ilayakiyaum 450நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக்குறைவு. புனைவிலக்கியத் துடன் பண்டைய இலக்கியத்தைக் காத்திரமாக விமர்சிக்கிற விமர்சகர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரில் ஒருவர் ந. முருகேசபாண்டியன். அவர் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருகிறார். பல்வேறு கருத்தரங்குகளில் சங்க இலக்கியம் பற்றி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு, மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் என்று நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் உங்கள் நூலகம், தாமரை,

சமூக விஞ்ஞானம்,  உயிர் எழுத்து போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. சங்க இலக்கியப் படைப்புகளைப் புதிய கோணத்தில் அணுகியுள்ள இந்தக் கட்டுரைகள், இளம் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும்.

சங்ககாலத்தில் பாலியல் என்பது கொண்டாட்ட மாகவே இருந்தது. பெண் தனக்கேற்ற, தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரம் மிக்கவளாக விளங்கினாள். கல்வியறிவு நிரம்பப் பெற்றிருந்த பெண்கள் தங்கள் பாலியல் மனநிலையை ஆழமாகவே எழுதியுள்ளனர். நான் என்ன செய்வேன்?/முட்டுவேன்கொல்?/தாக்குவேன்கொல்?என்ற ஒளவையாரின் பாடல் வரிகளைச் சான்றாகக் கொள்ளலாம். இவற்றையெல்லாம் தரும் முருகேச பாண்டியன் “மதங்களின் ஆதிக்கம் வாழ்வில் வந்த பின்னர்தான் பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது; உடலைக் கொண்டாடாமல், உடலை வருத்தித் தவமிருத்தல், உடலைத் துறந்து வீடுபேறு அடைதல் போன்றவை உண்டாகி பாலுறவினைக் கேவலமாக்கி விட்டன” என்று துணிந்து கூறுகிறார். மேலும் “பாலியல் பற்றிய தவறான புரிதல்கள் புறந்தள்ளப்பட வேண்டும்”  என்கிறார். அதை இயற்கையானதாகக் கருதி வரவேற்கும் மனநிலை வேண்டும் என்றால், பாலியல் கல்வி இன்று பதின்பருவத்தினருக்குத் தேவைப்படுகிறது. இந்நூலின் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய பார்வையைக் குறிப்பிட வேண்டும். அதாவது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதைப் போரில் தோற்றுப் போன இன்னொரு குழுவினருக்கு, அதாவது அடிமைப் பட்ட மக்களுக்குத் தேறுதல் சொல்வதற்காகப் பாடப்பெற்றது என்று கருத இடமுண்டு” என்று எழுதுகிறார். “ஏம்பா வருத்தப்படறே? இதுவும் ஒன் ஊர்தாம்பா; நாங்களும் ஒன் சொந்தக்காரங்கதாம்பா” என்று கூறுவதாக இதை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் புதிய பார்வை; இதுவே இன்றைய தேவை.

சங்ககாலப் பெண்கவிஞர்கள் பற்றிய கட்டுரையில் “இன்று பெண்கவிஞர்கள் கவிதையில் பயன்படுத்துகிற யோனி, முலை போன்ற சொற்களைச் சங்ககாலத்திலே பெண்கவிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது முக்கியமான தகவல்” என்று கட்டுரையாளர்   குறிப் பிடுவது, இலக்கிய வாசகர்களும் கவிஞர்களும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாகும். அதற்குச் சான்றாக, வெள்ளிவீதியாரின் ‘திதிலை அல்குல் என்மாமைக் கவினே’ (குறுந்தொகை; 27) மற்றும் ஒளவையாரின் ‘முலையிடை முளையிட்ட நோய்’ (அகநானூறு 273) என்ற வரிகளைக் கூறுகிறார்.

சங்ககாலக் கவிதைகள் அக்காலச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவை இல்லாவிடில் நாம் இன்று அன்றைய பண்பாடு, உணவுமுறை, காதல், வீரம் பற்றி அறிய முடியாது. பண்டைய சமூகநிலையையும், காதலையும் வீரத்தையும் இன்றைய பொதுப்புத்தியை வைத்து வரையறை செய்ய முடியாது. “தாய்க்கும், மகனுக்கும் இடையேயான உறவு அரசியலால் துண்டிக்கப்பட்டு வீரம் என உருவாக்கப்படுகிறது” என்றும், ‘குறுநில மன்னர்களின் போர்களில் மரண மெய்தியது வீரமெனப் போற்றிப் பொற்காலக் கனவு காண்கிறோம்” என்றும் கூறுவது ஏற்கமுடியாத ஒன்று. வேண்டுமானால் இதைப் புதிய பார்வையாகக் கொள்ளலாம்; எப்படியும் பார்க்க திறனாய்வாளருக்கு உரிமை உண்டன்றோ?

