இரண்டாம் வட்ட மேசை மாநாடு (1931) காந்தியாருக்கும் அம்பேத்கருக்குமான போர்க்களமாயிற்று. அம்பேத்கர் எந்நிலையிலும் எவர்க்காகவும் தம் மக்களின் உரிமைக் கோரிக்கையை விட்டுத்தர அணியமாய் இல்லை. இந்தியாவில் மகாத்மா என்ற பேரடையாளத்தோடு வாழ்ந்து வந்தவர் காந்தியார். யாரும் தம்மை எதிர்த்துப் பழக்கப்படாதவர். இங்கே அம்பேத்கர் எனும் அறிவாற்றல் பொருந்தியவரால் படாதபாடுபட்டுப் போனார். அம்பேத்கரின் வாதங்களுக்கு அவரால் நேரடியாக மறுப்புச் சொல்ல முடியவில்லை. கருத்தால் அம்பேத்கரை அவரால் வெல்லவும் முடியவில்லை. ஆனால், அதற்காகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி வாக்காளர் தொகுதிக் கோரிக்கையை ஆதரிக்கவும் முடியவில்லை. அதுதான் இந்துமதத்திற்கு கேடு பயத்துவிடுமாயிற்றே!

அம்பேத்கரின் விடா முயற்சியால் தனி வாக்காளர் தொகுதிக் கோரிக்கை வட்டமேசை மாநாட்டினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனி வாக்காளர் தொகுதி இடம்பெறாத எந்த அரசமைப்புச் சட்டத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதும் தெளிவாக்கப்பட்டு விட்டது. காந்தி, காங்கிரசை நம்ப வேண்டாம் என்று நூற்றுக்கணக்கான தந்திகள் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களிடமிருந்தும் சங்கங்களிடமிருந்தும் அம்பேத்கருக்கு வந்து சேர்ந்தன. திருநெல்வேலி, ராபர்ட்சன் பேட்டை (சென்னை), லைலாப்ப+ர், சிதம்பரம், கள்ளிக்கோட்டை, தூத்துக்குடி, காசி, கோலாப்பூர், நாகபுரி - இது தவிர பல பகுதிகளிலிருந்தும் அம்பேத்கருக்குத் தந்திகள் வந்தபடியே இருந்தன. அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி அல்ல என வாதாடிய காந்தியாருக்கு இதைவிடத் தோல்வி வேறு என்ன இருக்க முடியும்?

மாநாட்டைத் தாண்டி அம்பேத்கர் தனிப்பட்ட முறையில்; பேட்டிகள், விளக்கங்கள், அறிக்கைகள், இலண்டன் நிறுவனங்கள் பலவற்றில் ஆற்றிய உரைகள் - அனைத்திலும் தம் நிலைப்பாட்டைத் தொடர்ந்து விதைத்தும் பரப்பியும் வந்தார். அம்பேத்கரின் ஓய்வற்ற இவ்வுழைப்பு காந்தியாரைத் திணறச் செய்திருக்கும் என்றால் தவறில்லை. அப்போது செல்வி முரியேல் லெஸ்டர் என்பார் வீட்டில்தான் காந்தியார் தங்கியிருந்தார். முரியேல் அம்பேத்கரை நேரில் சந்தித்தார். அம்பேத்கர் அவரிடம் தம் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அம்பேத்கருக்கும் காந்தியார்க்கும் நண்பரான ஒருவர். இருவரையும் நேரில் சந்திக்க வைக்க முயன்;றார். அவரிடம் அம்பேத்கர் சொன்னார்:

“மனிதாபிமான அடிப்படையில் காந்தி தீண்டப்படாதோரின் மேம்பாட்டிற்காகப் பாடுபடுகிறார்@ தீண்டாமையை ஒழிக்க முயல்கிறார். ஆனால் இந்தப் பிரச்சனையை அணுகுவதில் அடிப்படையிலேயே இருவருள் பெருத்த வேறுபாடு உள்ளது.”

நாம் ஒன்றைத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். இருவருமே மதத்தை மதித்தார்கள்@ நேசித்தார்கள். தாழ்த்தப்பட்டோர் நலனை இந்து மதத்திற்காகக் காவு கொடுக்கவும் காந்தியார் தயாராக இருந்தார். அம்பேத்கருக்கு மதம் பெரிதெனினும் தாழ்த்தப்பட்டோர் உரிமை வாழ்வு அதனிற் பெரிது. எந்நிலையிலும் அதில் அவருக்குத் தள்ளாட்டமில்லை. அது அவர் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. இருப்பினும் காந்தியார் ஒப்பற்றவர்@ மனிதத் தன்மையின் அடிப்படையில் தீண்டப்படாதவர்களுக்கு அவர் புரிந்த தொண்டை அம்பேத்கர் ஏற்றே இருந்தார். அதேபோல் அம்பேத்கரின் அறிவாற்றலை, உள்ள உறுதியை காந்தியார் மதித்தார்.

