‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (தொல்:சொல்155) என்று தொல்காப்பியம், சொல்லை விளக்க வரும் இடத்தில் ஒரு பேருண்மையை வைத்துச் செல்கிறது. ‘சொல்’ என்பதாகிய கருத்து பொருள் இல்லாமல் வருவதில்லை என்பதே அந்த உண்மை. பொருளின் புறத்துப் பிறந்தது கருத்தாக அமைகிறது. அடுத்தபடியாக

‘பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்

சொல்லின் ஆகும் என்மனார் புலவர்’

(தொல்:சொல்156)

என்று, பொருளுக்கும் சொல்லுக்கும் மற்றொரு பண்புத் தன்மையைச் சுட்டுகிறது தொல்காப்பியம். இதை வெறும் சொல் இலக்கண உரையாடலாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. பொருளுக்கும் கருத்துக்கும் ஏற்பட்ட உறவினால் பொருண்மையும், சொன்மையும் தோன்றுகிறது. அதாவது கல் என்ற சொல் பாறையிலிருந்து உடைந்த ஒரு சிறு பகுதியைக் கண்டதும் உருவாகிறது. ஆனால் அந்தச் சொல் திடீரென உருவாகிவிட முடியாது. அதற்குப் பற்பல சிந்தனைத் தூண்டல்கள் தேவைப்படும்.

ஒருவர் தாம் கண்ட பல்வேறு பொருள்கள் தனக்கு ஏற்கனவே உருவாகிய கருத்துகள் ஆகியவற்றின் உறவாடலால் ‘கல்’ என்ற சொல்லை அதாவது கருத்தைப் பெறுகிறார். அத்துடன் கல்லுக்கான பண்பு நலன்கள், பயன்கள் ஆகிய பொருண்மைகள், கல் எந்த வகையிலெல்லாம் பிற சொல்லோடு உறவு கொண்டு வேறு வடிவம் எடுக்கிறது, அதாவது ‘சொன்மை’ கொள்கின்றது என்பதைத் தொல்காப்பியம் சுருக்கமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறது. ‘கல்’ என்பது தோண்டுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றி பின்னர் கல்வி, கலை என்று பல்வேறு வடிவங்களைப் பெற்றுச் செல்கிறது. ஆக இவை யாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது ஒன்றுடன் ஒன்று கொள்ளும் உறவுமுறையே இதைத் திணையவியல் மொழியில் சொல்வதானால், சூழலுக்கும் உயிரிக்கும் உள்ள உறவுமுறை. அதாவது திணைய உறவுமுறைதான் பொருளின் கருத்தையும் பொருண்மையையும் சொன்மையும் உருவாக்கிக் கொண்டே செல்கிறது. திணையவியல் சிந்தனை மரபின் இந்த அடிப்படையான கூறு இன்றைய புத்திய (னீஷீபீமீக்ஷீஸீ) சிந்தனைப் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் இருப்பதைக் காண முடிகிறது.

வாழ்க்கையின் காரணம் பற்றியும் தேவை பற்றியுமான வினாவே மெய்யியல் என்ற கருத்தியலாக வளர்ந்தது. உயிர் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? என்பதற்கான முடிவற்ற தேடலில் பல மெய்யியல் பள்ளிகள் தோன்றி வளர்ந்தன. உயிர்ப்பு, பிழைப்பு, இருத்தல் என்று வாழ்வின் பல நிலைகள் மாந்தனின் கருத்துகளை வடிவமைக்கின்றன. காரல் மார்க்சு ‘வகுப்புகளின் போராட்டமே வரலாறு’ என்று கூறினார். அதாவது உடைமை வகுப்புகள் தோன்றிய பிறகு ஏற்பட்ட போராட்டங்களை மார்க்சிய இயங்கியல் முறையில் முன்மொழிந்தார். இதைத் திணையவியல் மொழியில் ‘கால நெடுகிலும் இயற்கையுடன் மாந்தன் கொண்ட உறவே வரலாறாக உள்ளது’ என்று வரையறுக்கலாம். நெருப்பைக் கண்டறிந்ததில் இருந்து கணினி உருவாக்கம் வரையிலும் அவனது இயற்கையுடனான உறவாடலே வரலாறாக உள்ளது.

