பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, இந்தத் திங்கள் 7, 8, 9 ஆகிய மூன்று நாள்களில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. இதனைப் பத்துக் கோடியாக உள்ள தமிழர்களில் எத்தனைப் பேர் அறிவர்? உலகத் தமிழர் முதல் உள்ளூர்த் தமிழர்வரை ஓரிரு விழுக்காட்டினர் அளவுக்கு மட்டுமே தெரிந்த செய்தியாக அது அமைந்து விட்டது. இது தமிழுக்கும் தமிழர்க்கும் நேர்ந்த பேரவலம். உலகத் தமிழர்க்குப் பெருவருத்தம் தந்து அவர்தம் உள்ளத்தைக் குமைவித்துள்ளது.

உலகளாவிய தமிழ் மொழி

தமிழ்மொழி ஞால முதன் மொழி; மாந்த மொழி; மக்கள் மொழி; அது தேவபாடை இல்லை. தமிழ்மக்களின் உழைப்பின் ஊடாக வளர்ந்த மொழி. மொழிப்புலமையோர் கூடிச் செய்த மொழியன்று. அற்றைத் தமிழ்மக்களின் வாய்மொழிப் பாடல்களாகப் பிறப்பெடுத்த அதன் இலக்கியம் புலவோர்தம் செவ்வியல் படைப்புகளால் செழுமையுற்றது. பிறமொழிக் கலப்பின்றித் தனித்தியங்கக் கூடிய மொழி தமிழ். உலகின் பல மொழிகளிலும் தன் வேர் பரவி இருக்கின்ற மொழி தமிழ். சிந்து நாகரிகம் மட்டுமன்றி, எகிப்து, சுமேரியா போன்ற பல தொன்மை நாகரிகங்களிலும் தமிழ் நாகரிகத்தின் சுவடுகளைத் தொல்லியல் ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. இதனைப் பாவலரேறு ஐயா தம் பாடலடிகளில், “சிந்து மணற்பரப்பில் சிற்றில் விளையாடி, முந்தை எகுபதியர், மூத்த சுமேரியத்தார் செந்திரு நாவில் சிரித்த” மொழி என்று வெகு அழகாக நினைவூட்டுகின்றார்.

அற்றைக்கு இவ்வுலக உருண்டையில் பல நாடுகளைப் பெற்றிருந்த தமிழினத்திற்கு, இற்றைக்குத் தனி இறையாண்மை பெற்ற ஒரு நாடு இல்லாது போனாலும் அவ்வினம் இல்லாத நாடு இத் தரை மீது உளதோ? இல்லையே. ஏறத்தாழப் பத்துக் கோடித் தமிழர் வாழும் இந் நாளிலே, இத்தகைய சிறப்புகளும் தமிழை உயிரினும் மேலாகப் போற்றும் தமிழ்மக்களும் கொண்ட மொழி தொடர்பான இம் மாநாடு பற்றிய செய்தி அம் மக்களுக்குச் சரியாக போய்ச் சேரும்படி உரிய செய்திப் பரப்பலின்றி, நடந்து முடிந்துள்ளது பேரவலப் பெருந்துயரம் எனில் மிகையன்று.

