்தும்போது நமது நெல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்பதையும், புதிதாக அறிமுகமாகும் நச்சுயிரிகளை (துங்ரோ நச்சுயிரி, இதர நச்சுயிரிகள்) கட்டுப்படுத்துவது கடினம் என்பதையும் நான்தான் கண்டறிந்து உணர்த்தினேன். இப்போது வெளிநாடுகளைத் தாயகமாக கொண்ட குட்டை மரபணுக்கள் இந்திய நெல்வகைகளின் நிலைத்த பண்புகளாகி விட்டன.

ஆல்வாரிஸ்: நெற்பயிரில் மிகக்குறைந்த ஈடுபாடே கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகள் நெல் ஆராய்ச்சியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு இலட்சக்கணக்கான மக்களின் தலைவிதியை முடிவு செய்வதாக அமைந்துவிட்டது, எப்படி?

ரிச்சாரியா: அவர்கள் வென்றது எப்படி என்பது இதுதான். கட்டாக்கில் உள்ள நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனம் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தால் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களில் நிறுவப்பட்ட பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் தோல்வி அடைந்திருப்பதோடு காணாமலும் போயிருக்கும். அவர்கள் எந்த இடத்திலும் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினால் அவர்கள் விரும்பியபடி நெல் வகைகளை அறிமுகம் செய்து நெல் ஆராய்ச்சியில் மேலாதிக்கம் செய்ய முடியும் எனத் தேடினார்கள். அவர்கள் முதலில் இந்திய அரசை அணுகி கட்டாக்கில் உள்ள நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை ராக்பெல்லர் அறக்கட்டளையிடம் ஒப்படைத்துவிடும்படியும் அதை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமாக உருவாக்கப் போவதாகவும் கூறினார்கள். அப்போது தான் நான் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன்.

இது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டபோது நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றக்கூடாது எனவும் எந்தவொரு பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனமும் ஆராய்ச்சியை உறுதியற்ற தன்மைக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறினேன். மேலும், அவற்றை நமது அரசால் கட்டுப்படுத்த இயலாது என்றும் தனியார் நிறுவனமான ராக்பெல்லர் அறக்கட்டளையிடம் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை ஒப்படைக்கக்கூடாது எனவும் வலியுறுத்தினேன். அன்றைய காலக்கட்டத்தில் அரசின் நிலைப்பாடும் இதுவாகத்தான் இருந்தது. இதன் பிறகு அறுபதுகளில் (1960) பிலிப்பைன்ஸ் நாட்டில் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவப்போவதாக அவர்கள் அறிவித்தனர். வழக்கமாகப் பயிரிடப்படும் நெல் வகைகளைவிட 30-40 விழுக்காடு கூடுதல் விளைச்சலைத் தரவல்ல நெல் வகைகளை உள்ளூர் பாரம்பரிய வகைகளில் ((Germ­plasm) தேர்வு செய்து உருவாக்கியிருந்தன்மூலம் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் சிறப்பாக இயங்கியது என்று சொல்லலாம்.

அதிக ஊட்டச்சத்துகளை ஏற்கும் வகைகளை நாங்கள் உருவாக்கினோம். சாயாத நிமிர்ந்த நெல்வகை கண்டுபிடிப்பு, பசுந்தாள் உரப்பயிர்கள், பயிர் ஊட்டம், கதிரியக்க மாற்று வடிவங்களின் பயன்பாடு (Isotope) போன்றவை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தோம். இவை அனைத்தும் திடீரென முடிவுக்கு வந்தன. எதிர்பாராதவிதமாக இந்த ஆராய்ச்சித் திட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அறிவியலாரின் செயல்பாடுகள் உயர்விளைச்சல் நெல்வகைகளை உருவாக்க திசை திருப்பி விடப்பட்டன. இந்த உயர் விளைச்சல் நெல்வகைகளுக்கு அதிக அளவில் வேதி உரங்கள் தேவைப்பட்டன. இந்த உயர்விளைச்சல் வகைகள் குட்டைத்தன்மை கொண்ட மரபணுவை டி.என்.1 மற்றும் ஐ.ஆர்.8 ஆகிய வகைகளில் இருந்து பெற்றுக்கொண்டன. இது எதைக் காட்டுகிறது என்றால் ஐ.ஆர்.8 அல்லது டி.என்.1 வகைகள் பெற்றோராக இல்லையெனில் உயர் விளைச்சல் நெல்வகைகளை உருவாக்க முடியாது என்பதையே உணர்த்துகிறது.

