நன்றி பாராட்டும் அஞ்சலிக் குறிப்பு

பேராசிரியர் சிவத்தம்பி 06.07.11 இரவு மறைந்தார். தமிழ்ச்சமூக வரலாற்றைப் புதிய பார்வைகளுடனும் அணுகுமுறைகளோடும் எழுதிய பேராசிரியரின் மறைவு நிகழ்ந்த இந்த தருணத்தில், தமிழ்ச்சமூக வரலாறு எழுதியலுக்கு அவரது பங்களிப்பை நினைவு கூர்தலே அவருக்கும் செய்யும் அஞ்சலியாகக் கருதலாம்.

       கி.மு. 550 தொடக்கம் நேரடித் தரவுகளைக் கொண்டி ருக்கும் தமிழ்ச்சமூகத்தின் வரலாறு எழுதப்பட்டுள்ள வரலாறு பல்வேறு பரிமாணங்களைத் தம்முன் கொண்டிருப்பதைக் காண் கிறோம். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ்ச்சமூக வரலாறு என்பது தமிழகத்தில் செயல்பட்ட சமயங்கள் குறித்த வரலாறாகவே அமைந்திருந்தது. புலமைச் செயல்பாடுகள் என்பவை சமயத்தை முதன்மைப்படுத்தியே செயல்பட்டன. காலனியத்தின் வருகையோடு பல்வேறு புதிய தரவுகளை அறியும் சூழல் உருவானது. இதனைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்.

-      கி.பி.1864 முதல் செயல்படத் தொடங்கிய இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, பல்வேறு புதிய தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. கல்வெட்டுக்கள், பழம்நினைவிடங்கள், காசுகள் ஆகிய பிறவற்றின் மூலம் அறியப்படாத வரலாறுகள் அறியும் வாய்ப்பு உருவானது. மிக அதிகமான தொல்பொருள் தரவுகள் தென்னிந்தியப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. மிக அதிகமான கல்வெட்டுக்கள் உள்ள மொழியாகத் தமிழ் கருதப்படுகிறது. அதிகமான கல்வெட்டுக்கள் உள்ள மொழியின் பழமை தொடர்பான விவரங்கள், அதிகமாகக் கண்டறியப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. 1924 இல் உலகுக்கு அறிவிக்கப்பட்ட சிந்துசமவெளி நாகரிகம் இவ்வகையில் மிகப்பெரும் பாய்ச்சல் ஆகும். இந்நாகரிகம் தென்னிந்திய/திராவிட நாகரிகத்தோடு நேரடித் தொடர்புடையது எனும் சொல்லாடல் வலுப்பெற்றுள்ளது.

-      கி.பி. 1887-1920 இடைப்பட்ட காலங்களில் இதுவரை பெரிதும் அறியப்படாதிருந்த தமிழ்ச்செவ்விலக் கியங்கள் அறியப்பட்டன. இந்த இலக்கியப் பிரதிகளில் காணப்படும் செய்திகள், தொல்பொருள் ஆய்வுகள் மூலம் அறியப்படும் செய்திகளோடு நேரடித்தொடர் புடையதாக அமைந்திருப்பதும் அறியப்பட்டது.

மேற்குறித்தப் பின்புலத்தில் தமிழ்ச் சமூக வரலாறு எழுதும் முறையில் பல புதிய பார்வைகள் - அணுகுமுறைகள் உருவாயின. கல்வெட்டுக்கள் மூலம் பல்லவர்கள், பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், விசயநகர மன்னர்கள், நாயக்கர்கள் ஆகிய பிறர் குறித்த விரிவான தரவுகள் அறியப்பட்டன. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தின் சமயவரலாறு, கலைகள் வரலாறு, தமிழ்ச்சமூக இயங்குமுறை ஆகிய பிற அறியப்பட்டன. ஊகங்களாகப் பேசப்பட்ட செய்திகள், பல்வேறு தரவுகள் மூலம் நிகழ்வுகளாக கட்டமைக்கப்பட்டன. இதன்மூலம் தென்னிந்திய வரலாறு என்பது வடஇந்திய வரலாற்றிலிருந்து வேறுபடும் புள்ளிகள் கண்டறியப்பட்டன. தென்னிந்திய வரலாற்றின் தனித்தன்மைகள் புதிய கண்டுபிடிப்புகள் வழி அறியப்பட்டன.