அரசியல் விடுதலை என்பதற்கு அம்பேத்கர் ஒன்றும் எதிரானவரல்லர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை வாழ்வு உறுதி செய்யப்பட்ட விடுதலை அவருக்கு உவப்பானதே. அஃதில்லா அதிகாரக் கைமாற்றம் என்பது பார்ப்பனர்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் மட்டுமே அதிகாரமாயிருக்கும் என்றால் அதை அம்பேத்கரால் ஏற்க இயலாது. அரசியல் அதிகாரக் கைமாற்றம் என்பதைப் பற்றி அதிகமாகக் கவலைப்படவில்லை என்று அம்பேத்கர் சொன்னது இப்பொருளில்தான். உடனே இந்தியத் தேசியப் பத்திரிகைகள் அம்பேத்கரைக் கடுமையாகச் சாடின. வெட்கங்கெட்ட பேச்சு என்றும், தன்னடக்கத்தை நாகரிகத்தை மீறியது என்றும் வசைபாடின. அந்த நேரத்தில் இந்தியாவில் அம்பேத்கர் தீயவராகப் பார்க்கப்பட்டார். பிரித்தானிய அரசின் கையாள், இந்திய நாட்டின் துரோகி, இந்துமத ஒழிப்பாளன் என்றெல்லாம் பழிக்கப்பட்டார். புகழ்பெற்ற பத்திரிகையாளராக அப்போது விளங்கிய டி.ஏ.இராமன் என்பார் எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் அம்பேத்கரைக் கொலை செய்வேன் என்றும் கூட ஆத்திரத்தில் சொன்னதுண்டு. இது குறித்து சில ஆண்டுகள் கழித்து அம்பேத்கர் இப்படிச் சொன்னார்:

“உண்மையில் நான் குறுகிய நோக்கங் கொண்டவனாக மட்டும் இருக்கவில்லை. இவற்றைக் கேட்டு என் தோலும் மரத்துப் போய்விட்டது.”

அம்பேத்கர் காந்தியாரைத் தொடர்ந்து தாக்கியே பேசினார். காந்தியாரோ எதை வேண்டுமானாலும் ஆதரிப்பேன்@ அதிகாரக் கைமாற்றம் குறித்துக் கூட இப்போது கவலையில்லை@ தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதி மட்டும் வந்துவிடக் கூடாது என எந்த அடிப்படையும் இல்லாமல், தன் மீது மற்றவர்கள் வைத்திருக்கிற குருட்டு பக்தி ஒன்றை மட்டுமே நம்பித் திரும்பத் திரும்ப வாதிட்டார். இப்போது இவருக்கு மதிப்புக் கொடுத்து நற்சான்றிதழ் வாங்குவதென்பது அம்பேத்கர் வரலாற்றால் பழி சுமத்தப் படுவதற்கு வழிவகுக்காதா?

காந்தியின் பிம்பத்தை நொறுக்குவதில் அம்பேத்கர் அந்த நேரம் சளைக்கவில்லை. வட்டமேசை மாநாட்டில் காந்தியாருக்குக் கிஞ்சிற்றும் மயங்காது தம் கொள்கைக்காக அவரை முழுக்க முழுக்கக் கேள்விக் குள்ளாக்கினார். தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கு உண்மையாக நிற்பவர்கள் காந்தியாரைப் போற்ற வேண்டும் என நினைப்பது கழுத்தைக் காலால் மிதித்திருப்பவனைப் பல்லிளித்துக் கைகூப்பி வணங்குவதற்குத்தான் ஒப்பாகும்.