அதே வேளையில் உயர்விளைச்சலைத் தரவல்ல இத்தகைய மரபணுக்கள் நமது உள்ளூர் நெல்வகைகளிலேயே உள்ளன என்பதை மறந்து விட்டனர். டி.என்.1 மற்றும் ஐ.ஆர்.8 வகைகளை பெற்றோராகப் பயன்படுத்தி உயர்விளைச்சல் வகைகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோதும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் (Indian Council for Agricultural Research) ராக்பெல்லர் அறக்கட்டளையின் அழுத்தத்திற்கு இரையானது. இந்த சதியின் பின்னணியில் இருந்தவர் முனைவர் ராபர்ட் இ. சாண்ட்லர்தான். இந்திய நெல் மரபணு வங்கியில் (Germplasm  குட்டைப்பயிர்களை உருவாக்கும் மரபணுக்கள் இல்லை என்ற இந்திய வேளாண்மைக் ஆராய்ச்சிக் கழகத்தின் கூற்று உண்மையன்று. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் முடிவுகளுக்கு சாதகமாகப் பேசினால் உங்களை அங்கீகரித்து உயர் அலுவல்களில் அமர வைப்பார்கள். மாறாக நீங்கள் எதிர்த்துப் பேசினால் உங்களை ஏற்க மறுத்து வெளியேற்றி விடுவார்கள். இதற்குச் சான்றாக என்னை வெளியேற்றியதன்மூலம் அவர்கள் வெற்றி அடைந்ததையே கூறலாம்.

ஆல்வாரிஸ்:எனவே உங்களை கட்டாயப்பணி ஓய்வில் அனுப்பினார்கள் என்று சொல்லலாம் தானே?

ரிச்சாரியா: நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனம் 1966ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப்படவிருந்தது. நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்ல மூன்று மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என எனக்கு ஓலை வந்தது. ஜனவரி 1, 1966 அன்று என்னிடம் ஓலை ஒப்படைக்கப்பட்டது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் ஆளுகையில் மார்ச் 31, 1966க்கு பிறகு பணியாற்ற நான் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் மூன்று மாதங்களுக்கு முன்னதாக பணி ஓய்வில் செல்லும்படி ஓலை அனுப்பப்பட்டதன் மூலம் நான் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் சேரும் வாய்ப்பை இழக்க வேண்டியதாயிற்று. அடுத்து பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக இயக்குநருக்கு அடுத்த மூத்த அறிவியலாளராக நான் இருந்தேன். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் அடுத்த இயக்குநராக நான் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.

எனது வழக்கறிஞர், எனது கட்சிக்காரரான முனைவர் ரிச்சாரியாவை விரைவில் ஓய்வில் செல்லும்படி அரசாணை பிறப்பித்தமைக்கான காரணங்களைக் கூறும்படி இந்திய அரசு (நடுவண் வேளாண்மை மற்றும் உணவு அமைச்சகம்) மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம்  ஆகியவற்றுக்கு எதிராக ஒரிசா உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றை பதிவு செய்தார். “ரிச்சாரியா இந்த நாட்டுக்கு என்ன துரோகம் செய்தார்?” எனவும் “இன்னும் சில மாதங்கள் பணியில் தொடர அனுமதித்திருந்தால் கௌரவமான முறையில் ஓய்வில் செல்வார்” எனவும் எனது வழக்கறிஞர் வாதிட்டார். அவர்களிடம் (இந்திய அரசு) இருந்து எந்த பதிலும் இல்லை. எனது செய்தியில் ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொல்வது போன்று இரண்டு முடிவுகள் அவர்களிடம் இருந்தன. ஒன்று அவர்கள் குறிப்பிட்ட நாளில் நான் ஓய்வு பெற்றால் அவர்களது நபரான ம.சா.சுவாமிநாதனை அடுத்த இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக இயக்குநராக நியமித்து விடலாம். மற்றொன்று நான் பணியிலிருந்து வெளியேற்றப்படுவதன் மூலம் அவர்களால் விரும்பப்பட்ட எந்த வகையான உயர்நெல் விளைச்சல் வகைகளையும் எவ்விதத்தடையுமின்றி அறிமுகம் செய்து விடலாம்.