       தொல்பொருள் வழி கண்டறியப்பட்ட வரலாற்றைப் போலவே செவ்விலக்கியங்கள் வழி, தமிழ்ச்சமூகத்தின் புதிய வரலாறு அறியப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பி, தமிழ்ச் செவ்விலக்கியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்ச்சமூக வரலாற்றுக்கு செய்தபங்களிப்புகள் முக்கியமானவை. அவற்றைப் பின்வரும் வகையில் தொகுக்கலாம்.

-      தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் பேசப்படும், ‘திணை’ எனும் கோட்பாட்டின் வழி கண்டறியப்படும் தமிழ்ச் சமூக வரலாறு

-      சமச்சீரற்ற சமூக அமைப்பாக இருந்த தமிழ்ச்சமூகத்தில் அரசு உருவாக்கம் எவ்வகையில் உருவானது என்ற உரையாடல்

-      தமிழ் சமூக இயங்குமுறைகளில் ஆதிக்க மரபுகள் எவ்வகையில் உருப்பெற்றன? அதன் விளைவுகள் எவை என்பவை தொடர்பான விவரணங்கள் சார்ந்த விளக்க ஆய்வுகள்

-      மானிடவியல், தொல்லியல் மரபுகளோடு தமிழ்ச் செவ்விலக்கியங்களுள்ள உறவுகள்

மேற்குறித்த ஆய்வுகளை ஆங்கிலத்தில் பேராசிரியர் 1960-1990 இடைப்பட்ட காலங்களில் வெவ்வேறு தருணங்களில் எழுதினார். உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வரங்குகளில்தான் அதிகமான கட்டுரைகளைப் பேராசிரியர் சமர்ப்பித்தார். தமிழ்ச்செவ்விலக்கியங்கள் வழி பெறப்படும் தமிழ்ச்சமூக வரலாற்றை இவ்வகையில் உலகப் புலமைத்தளத்திற்குக் கொண்டு செல்லும் பணியைப் பேராசிரியர் நிறைவேற் றியுள்ளார்.

       தமிழ்ச்செவ்விலக்கியங்கள் பாடப்பட்ட காலம், தொகைசெய்யப்பட்ட காலம், உரைகள் எழுதப்பட்ட காலம், பதிப்பிக்கப்பட்ட காலம் எனும் நான்கு நிலைகளைச் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளில் கொண்டிருந்தது. ஆனால் இவற்றில் உள்ள தரவுகளைக் கொண்டு தமிழ்ச்சமூகம் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்வது என்பது 1950-1960 களில்தான் நிகழத் தொடங்கியது. இவ்விதம் நிகழும் தருணத்தில் அதில் முதன்மையான பங்குகொண்டவராகப் பேராசிரியர் விளங்குகிறார் எனலாம். இப்பங்களிப்புகள் மேற்குறித்த வகையில் அமைந்துள்ளன. அவை தொடர்பான உரையாடலைப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்வோம்

       திணைமரபுகள் தொடர்பாக இரா.இராகவையங்கார், பி.டி.சீனிவாச அய்யங்கார், கமில்சுவலபில், சிங்காரவேலு ஆகியோர் வெளிப்படுத்தியுள்ள கருதுகோள்களைப் பேராசிரியர் சிவத்தம்பி மறுபரீசிலனைக்கு உட்படுத்துகிறார். தொல்காப்பியமும் உரையாசிரியர்களும் திணைமரபைப் பற்றிக் கூறும் செய்திகளையும் மீள்பார்வைக்கு உட்படுத்துகிறார். தொல்காப்பியர், உரையாசிரியர்கள் ஆகியோருக்கு ஒரு சமூகத்தின் சமூகப் புவியியல் தன்மைகளை விட இலக்கிய மரபே முதன்மையாக அமைந்திருப்பதைப் பேராசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

