திருச்சியில் கூடிய தமிழ் நாடு மாணவர் கழகத்தின் தீர்மானங்கள்

மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வைக் கண்டித்து, கல்வி நிறுவனங்கள் முன் 15 நாள் வாயில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தவும், பிப்.15 இல் கோவையில் மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு நடத்தவும், பெரியார் திராவிடர் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் முடிவு செய் துள்ளது.  கல்வி, இடஒதுக்கீடு, கல்விக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடந்தது. இறுதியாக கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. 2011 - 2012 கல்வி ஆண்டிலிருந்து எம்.பி.பி.எஸ்.  மருத்துவக் கல்விக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த இருப்பதைக் கண்டித்தும், கல்வியில் மாநில உரிமைகளை அடியோடு பறிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி ஆணையம் அமைக்க உள்ளதைக் கண்டித் தும், அகில இந்திய அளவில் வழக்கறிஞர்களுக்கான தகுதித் தேர்வு நடத்துவதைக் கண்டித்தும் தமிழ்நாடு தழுவிய அளவில் பள்ளி - கல்லூரிகள் முன்பு 15 நாட்களுக்கு வாயிற்கூட்டப் பரப்புரைப் பயணம் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

2.   ஜனவரி 31 ஆம் நாள் சென்னை மருத்துவக்கல்லூரி (MMC) முன்பு பயணத்தைத் தொடங்கி பிப்ரவரி 14 கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் (CMC) நிறைவு செய்வது என்றும், நிறைவு நாளான பிப்ரவரி 15 அன்று கோவையில் “மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு” நடத்துவது என்றும், மார்ச்சு மாத இறுதிக்குள் ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் அகில இந்திய அளவிலான “மாநிலங்களின் கல்வி உரிமை மீட்புக் கருத்தரங்கம்” நடத்துவது என்றும் முடிவு செய்யப்படு கிறது.

3.  அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளை எதிர்த்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் துண்டறிக்கை, சிறு நூல், குறும்படம் ஆகியவைகளைத் தயாரித்து விநியோகிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

4.     1976 ஆம் ஆண்டு மிசா காலத்தில் 42 ஆவது திருத்தச் சட்டத்தின்படி பொதுப்பட்டியலில் மத்திய அரசின் பிடியில் கல்வித்துறை சிக்கியது. அதன்பிறகு கல்வித் துறையை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மீட்பதற்கு இன்றுவரை எந்த முயற்சியும் செய்யாமல் இருக்கும் தமிழ்நாட்டு அரசாங்கங்களை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதோடு. பொது நுழைவுத் தேர்வு என்ற வகையில் மருத்துவக் கல்வி யிலும், தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி ஆணையம் அமைப்பதன் மூலமாக அனைத்து வகையான கல்விப் பிரிவுகளிலும் தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களின் உரிமையான 69 % இடஒதுக்கீட்டு உரிமை பறிபோக இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டித்து தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட் டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. பிப்பிரவரி 15 அன்று கோவையில் நடைபெற உள்ள மாநில கல்வி உரிமை மீட்பு மாநாட்டில் போராட்ட நாள் அறிவிக்கப்படும்.

5.  அண்ணா பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், அரசு மற்றும் தனியார் மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர், பேராசிரியர், பணியாளர் தேர்வு - மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. ஆகவே, இடஒதுக்கீடு - பள்ளி, கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தல் - பள்ளி, கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் ஆகிய நிலைகளில் நடைபெறும் அத்து மீறல்கள் - விதிமீறல்கள் - மனித உரிமை மீறல்கள் - சமூகநீதி மீறல்கள் ஆகியவை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாக புள்ளி விபரங்களைச் சேகரிப்பது என்றும், அந்தப் புள்ளி விபரங்களின் அடிப்படையில் அடுத்தகட்டமாக நீதிமன்ற நடவடிக்கைகளையும் மாணவர் - இளைஞர் போராட்டங்களையும் நடத்தி சீரழிந்து கிடக்கும் கல்வித்துறையைச் சீராக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

6.   கல்வித்துறையைச் சீராக்கும் நடவடிக்கைகளுக்காக புள்ளி விபரங்கள் தயாரிக்கவும், கல்வி நிறுவனங்களை நேரடியாக ஆய்வு செய்யவும் ஒரு கல்வியாளர் குழுவை உருவாக்கவேண்டும் என்றும், நீதிமன்ற நடவடிக்கை களுக்காக வழக்கறிஞர் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது.

மேற்கு மாவட்ட சாதிக் கொடுமைகளுக்கு எதிராக ‘கூட்டியக்கம்’ களமிறங்குகிறது

23.12.2010 வியாழன் அன்று மாலை 5 மணிக்கு ஈரோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிற தீண்டாமை கொடுமைகளை தடுத்து நிறுத்துவதற்காக “சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டியக்கம்” என்ற பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங் கிணைத்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முத்தூரில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

நம் நாட்டில் நாள்தோறும் சாதி தீண் டாமைக் கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங் களில் தீண்டாமைக் கொடுமைகள் மிக மோசமாக தலை விரித்தாடுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள கல்லேரி என்ற ஊரைச் சார்ந்தவர் சாமி துரை. இவர் முத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் “இள மின் பொறி யாளராக” பணியாற்றி வருகிறார். சாமி துரை ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதாலும், நேர்மையானவர் என்பதாலும் அப் பகுதியைச் சார்ந்த ஆதிக்கசாதி வெறியர் களாலும், அரசியல்வாதிகளாலும், சில மின் வாரிய ஊழியர்களாலும் சாமிதுரை மீது திட்டமிட்டு பல பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. உயர் சாதிக்காரர்களை மதிப்பதில்லை என்பதில் தொடங்கி, மன நோயாளி, தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்தவர் என்று அரசியல் ரீதியாகவும், துறை ரீதியாகவும் பல்வேறு தாக்குதல் களை தாங்கி வந்த சாமிதுரை, கடந்த அம்பேத்கர் பிறந்த நாளான 6.12.2010 அன்று, ஆதிக்க சாதி வெறியர்கள், அலுவலகத்திற்குள்ளேயே நுழைந்து, சாதியின் பெயராலும், தகாத வார்த்தை களாலும் திட்டியும், தாக்கியும் உள்ளனர். காவல் நிலையத்தில் முறையிட்ட சாமி துரைக்கு நியாயம் கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு கூட செய்யப் படாத நிலையில் இவை அனைத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தோடு, கூட்டப்பட்ட இக் கலந்துரை யாடல் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள், ஆதித் தமிழர் பேரவை, ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, புதிய தமிழகம், நாம் தமிழர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம், மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற கொடுமைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க, அரசின் கவனத் துக்கு கொண்டு செல்லவும், ஆதிக்க சாதியினர் தொடர்ந்து வன்கொடுமை நடத்தி வருவதை தடுக்கவும், ஆதிக்க சாதி யினருக்கு ஒரு அச்சத்தை உண்டாக்குகிற வகையிலும், பெரும்பாலான அமைப்பு களின் மாநில தலைவர்களை வரவழைத் தும், அதிக எண்ணிக்கையில் பொது மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Pin It