இரண்டு, மூன்று, நான்கு என ஆண்டுகள் ஓடின. நான் கட்டாக்கில் இருந்து வெளியேற வேண்டும். தொடர்ந்து எவ்வளவு நாட்களுக்கு நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் மாளிகையிலேயே தங்கியிருப்பது. சிறிது காலம் கழித்துவிட்டு வாடகைக்கான தண்டத்தொகையை வசூலித்ததோடு காவல்துறை நடவடிக்கையையும் மேற்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் வீட்டுக்கு வரும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் நான் பல வழிகளில் மனிதாபிமானமற்ற முறையில் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டேன். அவற்றை நான் இங்கு விவரிக்க விரும்பவில்லை. அங்கு சகிக்க இயலாத நிலை உருவானவுடன் கட்டாக்கிலிருந்து வெளியேறி எனது வீட்டுக்குச் செல்லும்படி எனது வழக்கறிஞர் அறிவுறுத்தினார்.

எனக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய சலுகைகளை அளிக்க எதிர்த் தரப்பினர் தாமதம் செய்வதன்மூலம் எனக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி குறித்து தலைமை நீதிபதியிடம் கட்டாயம் கூறும்படி எனது வழக்கறிஞரிடம் கேட்டுக்கொண்டேன். அப்போது இந்த வழக்கை மூன்று நாட்கள் விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. நான் கட்டாக் செல்ல வேண்டி வந்தது. ஒரு கட்டத்தில் எங்களிடம் ஒன்றுமே இல்லாத நிலை ஏற்பட்டது.

நாம் என்ன செய்ய வேண்டும்? என என் மனைவியிடம் கேட்டேன். நாங்கள் எங்கள் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டியிருந்தது. அவர்கள் (அரசு) எனக்கு ஒரு செய்தியை தந்தார்கள். நான் வழக்கை திரும்பப்பெற்றால் உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில்  சேர்ந்து பணியாற்ற என்னை அனுமதிப்பதாகக் கூறினார்கள். அப்போது என் மனைவி பின்வருமாறு கூறினாள், “தயவு செய்து நீங்களாக இருங்கள். ஆனால் உங்களிடம் நான் ஒன்றைக் கூறுகிறேன்! நீங்கள் வெளிநாட்டுக்கு சென்றால் முனைவர் ரிச்சாரியா ஏதோ ஊழலில் சிக்கிக் கொண்டுவிட்டார் என்று மக்கள் கூறுவார்கள்”. இதைக் கேட்டவுடன் அவளது கருத்துக்கு உடன்பட்டு வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தில் சேரும் முடிவைக் கைவிட்டேன். ஊழலுக்கு ஆளான பலர் அந்நிறுவனத்துக்கு செல்கின்றனர் என்ற அவளது கருத்தை நான் ஒப்புக் கொண்டேன்.

எனது மனைவியின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கினேன். மூன்று வாரங்கள் கட்டாக் சென்று வழக்கறிஞரை சந்தித்து வழக்குக் கட்டணங்களை செலுத்தினேன். எனது வழக்கறிஞரும் தலைமை நீதிபதியிடம் எனது வழக்கு குறித்து விளக்கினார். இந்திய அரசும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகமும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களுக்கு சாதகமான தரவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியது. இறுதியாக அவர்கள் பின்வரும் பதிலை அளித்தனர். “நாங்கள் முனைவர் ரிச்சாரியாவை அறிவியலாளராகக் கருதவில்லை. எனவே அவரை இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து ஓய்வு பெறும்படி கூறினோம்”.

