தமிழ் நாட்டின் அரசியலில் நடந்து கொண்டுள்ள ஆளுநரின் செயல்பாடுகள் ஒரு மாநிலத்தின் (தேசிய இனத்தின்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் ஆட்சி அதிகாரத்தை கேலிக்குள்ளாக்கின்றன. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இந்திய ஒன்றிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஆளுநர் இடம் பெற்றுள்ளதே இதற்குக் காரணம். டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எந்தவித அதிகாரமில்லா நிலைக்கு ஒன்றிய மக்களவை, மாநிலங்கள் அவை (இராஜிய சபா) என இரண்டின் பெரும்பான்மை உறுதி செய்துள்ளது.

இந்திய ஒன்றியம் பல மாநிலங்களின் (தேசிய இனங்கள்) கூட்டமைப்பு என்பதை பன்மைத் தன்மை என்று சுருக்கி விட்டனர். அரசியல் அமைப்பு இரண்டு சட்டம் நிறைவேற்றும் அமைப்புகளைக் கொண்டுள்ளது.

1. அனைத்து மாநிலங்களுக்குமான (தேசிய இனங்களுக்குமான) இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்ற இரு அவைகள்.

2. ஒவ்வொரு மாநிலத்திற்குமான (தேசிய இனத்திற்கான) STATE LEGISLATIVE ASSEMBLY சட்டமன்றம்

இதுவே இந்திய ஒன்றிய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடு என்பதை மறந்து ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன் என்பதும், மாநில நிருவாகத்திற்குள் ஆளுநரின் தலயீடும் இருப்பதற்கு காரணமான இந்திய அரசியல் அமைப்பு விதிகளை நீக்கம் செய்வதே மாநிலங்களின் (தேசிய இனங்களின்) மக்களுக்கு அவர்களது இறையாண்மையை உறுதி செய்வதாகும். மேலும் உண்மையான உறுதியான கூட்டாச்சிக்கு உதவும். தமிழ் நாட்டின் அரசியல் நடவடிக்கைக்கும் ஒன்றிய அரசின் அரசியல் நடவடிக்கைக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சித்தாந்த வேறுபாடே (திராவிட & ஆரிய) மோதலுக்கு காரணமாக அமைக்கின்றது என்றால் டெல்லி ஆம் ஆத்மி க்கும் ஒன்றிய பி.ஜே.பி. க்குமான சித்தாந்த அடிப்படை எது ?

மேலும் தேசியம், திராவிடம், இந்துத்துவம், கம்யூனிசம் என்ற சித்தாந்தங்கள் பேசப்படும் நிலைமையில் இந்தியா ஒன்றியத்தில் பல மொழிகள் தேசிய இனங்களாக தனது எல்லைப்பரப்பில் பல சிக்கல்கள் இருந்தாலும் ஒரு கூட்டமைப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் உலக அரங்கின் போக்கொடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு இனமக்களுக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளது எவ்வளவு மோசமான நிலைக்கு ஒன்றிய உறுப்பு மாநிலத்தை தள்ளியுள்ளதை மற்ற மாநில மக்கள் உணர வேண்டியுள்ளது. மேலும் மக்களுக்குள் வேற்றுமையையும் வெறுப்பையும் விதைக்கும் சக்திகளை தனிமைப்படுத்திட வேண்டும் என்பதையும் சேர்த்தே உணர வேண்டும்.

எதிர்கட்சிகளின் ஒற்றுமை என அடுத்த மக்களவைத் தேர்தலை சந்திக்கும் எதிர்கட்சிகள் மாநில உரிமை விசயத்தில் ஓர் தெளிவான நிலைக்கு வரவேண்டும்.

தேர்தலில் பங்கெடுக்காத ஆனால் பரந்துபட்ட மக்கள் நலம் நாடும் இடதுசாரிச் சக்திகள் நடைமுறையில் உள்ள இந்திய ஒன்றிய அரசியல் அமைப்பில் மாநிலங்களின் உரிமையைக் குறைக்கும் பிரிவிற்கு எதிரான நடவடிக்குக்கு மக்களை விழிப்புறச் செய்வதும் நாடாளுமன்ற எதிர்கட்சிகளின் கூட்டமைப்பை ஒன்றியத்தில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பரவலாக்கச் செய்வதை அவர்கள் தனது குறைந்த பட்ச திட்டமாக வைத்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர வேண்டும்.

- முருகன்

Pin It