எத்தனைப் பேர் எவ்வகைக் குற்றம் சுமத்தினாலும் மாநாட்டில் தாழ்த்தப் பட்டோருக்காகக் காந்தியாருக்கு எதிராய்க் குரல் கொடுக்க வேறு யார் உளர்! காந்தியாருக்கு அம்பேத்கர் இணங்கிப் போவதென்றால் தாழ்த்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அரசமைப்பில் உறுதி செய்ய பிரித்தானிய அரசிடம் கோர முடியாது@ வாதிட முடியாது! நாட்டை அடிமைப் படுத்தியிருக்கும் அந்நியர்கள் தாம் என்றாலும் நாட்டினுள்ளேயே அடிமைகளுள் மீளமுடியா அளவில் அடிமைகளாய் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு யார் விடிவு தேடித் தருவார்? விடுதலைக்கு நின்றவர்களில் முதன்மையானவர்களெல்லாம் தத்துவ வடிவிலும் நடைமுறை அளவிலும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நின்ற வேளையில் அதை அம்பேத்கர் அப்படித்தான் எதிர்கொள்ள முடியும். இது ஒருபுறமிருக்க விடுதலைக்கான முதன்மை ஆற்றலாய் விளங்கிய காங்கிரசும், காந்தியாரும் இறுதியில் பிரித்தானிய அரசுடன் இணங்கிப் போகக் கூடியவர்கள் என்பது அப்போது வெள்ளிடை மலையாய்த் தெரிந்த செய்திதானே! இவர்களை நம்பி அம்பேத்கர் இருந்துவிட முடியாது.

இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் கடைசிக் கூட்டம் 1931 நவம்பர் 13இல் நடைபெற்றது. சிறுபான்மையோரின் அனைத்துப் பிரிவினரும் ஒன்றுகூடிக் கூட்டறிக்கை வெளியிட்டனர்:

“பிறப்பிடம், மதம், சாதி ஆகியவற்றில் எது காரணமாகவும் அரசுப் பணிகளில் சேருவதற்கோ, அதிகாரம் அல்லது மதிப்புமிக்க எந்தப் பதவியிலும் அமருவதற்கோ குடியுரிமைகளை அனுபவிப்பதற்கோ, எந்தத் தொழிலையும் செய்வதற்கோ எவருக்கும் எத்தகைய பாகுபாடும் காட்டக் கூடாது.”

தீண்டப்படாதவர்களை அரசு ஊழியத்திலும் இராணுவம் மற்றும் காவல்துறையிலும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பஞ்சாபில் தீண்டப்படாத வர்களுக்கான பஞ்சாப் நில உரிமை மாற்றுச் சட்டத்தை நீட்டிக்க வேண்டும், தாழ்த்தப் பட்டோர் தமக்குச் செய்யப்பட்ட குறையைப் போக்கவோ அல்லது நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளின் அக்கறையற்ற போக்கினை அரசின் கவனத்திற்குக் கொண்டு வரவோ, ஆளுநருக்கோ அல்லது கவர்னர் ஜெனரலுக்கோ முறையீடு செய்யும் உரிமையை வழங்க வேண்டும் - என்பவை உள்ளிட்ட கருத்துகளைக் கொண்டதாக அக்கூட்டறிக்கை அமைந்திருந்தது.

அந்தக் கூட்டறிக்கையுடன் ஒரு துணை அறிக்கையும் இணைத்து அளிக்கப்பட்டது. அது அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் இணைந்து தயாரித்ததாகும். தீண்டப்படாதோரின் மக்கள் தொகைக்கேற்ப மாகாண, மத்திய சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் வேண்டும் எனக் கோரியிருந்தனர். தனி வாக்காளர் தொகுதியை அதிலும் சேர்த்திருந்தனர். இடஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டு வாக்காளர் தொகுதி முறை தொடர்ந்து இருக்க வேண்டுமென்றால் அது கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர்தான் தொடர்ந்து நடைமுறையில் இருக்க வேண்டும்@ அதற்கான கருத்துக் கணிப்பு 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். தீண்டப்படா தோர் என்ற பெயருக்குப் பதிலாக சாதி இந்துக்கள் அல்லாதவர்@ புரோட்டஸ்டென்ட்டு இந்துக்கள்@ இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் - போன்ற எதாவது பெயரில்தான் அழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்:

சிறுபான்மையினர் கூட்டறிக்கை காந்தியாரை நிலைகுலையச் செய்தது. கோபத்துடனும் பதற்றமாகவும் இவ்வாறு பேசினார்:

“முன்பு கூறியதையே திரும்பச் சொல்ல விரும்புகிறேன். இந்துக்களுக்கும் முகமதியர் களுக்கும் சீக்கியர்களுக்கும் ஏற்புடையதான எந்தத் தீர்வையும் காங்கிரசு எப்போதும் ஏற்றுக் கொள்ளும். அதேபோது வேறு எந்தச் சிறுபான்மையினருக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் ஏற்படுவதற்குக் காங்கிரசு ஒப்புக் கொள்ளாது. தீண்டப்படாதோர் எனப்படுவோர் தொடர்பாக இன்னுமொரு வார்த்தை…. தீண்டப்படாதவர்கள் எனப்படுவோர் சார்பாக வைக்கப்படும் கோரிக்கை அம்மக்களுக்கு நிரந்தரத் தடையாகவே இருக்கும்...

