periyar 600

திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராமராஜ்யத் தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசை யிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்யமாக் கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு போய்க் குடியிருந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமத்தானம் ராம ராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே சாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் “சாட்சாத் மகாவிஷ்ணு”வினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும்.

எப்படியென்றால், திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும் ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ “மகா விஷ்ணு”வாகும். எனவே “மகாவிஷ்ணு”வின் அவதாரமாகிய ராம ராஜ்யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு அரசாட்சி செய்யும் ராஜ்யமானது ராமராஜ்யத்தைவிட எவ்வளவோ பங்கு மேலானதும், அசல் தேசீயம் நிறைந்த சுயராஜ்யமானதுமாகும். அதோடு வெள்ளைக்கார ஆட்சி சம்பந்தமில்லாத பூரண சுயேச்சை தேசமுமாகும். இந்த முறையில் திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சுவாமி ஆளத் தொடங்கிய பின்னும் ராமராஜ்யத்தைப் போலவே - தேசீய சுயராஜ்யத்தைப் போலவே ஆளத் தொடங்கிய பின்னும் அந்த ராஜ்யத்திற்கு ஏற்பட்டிற்கும் பெருமை என்னவென்று பார்ப்போமானால் அது மிக்க அதிசயிக்கத்தக்கதாகவே இருக்கும். முதலாவது உலகத்தாரால் திருவாங்கூர் ராஜ்யம் பெற்றிருக்கும் நற்சாட்சிப் பத்திரமென்னவென்றால் “திருவாங்கூர் ராஜ்யம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிபோல் இருக்கின்றது” என்பதாகும்.

இரண்டாவது இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் தனது நாட்டில் ஏற்படுத்திக் கொண்ட பெருமையுடையதாகும். அதாவது 1881 ஆம் வருஷத்தில் சுமார் நான்கு லட்சம் கிறிஸ்தவர்களை யுடையதாயிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் இப்போது 16.1/2 லட்சம் கிறிஸ்துவர்களை உண்டாக்கியிருக்கின்றது. திருவாங்கூர் சமஸ்தானம் 40 லட்சம் ஜனத்தொகை கொண்டதாகும். இதில் 16 1/2 லட்சம் கிறிஸ்துவர்களும் சுமார் 4 லட்சம் மகமதியர்களும் இருக்கின்றார்கள். பகுதிக்கு மேலாக பத்மநாத சாமியைப் பரிகாசம் செய்யும் ஜனங்களாக இருக்கின்றார்கள். மீதியுள்ள 19 1/2 லட்சம் ஜனங்களிலும் பத்து லட்சத்திற்கு மேலாகவே பத்மநாப சாமியைப் பார்க்கவும் பத்மநாபசாமி கோவிலின் திரு மதிலைத் தொடவும் மதில் தெருவிலும் “பத்மநாப சாமி எழுந்தருளும்” தெருவிலும் நடக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.

இனி, அடுத்த இரண்டாவது அல்லது மூன்றாவது ஜனகணிதத்திற்குள் (சென்சஸ் கணக்கு எடுக்கும் காலத்திற்குள்) இந்த பத்து லட்சம் ஜனங்களும் பத்மநாபசாமியைக் கும்பிடுவதையே விட்டுவிட்டு மேற்கண்ட 20 லட்சம் கிறிஸ்துவர்கள், மகமதியர்கள் ஆகியவர்களுடன் சேர்ந்து கொண்டு விடுவார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்த நிலையில் திருவாங்கூர் ராஜ்யமானது இப்போது தனது சமஸ்தானத்தில் ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு வருகின்றது. இந்த மாதிரியான சுதேச தேசீய சமஸ்தானங்களை நாம் வைத்துக் கொண்டு சுயராஜ்யம் கேட்பதும், தேசீய ராஜ்யம் கேட்பதும், பூரண சுயேச்சை கேட்பதும், ராமராஜ்யம் வேண்டும் என்பதும் எவ்வளவு மூடத்தனமும் யோக்கியப் பொறுப்பற்றதுமான காரிய மென்பதை வாசகர்களே தெரிந்துகொள்வார்கள் என்று நினைக்கின்றோம்.

இப்பொழுது நமது காங்கிரசானது அதிலும் சிறப்பாக திருவாளர்கள் கல்யாணசுந்தர முதலியாரும். வரதராஜுலுவும் காப்பாற்றும் நமது தமிழ்நாட்டுக் காங்கிரசானது பெரிதும் ராமராஜ்யத்தையே அடிப்படையாகக் கொண்டு, காங்கிரஸ் தொண்டில் புராண பிரசாரமும், ராமாயண பாரத பிரசாரமும், அதை ஆதாரமாய்க் கொண்ட சனாதன இந்து தர்மப் பிரசாரமும் சேர்ந்ததென்று சொல்லித் தங்கள் தங்கள் பத்திரிகையில் எழுதுவதுடன் ஊர் ஊராக செல்லும் இடங்களிலும் இதே பிரசாரம் செய்தும் வருகின்றார்கள். மற்றபடி காங்கிரஸ் தலைவர்களும், பூரண சுயேச்சைத் தலைவர்களும், தேசீயப் பத்திரிகைகளும் இவற்றையே எழுதியும் வருகின்றனர்.

