தொடர்புடைய படைப்புகள்

உலக வரலாற்றில் பல்வேறு அடிமைத்தனங்களை மக்கள் எதிர்கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றில் பலவற்றை எதிர்த்துப் போராடி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். பண்ணை அடிமை முறை, அரசடிமை முறை, நிறத்தின் பேரிலான அடிமை முறை என்று பல அடிமைத்தனங்கள் இருந்தாலும், இவற்றில் மிக மோசமானதும், மிக நீண்ட வரலாறு கொண்டதும், இன்று வரை தீராததும், தீர்க்கப்பட வேண்டும் என்ற முழுமையான ஏற்புக் கூட பெறாத அடிமைத்தனம் என்றால் அது பெண்ணடிமைத்தனம்தான்.

இந்த பெண்ணடிமைத்தனம் காற்றைப் போல எங்கெங்கிலும் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. ஆனாலும் சமத்துவத்தை விரும்பும் பலரும் பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பெண்களே தங்களுக்கென்று ஒரு வழிகாட்டியை, தலைவரை, தோழரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில் அப்படிப்பட்ட ஒருவர் தந்தை பெரியாராகத்தான் இருக்க முடியும். தமிழக வரலாற்றில் ஈடு இணையற்ற போராளியான தந்தை பெரியார் உலகப் பெண்களின் இனத்திற்கான தலைவராவார்.periyar maniammaiஒட்டுமொத்த மனித சமூகமே ஆண், பெண் என்ற இரு பெரும் பிரிவாகப் பிரிந்து கிடக்கிறது. ஆண் சமூகத்திற்கானவன், பெண் வீட்டிற்கானவள் என்ற கருத்து பெண் அடிமைத்தனத்தின் உயிர் இழையாகக் கிடக்கிறது. இந்தியச் சமூகத்தில் மக்களைப் பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கிற சாதி அமைப்பு உயிர் வாழ்வதும் இந்தப் பெண்ணடிமைத்தனத்தினால்தான். சாதியை எதிர்த்துப் போராடிச் சமத்துவத்தை நிலைநாட்ட விரும்பும் ஆண்களில் பெரும்பாலானோர் கூட, ஏனோ பெண்ணடிமைத்தனத்தை மட்டும் கண்டும் காணாமல் கடந்து விடவே விரும்புகிறார்கள்.

இங்கே சாதியமைப்பும், பெண்ணடிமைத்தனமும் ஒரே கூறுகளைக் கொண்டிருக்கின்றன. சாதி தீட்டு, புனிதம் என்ற கருத்தாக்கங்களை வைத்து இயங்குகிறது. பெண்ணிடமும் தீட்டும் புனிதமும் பார்க்கப்படுகிறது. சாதி ஊர், சேரி என்ற பெயரில் மக்கள் வாழ்விடங்களைப் பிரிந்து ஒதுக்கி வைத்திருக்கிறது. சேரி வாழ்விடங்கள் அழுக்காக, குறுகலாக, சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதைப் போல்தான் குடும்பத்தின் சமையலறையும் இருக்கிறது. மூச்சுமுட்டும் இடங்களாக இருக்கும் சேரிகளும் சமையலறைகளும் இங்கே ஒன்றுதான்.

குடும்பம், சமையலறை என்ற இந்தப் பெருந்தடையைத் தாண்டி, சமூகத்திற்குப் பெண்கள் வரத் தொடங்கும் போதுதான் பொதுத் தளத்தில் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும் அவர்கள் புரிந்து கொண்டாக வேண்டி இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பம் பெண்ணுக்குப் பெருஞ்சுவராக இருக்கிறது. இந்த நேரத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்றை நாம் நினைவுகூரலாம். "நீங்கள் எந்தத் திசையில் திரும்பினாலும் சாதி என்கிற அரக்கன் உங்கள் பாதையை வழிமறிப்பான். அந்த அரக்கனை அழிக்காமல் இங்கே சமூக மாற்றம், பொருளாதார மாற்றம் சாத்தியமில்லை" என்று கூறியதைப் போலக் குடும்பம் என்கிற சிக்கலில் இருந்து பெண் தன்னை விடுவித்துக் கொண்டால் ஒழிய, சமூக மாற்றத்திற்கான ஒரு நபராக அவர் உருவாக முடியாது.