சாக்ரட்டீசு போன்றவர்கள் வினா எழுப்புதல் என்ற முறையில் ஏரணவியல் (தருக்க முறை) அடிப்படையில் உண்மையைக் காண முயன்றார்கள். (சாக்ரடீசு எதையும் எழுதவில்லை என்றும் அவரது பேச்சுகளை அவரது சீடர்கள் தொகுத்ததாகவும், அதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் கருத்துகள் உள்ளன) உலகத் தோற்றம் பற்றி அன்றைய கிரேக்க அறிஞர்களுக்கு நம்பிக்கை சார்ந்த அறிவே இருந்துள்ளது. நம் அறிவாணர்கள் வெகுவாகப் புகழ்ந்துரைக்கும் அரிஸ்டாட்டில், நைல் ஆறு நிலவிலிருந்து தோன்றி வழிவதாகக் கூறினார். ஆரிய மறையான ரிக் வேதம் உலகின் தோற்றத்தைப் பற்றிக் கூறும்போது ‘அனைத்தையும் அறிந்த பரம்பொருளாகிய இறைவன் படைத்தான்’ என்று கூறுகிறது. இதைப் போலவே இதனினும் பழமையான எகிப்து, சுமேரிய கருத்தோட்டங்களும் இருந்துள்ளன.

பண்டைய அறிஞர்களில் தொல்காப்பியர்தான் உலகத்தோற்றத்தை ஐம்பூதங்களின் உறவு என்று கூறுகிறார். திணையவியலின் நடுப்புள்ளியான பொருளுக்கும் கருத்துக்குமான உறவு பற்றி அவர் பல இடங்களிலும் சொல்லிக் கொண்டே செல்கிறார். முதற்பொருளாகிய நிலமும் பொழுதும் கருப்பொருள்களுடன் கொண்ட உறவு உரிப் பொருளாக உருவாக்கம் கொள்கிறது. அகத் திற்கும் புறத்திற்கும் உள்ள உறவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. உயிருக்கும் மெய்க்கும் உள்ள உறவே இயக்கத்தைத் தீர்மானிக்கிறது என்று தொல்காப்பியம் சாராமாக வரையறுக்கிறது.

‘மெய்யோடு இயையினும் உயிரியல்திரியா’ (தொல்: எழு:10)

என்ற நூற்பாவில் மெய்யுடன் உயிர் உறவு கொள்வதை நுட்பமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

‘மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே’ (தொல்: எழு:18)

என்ற வரிகளில் மெய்யின் வழியாக உயிர் தோன்றுவதை விளக்குகிறது. இப்படியாக உயிருக்கும் மெய்யுக்குமான உறவை எழுத்ததிகாரத்தில் தொல்காப்பியம் எடுத்தியம்புகிறது.

மார்க்சிய இயங்கியல், ‘செயலில் இருந்து சிந்தனைக்கும் சிந்தனையில் இருந்து செயலுக்குமான உறவு முறையை’ விளக்குகின்றது. ஆக மிக அண்மைக் கால முன்னேறிய நிலையில் தோன்றிய சிந்தனைகளின் மூல ஊற்றாக தொல்காப்பியத்தின் திணையவியல் இருப்பதைக் காண முடியும். திணையவியல் சிந்தனைப் பள்ளி இயங்கிய காலத்தில் வேறு சிந்தனை மரபுகளும் தமிழகத்தில் இருந்துள்ளதை மறுக்க முடியாது. மணிமேகலையில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்ததை விளக்கமாகக் காண முடிகிறது. தமிழ்த் திணை மரபு தனக்கே உரிய தனித்தன்மையுடனும் சமயம், நம்பிக்கைகள் போன்றவற்றைத் தாண்டி ஏரணம், சான்றுகள், நுணுகுதல் என்று பல அறிவியல் வகைப்பட்ட தன்மைகளுடனும் இயங்கி உள்ளது. அது மட்டுமல்லாது பல சிந்தனைப் பள்ளிகளிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐம்பூதங்களின் சேர்க்கையே உலகம் என்று விளக்கிய திணையியல், ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்கிறது. நாம் வெளிப்படையாகப் பார்த்தோமாயின் நிலம் என்கின்ற மண்ணை எப்படி உணவாகக் கொள்ள முடியும் என்ற வினா எழும்பும். ஆனால் நிலம் என்கின்ற ஒன்றோடு, நீர் என்கின்ற ஒன்று உறவு கொண்டு, உயிர்கள் உண்ணக் கூடிய உணவு என்ற ஒன்றைப் படைக்கின்றது என்பதே பொருள். உணவு தோன்றுகின்ற அறிவியலை திணையியல் ஒரு மெய்யிலாகச் சுட்டுகிறது.

