‘சூத்திரர்களுக்கு கல்வி தரக் கூடாது’ என்று கூறியது ‘மனுதர்மம்’. அந்த பார்ப்பன மனுதர்மக் கோட்பாட்டுக்கு தந்துள்ள மரண அடிதான். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வித் திட்டம், 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வியை இலவசமாக கட்டாயமாக வழங்குவதை உறுதி செய்யும் இத் திட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதி சுவதந்தர் குமார் ஆகியோர், அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார், நீதிபதி கே.எஸ். இராதா கிருஷ்ணன்.  இத் தீர்ப்பு அரசு நிதி உதவி பெறாத மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்ற மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பெரும்பான்மை தீர்ப்பின் படி அரசின் இந்த சட்டம், அரசு  உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறாத மைனாரிட்டி அல்லாத பள்ளிகளுக்கு பொருந்தும். தனியார் பள்ளிகள், 25 சதவித இடங்களை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்ய இந்த சட்டம் வற்புறுத்துகிறது. அரசு உதவி பெறாத மைனாரிட்டி நிறுவனங் களுக்கு இது பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யுள்ளது. 

அரசு உதவி பெறாத மைனாரிட்டி கல்வி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகூட மறுபரிசீலனை செய்வதே நல்லது. இந்த நிறுவனங்களில் மொழி, மத சிறுபான்மை யினரைவிட ஏனைய பிரிவினர்தான்அதிகமாக படிக்கிறார்கள். தனியார் பள்ளிகளைப் போலவே தான் இவைகளும் வணிக நோக்கில் செயல்படுகின்றன. அரசியல் சட்டம் வழங்கியுள்ள (உறுப்பு 29 மற்றும் 30) உரிமைகள் பெருமளவில் தவறாகவே பயன்படுத்தப்படுகின்றன. இத்தீர்ப்பு தொடர்பாக உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ள வேறு சில கருத்துகள் மிகவும் முக்கியம் பெற்றவை.

“கல்விக்கான அடிப்படை உரிமையை அரசியல் சட்டம் வலியுறுத்தும் உயிர் வாழ்தலுக்கான அடிப்படை உரிமை (பிரிவு 21ஏ)யுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒரு குழந்தைக்கான அடிப்படைக் கல்வி உரிமை மறுக்கப்படுவதன் மூலம் அந்தக் குழந்தையின் கவுரவமாக உயிர் வாழும் உரிமையும், கருத்துகளை வெளியிடும் அடிப்படை உரிமை யான கருத்துரிமையும் (பிரிவு 19(1)(ஏ) பறிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த குழந்தைகளின் பொருளாதார உளவியல் ரீதியான தடைகளை நீக்கியிருக்கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கல்வியைப் பெறுவதில் சந்திக்க வேண்டியிருந்த இடர்ப்பாடு களை அகற்றியுள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கு வதால் ஜனநாயகத்தின் சமூக ஒருங்கிணைப்பு வலிமைப்படுத்தப் பட்டுள்ளது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“சூத்திர - பஞ்சம மக்களுக்கு” மனுதர்மத்தால் தடை செய்யப்பட்ட கல்வி உரிமையை மீட்க பெரியாரின் திராவிடர் இயக்கம் தொடர்ந்து போராடியது. நீதிக்கட்சி ஆட்சிக் காலத்திலேயே சென்னை மாநகராட்சியிலே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டம், காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுதும் விரிவாக்கப்பட்டு, எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கும் திட்டமாகி, பிறகு தி.மு.க. ஆட்சியில் சத்துண வுடன் வாரத்துக்கு இரண்டு நாள் முட்டையுடன் கிடைக்கக்கூடிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பள்ளிக் கல்வியை பரவலாக அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல “திராவிட” கட்சிகளின் ஆட்சிகள் மேற்கொண்ட முனைப்பான திட்டங்கள் இவை. உச்சநீதிமன்றமே தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இத் திட்டத்தை இந்தியா முழுதும் அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைப்படுத்த ஆணையிட்டது.

“ஒரு நாணயமான சர்க்கார் மக்கள் படித்து அறிவு பெற வேண்டும் என்றே கருத வேண்டும். மக்கள் படித்தால் அரசாங் கத்துக்கு தொந்தரவு, மதத்திற்கு ஆபத்து என்றல்லவா கருதி வந்தார்கள்?” என்று கூறிய பெரியார், “54 கோடி மக்களில் 39 கோடி மக்கள் தற்குறிகள் என்றால் இதற்குப் பெயர் சுதந்திர ஆட்சியா? அடிமை ஆட்சியா?” (‘விடுதலை’ 15.8.1972) என்று கேட்டார். சேலம் மாவட்டத்தில் கள்ளுக்கடை மூடியதால், அரசுக்கு ஏற்பட்ட பொருளிழப்புக்கு தமிழகம் முழுதும் மூவாயிரம் பள்ளிகளை மூட உத்தரவிட்ட பார்ப்பன முதல்வர் ராஜ கோபாலாச்சாரியைத்தான், தேர்ந்த நிர்வாகி, அரசியல் சாணக்கியர் என்று பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடினார்கள். அதே ராஜகோபாலாச்சாரி தான் அப்பன் தொழிலை பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலே அரை நாள் செய்ய வேண்டும் என்ற குலக் கல்வித் திட்டத்தை தொடக்கப் பள்ளி களிலேயே கொண்டு வந்தார். அதை எதிர்த்து பெரியார் கொட்டிய போர் முரசுதான் ஆச்சாரியாரை பதவியை விட்டே ஓட வைத்தது.

ஆச்சாரியாரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த காமராசர், குலக் கல்வித் திட்டத்தை ஒழிக்க அவரால் மூடப்பட்ட பள்ளிகளைத் திறந்து, மேலும் கூடுதல் பள்ளிகளைத் திறக்க முன் வந்தபோது, இதோ பச்சைத் தமிழர் ஆட்சி என்று தோளின் மீது காமராசரைத் தூக்கிக் கொண்டு ஆடியவர் பெரியார். இந்த வரலாறுகளின் தொடர்ச்சியாகவே இப்போது வந்திருக்கிற சட்டத்தையும் பார்க் கிறோம். அடிப்படைக் கல்வி என்பது, உயிர் வாழும் உரிமைகளி லிருந்து பிரிக்க முடியாத ஒன்று என்று உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மனு தர்மத்துக்கும், ஆச்சாரியார் பரம்பரைக்கும் ஆரியத் திமிருக்கும் விழுந்துள்ள மரண அடி. பெரியார் போராட்டங்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி.

Pin It