ஆமாம் அய்யா, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் முனைவர் ரிச்சாரியாவை அறிவியலாளராகக் கருதாததால் அதில் சேரும் அவரது விருப்பத்தை அவர்கள் ஏற்கவில்லை போலும். வழக்கில் நான் வெற்றி பெற்றேன். என்னை மூன்று மாதங்களுக்குள் ஓய்வில் செல்லும்படி அவர்கள் அனுப்பிய ஓலையை அவர்கள் நியாயப்படுத்தவில்லை. இதையடுத்து நீதிமன்றத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. என்னை நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்தனர்: நான் மறுத்தேன்: எனது கையப்பத்தை பெறுவதற்காக சில கடிதங்களை போபாலுக்கு அனுப்பினார்கள். நான் இயக்குநர் பொறுப்பில் இருந்தமையால் மறுபக்கம் பொறுப்புகளை ஒப்படைத்தேன். நான் இப்போது சேரப்போவதில்லை எனக் கூறினேன். எனது கோப்புகள் அனைத்தும் பூட்டப்பட்டன. நான் பொறுப்புகளை பெற்ற பத்மநாபனிடம் “இந்த அறையிலேயே ஒரு மாதம் இருக்கப்போகிறேன்” என்று கூறினேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு “சரி ஐயா! நீங்கள் பணியாற்றலாம்” என்றார்.

அடுத்த நாள் காலை நான் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சென்றபொழுது எனது அறையில் இரு பூட்டுகள் தொங்கின. எனது ஆராய்ச்சிப் பொருட்களும் அறிவியல் கட்டுரைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இன்றுவரை அவை எனக்குக் கிடைக்கவில்லை.

ஆல்வாரிஸ்: நெல் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கும்படி மத்திய பிரதேச அரசு எப்போது கூறியது?

ரிச்சாரியா: நான் 1971ஆம் ஆண்டு வேளாண்மை அறிவியலராகச் சேர்ந்தேன். சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் நெல் மரபணு வங்கியை (Germplasm Bank) ஏற்படுத்தும் பணியைத் தொடர்ந்தேன். வெகுவிரைவில் அதிக வகைகளைக் கொண்ட மரபணு வங்கியாக மாற்றமடைந்தது. பஸ்தார் (Bastar) பகுதியில் உள்ள அபுஜ்மோடு (Abhujmod) என்னும் இடத்தில் இருந்து பெறப்பட்ட வகைகளும் இந்த வங்கியில் பராமரிக்கப்பட்டன.

ஆல்வாரிஸ்: இந்த இரண்டாவது நிறுவனமும் மூடப்பட்டது எப்படி என்று கூறுங்களேன்? உலக வங்கி ஏன் இதில் ஆர்வம் காட்டியது? இதில் ம. சா. சுவாமிநாதனின் பங்கு என்ன?

ரிச்சாரியா: ஏற்கனவே ம. சா. சுவாமிநாதன் பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதையடுத்து இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் துணைத்தலைவராகவும் செயலாளராகவும் ஆக்கப்பட்டார். இதனால் நெல் தொடர்புடைய அனைத்துத் திட்டங்களும் அவரது கட்டுப்பாட்டுக்குள் வந்தன. அனைத்து வகை நெல் மாதிரிகளையும் சேகரிக்க அவர்கள் விரும்பினர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் இருந்த அனைத்து வகை நெல்மாதிரிளும் சேகரிக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கட்டாக் நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் பராமரிக்கப்பட்டன.

அடுத்து அவர்கள் என்னிடம் வந்தனர். நான் ஆராய்ச்சி செய்து முடிக்கும்வரை என்னிடம் உள்ள நெல்மாதிரிகளைத் தர இயலாது எனவும், நான் அறிந்திராத ஒன்றை மற்றவர்களுக்கு எவ்வாறு அளிக்க முடியும் எனவும் கேட்டேன். இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் இருந்து வந்த ஓரிருவர் தனிப்பட்ட முறையில் என்னை சந்தித்தனர். அவர்கள் என்னிடம் “உங்களிடம் உள்ள நெல்மாதிரிகளை எங்களுக்கு அளிக்க ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? அவர்களும் தங்களிடம் உள்ள நெல்மாதிரிகளை பரிமாற்றம் செய்து கொள்ளத் தயாராக உள்ளனர்!” என்றனர். பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவன பிரதிநிதிகளும் பரிமாற்ற அடிப்படையிலேயே நெல் மாதிரிகளைக் கேட்பதாக சாதுரியமாகப் பேசினர். அவர்களது நெல் மாதிரிகளை பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையெனவும் அவை நச்சுயிரிகளின் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளவை எனவும் எனது நெல்மாதிரி நச்சுயிரி எதிர்ப்புத்தன்மை கொண்டது எனவும் தெளிவாகக் கூறிவிட்டேன். அப்பொழுதே மத்திய பிரதேசத்தின் நெள்களஞ்சியமான சட்டிஸ்கர் பகுதிக்கு நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட நெல் வகைகளை அளித்து விட்டேன்.