ஓர் ஆண் சாதிய அமைப்புக்கு எதிராகப் போராட வந்தால் சாதி என்ற ஒன்றிற்கு எதிராகப் போராடுவார். ஒரு பெண் சாதி அமைப்பிற்கு எதிராகப் போராட வந்தால் அவர் சாதிக்கு எதிராகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் என இரண்டு எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வர்க்க விடுதலைக்காக ஓர் ஆண் போராட வந்தால், ஆணுக்கு முதலாளி என்ற ஓர் எதிரிதான். ஆனால் பெண்ணுக்கு முதலாளியும் ஆணாதிக்கவாதியும் என எதிரிகளாக இரண்டு பேர் நிற்கிறார்கள்.

இந்த நிலை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடும் பெண்களுக்கு மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. பெண்கள் உலவுகிற இடமெங்கும் ஆணுக்கு இருப்பதை விடக் கூடுதலாக ஆணாதிக்கம் என்கிற சிக்கலையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை விடப் பெருங்கொடுமை ஒரு பெண் தன் உடலுடன் நடமாடுவதே பெருஞ்சிக்கல் என்கிற அளவிற்குப் பெண்ணுக்கான உடல் மீதான வன்முறையைச் சாதாரணமானதாக மாற்றி வைத்திருக்கிற இந்த மண்ணில்தான் 2000 ஆண்டுகாலச் சனாதனம் என்கின்ற பெருமை வேறு.

இருக்கின்ற கொடுமைகள் போதாதென்று ஒரு பெண் தன் குடும்பத்தில் நடக்கும் எல்லா எதிர்மறை நிகழ்வுகளுக்கும் தானே காரணம் என்கிற குற்ற உணர்ச்சியும் உடையவராக இருக்கிறார். ஒரு விபத்து நடந்தால், இறப்பு நடந்தால், பொருளாதார இழப்பு நடந்தால், யாருக்கேனும் உடல்நலக் குறைவு இருந்தால் கூடத் தான் சரியாகச் சாமி கும்பிடவில்லையோ, விரதம் இருக்கவில்லையோ என்பது போன்ற பல்வேறு குற்ற உணர்ச்சிகளைச் சுமந்து கொண்டிருக்கிறார். இதுவும் ஒரு கற்பிக்கப்பட்ட, பழக்கப்படுத்தப்பட்ட குற்ற உணர்வுதான். இதிலிருந்தும் ஒரு பெண் வெளியில் வர வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான தேவை.

இங்கே சாதிகளும், மதங்களும் பெண்களைத் தங்களுக்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றன. குடும்ப அமைப்பில் பெண்களின் மிக முக்கிய வேலை சாதிப் பழக்கவழக்கங்களைத் தனது குழந்தைகளுக்குக் கற்பிப்பது, காப்பது மற்றும் மதச் சடங்குகளைச் செய்யும் தனது வீட்டு ஆண்களுக்குத் தேவையான அனைத்துப் பங்களிப்பையும் தருவது. ஆனால் மதங்கள் பெண்ணுக்கு எந்தச் சலுகையும் வழங்கவில்லை. சொர்க்கம் கூடப் பெண்ணுக்கு அனுமதிக்கப்படவில்லை. "பெண்ணுக்குத் திருமணமே உபநயனம். கணவனுக்குப் பணிவிடை செய்தலே குருகுலவாசம்" என்கிறது மனுசாஸ்திரம்.

மேற்குறிப்பிட்ட தடைகளெல்லாம் தாண்ட முடியாத பெருந்தடைகளா என்று சிந்திப்போமானால் ஆம், பெருந்தடைகள் தான், ஆனால் தாண்ட முடியாத தடைகள் அல்ல என்று பதில் கூறலாம். சனாதனம் என்கிற பெயரில் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சமூகக் கட்டுப்பாடுகளில் பலவும் சட்டங்கள் மூலமாகவும், சமூக மாற்றங்கள் மூலமாகவும் தளர்த்தப்பட்டிருக்கின்றன. ஆனாலும் அவை முழுமையாக அழிக்கப்படவில்லை. தொடர்ந்து செயல்படுவதன் மூலமே முழுமையான பெண் விடுதலை என்பது சாத்தியமாகும்.