மாநாட்டுக் குழப்பங்கள்

இம் மாநாடு நடைபெறுவது பற்றியும் இந்த மாநாட்டிற்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புவதுபற்றியும் பல மாதங்கள் முன்பே, செய்தியாளர் கூட்டம் நடத்தித் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தச் செய்தியை ஒன்றிரண்டு ஊடகங்கள் மட்டுமே மிகச் சுருங்கிய அளவில் வெளியிட்டன. ஆனாலும் ஏறத்தாழ ஆயிரம் அளவிற்கு ஆய்வுக் கட்டுரைச் சுருக்கங்களைத் தமிழ் ஆய்வாளர்கள் அனுப்பினர். இந்த மாநாடு சிங்கப்பூரில் 2023 சூன் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. ஏறத்தாழ முந்நூறு விரிவான ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டு ஆய்வுக் குழுவிடம் வந்துசேர்ந்துள்ளன. இதனிடையே, மாநாடு சார்சாவில் நடைபெறும் என்று ஓர் அறிவிப்பு உலவியது. இது ஆய்வாளர், அறிஞர், ஆர்வலர் என்று அனைவரிடத்திலும் குழப்பத்தினை ஏற்படுத்தியது. அது போட்டிக் குழு ஒன்றின் செய்தி என்று தெரிய வந்தது. எந்த மாநாடு நடைபெறும்? எந்த மாநாட்டிற்குச் செல்வது? என்று பலரும் குழம்பினர். மாநாட்டில் படிப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரையை எழுதியோரின் வானூர்திக் கட்டணத்தை வழங்குவதாகப் போட்டிக் குழு அறிவித்தது. பிறகு அது, மாநாட்டினை சார்சா-வில் இருந்து, மலேசியாவில் சூலை 21 .. 23 நாள்களில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இணையத்தளத்தில் அறிவிப்புகளும் செய்து வருகின்றது. தமிழ்நாட்டு முதலமைச்சரையும் பிற அமைச்சர்களையும் நேரில் சந்தித்து அழைத்திருக்கின்றனர்.

முறைப்படியான உலகத் தமிழாராய்ச்சி மன்றம், “மாநாட்டில் கட்டுரை வழங்குவதற்கான வாய்ப்பினைக் கேட்டுக் கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன என்றும் இதுபற்றி, உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் நடுவக் குழு சிங்கப்பூர் அமைப்பாளர்களுடன் கலந்தாய்ந்தது என்றும் அதனையடுத்து மாநாட்டில் கட்டுரை படிப்பதற்கான அறிஞர் எண்ணிக்கையின் வரம்பை தளர்த்துவதென்றும், அதற்குப் பொருத்தமாக மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்துவதென்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இந்த மாநாடு சூலைத் திங்கள் 7, 8, 9 ஆகிய நாள்களில் ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஊடகங்களின் இருட்டடிப்பு

 ஞால முதன்மொழியாய்ச் சிறப்பும் செழுமையும் வாய்ந்த உலகளாவிய செம்மொழியின் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை, முறைப்படியான உலகத் தமிழாராய்ச்சி மன்றம், சென்னையில் நடத்துகின்றதைப் பற்றிய செய்தி ஊடகங்களில் பெரிதாக ஏதும் வெளிவரவில்லை. “55 ஆண்டுகளுக்குப் பின் சென்னை திரும்பும் உலகத் தமிழ் மாநாடு” என்று தலைப்பிட்டு ஓர் ஆங்கில நாளேடு உள் பக்கத்தில் மகிழ்வாக வெளியிட்டிருந்ததைக் காணமுடிந்தது. மற்ற ஒன்றிரண்டு ஏடுகளில் வரிச்செய்தி அளவிற்கே செய்தி வெளியாகியது. தமிழுக்குத் தொண்டு செய்வதாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாளேடுகள், பெயரிலேயே தமிழ் என்பதைச் சேர்த்துவைத்திருக்கிற செய்தியேடுகள் என்று தமிழில் ஊடகம் நடத்திப் பெரும்வருவாய் பெறும் செய்தித்தாள்களும் காட்சி ஊடகங்களும் இந்தச் செய்தியில், காந்தியார் போற்றிய குரங்குப் பதுமைகளாகிச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தன.