ஆல்வாரிஸ்: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநரும், பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவன அணியில் இருந்தாரா?

ரிச்சாரியா: அனைத்துக்கும் பின்னணியில் அவர் நின்றார். ஏனெனில் அவரது அதிகாரம் அப்படிப்பட்டது. நடுவண் நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் எவ்வளவு நெல் வகைகள் உள்ளன?; இந்த வகைகளில் பாதி எப்படி தில்லிக்குச் செல்லப்போகிறது?; அங்கிருந்து பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு எப்படி செல்லும்? என்பன போன்றவற்றைத் திட்டமிட்டு முறைப்படுத்தும் அதிகாரம் அவரிடம் இருந்தது. அனைத்துக்கும் அவரே அடிப்படை! மேலும் அவரே இந்திய அரசின் செயலாளராகவும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராகவும் இருந்தார். இந்தியரின் உணவு ரகசியங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்திய உணவுக் கொள்கையில் அவருக்கு இருந்த அனுபவமும், அறிவும் அவருக்குச் சாதகமான அம்சங்களாக விளங்கின. நெல்வளம் அனைத்தும் அவருக்குத் தெரிந்ததுதான். எங்கெங்கு நெல் வகைகள் உள்ளன? யார் யார் அவற்றில் ஆராய்ச்சிகள் செய்கிறார்கள்? என்பன போன்ற விபரங்கள் அனைத்தும் அவருக்குத் தெரியும்.

ஆல்வாரிஸ்: அதனால்தான் மத்திய பிரதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் மூடப்பட்டதா?

ரிச்சாரியா: எனது உள்ளூர் பாரம்பரிய நெல் மரபணு வங்கியை அளிக்க மறுத்து நேராக நான் எதுவும் கூறவில்லை. நான் நன்கு ஆராய்ந்த உடனே நெல் மாதிரிகளை உங்களுக்குத் தருகிறேன் என்று கூறிவிட்டேன். நான் சேகரித்த மற்றும் மேம்பாடு  செய்த சில குட்டை வகைகளையும் உள்ளடக்கிய நெல் மாதிரிகள் சிலவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இந்த நோக்கத்திற்காக என்னைச் சந்திக்க வந்த பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளரிடம் “எனது நெல் மாதிரி தென்கிழக்கு ஆசியாவில் நல்ல விளைச்சலைத் தருமானால், நீங்கள் எனது நெல் மாதிரிகளில் குறிப்பாக குட்டை மரபணுக்களில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிச் சாதனைகளின் ஒரு பிரதியை எனக்கு அனுப்பி வைக்கவும். இதுவே எனது நிபந்தனை” என்று கூறினேன். அவர்கள் எனது நெல் மாதிரியை வாங்கிச் சென்றதோடு சரி. அதன் பிறகு எனக்கு எந்த ஒரு செய்தியையும் அவர்கள் அனுப்பி வைக்கவில்லை.

நெற்பயிரின் தாயகமான இந்தியாவில் சிறந்த நெல் வகைகளை நாம் பெற்றுள்ளோம் என்பதை எடுத்துக்காட்ட நான் போராடி வந்திருக்கிறேன். அவர்களும் அதை ஒப்புக்கொண்டு அவர்களது நூல்களில் மத்திய பிரதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிகளைக் குறிப்பிட்டுள்ளனர். இதனால்தான் அவர்கள் இந்த நெல் மாதிரிகளைப் பெற விரும்பினர். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ராய்ப்பூருக்கு வந்து எனது பணிகளைப் பார்த்தார்கள். எதுவும் அவர்களுக்கு மறைக்கப்படவில்லை. அவர்களால் நான் பாதிக்கப்பட்டதால், நான் பாடம் கற்றுக் கொண்டதாக அவர்கள் எண்ணியதன் அடிப்படையில் நெல் மாதிரிகளை அளிக்கும்படி என்னை அணுகினார்கள்.

