தேர்தல் ஆணையத்தை எதிர்த்து கழகம் வழக்கு

தேர்தல் ஆணையம் வரம்பு மீறி செயல்பட்டு வருவது பொது மக்களிடையே கடும் அதிருப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஓட்டுக்குப் பணம் தருதல் போன்ற முறைகேடுகளைத் தடுப்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், பரப்புரைகளையே தடுக்க முயலுகிறது. தேர்தலில் போட்டியிடாத பெரியார் திராவிடர் கழகத்தின் கொடிகளை அகற்றுவதோடு, பெரியார் பொன்மொழிப் பலகையையும் அகற்றி வருகிறது. கோபி அருகே கொளப்பலூரில் ஊர் எல்லை தொடங்கும் இடத்தில் பொது ஒழுக்கம் பற்றிய தந்தை பெரியார் கருத்துகளுடன் ‘பெரியார் திராவிடர் கழகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற வரவேற்பு பலகையை பல ஆண்டு காலமாகவே நிறுவியுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த வரவேற்பு பலகையை அகற்றிவிட்டது. அங்கே பறந்த கழகக்கொடிக் கம்பத்தின் கறுப்பு நிறத்தை அகற்றி விட்டு, வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தி, கொடிக் கம்பத்தையும் அகற்றி விட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த எல்லை மீறிய செயல்பாடுகளை எதிர்த்து ஈரோடு மாவட்டக் கழக செயலாளர் இராம. இளங்கோவன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கழக வழக்கறிஞர்கள் எஸ். துரைசாமி, வி. இளங்கோவன், து. ராஜ்குமார் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

பெரியார் திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கம். கழகம் நிறுவியுள்ள வரவேற்பு கருத்துப் பலகை விளம்பர நோக்கம் கொண்டது அல்ல. அதில் இடம் பெற்றுள்ள பெரியார் பொன்மொழி மனித குலத்துக்கான உயர்ந்த மாண்புகளையே பேசுகிறது. தேர்தல் அரசியலில் தொடர்பில்லாத பெரியார் திராவிடர் கழகத்தின் கொடிகளையும் பெரியார் பொன்மொழிப் பலகையையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அகற்றாமல் இருப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று வழக்கு மனுவில் கூறப்பட்டுள்ளது.  வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளார்.

Pin It