       திணைமரபு குறித்து மேற்குறித்த வகையில் பழம்புலமையாளர்களும் இருபதாம் நூற்றாண்டின் ஆராய்ச்சியாளர்களும் கொண்டிருந்தக் கருத்தை சமூகவியல் பின்புலத்தில் எதிர்கொண்டு புதிய விளக்கத்தைத் தருகிறார். இவ்வகையான திணைமரபுகள், சமூக இயங்கியல் மரபுகளோடு கொண்டிருக்கும் தொடர்புகளை இயற்கை நெறிசார்ந்து விளக்கியுள்ளார். பேராசிரியர் தனிநாயகம் அடிகள் இத்தன்மைகளை எவ்விதம் பதிவுசெய்துள்ளார் என்பது தொடர்பான செய்திகளையும் பேரா. சிவத்தம்பி பதிவுசெய்துள்ளார்.

       இவ்வகையில் திணை என்பது வெறும் இலக்கியமரபு சார்ந்த குறியீட்டாக்கம் என்றும் மக்களின் ஒழுக்கமரபுகளைக் காட்டக் கூறப்பட்ட வாய்பாடு என்றும் இது வரையில் கூறப்பட்ட செய்திகளுக்கு மேல் சென்று திணை என்பது ஒரு சமூக இயங்கியல் என்பதைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். குடும்பம், கணம், குடியிருப்பு என்ற பொருள்களில் திணை எனும் சொல் செவ்விலக்கிய இலக்கணங்களில் பயிலப்படுவதாகப் பேராசிரியர் கருதுகின்றார்.

       எனவே, தமிழ்ச்செவ்விலக்கியங்களில் காணப்படும் செய்திகள் பண்டைத்தமிழ்ச் சமூகத்தின் இயக்கம் குறித்தப் புரிதலுக்கு உதவுவதை பேராசிரியர் ஆய்வு உறுதிப் படுத்துகிறது. தொல்பொருள் ஆய்வுகள் வழிப்பெறப்பட்ட தரவுகள், சங்ககால ஊரிருக்கைக் குறித்துப் பேசுகின்றன. திணைமரபு குறித்து அறியும் தரவுகள் இதனை உறுதிப்படுத்துவதைக் காண்கிறோம். ‘பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்’ எனும் பேராசிரியர் முனைவர் பட்ட ஆய்விலும் மேற்குறித்த வகையில், தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்துள்ளார். இவ்வகையில், தமிழ்ச்செவ்விலக் கியங்கள் வரலாற்றுத்தரவுகளாக அமைவதை உறுதிப்படுத்துகிறார்.

       சங்க இலக்கியங்களில் ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு, அரசமைப்பு உருவாக்கத்தைப் பேராசிரியர் உரையா டலுக்கு உட்படுத்துகிறார். சமசுகிருதத்தில் காணப்படும் வேதங்கள், காவியங்கள் மற்றும் சாஸ்திர நூல்கள் சார்ந்து வடஇந்திய அரசமைப்பு உருவாக்கம் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. தென்னிந்தியப் பகுதிகளில் உருவான அரச உருவாக்கம் குறித்து அறிய தமிழ்ச்செவ்விலக்கியப் பிரதிகளே அடிப்படைத் தரவுகளாக உள்ளன.

       பிற்காலச் சோழர் குறித்த ஆய்வுகளைப் பர்ட்டன் ஸ்டெயின், கேத்தலின் காஃப், கரஷிமா ஆகிய பிறர் விரிவாகச் செய்துள்ளனர். இதன்மூலம் பிற்காலச் சோழரின் அரசமைப்பு தொடர்பான புரிதலைப் பெறமுடிகிறது. இதைப்போலவே பல்லவர் காலம் தொடர்பான ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் அரசஉருவாக்கம் என்பது தொடர்பான ஆய்வுகள் மிகக்குறைவே. பண்டைத் தமிழ் சமூக அரசு உருவாக்கம் குறித்த முதல் முயற்சி தனது ஆய்வு என்று பேராசிரியர் குறிப்பிடுவது முற்றிலும் ஏற்புடையது. திருக்குறளிலிருந்து தொடங்கி பின்னோக்கிச் சென்று செவ்விலக்கியப் பிரதிகளின் உள்ள தரவுகளைப் பயன்படுத்து கிறார்.