இதன் பிறகு நான் மாற்றம் அடையவில்லை என்றும், மத்திய பிரதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கோ, இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்துக்கோ நிதி அளிக்காததால் இந்த நெல் மாதிரி வகைகளை பகிர்ந்து கொள்ள எனக்கே திருப்தி இல்லை என்றும் கண்டுகொண்டார்கள். எனது பல ஆண்டுகால முயற்சிகளும் மாநில அரசின் நிதி உதவியுமே இதற்கு அடிப்படை. எனவேதான் எனது நெல் மாதிரிகளை ஆராய்ந்த பின் தருகிறேன் என்று கூறினேன். நான் அவர்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்தார்கள்.

எனது மாதிரிகளில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட தொழில்நுட்ப பணியாளரின் பொறுப்பில் இந்த மாதிரிகள் இப்போதும் உள்ளன. அவர்களது திட்டம் குறித்து சிந்தித்து அவர்களது பாதையில் நன்றாக சென்று கொண்டிருக்கிறார்கள். நமது அரசு இதுபோன்ற எந்தவொரு திட்டத்தையும் ஒருபோதும் மேற்கொள்ளாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். நெல் ஆராய்ச்சியைத் தொடர்ந்திட நாங்கள் நான்கு கோடி ரூபாய் (உலக வங்கியின் நிதியாகவோ, வேறு நிறுவன நிதியாகவோ இருக்கலாம் தருகிறோம் எனவும் மத்திய பிரதேச நெல் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சிப்பணிகள் வேறெந்த நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஒத்ததாக இருக்கக்கூடாது எனவும் அவ்வாறு இருப்பின் அப்பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறினர். இதன் அடிப்படை யாதெனில் மரபியல் வளங்களை திடீரென கைப்பற்றிக் கொண்டு பூச்சி மற்றும் நோய்களுக்கு எளிதில் இலக்காகும் குட்டை நெல்வகைகளை புகுத்துவதேயாகும். இவ்வாறு புகுத்துவதன் மூலம் அவர்களின் நிறுவனங்கள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்து பன்னாட்டு நிறுவனங்களின் வருவாய் பெருகும்.

நான் ஆராய்ச்சியைத் தொடர்ந்தால் உள்ளூர்  உயர் விளைச்சல் நெல் வகைகளை அறிமுகப்படுத்தி விடுவேன் என்று அவர்கள் உணர்ந்தனர். இதனால் அவர்கள் எனது பணியைத் தடுத்து எனது நெல் மாதிரிகளையும் பதிவேடுகளையும் பிடுங்கிக்கொண்டு என்னை எதுவும் செய்ய இயலாது தடுத்ததன் மூலம் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். அவர்கள் பூச்சி மற்றும் நோய்களுக்கு எளிதில் இலக்காகும் புறக்கணிக்கத்தக்க நெல்வகைகளை நாடு முழுவதும் பரவச் செய்து நெல் உற்பத்தியைக் குறைக்க முற்பட்டுள்ளனர்.

ஆல்வாரிஸ்: இந்தியாவில் நெல் உற்பத்தியை அதிகரிக்க நம்பத்தக்க மாற்று வழிகள் இருந்தனவா? ஆதிவாசிகள் குறித்தும் அவர்களது தொழில் நுட்பங்கள் குறித்தும் பேசி உள்ளீர்கள். உங்கள் மக்கள் ஏதேனும் கருத்துகளைக் கொண்டிருந்தனரா?