உடன்கட்டை ஏறுதல் என்றொரு கொடிய வன்முறையைச் சட்டம் போட்டுத் தடுக்க முடிந்தது. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் உயிர் பெறும் சூழல்தான் இன்றைக்கும் நிலவுகிறது. பெண்களை மீண்டும் சிதையில் தள்ள தனது நெருப்பு நாக்குகளோடு காத்திருக்கிறது சனாதன மதம். 1987இல் ராஜஸ்தான் மாநிலத்தில் உடன்கட்டை ஏற்றப்பட்ட ரூப் கன்வர் என்கின்ற 24 வயது பெண் மூலம் அது நிரூபிக்கப்பட்டது. இது உடன்கட்டை ஏற்றுதலுக்கு மட்டுமல்ல, இது போன்ற அனைத்து வகையான பெண்ணடிமைத்தனங்களையும் மீண்டும் உயிர் பெற வைக்கும் முயற்சிகளும் இங்கே நடந்து கொண்டே இருக்கின்றன.

மதங்கள் மிகவும் வன்மமானவை. பெண் அடிமைத்தனத்தைப் பெண்களையே வைத்து நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்குச் சூழ்ச்சிகள் செய்து வைத்திருக்கின்றன. இன்றைக்கு மகளிர் தினங்கள் கூட சக்தி தினங்களாகவும், அழகிப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடக்கும் தினங்களாகவும் மாற்றப்படுகின்றன. இங்கே பெண்களை மதிமயக்குகிற வார்த்தைப் பயன்பாடுகளும், கலாச்சாரம், பண்பாடு என்னும் பூச்சும் அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

ஆனால் இதே மண்ணில்தான் சாவித்திரிபாய் பூலே தன் மீது சாணியை வீசி எறிந்த போதும், கற்கள் வீசப்பட்டபோதும் அவற்றை எதிர்கொண்டு தாண்டியும் சென்று, கற்பித்து இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார். அன்னை நாகம்மையாரும் தோழர் கண்ணம்மாளும் கடுமையான அரசியல் போராட்டங்களில் பங்கெடுத்து, சிறை சென்றார்கள். ஆயிரக்கணக்கான பெண்களை இயக்கப் பெண்களாக மாற்றிக் காட்டினார்கள். அன்னை மணியம்மையார் உலகத்தில் மிகப்பெரிய நாத்திக இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுத் திறம்பட நடத்திக் காட்டினார்.

இந்தியாவின் பிரதமராக இருந்த, அன்னை என்று அழைக்கப்பட்ட இந்திரா காந்தி அம்மையாரைக் கிணற்றடியில் அமர்ந்து சந்தித்தார் சங்கராச்சாரி. இந்திரா காந்தி அம்மையார் கணவனை இழந்தவர் என்பதால் அப்படி ஒரு சனாதன முறை பின்பற்றப்பட்டது. இப்படிப்பட்ட இழிவு நடந்த காலகட்டங்களில்தான் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழிப் போராட்டம் என்று முழங்கிக் கொண்டு தெருக்களிலே சுயமரியாதைப் பெண்களாகப் போராட்ட நடை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

உலகப் பெண்களின் விடுதலைப் போராட்டங்களைக் கவனித்தால் கூட முதலாம் அலை பெண்ணியம், இரண்டாம் அலை பெண்ணியம் என்றும், மிதவாதப் பெண்ணியம், தீவிரவாதப் பெண்ணியம் என்றும் வகைப்படுத்தப்படுகிற பெண்ணியப் போராட்டங்களில் மிக மிகப் பின்நாட்களில் பேசப்பட்ட கருத்துக்கள் எல்லாம் தந்தை பெரியாரால் 1935க்குள் பேசப்பட்டு விட்டன. அவர் பேசியதோடு இல்லாமல் அவரைப் பின்பற்றிச் சுயமரியாதைப் பெண்கள் நடந்தனர். சமூக ஏற்பு, சட்ட ஏற்பு குறித்தெல்லாம் கவலைப்படாமல் பெண் விடுதலைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு, கடைப்பிடிக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கும் தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் அனைவரும் பாராட்டத்தக்க நிலையை அடைந்திருக்கின்றனர்.