       திணைமரபு சார்ந்த செயல்பாடுகள், இறை, கோ, கிழவன் (கிழான்), மன்னன் (மன்னவன்), வேந்து மற்றும் வேந்தன், அரசு மற்றும் அரசன், குருசில் (குரிசில்) கொற்றம் ஆகிய பிற சொற்கள் பயன்படுத்தப்படும் சூழலை அடிப்படையாகக் கொண்டு, அரசு உருவாக்கத்தை உரையாடலுக்கு உட்படுத்துகிறார்.

       மேற்குறித்த தொடர்களின் பயன்படுத்தம் சார்ந்து எவ்வகையான பொருளை வருவித்துக்கொள்ள முடியும் என்பதே ஆய்வின் அடிப்படையாக அமைகிறது. பேராசிரியர் மார் நிகழ்த்தியுள்ள ஆய்வின் பல்வேறு தரவுகளைப் பேராசிரியர் பயன்படுத்தி அரச உருவாக்கம் குறித்துக் கூறுகிறார். இவ்வாய்வின் முடிபாக பின்வரும் செய்தியைப் பேராசிரியர் வெளிப்படுத்துகிறார்.

       ‘வேந்தர்உருவாக்கத்தோடு தமிழ்நாடு முறைப்படுத்தப்படாத தொடக்கநிலை அரசை வந்தடைந்து விட்டது எனலாம். அரசு குறித்த குறிப்புகள் தமிழ்நாட்டில் உயரதிகார அரசியல் நிறுவன அமைப்பின் தொடக்கநிலையை உணர்த்தி நிற்கின்றன எனலாம். அரசு என்னும் எண்ணக்கரு மூவேந்தரோடு மட்டுமே பொருந்துகிறது. (புறம்: 34,35, பொருந: 159) வேந்து என்பது அரசதிகாரம் குறித்து உள்நாட்டில் தோன்றி வளர்ந்த சொல்லாகும்’ (பண்டைத்தமிழ்ச்சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி, ப. 74; 2010)

       இவ்வகையில் வடஇந்திய அரசஉருவாக்கம் குறித்து அறிந்திருந்த வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு தென்னிந்திய அரசஉருவாக்கம் குறித்து அறிய பேரா. சிவத்தம்பி ஆய்வே தனித்த ஒன்றாக அமைந்திருக்கிறது. இவரது இவ்வாய்வை பேரா.ரொமீலா தாப்பர் போன்றோர் எடுத்தாளுகின்றனர். தென்னிந்திய வரலாற்று ஆய்வில் இத்துறை தொடர்பான பேராசிரியரின் பங்களிப்பு முதன்மையான ஒன்றாகும்.

       செவ்விலக்கிய இலக்கணங்களில் காணப்படும் திணை மரபுகள் எவ்வகையில் தமிழ்ச்சமூக இயங்குதளமாக அமைகிறது என்பதை உரையாடலுக்கு உட்படுத் தியவர் பேராசிரியர். இதன் தொடர்ச்சியாகச் செவ்விலக்கியப் பிரதிகளில் காணப்படும் சொற்களைச் சார்ந்து தமிழக அரசமைப்பு உருவாக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார். இவ்விலக்கியப் பிரதிகளில் காணப்படும் நிலப்பரப்பு மற்றும் நிலப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு, இம்மண்ணில் உருவான சமச்சீரற்ற சமூகப்படிநிலைகளைத் தமது ஆய்வில் வெளிப்படுத்துகிறார். புவிஇயல் அமைப்பின் அலகுகள், வாழும் மக்களின் பொருளாதார வாழ்க்கையோடு கொண்டுள்ள தொடர்பை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வை நிகழ்த்தி யுள்ளார்.