கணியன் பூங்குன்றன் திணையவியல் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர் என்பதை அறியலாம்.

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன’ என்ற வரிகளை உற்று நோக்கினால், இது ஏதோ ஒருவன் செய்த நவினை, தீவினைப் பயன்களால் மட்டுமே ஒருவனது வாழ்க்கை நிலையிடப்படும் என்பதான கருமக் கோட்பாட்டுச் சிந்தனை போல் தோன்றும். ஆனால் ‘தீது’ ‘நன்று’ ஆகிய வினைகள் ஒருவன் மற்றொருவனுடனோ இந்த குமுகத்துடனோ கொள்கின்ற உறவால்தான் ஏற்படுமே தவிர அதுவாக ஏற்படா. அதுபோல நோய் வருவதும் நீங்குவதும் அவன் எவ்வாறு தனது உடலோடும் மருந்தோடும் உறவாடுகின்றானோ அதைப் பொருத்தே அமையும். இவ்வாறு விளங்கிக் கொண்டால் இந்தப் பாடலின் உண்மையான பொருள் கிடைக்கும். அதுமட்டுமன்று,

‘நீர் வழிப்படூஉம் புணை போல ஆருயிர் முறை வழிப்படூஉம் என்ற இடத்தில் நன்றாகவே புலவர் விளக்குகிறார். அதாவது புணை என்பது துடுப்பை வைத்து நீரிலே இயக்கப்படுகின்ற கட்டுமரத்தில் ஒரு வகை. அந்தப் புணையை எவ்வாறு துடுப்பால் அதற்கேற்றவாறு அதன் போக்கு அமையும். ஆற்றின் போக்கில் அப்படியே போவதாகக் கணியன் கூறவில்லை. அப்படி நினைத்திருந்தால் துரும்புபோல என்று கூறியிருப்பார். ஆற்றின் வேகத்திற்கும் துடுப்பின் இயக்கத்திற்கும் இடையேயான உறவு அங்கே புணையின் போக்கைத் தீர்மானிக்கிறது. இதைத்தான் அவர் ‘உயிர் முறை வழிப்படூஉம்‘ என்கிறார். ‘முறை’ என்பதற்கு ‘உறவொழுங்கு’ என்று பொருள் கூறுகிறது கழக அகராதி. ஆகத் தெள்ளத் தெளிவாகத் திணையவியல் கோட்பாட்டைக் கணியன் பூங்குன்றன் பதிவு செய்கிறார்.