ரிச்சாரியா: குட்டைத்தாவரத் தொழில் நுட்பத்துக்கு சவால் விடும் வகையில் உடலப்பெருக்க ((Vegetative Propagation) முறையைப் பயன்படுத்தி வீரிய ஒட்டு வகைகளின் வீரியத்தைப் பெருக்கி இந்தியாவில் நெல் விளைச்சலைப் பெருக்க முடியும். ஆனால் நமது நெல் அறிவியலாளரின் ஆற்றலும் அறிவும் வீணாக்கப்பட்டு, பலனற்ற வழிகளில் அவர்கள் சென்று கொண்டுள்ள நிலையில் புதிய முயற்சிகளை நோக்கி அவர்களைத் திருப்ப வேண்டியுள்ளது. உயர் விளைச்சல் குட்டை வகைகள் நல்லதல்ல என்பது அய்யத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை அனைவரும் அறிந்த உண்மைகளாகும். அடுத்து என்ன? நல்லது! இந்தியாவில் உள்ள பயிர்பெருக்குநர்கள் தங்களது தனித்த முறைகளை உருவாக்குவார்கள் என்று எண்ணுகிறேன். இந்தியாவில் வீரிய ஒட்டுரக வீரியத்தை பயன்படுத்தும் திட்டத்தை பன்னாட்டு நெல் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

 பல ஆண்டுகள் பணியாற்றி ஒட்டு ரகங்களின் வீரியத்தைப் பயன்படுத்தி புதுவகைகளை உருவாக்கியுள்ளேன். சீனாவில் உள்ளதைப் போல ஆண் மலட்டு வரிசைகளை உருவாக்க ஆலோசனை கூறுகின்றனர். நிலையான ஆண் மலட்டு வரிசைகளை உருவாக்குவதும் நிலைநிறுத்தி முறைகளை உருவாக்குவதும் எளிதான செயலல்ல. இவற்றை உருவாக்க அதிக காலமும் தரமான நெல் வகையும் தேவைப்படும். எனினும் இவற்றை உருவாக்குவது குறித்து உறுதி சொல்ல முடியாது. தரப்பண்புகளை இம்முறையில் நிலையாக பராமரிக்க இயலாது. பாசுமதி போன்ற வகைகளில் அதே நறுமணத்துடன் கூடிய உயர்விளைச்சல் வீரிய ஒட்டுவகைகளை உருவாக்க இயலாது. பாசுமதியிலும் ஆண் மலட்டு வரிசைகள் இருப்பது அவசியம். இது சாத்தியமானதாகவும் இருக்கலாம். சாத்தியமற்றதாகவும் இருக்கலாம். ஆனால் இந்த அறிவியலாளர் அனைவரும் இவை கிட்டுமோ கிட்டாதோ கண்டிப்பாக பணியாற்றுவது அவசியம்.  இது அவர்களது தனிப்பட்ட ஆராய்ச்சிப்பணியின் மீதான கவனத்தையும் ஆற்றலையும் திசை திருப்பும்.

உடலப்பெருக்கத்தின் மூலம் முதல் தலைமுறை (F1) மற்றும் இரண்டாம் தலைமுறை (F2 ) வீரியம் பிந்தைய தலைமுறைகளிலும் வெளிப்படும்) தாவரங்களை வளர்த்து வீரியத்தன்மையைப் பயன்படுத்துவதால் விதை உற்பத்திக்கு ஆகும் செலவு குறையும் அல்லவா? இதை ஏன் முயற்சிக்கக்கூடாது? சீனாவில் இருந்து ஆண் மலட்டு  ரிசைகளை இறக்குமதி செய்வதன் மூலம் நாம் மிகப்பெரிய தவறைச் செய்கிறோம். டி.என்.1 மற்றும் ஐ.ஆர்.8 போன்ற வகைகளுக்கு ஏற்பட்டதைப் போன்று இவற்றிலும் பேராபத்து இருக்கிறது. பல தரப்பட்ட இந்திய வேளாண் காலநிலைச் சூழலில் இவ்வரிசைகள் நன்கு வளருமா? என்ற அய்யம் எனக்கு உண்டு.

நமது உள்ளூர் நெல்வகைகளை விடுத்து அந்நிய வகைகளில் நாம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வது மிகவும் எதிர்பாராதது என்றே கூறுவேன். எனது கேள்வி  என்னவெனில், நாம் ஏன் இதனை தீவிரமாக கவனிப்பதில்லை?

நேர்காணல் : கிளாட் ஆல்வாரிஸ்

தமிழில்: கிழார்

(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)