நாளைய தினம் சுயராஜ்யம் வந்துவிட்டதாகவோ, அல்லது வெள்ளைக்காரர்கள் பெண்டு பிள்ளை துப்பாக்கி மருந்து முதலியவை களுடன் ஓடி விட்டதாகவோ வைத்துக் கொள்ளுவோம். அதன் பிறகு நடப் பது எந்த தேசீய ராஜ்யம் என்று தான் தேசீய வீரர்களைக் கேட்கின்றோம்? திருவாங்கூர் சமத்தானத்தைப் போல் சாதியைக் காப்பாற்றும், சனாதன தர்மமும், ராமராஜ்யமும் நடைபெறுவதைத் தவிர வேறு வழியிருக்கின்றதா என்றுதான் மறுபடியும் கேட்கின்றோம். அல்லது வக்கீல் ராஜ்யமானால் அது பகற்கொள்ளை ராஜ்யமல்லவா? என்று கேட்கின்றோம். அல்லது வியாபாரிகள் முதலாளிகள் ராஜ்யமானால் அது இப்போதைப் போலவே வழிப்பறிக் கொள்ளை ராஜ்யமா அல்லவா என்று கேட்கின்றோம்.

எந்தக் காரணத்தாலாவது பார்ப்பன ராஜ்யமும், வக்கீல் ராஜ்யமும், முதலாளி ராஜ்யமும் ஒழியும்படியான திட்டம் கொண்ட சுயராஜ்யமோ, தேசீய ராஜ்யமோ ஏற்படுத்த இப்போது நம் நாட்டில் ஏதாவது இயக்கம் இருக்கின்றதா? என்று கேட்கின்றோம். பார்ப்பனர் மோட்சத்தின் பேராலும், காலிகள் ஆதிக்கத்தின் பேராலும், வக்கீல்கள் நீதிவாதத்தின் பேராலும், பண்டிதர்கள் சமயத்தின் பேராலும் வயிறு வளர்ப்பதுபோல் சில போலிகளும், போக்கற்றவர்களும் இப்போது சுயராஜ்யத்தின் பேராலும், தேசீயத்தின் பேராலும், சுயேச்சையின் பேராலும் வாழ நினைத்துப் பாமர மக்களை ஏய்த்துப் பிழைப்பதல்லாமல் மற்றபடி இவற்றில் கடுகளவாவது உண்மை இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

தாடியில் நெருப்புப் பிடித்து எரியும்போது அதில் சுருட்டுப் பற்ற வைக்க நெருப்பு கேட்கும் கொடிய கிராதகர்களைப்போல் நாடு மானமிழந்து, அறிவிழந்து, செல்வமிழந்து, தொழிலிழந்து, கொடுங்கோன்மையால் அல்லற்பட்டு நசுங்கி சாகக்கிடக்கும் தருவாயில் சற்றாவது ஈவு, இரக்கம், மானம், வெட்கம், மனிதத்தன்மை ஆகியவை இல்லாது சாண் வயிற்றுப் பிழைப்பையும் தமது வாழ்வையுமே பிரதானமாக எண்ணிக் கொண்டு சுயராஜ்யம், ராமராஜ்யம், தேசீயம், புராணம், சமயம், கலைகள், ஆத்தீகம் என்கின்ற பெயர்களால் மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைப்பது ஒரு பிழைப்பா? என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட மக்களையுடைய நாடு மானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா என்றுங் கேட்கின்றோம்.

குழந்தையைத் துராக்கிருதப் புணர்ச்சி செய்ய வேண்டாமென்றால் ஒரு கூட்டம் மதம் போச்சு என்கின்றதும், பணத்தைப் பாழாக்காதே, கோயிலை விபசார விடுதி ஆக்காதே என்றால் மற்றொரு கூட்டம் கடவுள் போச்சு என்கின்றதும், பொய்யும், புளுகும், ஜாதி மதத் துவேஷமும் கொண்ட புஸ்தகங்களைப் படியாதே என்றால் மற்றொரு கூட்டம் கலை போச்சு என்கின்றதும் பார்ப்பன ஆதிக்கத்திற்குக் கையாளாக இருக்க வேண்டாமென்றால் இன்னொரு கூட்டம் தேசீயம் போச்சுது என்கின்றதும், ஏழை களைக் காட்டிக் கொடுத்து ஏழைகள் வயிறெரிய வரி வசூலிக்க உள் உளவாயிருந்து மாதம் 1000, 2000, 5000 ரூபா உத்தியோகத்திற்கு ஆசைப்படாதே அதுவும் பிள்ளைகுட்டிகளே கொள்ளை கொள்ள வேண்டுமென்று கருதாதே என்றால் ஒரு தனிக்கூட்டம் தேசத் துரோகமென்கின்றதும், மனிதனை மனிதன் தொட்டால் தீட்டு, தெருவில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் போகக் கூடாது, குளத்தில் இறங்கக்கூடாது, பக்கத்தில் வரக்கூடாது என்று சொல்லுவது அக்கிரமம், மானக்கேடு, கொடுமை என்று சொன்னால் அதே கூட்டம் ஜாதித் துவேஷம், வகுப்புத் துவேஷம், பிராமணத் துவேஷம் என்கின்றதுமாயிருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இப்போது திருவாங் கூர் ராஜ்யம் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென் கின்றவர்களைத் தனது நாட்டுக்குள்ளாகவே வரக்கூடாது என்கின்றது. எனவே இந்தியாவின் தேசபத்திக்கும், சுயராஜ்யக் கிளர்ச்சிக்கும், தேசீய உணர்ச்சிக்கும் இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

(குடி அரசு - தலையங்கம் - 14. 07.1929)

Pin It