       பேராசிரியரின் இவ்வாய்வு தொல்பொருள் ஆய்வுத்துறை, சமூகஇயல் ஆய்வுத்துறை ஆகியவற்றின் முடிபுகளோடு இணைந்து வருவதைக் காணமுடிகிறது. பேரா.துரை.அரங்கசாமி போன்ற பேராசிரியர்கள் தொகுத்தளித்த குறிப்புகளைக் கொண்டு, சமச்சீரற்ற சமூகப்படிநிலைகளைப் பேராசிரியர் பேசுகிறார். பண்டைத் தமிழ்ச்சமூக இனக்குழு உருவாக்கம், அக்குழுவின் வளர்ச்சிநிலை, பல்வேறு தொழிற்பிரிவு சார்ந்த சமூகங்கள் பெரிதும் வளர்ச்சியடைந்த வேந்தர்கள் எனப் பலநிலைகளில் தமிழ்ச்சமூகம் செயல்பட்டமை செவ்விலக்கியப் பிரதிகளில் பதிவாகியுள்ளதைப் பேராசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

       மேற்குறித்த சமச்சீரற்ற சமூக அமைப்பில் சொத்துடைமை உருவானது குறித்தும் நகரஉருவாக்கம் குறித்தும் பேராசிரியர் உரையாடலுக்கு உட்படுத்தியுள்ளார். ஏனாதி, காவிதி, எட்டி ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டச் சூழலுக்கும் சமூக இயங்குதளத்திற்கும் இடையேயுள்ள உறவுகள் குறித்தும் வெளிப்படுத்தி யுள்ளார். இச்சொற்கள் திராவிட மொழிகள் சொற்பிறப்பியல் அகராதியில் (DED) இடம்பெறாமை குறித்து தகவலைப் பதிவுசெய்துள்ளார். ஆரியர்கள் வருகைக்கும் தமிழ்ச்சமூக அமைப்பிற்குமான உறவுகள் குறித்தப் பல்வேறு செய்திகளைப் பேராசிரியர் விவாதித்துள்ளார். சங்கப்பிரதிளில் பிராமணர்களுக்கான இடம் குறித்தப் பேராசிரியரின் ஆய்வுகள் சுவையானவை.

       இவ்வகையில் இலக்கியப்பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு சமூக இயங்குதளம், அரச உருவாக்கம், சமச்சீரற்ற சமூக உருவாக்கம் ஆகிய பண்டைக் காலத் தமிழ்ச்சமூகத்தின் அடிப்படைகளைப் பேராசிரியர் வெளிக்கொண்டு வந்துள்ளார். இவ்வகையான ஆய்வுகள் அண்மைக் காலங்களில் பேராசிரியரின் கருதுகோள்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் முன்னெடுக்கும் முயற்சிகள் காணப்படுகின்றன. தமிழ்ச்சமூக வரலாற்றுக்குப் பேராசிரியரின் மேற்குறித்த ஆய்வுகள் தனித்த வளம் சேர்ப்பவை. எவராலும் செய்யஇயலாத ஒன்றைச் செய்திருக்கிறார் பேராசிரியர்.

       பேராசிரியர் அளவுக்குப் பண்டைத்தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர்கள் மிகக் குறைவு. இப்பங்களிப்பிற்காக அவருக்குத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் கடன்பட்டுள்ளது.

       சங்க இலக்கியப்பிரதி ஆய்வுகள் தொல்லியலோடும் மானிடவியலோடும் நெருக்கமான உறவுடையவை. தொல்பழம் சமூகம் பற்றிய ஆய்வுகளை இவ்விரு துறைகளின் துணையின்றி செய்ய இயலாது. இத்தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் கூறுகள் சங்கப்பிரதிகளில் வெளிப்படுவதை பேராசிரியர் ஆய்வு செய்துள்ளார். தொல்லியல் ஆய்வும் இலக்கியப்பிரதிகள் வழி நிகழ்த்தும் ஆய்வும் எவ்வகையில் உறவுடையன எனப் பேராசிரியர் பின்வரும் வகையில் பதிவுசெய்துள்ளார்.