நூலின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக நான் கருதுவது மனைவியின் இறப்பு காரணமாக ஆண் படுகிற மனவேதனையைத் துயரமான மொழியில் எடுத்துக் காட்டியுள்ள பாடலைத் தந்திருப்பதாகும். பெரும் பாலும் யாரும் அதிகமாக அறிந்திராத பாடல் இது. மாக்கோதை எழுதிய பாடல் வரிகளில் துயரம் தோய்ந்துள்ளது. கள்ளிச்செடிகள் நிறைந்த சுடுகாட்டில், எரியும் நெருப்பில், விறகுப்படுக்கையில் அன்பிற் குரியவளைக் கிடத்திவிட்டு இன்னும் என் உயிரைப் போக்கிக்கொள்ளாது உயிர் வாழ்கின்றேன்” என்பது இப்பாடலின்  பொருளாகும்.

“கள்ளிபோகிய களரிமருங்கின் களியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளைவிறகுஈமத்து

ஒள்ளழற் பள்ளிப்பாயல் சேர்த்தி

ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை

இன்னும் வாழ்வல் இதன்பண்பே    (புறநானூறு-245)

பெண்ணை இழந்த ஆணின் நிலை அரிதாகவே சங்கப்பாடல்களில் பதிவாகியுள்ளது. இதனை எடுத்துக் காட்டிய கட்டுரையாசிரியர் பாராட்டுக்குரியவர்.

சங்ககாலச் சமயங்கள் பற்றிக் கூறும்போது, “சூர், அணங்கு, சூலி, முருகு போன்ற கடவுள்கள் இயற்கை சார்ந்த இடங்களில் தங்கியிருப்பதான நம்பிக்கை, சங்ககாலத்தில் வலுவாக நிலவியது” என்ற கருத்து, பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்ககால மக்கள் இயற்கையைத் தான் கடவுளென்று வழிபட்டனர், பிற்காலத்தில்தான் உருவ வழிபாடு தோன்றியது. அதிலும் எல்லா மலை களிலும் கடவுளர்கள் நிறைந்து இருப்பதாக அவர்கள் நம்பியதை இயற்கை சார்ந்த வழிபாடாகவே கருதலாம். அணங்குடை நெடுவரை (அகம்:22); அணங்குடை வரைப்பு (அகம்:372); அணங்கொடு நின்றது மலை (நற்றிணை;165’) போன்ற பாடல்அடிகள் சான்றாக எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் சங்ககால மக்களிடையே சைவம், வைணவம் என்னும் வைதிக சமயங்களோடு, பௌத்தம், சமணம் என்னும் அவைதிக சமயங்களும் வழக்கினில் இருந்தன  என்று “சங்கத்தமிழரின் சமயம்” கட்டுரை வழி அறியமுடிகிறது.

சங்ககால மக்களின் வாழ்வில் சடங்குகள் முக்கிய இடம்பெற்றிருந்தன. வாழ்வில் துன்பங்கள் ஏற்படும் போதோ அல்லது நாம் மேற்கொள்ளும் செயல் நல்லபடியாக முடியவேண்டும் எனும்போதோ மனம் ஊசலாடுகிறது; ஏதேனும் ஒரு பற்றுக்கோடு கிடைக் காதா என்று ஏங்குகிறது. அப்போது தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் நம்பிக்கைகள் கைகொடுக்கின்றன. மனம், மரபான நம்பிக்கைகளைப் பின்பற்றச் சொல் கிறது. இவையே சடங்குகளாகப் பின்னர் மாறிவிட்டன. இதைப் “பத்துப்பாட்டில் சடங்குகள்” என்னும் கட்டுரையில், “மனிதனின் நம்பிக்கையானது செயல் வடிவம் பெறுகையில், அது நிகழ்த்தப்படும் சடங்காக மாறுகின்றது” என்று கட்டுரையாசிரியர் எழுதுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கும் மறைந்த மூத்தோர்களின் நினைவாக இல்லத்தில் நாம் குறிப்பிட்ட அந்த நாளில் சில சடங்குகள் செய்கிறோம். அப்போது காக்கைக்குச் சோறிடுதல் முக்கியமான ஒன்றாகும். இறந்த முன்னோர்கள் அன்று காக்கை வடிவில் வந்து நாம் தரும் உணவை ஏற்றுக் கொள்வர் என்பது நம்பிக்கையாகும். அதைப் பலிச்சோறு வழங்குவது என்றும் சொல்வார்கள். இதைக் கீழ்க்கண்ட பொருநராற்றுப்படைப் பாடல் அடிகளின்வழி முருகேச பாண்டியன் எடுத்துக்காட்டுகிறார்.

