தமிழினப் பாதுகாப்பு மாநாடு - பேரணி - சென்னையில் கடந்த அக்.11 ஆம் தேதி எழுச்சியுடன் நடைபெற்றது. காலை 11 மணியளவில் சென்னை மன்றோ சிலையிலிருந்து கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் புறப்பட்ட பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் திரண்டு ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற உரிமைக் குரல் எழுப்பி வந்தனர். ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஹென்றி டிபேன், ஓவியர் புகழேந்தி முன்னிலை வகித்தனர். சென்னை, புதுவை, சேலம், மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பெருமளவில் பேரணியில் பங்கேற்றனர்.

காஞ்சி - மக்கள் மன்றம் தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி, தமிழ்த் தேச விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் பினரும் பேரணியில் பங்கேற்று முழக்கமிட்டு வந்தனர். பகல் 12.30 மணியளவில் பேரணி, சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நிறைவடைந்தது.

மாலை 7 மணியளவில் தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் சித்தன் செயமூர்த்தி இன முழக்க இசையுடன் தமிழினப் பாதுகாப்பு மாநாடு தொடங்கியது. இதழாளர் கா. அய்யநாதன் தலைமை தாங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் (த.தே.பொ.க.), தியாகு (ததே.வி.இ.), புலவர் புலமைப்பித்தன், கோவை இராமகிருட் டிணன் (பொதுச்செயலாளர்), பேராசிரியர் சரசுவதி, சூரிய தீபன், கி.த. பச்சையப்பன், வழக்கறிஞர் வைத் தியலிங்கம் (பா.ஜ.க.), கண. குறிஞ்சி (பி.யு.சி.எல்.), மகேஷ் (காஞ்சி மக்கள் மன்றம்) உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

•                      இலங்கையில் வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இடைத் தங்கல் முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளின்றி பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாகக் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க அனைத்து முயற்சி களையும் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களும் அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும்.

•                      வன்னி வதை முகாம்களிலும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளிலும் இனப் படுகொலையின் பாதிப்பிற்குள்ளாகி சொல்லொண்ணாத் துன்பம் அனுபவித்து வரும் தமிழீழ மக்களின் துயரைத் துடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சர்வதேச சமூகத்தின் சார்பில் ஐ.நா.வே மேற் கொள்ள வேண்டும்.

•                      அதிபர் ராஜபக்சேயும், அவரது கூட்டாளிகளும் நிகழ்த்திய தமிழினப் படுகொலை மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும்.

•                      ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஒடுக்க சிறிலங்க சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசு, தெற்காசிய வல்லாதிக்க அரசுகளின் துணையுடன் இரண்டரை ஆண்டுகள் மேற்கொண்ட இன அழிப்பில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் அவையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்திருக்குமானால் பல பத்தாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதனைச் செய்யத் தவறியது. அப்போது சிறீலங்கா வந்திருந்த ஐ.நா. பொதுச் செயலரின் தலைமை அலுவலர் விஜய் நம்பியார், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறிவிட்டார் என்று குற்றம்சாற்றுவதோடு, அவரை அப் பொறுப்பிலிருந்து நீக்கி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

•                      பொது சன வாக்கெடுப்பு நடத்தி, தமிழீழத் தேசிய இனத்தின் வருங்கால அரசியல் தீர்வுக்கு ஐ..நா. முன்வர வேண்டும்.

•                      சிறிலங்காவை இனவெறி அரசாக ஐ.நா.வும், உலக நாடுகளும் பிரகடனப்படுத்த வேண்டும்.

•                      இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை அறவே இழந்து விட்டதைக் கருதி, தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உலக நாடுகளிடையே தமிழர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

•                      அதேபோல் தமிழீழ விடுதலைக் குறிக்கோளை எந்நிலையிலும் விட்டுக் கொடுப்பதில்லை என்றும், அதற்கு மாற்றாக முன் வைக்கப்படும் வேறு எந்த தீர்வையும் நிராகரிக்க வேண்டும் என்றும் மாநாடு முடிவு செய்கிறது.

•                      கச்சத் தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்வதால் மட்டும் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை முழுமையாக மீட்க இயலாது என்பதால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடைப்பட்ட கடல் எல்லையைத் திறந்து விடுவதன் மூலம், அல்லது இறுக்கமற்ற எல்லை ஆக்குவதன் மூலம் தமிழக, தமிழீழ மீனவர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும்.

•                      இந்தி மொழியை இந்தியாவின் பிற தேசிய இனங்கள் மீது தங்குதடையின்றித் திணிக்கும் முயற்சிக்குத் தமிழகமே தடையென்று தில்லி வல்லாதிக்கம் உணர்ந்துள்ளது. இந்நிலையில் அரசியல் ஆதாயங்களுக்காகக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தியைத் திணிக்கப் பல்வேறு வழியிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியைத் தமிழக மக்கள் விழிப்புடனிருந்து முறியடிக்க இம்மாநாடு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.

•                      ஐடியா செல்லுலார், ஏர்டெல் ஆகிய நிறு வனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்யும் வாய்ப்பிற்கு ஈடாக சிங்கள அரசின் இனப்படு கொலைக்கு உதவி வருகின்றன. இதேபோல் சிறிலங்காவில் எண்ணெய் வள ஆய்வுக்கு ரிலையன்ஸ் குழுமத்தை அழைத்திருப்பதாக சிறிலங்கா அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார்.

•                      சிறிலங்காவின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிப்பது அதன் தேயிலை ஏற்றுமதியே. இந்த ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் கொலைக் கருவிகள் வாங்கித் தமிழினத்தை அழித்து வருகிறது சிங்கள அரசு.

•                      இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு எல்லா வகையிலும் சிறிலங்கா மீது ஒரு பொருளியல் தடையை நாம் விதிப்பதோடு, உலக அளவில் சிறிலங்காவுக்கு எதிராகப் பொருளியல் தடை விதிக்கும்படியும் இயக்கம் நடத்த வேண்டும்.

•                      தமிழ்த் திரைப்படத் துறையினர் சிறிலங்காவோடு திரைப்படம் தயாரிக்கும் கூட்டு முயற்சி களை புறக்கணிப்பதோடு, சிறிலங்காவில் படப்பிடிப்பு களையும் நடத்தக் கூடாது.

•                      தமிழகத்தில் தமிழக அரசு நடத்தும் சிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும்.

•                      தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்காக போராடி யோர் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்

- என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தமிழினப் பாதுகாப்பு மாநாடு ஆயத்தக் குழு சார்பில் இந்த மாநாடும் பேரணியும் ஏற்பாடு செய்ப்பட்டது. மாநாட்டுத் தீர்மானங்களை மக்கள் மன்றத்துக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு தீர்மானங்களை விளக்கிடும் வெளியீடு ஒன்றை தயாரித்து பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர்

Pin It