-      ‘சங்க இலக்கியம் விளக்கி வரைந்து காட்டும் பூப்பௌதீகப் பின்னணியைத் தொல்லியல்வழி உறுதிப்படுத்துதல்

-      தொல்லியல் நிர்ணயித்துள்ள பண்பாட்டு வளர்ச்சி கட்டங்களுக்குப் பொருந்துமாறு இலக்கியச் சான்றுகளைச் சித்திரித்துக் காட்டுதல்

-      சில இலக்கியச் சான்றுகளைத் தொல்லியல் சான்றுகள் கொண்டு வலியுறுத்துதல்

-      சங்க இலக்கியம் விளக்கிக்காட்டும் காலப்பகுதியில் எழுத்துக் கலை வளர்ச்சியுற்ற திறத்தை அறிதல்’ (2010;145)

பேராசிரியர் இறுதியாகக் கூறியுள்ள ‘எழுத்துக்கலை வளர்ச்சி’ என்பது தொல்லெழுத்தியல்துறை ஆகும். ஐராவதம் மகாதேவன் அவர்கள் வழி கண்டறியப்பட்டுள்ள பிராமி கல்வெட்டுக்களுக்கும் தமிழ் எழுத்துக்கலை வளர்ச்சிக்குமான உறவை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் பிராமி கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளுக்கும் சங்கஇலக்கியப் பிரதிகளுக்கு மான உறவு குறித்து ஐராவதம் மகாதேவன் விரிவாக ஆய்வு செய்துள்ளார். எனவே, செவ்விலக்கியப்பிரதி என்பது இன்னொரு வகையில் தொல்லியல் பிரதி என்ற புரிதலைப் பெறமுடிகிறது.

       செவ்விலக்கியப் பிரதிகளில் பயிலப்படும் நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் வழக்காறுகள் பண்பாட்டு மானிடவியலோடு நெருக்கமான தொடர்புடையவை. இடம், சூழல், பயன்படுத்தப்படும் பொருட்கள், உயிரினங்கள் ஆகிய பல்வேறு கூறுகளின் இணைவுகள் எவ்வகையில் செயல்படுகின்றன என்பதை செவ்விலக்கியப் பிரதிகளில் காணமுடிகிறது. இத்தன்மை மானிடவியல் கூறுகளை அடிப்படையாகக் கொண்டவை. முல்லைதிணையின் ஒழுக்க மரபுகளை மானிடவியல் கண்ணோட்டத்தில் பேராசிரியர் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வின் மூலம் கீழ்க்காணும் கூறுகளை வெளிக்கொணர்ந்துள்ளார்.

-      ‘உணவு சேகரிக்கும் கட்டம்

-      வேட்டையாடுவோர் மற்றும் மீன்பிடிப்போர் ஆகிய தேர்ச்சி பெற்ற சேகரிப்பாளர்கள் தோன்றும் கட்டம்

-      மேய்ச்சல் தொழில் சார்ந்த நாடோடித் தன்மையைத் துணைமைக் கூறாக் கொண்ட குலக்குழு உழவர் கட்டம்

-      நிலமானியத் தன்மையுடைய அல்லது உயர்குடி இயல்புடைய வேளாண் சமூகங்களுடைய கட்டம்

-      உற்பத்திசார் முதலாளித்துவமுடைய தொழில்மய சமூகம் மற்றும் நவீன நகராக்கம் என்னும் கட்டம்’ (2010;172)

இவ்வகையில் மானிடவியல் கூறுகளைக் கொண்ட பிரதிகளாகச் செவ்விலக்கியப் பிரதிகள் அமைந்திருப்பதை அறியமுடிகிறது.

       பேராசிரியர் தமிழ்ச்சமூகத்தின் தொடர்ச்சியான வரலாற்றை இலக்கிய மற்றும் இலக்கணப் பிரதிகளை முதன்மையாகக் கொண்டும் பிற தரவுகளைத் துணைமையாகக் கொண்டும் ஆய்வுசெய்துள்ளார். ‘பண்டைத் தமிழ்ச்சமூகம்: வரலாற்றுப் புரிதலை நோக்கி’ எனும் இவரது நூல் இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் மொழியாக்கம் ஆகும். இந்நூல் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ச்சமூக வரலாற்றுக்கு பேராசிரியரின் பங்களிப்பை இங்கு அவருக்கான அஞ்சலியாக நினைவுகூர்ந்துள்ளோம்.

Pin It