கூடுகெழீஇயகுடி வயினான்

செஞ்சோற்ற பலிமாந்திய

கருங்காக்கை கவ்வுமுனையின்

மனைநொச்சி நிழல்ஆங்கண்

ஈற்றுய்மைதன் பார்ப்புஓம்பும்

ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களைச் சுட்டும் கட்டுரையில் அவர் எப்படி இயற்கையை அனுபவித்துப் பாடுகிறர் எனக் கட்டுரையாசிரியர் காட்டுகிறார். அதுவும் முல்லைப் பூக்களுக்கு மாசாத்தியார் தரும் அடைமொழிகளை, ‘பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லை’, ‘பூத்த முல்லை’, வெருகு சிரித்தன்ன’, முல்லை மென்கொடி’, முல்லையம் புறவில் முல்லை ஊர்ந்த கல்’, ‘முல்லை மாலை’, என்று முல்லைப் பூவைக் காட்டி அதன் வழி மாசாத்தியார் பெண்ணின் காத்திருத்தலைப் பதிவு செய்திருக்கிறர் என்னும்போது முருகேசபாண்டியனின் ஆய்வு நன்கு புலப்படுகிறது. அதுபோல மாசாத்தியாரின் உவமைகளையும் கட்டுரையாசிரியர் எடுத்துக்காட்டி யுள்ளார். தேர்ச்சக்கரம் சென்ற வழியின் சுவடு, பாம்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போன்றுள்ளது, காட்டுப் பூனை சிரித்தது போன்று முல்லைப்பூக்கள் போன்ற உவமைகள் சுவைக்கத்தக்கன.

சங்ககாலக் கையறுநிலைப் பாடல்களின் கனத்தைப் பற்றி இதுவரை யாரும் அதிகமாகப் பதிவு செய்ய வில்லை. ஒரு கட்டுரையில் பத்து கையறுநிலைப் பாடல்கள் எடுத்துக் காட்டப்பட்டு அவை எழுந்த சூழல் அவற்றில் வெளிப்படும் சோகம் எல்லாம் கூறப் பட்டுள்ளன. குறிப்பாக அதியமானின் கொடைத்திறம் நாம் அறிவோம். ஆனால் அவன் இறந்த பின்னும் வேறு எவரிடத்தும் எதுவும் ஏற்க மாட்டான் என ஒளவையார் தன் பாடலில் கூறுகிறார்.

அவனுக்கு நடுகல் நாட்டிச் சிறு பாத்திரத்தில் இப்பொழுது அவனுக்கு நார்கொண்டு வடிகட்டிய தேனைப் படைக்கிறார்களே அவன் அதை ஏற்றுக் கொள்வானா? மாட்டான்; அவன் பிறருக்குக் கொடுத்தே பழக்கப்பட்டவன்; எதையும் பிறரிடம் ஏற்கமாட்டான் எனச் சொல்கிறது Ôஒளவையாரின் கையறுநிலைப் பாடல்’

நடுகல் பீலிசூட்டி நார்அரி

சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லோ

கோடு உயர் பிறங்குமலை கெழீஇய

நாடு உடன் கொடுப்பவன் கொள்ளா தோனே

பெரிய நாட்டையே கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ளாதவன் இந்தத் தேனையா ஏற்றுக்கொள்வான் என்னும்போது அவனின் கொடைத்திறம் மிளிர்கிறது. அத்துடன் ஒளவையார் அவன்மீது வைத்த அன்பும் தெரிய வருகிறது.

இன்று பண்டைய இலக்கியப் படைப்புகளைக் கட்டுடைத்து ஆராய்கிற பின்நவீனத்துவ சூழலில், ‘திருக்குறள்’, ‘பதினென் கீழ்க்கணக்கு நூல்கள்’ போன்ற வற்றையும் ‘மணிமேகலை’, ‘மாதவி’ ஆகியோரையும் புதிய அளவுகோல்கள் கொண்டு விமர்சிக்கிற கட்டுரைகள் குறையன்றுமில்லாமல் கட்டுரையாசிரியரின் நுண்ணிய இலக்கியப் பார்வைக்கும், வாதத் திறமைக்கும் சான்றாக விளங்குகின்றன. அதுவும் “விமர்சனமற்ற வெற்றுப் புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை; எனவே பண்டைத்தமிழ்ச் சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனை யாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப் பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக் குரியதல்ல என்ற முருகேசபாண்டியனின் கூற்று, எண்ணித் துணிந்து எழுதப்பட்டதாகும்.

மொத்தத்தில் எந்த இலக்கியமானாலும் அதை வழிபாடு செய்தலை விட்டுவிட்டு அதைப் புதிய பார்வையில் அணுகும்போதுதான் அந்த இலக்கியத்தின் உண்மையான நுண்மாண் நுண்பொருளை அறிய முடியும் என மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள் நூல் தெளிவாகக் காட்டுகிறது. அதுவே இந்நூலின் பலம்.

மறுவாசிப்பில் செவ்வியல்
இலக்கியப் படைப்புகள்
(கட்டுரைத் தொகுப்பு)
ஆசிரியர்: ந.முருகேசபாண்டியன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்.,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொடர்புக்கு : 044 - 26251968
விலை: ` 120/-

Pin It