தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில் பெரியார் 360° கருத்தரங்கம் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் 23.05.2026 அன்று மாலை 3.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் முனைவர் ஆ. ஜீவானந்தம் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார்.

pozhilan and t jeyaramanஆனைமுத்து பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் பேராசிரியர் செயராமன், பிரபாகரன் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் வழக்கறிஞர் பாலவெல், குன்றக்குடி அடிகளார் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் சுப்பு மகேசு, வ.உ. சிதம்பரனார் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் திவிக பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், மறைமலை அடிகள் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் மு. கதிரவன், திரு.வி.க. பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் நாகேசுவரன், தோழர் ஜீவா பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் விவேக், பாவாணர் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் அ.சி. சின்னப்பத்தமிழர், காமராசர் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் சு. பழனிராசன், பெண்கள் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் பேராசிரியர் சண்முகப்பிரியா, கம்யூனிஸ்டுகள் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் வழக்கறிஞர் மகாலட்சுமி, சிங்காரவேலர் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் கோ. திருநாவுக்கரசு, பாரதிதாசன் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் வேணுகோபால், பழனிபாபா பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் தௌஃபீக் என்கிற இறை உதவி, அறிஞர் அண்ணா பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் வழக்கறிஞர் அமர்சிங், பார்ப்பனிய பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் பசு கவுதமன், அண்ணல் அம்பேத்கர் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் சிம்ளி விசயன், தோழர் தமிழரசன் பார்வையில் பெரியார் என்னும் தலைப்பில் மொழியமுதன் ஆகிய தோழர்கள் கருத்துரை ஆற்றினார்கள்.

தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தோழர்கள் மருது குமார், கவி முருகன், தமிழ்ச்செல்வி, மற்றும் உழைப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கண்ணன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தின் தோழர் இரா. செந்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் அறிவின் ஆதி, புரட்சிகர மக்கள் அதிகார தோழர் மாரிமுத்து, தோழர் அருணாச்சலம், திராவிடர் விடுதலைக் கழக தோழர் திருவேங்கடம், தமிழ் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், சமூக ஆர்வலர் அழகு விமலா, எழுத்தாளர் சாம்பான், மக்கள் அதிகாரம் தோழர் தேவா ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள்.

  1. தந்தை பெரியாரின் ஈடு இணையற்ற கொள்கையான சமூகநீதி முழுமை பெறவேண்டுமானால் இட ஒதுக்கீட்டு முறை 100% என மாற்றி அமைக்கப்படவேண்டும். பார்ப்பனர்களுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். பொதுப் போட்டி முறை ஒழிக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களைச் "சாதியற்றோர்" பட்டியலை உருவாக்கி அதில் இணைத்து அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும். இது பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை முழுமைப்படுத்துவதாகும். இதற்கான சட்ட முன்வரைவைத் தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் முன்னெடுக்கும் சமூகநீதியின் முழுமைக்கான தொடர் போராட்டங்களுக்குத் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் பெரியார் கழகம், அம்பேத்கரிய இயக்கங்கள், புரட்சிகர மார்க்சிய - லெனினிய இயக்கங்கள் ஒத்துழைப்புத் தர வேண்டும் என இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
  2. இட ஒதுக்கீட்டு வரலாற்றை ஆறாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரை இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
  3. தமிழ்த்தேசியம் என்னும் பெயரில் இனவாதம் பேசித் திரியும் சில இயக்கங்கள் பெரியாரைப் புறந்தள்ளிவிட்டு ஒரு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க முயல்கின்றன. "சாதி ஒழிப்பும் தனித்தமிழ் நாடும் என் உயிரினும் மேலான இரு கொள்கைகள்" எனவும் "தமிழ்நாடு தமிழருக்கே" எனவும் "தமிழா! இன உணர்வு கொள்" எனவும் "சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டு அடி" எனவும் முழக்கங்களை முன்வைத்துத் தமிழினம் பகுத்தறிவுள்ள சுதந்தரமான இனமாகத் தனித்தமிழ் நாட்டில் வாழ இறக்கும் வரை ஓயாது பாடுபட்ட தந்தை பெரியாரை, பிறப்பால் கன்னடர் என்று கூறிப் புறக்கணிப்பது மனுதர்மவாதமே தவிர வேறு இல்லை. இத்தகைய போலித் தமிழ்த்தேசிய இயக்கங்களின் பொய்ப் பரப்புரைகளை உடைத்தெறிந்து உண்மையான தமிழ்த் தேசியத்தை நிலைநாட்டவே தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் பெரியார் 360° என்னும் இக்கருத்தரங்கத்தை நடத்துகிறது. இக்கருத்தரங்கில் இடம்பெறும் கருத்துரைகளின் கட்டுரை வடிவங்கள் பெரியார் 360° என்னும் பெயரில் நூலாக வெளியிடப்படும் என்றும் அதன் மீதான திறனாய்வுக் கூட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்பதையும் அறிவிக்கிறோம். எமது தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் இந்த முன்னெடுப்புக்குத் தமிழக மக்கள் முன்னணி, பெரியாரிய இயக்கங்கள், அம்பேத்கரிய இயக்கங்கள், புரட்சிகர மார்க்சிய - லெனினிய இயக்கங்கள் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு இக்கருத்தரங்கம் கேட்டுக் கொள்கிறது.
  4. அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளையும் கைபேசியில் அடக்கி வைத்திருக்கும் இளைய தலைமுறையே! இக்கருத்தரங்கம் உன்னை நோக்கித் தான் வைக்கப்படுகிறது! தமிழ்த் தேசியம் என்னும் பெயரிலோ கம்யூனிசம் என்னும் பெயரிலோ சாதியின் பெயரிலோ உன்னை அணிதிரட்ட அணுகும் கூட்டம் உண்மையானதா போலியானதா என்று அறியும் உரைகல் பெரியாரே ஆவார். எனவே, இளைய சமுதாயமே பெரியார் கொள்கைகளைத் தேடிப் படி! அதுதான் உன்னை உயர்த்தும் ஏணிப்படி!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.