...“தீண்டாமை உயிர் வாழ்வதை விட இந்துமதம் செத்து ஒழிவதே மேல் என்பேன். முழு உலகின் அரசாட்சியே கிடைப்பதானாலும் தீண்டப்படாதவர்களின் உரிமையை விட்டுத் தரமாட்டேன். உரிய பொறுப்புணர்வோடு பேசுகிறேன். இந்திய நாட்டின் தீண்டப்படாதவர்கள் அனைவர் சார்பிலும் டாக்டர் அம்பேத்கர் பேச முயல்கிறார். இவ்வாறு அவர் உரிமை கொண்டாடுவது முறையானது அல்லவென்பேன். இது இந்து மதத்தில் ஒரு பிளவை உண்டாக்கும்@ அதைச் சற்றும் மனநிறைவோடு என்னால் எதிர்நோக்க முடியாது. தீண்டத்தகாதவர் விரும்பினால் சீக்கிய மதத்திற்கோ, கிறித்துவ மதத்திற்கோ, இசுலாமிய மதத்திற்கோ மாற்றப்படுவது குறித்து எனக்குக் கவலையில்லை. அதை நான் சகித்துக் கொள்வேன். ஆனால் கிராமங்களில் இரு பிரிவுகள் ஏற்படுமானால் இந்து மதத்திற்கு நேரிடக் கூடிய நிலைமையை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. தீண்டப்படா தவர்களின் அரசியல் உரிமையைப் பற்றிப் பேசுகிறவர்கள், இந்தியாவை அறியா தவர்கள். இன்று இந்தியச் சமுதாயம் எப்படிக் கட்டப்பட்டுள்ளது என்பதை அறியாதவர்கள். ஆகவே, இதை எதிர்ப்பதற்கு நான் மட்டும்தான் உண்டு என்ற நிலை வரினும் உயிரைக் கொடுத்தும் எதிர்ப்பேன்.”

தீண்டாமை உயிர் வாழ்வதை விட இந்து மதம் சாகலாம், சரி@ இருக்கும் தீண்டாமைக்கு என்ன விடை? அது மெல்ல மெல்ல ஒழியும்@ அதுவரை எவ்வித அரசியல் உரிமைகளும் கோராதீர்கள் எனச் சொல்ல வருகிறார் - வேறென்ன? தீண்டாமை எனும் கொடுங் குற்றத்தின் மீது அவ்வளவு கோபம் உள்ளவர் நெடுங்காலம் நிலவுகிற தீண்டாமைக் கொடுமைகளின் விளைவால் எழுகிற அரசியல் கோரிக்கைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுகிறார் - பதைபதைப்போடு! உலகின் அரசாட்சியே கிடைத்தாலும் நம் உரிமையை விட்டுத்தராதவர் -தீண்டப்படாதோரின் உரிமையை மறுப்பதற்காகவே அடிமைப் பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசாட்சி பற்றி வெள்ளையர்கள் கூட்டிய மாநாட்டில் ஒன்றுமே பேசவி;ல்லை என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு. அம்பேத்கர் எனும் நம் மக்கள் தலைவரை உருவாக்கியதன் முதற்பெரும் பங்கு சமூகப் புறநிலையே. தீண்டாமை காலம் காலமாய் கோலோச்சி வந்ததன்@ வருவதன் விளைவாக அத்தலைவர் உருவானார். காந்தியார் இந்து மதத்திற்கு அன்றி தீண்டப்படாதோருக்கு உண்மையாக இருந்திருந்தால் அம்பேத்கரின் தேவையே வரலாற்றில் இல்லாது போயிருக்கும்.

இந்து மதமே பிளவுகளால் ஆனதுதான் என்பதை மறந்துவிடக் கூடாது. பிளவுகளை செயற்கையாய்க் கூட்டி இந்து மதம் எனும் பெயர் வைக்கப்பட்டது. இந்து மதத்தின் உயிர் வர்ண தர்மம் எனும்போது இந்து மதம் பிளவுபடாமல் எங்ஙனம் தீண்டப்படாதோர் விடுதலையோ தீண்டாமை ஒழிப்போ சாத்தியமாகும்.