ஆனாலும் நமது பெண்கள் இந்தியாவின் பிற மாநிலப் பெண்களின் நிலையோடு தங்களை ஒப்புமைப்படுத்திக் கொண்டு பார்க்காமல், உலகில் உள்ள முன்னேறிய நாடுகளில் உள்ள பெண்களின் நிலையோடு தங்களை ஒப்புமைப்படுத்திக் கொண்டு அவர்களைப் போல் முன்னேற வேண்டும். அதற்காக அவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறை, கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் எது என்றால் அது பகுத்தறிவும், சுயமரியாதையும்தான். பெண்கள் சாதியை விட்டும், மதத்தை விட்டும் வெளியேற வேண்டும். சாதியும், மதங்களும் பெண்களை இழிவுபடுத்துவதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இத்தனை ஆண்டு காலமாகச் சாதியையும், மதங்களையும் பின்பற்றி வந்த பெண்களுக்குச் சாதி அமைப்பும், மதங்களும் செய்தது என்ன? ஆணவப் படுகொலைகளும் இழிவும்தான். எனவே பெண்கள் தங்கள் நிலையை உணர்ந்து சாதியில் இருந்தும் மதங்களிலிருந்தும் முழுமையாக வெளிவர வேண்டும். தமிழ்நாட்டில் இயங்குகிற அனைத்து வகையான சாதி, மதங்களுக்கு எதிரான இயக்கங்களும், குழுக்களும் இதனைத் தங்கள் வேலைத்திட்டமாக எடுத்துக் கொண்டு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாடு அறிவியல் மன்றம் மூலமாக இது போன்ற முயற்சிகளைத் தொடங்கிச் செய்து வருகிறோம். பெரியாரின் கொள்கையினை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பான திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பாகத் தமிழ்நாடு அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டது. மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அமைப்புச் செயல்திட்டங்களைத் தீட்டிக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது. இந்தப் பயணத்தில் நான் உணர்ந்தவற்றையும், பெற்ற பட்டறிவையும்தான் இந்தக் கட்டுரை வாயிலாகப் பகிர்ந்துள்ளேன்.

சிறிய குழுக்களில் விவாதங்கள் எனத் தொடங்கி கருத்தரங்குகள், மண்டல மாநாடுகள் வரை திராவிடர் விடுதலைக் கழகத்தோடு இணைந்து நடத்தி இருக்கிறோம். இதில் கடந்த 2025 மே 24ஆம் தேதி மேட்டூரில் நடந்த நாத்திகர் விழாவைப் பெண்களே முன்னின்று நடத்தியதும் பேரணி, மாநாட்டு நிகழ்ச்சிகள், அலகு குத்துதல் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிரான நிகழ்வுகளைப் பெண்களே திட்டமிட்டு நடத்தியதும் ஒரு முக்கியமான நகர்வு ஆகும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டின் படித்த, வேலைக்குச் செல்கிற, சொந்தக் காலில் நிற்கிற, சுயசிந்தனை உள்ள பெண்கள் அனைவரும் தந்தை பெரியாருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கின்றோம். இன்றைக்கும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெண்கள் வாழ்வதற்கான சூழ்நிலை அச்சம் ஊட்டுபவையாக இருக்கும்போது, தமிழ்நாடு பெண்களுக்கான நாடாகத் திகழ்கிறது என்றால், அதற்குத் தந்தை பெரியாரும் அவரது கருஞ்சட்டைத் தொண்டர்களும்தான் காரணம். எனவே தமிழ்நாட்டுப் பெண்கள் தந்தை பெரியாரின் வழியில் சாதியை முற்றிலும் அழித்தொழிக்க, மதங்களின் பிடியிலிருந்து விடுதலை பெற்று, சுயமரியாதை வாழ்வு வாழ ஓரணியில் திரள்வோம் என உறுதி ஏற்போம்.

- சிவகாமி, தமிழகத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.