மண்ணுக்கும் மக்களுக்குமான உறவால் வளர்ந்த குமுகம் தனது நன்றிக் கடனாக மண்ணை ஓம்பு கின்ற அதாவது பயன்படுத்திப் பாதுகாக்கின்ற பணியைச் செய்ய வேண்டும் என்று திணையவியல் கூறியது. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று திருக்குறள் கூறுவதும் இதை அடிப்படையாகக் கொண்டே. ‘என்பனார் புலவர்’ என்றும் ‘நூலோர்’ என்றும் குறிப்பிடுவது காலங்காலமாகத் திணையவியல் கருத்துகள் மக்களிடம் நிலவி வந்தததை உணர்த்துகிறது.. இந்த உறவுமுறை அல்லது ஒழுகலாறு முதலில் எளிய தன்மை கொண்டதாக இருப்பினும் பின்னர் அது சிக்கல் மிக்கதாக மாறுகிறது. இயற்கை எளிய உயிரினமான அமீபா போன்ற ஒரு சில்லி (cell) உயிரினங்கள், உண்பதும், கழிப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் என்று குறைவான பணிகளையே செய்கின்றன. அத்தோடு அந்தப் பணியும் மிக எளிமையாக சிக்கலற்றதாகவே உள்ளது. இனப் பெருக்கத்திற்காகத் தனது உடம்பைப் பிய்த்து மற்றொன்றை உருவாக்கிக் கொள்கிறது. ஆண்/பெண் என்ற பாலினப் பாகுபாடுகள் இல்லை. ஆனால் வளர்ந்த சிக்கலான நிலையில் இனப் பெருக்கத்திற்காகவே ஓர் அருமையான கூட்டைக் கட்டி தனது இணையைக் கவர படாத பாடுபடும் தையல் குருவிகளைப் பின்னால் இயற்கை உருவாக்கியது. இதற்கான காரணம் உயிரின வரலாற்றில் இடையறாது நடந்த ‘உறவொழுங்கு’ அல்லது ‘ஒழுகலாறு’ என்பதே ஆகும். இவ்வாறு உறவொழுங்கைப் பல்வேறு முறைகளில் பின்னிப் பின்னி உருவாக்கிய இயற்கை, உயிரினங்களை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டே சென்றது.

இதைத் தொல்காப்பியம்,

‘ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே

ஆறறிவதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’

(தொல்: மர: 571)

என்று தனது முன்னோர் வழி நின்று கூறியது. படிமலர்ச்சி எனப்படும் கூர்தலறம் (Evaluation) பற்றிய நுட்பமான செய்தி இது. இந்த மேல் நோக்கிய வளர்ச்சியில் மாந்த இனம் தனது ‘அறிவாற்றலைக்‘ கொண்டு இயற்கையினை வெல்ல முயன்றது. இணக்கமான உறவு ‘அறிவார்ந்த’ மாந்தக் கூட்டத்தினால் பகையான உறவாக மாறியது. ‘தனக்கு ஒன்று தந்தால் கொடுத்தவர்க்கு ஒன்று தர வேண்டும்‘ என்ற ஒன்றுக்கொன்றான உறவு, அதாவது அறவியல் பண்பு மாற்றம் பெற்று ‘ஒன்றைப் பெற்றால் ஒன்றைத் தர வேண்டியதில்லை’ என்ற அறிவியல் வளர்ந்தது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்கச் சிந்தனையாளர்கள் அறம் என்பதை அறிவியலில் இருந்து பிரித்துக் கொண்டனர். ஆனால் தனித்துப் பிரித்துப் பார்ப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன. பொருள், இலாபம் என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டு மற்றவற்றைப் புறந்தள்ளுவதால் நீடித்த வாழ்வாதாரங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள் மிக மோசமான அழிவை எட்டி வருகின்றன.

‘இயற்கையே மிகச் சிறந்த அறிவியல் ஆசான்’ என்று பீட்டர் குரபோட்கின் என்ற உருசிய அறிஞர் குறிப்பிடுகிறார். இது நமது சங்க இலக்கியங்கள் காட்டும் வழியை நினைவூட்டுகிறது. ‘பழு மரம் உள்ளூரப் பழுத்தற்றால்’ என்ற திருக்குறள் வரிகள் நினைவுக்கு வருகின்றன. மரபீனியியல் ஆய்வாளர்கள் பண்புக் கூறுகளைக் கொண்டு செல்லும் ஐஞ்சக்கரை உட்கருப் புளிங்கள் (ஆர்.என்.ஏ) முழுமையாகவும், அதே நேரத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்கு ஏற்றவாறும் பண்புக் கூறுகளை வடிவமைக்கின்றன என்று கூறுகின்றனர். அவ்வாறாயின் தனித்து அவற்றால் வெற்றிகரமாக இயங்க முடியாது என்பதோடு அவை ஒன்றோடொன்று கொள்ளும் சீரான உறவில்தான் தலைமுறை தலைமுறையாக மரபுப் பண்புகள் எடுத்து வரப்படுகின்றன என்பதும் தெளிவாகிறது.