இந்திய தேசியத் தலித் தலைவர் களுக்குக் காந்தியார் அன்றே எப்படி எச்சரிக்கை தருகிறார் பாருங்கள். தாழ்த்தப்பட்டோர் அரசியல் உரிமை பேசுகிறவர்கள் இந்தியக் கட்டமைப்பையே அறியாதவர்கள் - என்னே உண்மை!

காந்தியாரின் மேற்சொன்ன கருத்துகள் குறித்து அம்பேத்கர்:

“விவாதமானது தீண்டப்படாதவர்கள் தொடர்பான காந்தியாரின் போக்கைத் தௌ;ளத் தெளிவாக வெளிப்படுத்திவிட்டது. தீண்டப்படாதவர்களின் மிக உறுதியான பகைவர் காந்தியாரே என்று அனைவரும் உணர்ந்தனர். காந்தியார் எந்த அளவிற்குத் தமது ஆற்றலையும் கவனத்தையும் தீண்டப்படாதவர்களின் பிரச்சனையில் செலுத்தினார் என்றால், அவர் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டிற்கு வந்ததன் முக்கிய நோக்கமே தீண்டப்படாதோரின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் என்று சொன்னாலும் கூட அது தவறன்று.”

இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் இவ்வகையில் சிறுபான்மையினரின் சிக்கல் கருத்து வேற்றுமையினால் தீர்க்கப்படாமல் போயிற்று. பிரித்தானியப் பிரதமர் இச்சிக்கல் தீர்க்கும் முழு அதிகாரத்தைத் தனக்கு வழங்குமாறும், தாம் எடுக்கும் எம் முடிவையும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கோரினார். அவ்வாறே விண்ணப்பம் தயாரிக்கப் பட்டது. அம்பேத்கர் தம்முடையது நீதியான கோரிக்கை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அது வெற்றி பெறும் என்றும் நம்பினார். அதனால் அவர் மட்டும் அவ்விண்ணப்பத்தில் கையொப்பம் இடவில்லை. மற்ற அனைவரும் கையொப்ப மிட்டனர் - காந்தியார் உட்பட!

வட்டமேசை மாநாட்டைத் திசம்பர் முதலாம் நாளுக்கு பிரதமர் ஒத்திவைத்தார். பிரதமரின் வேண்டுகோளுக்கு முன் சர்.மிர்சா இசுமாயிலின் இருப்பிடத்தில் காந்தியாரும் அம்பேத்கரும் சந்தித்துக் கொண்டார்கள். காந்தியார் அந்த நேரத்தில் அம்பேத்கரிடம் ஒரு புதுமையான திட்டத்தை முன்வைத்தார். இட ஒதுக்கீடு அற்ற கூட்டுத் தொகுதி முறையால் நடத்தப்படும் தேர்தலில் தீண்டப்படாதோர் போட்டியிட்டுத் தோற்க நேருமாயின் தீண்டப்படாதவர் நீதிமன்றம் செல்லலாம். சென்று தன் சாதி அடையாள உரிமையை நிலைநாட்டிக் கொள்ளலாம் என்றார். கடைசி நேரக் கயமை முயற்சி இது. அம்பேத்கர் சிரிப்பை மட்டுமே அவருக்கு பதிலாகத் தந்தார்.

மாநாடு முடிந்து திரும்பும் வழியில் ரோம் விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார் காந்தியார். அப்போது நிருபர்கள்: “தாழ்த்தப்பட்டோருக்கு அவர்கள் கோரும் உரிமை வழங்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்றனர்.

காந்தியார்: “அப்படி ஒரு நிலை உருவானால் நான் இந்தியாவில் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்குவேன்” என்றார். “இதற்கான அறிவிப்பை வெளியிட்டு விட்டீர்களா?” என்றதற்கு “இதுவே என் அறிவிப்பு” என்றார் காந்தியார். வட்டமேசை மாநாட்டில் பிரதமரின் முடிவை ஏற்றுக் கொள்வதாகக் கையொப்பமிட்டவர் வரும் வழியிலேயே இப்படி அறிவித்தார். சராசரி மனிதன் கடைபிடிக்கும் நேர்மை ஏனோ 'மகாத்மா'விடம் இல்லை! மதமான பேய் பிடித்துவிட்டால் மனிதன் என்ன? மகாத்மா என்ன?

                                                              தொடரும்...

Pin It