இந்திய அரசு, தமிழ்நாட்டரசு ஆகியவற்றின் அரவணைப்பு இல்லை என்பதை அறிந்தோ, அவ் அரசுகளின் அதிகாரிகளின் அறிவுரைப்படியோ, ஊர் இரண்டுபட்டிருக்கிறது என்றோ ஊடகங்கள் இவ்வாறு இருட்டடிப்புச் செய்திருக்கலாம் என்றும் எந்த அரசின் நல்கையும் கிட்டாத சூழலில் இம் மன்றமும் தேவைப்பட்ட விளம்பரத்தைச் செய்யமுடியாமல் தடுமாறியுள்ளது போலும் என்றும் மாநாட்டிற்கு வந்த தமிழன்பர் பலர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஊடகங்கள் மாநாடு நடப்பதற்கு முன்நாள்களிலோ நடந்துகொண்டிருந்த நாள்களிலோ அதுபற்றி ஒருவரியும் வந்துவிடாதபடி கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு ஊடக அறத்தை (பத்திரிகை தருமம்) நன்கு கடைப்பிடித்தன. செய்தியேடுகள் ஒன்றிரண்டு மட்டும் மாநாடு நடந்து முடிந்த செய்தியை வெளியிட்டன. “இனித் தமிழார்வலர் போகமுடியாது; வெளியிடலாம்” என்ற எண்ணம்போலும். அல்லது நிரப்பி(Filler)ச் செய்தியாக அமைந்திருக்கும்.

மாநாடு நடந்த வகை

மாநாட்டினை நடத்தும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் ஆளுகையரிடையே பிளவு, ஒருங்கிணைப்பின்மை, முதுமை, அரசுகளின் நல்கையும் துணையுமின்மை, ஊடகங்களின் இருட்டடிப்பு என்று பல்வேறு பின்னிழுப்புகளிடையே, நிதிப் பற்றாக்குறையும் போட்டி மாநாடு தொடர்பான செயற்பாடுகளும் சேர்ந்து இந்த மாநாட்டினைச் சிறப்பாக நடத்தமுடியாமல் போனது. சூலை 7, 8, 9 நாள்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட மாநாடு பற்றி, சூலை நான்காம் நாள்வரை எந்த அறிவிப்பும் வராததால், இந்த மாநாடு நடைபெறுமா? நடைபெறாதா என்ற ஐயம் மாநாட்டில் பங்கேற்கவிருந்த ஆய்வாளர், அறிஞர், பேராசிரியர், ஆர்வலரிடையே ஏற்பட்டது. எப்படியோ இறுதியாக, சூலை ஐந்தாம் நாள், மாநாட்டின் நிகழ்ச்சி நிரலும் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வோர் அமர்விலும் ஒவ்வோர் அரங்கிலும் ஆய்வுக் கட்டுரை வழங்கவிருப்போர் பட்டியலும் மன்றத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. 55 பக்கங்களில் இந்த செய்தி இருந்தது. நிகழ்ச்சி நிரலிலும்கூட மாநாட்டைத் தொடங்கி வைப்பவர், சிறப்பு விருந்தினர் யாவர் என்று எந்தச் செய்தியும் இல்லை.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி நடந்தபோதுதான் தமிழ்நாடு அரசின் சிறுபான்மையோர் ஆணையத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்சு மாநாட்டினைத் தொடங்கி வைக்கிறார் என்று தெரிய வந்தது. அவர் தமிழறிஞரும் அல்லர்; தமிழ்ப் பேராசிரியருமல்லர்; தமிழாராய்ச்சியாளரும் அல்லர்; ஏதோ ஒரு காரணத்தால் அவர் அங்கே அழைக்கப்பட்டிருந்தார் போலும். தமிழ்நாட்டில் முன்பு நடைபெற்ற மாநாடுகளில் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், முதலமைச்சர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் என்று நீளும் பட்டியலின்படி பலரும் பங்கேற்கும் மாநாடாக இருந்தன. ஆனால், இந்த மாநாடு அத்தகையோர் எவருமின்றி, ஓர் ஆணையத்தின் தலைவர் அதுவும் நேரடி மொழித் தொடர்பு இல்லாத ஆணையத் தலைவர் மாநாட்டினைத் தொடங்கி வைத்தது பொருந்தாத நிலையாக இருந்தது.

(தொடரும்)

முனைவர் கி.குணத்தொகை

Pin It