இந்தப் பூவுலகில் உள்ள யாவும் ஒரு விரிவான உறவொழுங்கில்தான் இயங்குகின்றன என்பதைப் பல ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. அணுவின் உள்ளே சுழலும் மின்னான்களில் இருந்து பல்வேறு ஆற்றல் துகள்களும் சீரான உறவொழுங்கில்தான் இயங்குகின்றன. இந்தப் பரந்த பெரும் புடவி (Universe) கூட சீரானதொரு உறவொழுங்கில்தான் இயங்குகிறது. இந்த உறவு சீர்கெடும்போது தொல்லைகள் வருகின்றன.

பயிர்களைத் தின்று விலங்குகள் வளர்கின்றன. அவை மடிந்தபின் அவற்றை உண்டு நுண்ணுயிர்கள் வளர்கின்றன. அவற்றை எடுத்துக் கொண்டு பயிரினங்கள் வளர்கின்றன. இந்தத் தொடர்ச்சியான உறவொழுங்கினால் எவ்வித முரண்பாடும் தோன்றுவதில்லை. ஆனால் நுண்ணுயிர்களைச் செயல்படவிடாமல் நஞ்சை மண்ணில் கொட்டித் தடை செய்யும்போது சுழற்சி தடைபடுகிறது; இணக்கம் முரணாகிறது.

டார்வின் ‘பொருத்தமுள்ளவை தப்பிப் பிழைக்கும்‘ என்றார். இதனை ‘வலுவுள்ளவை வாழும்‘ என்று விரிவுபடுத்திக் கொண்டு பிற உயிரினங்களைக் கொன்று குவித்தனர். நாடுகளின் மீது போர் தொடுத்து அழித்தனர். முதலாளியம் தனக்கு இனக்கமான கோட்பாடாக இதை எடுத்துக் கொண்டு பலரைச் சுரண்டிக் கொழுத்தது. ஆயுதங்களைக் கொண்டு எளிய, இயற்கை சார்ந்த நாடுகளை அடிமைகளாக்கினர். டார்வின் அறிவுலகின் கடவுளாக மாறினார். ஆனால் வலுவுள்ளவைதான் வாழும் என்றால் அடிமைக்கு என்றுமே விடுதலை இல்லை. ஒத்திசைவு, ஒருங்கிணைவு என்ற ஒன்றை டார்வினியம் எடுத்துக் கூறவில்லை. ஒரு பெரும் யானையைக் கூட ஒரு சிறு எறும்புக் கூட்டம் தாக்கி அழித்துவிட முடியும். எல்லா அறிவும் பெற்ற மாந்தனை ஒரு நுண்ணுயிர்க்குழு கொன்றுவிடக் கூடும். எனவே இயற்கையானது ஒத்திசைவையும், உறவொழுங்கையும் தன்னிடத்தே கொண்டுள்ளது. அதைக் கண்டறிந்து வளர்த்தெடுப்பதன் மூலம் அனைவருக்குமான வாழ்க்கை உறுதியாகும்.

தமிழ்த் திணையவியல் உறவொழுங்கை அடிப்படையாகக் கொண்டது. இயற்கையையும் மாந்தனையும் நல்லுறவு கொண்ட உறவினர்களாகக் காண்கிறது. இன்றைய மோசமானதொரு வணிகமயச் சூழலில் அறத்தை அடிப்படையாகக் கொண்ட திணையவியல் கோட்பாடு தனக்கான மெய்யியலை உருவாக்கிக் கொள்கிறது.

Pin It